கவிதைகள்

This entry is part of 23 in the series 20081204_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி01
இருக்கட்டும் எதற்கும்…!

பத்தாண்டுகளுக்கு முன்
நான் அனுப்பிய கடிதமொன்றை

பத்திரமாய் வைத்திருந்து
பிரதியொன்றை எனக்கின்று

அனுப்பித்தந்த நண்பனின்
அன்பைப்போல

இருக்கட்டும் எதற்கும் என்று
இதுபோல் இன்னும்

எத்தனையோ நம்
எல்லோரிடமும்.


02
அவனவன் பாடு

கண்டு கொள்ளாமல்
இருந்திடல் கூடும்
சிலருக்கு.

கண்டு கொண்டாலும்
கைவசப்படுவதில்லை
சிலருக்கு.

கண்டதையும் கொள்வதிலும் உண்டு
கணிசமான சிக்கல்கள்.

அவனவன் பாடு.
சிலதை கண்டு கொள்ளாமல் இருப்பதும்.
சிலதை கண்டும் கொள்ளாமல் இருப்பதும்.03
பட்டங்களும் பட்டமும்…!

மக்கள் திலகம்
நடிகர் திலகம்
மக்கள் கலைஞர்
நவரச நாயகன்
காதல் மன்னன்
காதல் இளவரசன்
ஆக்சன் கிங்
அல்டிமேட் ஸ்டார்
உலக நாயகன்
சூப்பர் ஸ்டார்
சுப்ரீம் ஸ்டார்

நடித்துப் பெற்ற பட்டங்களுடன்
நாயகர்கள் சுவரெங்கும்

சுவரெங்கும் சுவரொட்டி
சுவரொட்டி செல்லுமவன்

படித்துப்பெற்ற பட்டம் மட்டும்
பத்திரமாய் பெட்டிக்குள்.


Series Navigation