தனிமை

This entry is part of 40 in the series 20080522_Issue

சு.சுபமுகி


1.
என் தனிமை
எனக்காக விதிக்கப்பட்டதோ
ஒரு வேளை
இது நானே உருவாக்கிக் கொண்டதோ
புரியவில்லை.
எங்கு சென்றாலும் பின் தொடர்கிறது
இந்த தனிமை
தனிப் பிரதேசத்திலும்
ஜனநடமாட்டத்திலும் கூட
என்னை தனியனாய் மாற்றிவிடுகிறது
இந்த தனிமை
வரமா? சாபமா?
தனிமை பற்றிய கேள்வியில் முழ்கி
புரியாமல் நிற்கின்றேன்
தனியாய்.

2.
எனது உள்ளத்தின் முரண்பாடுகள்
குறுக்கும் நெடுக்குமாய் அலைகிறது
எனக்குள்ளேயே.

நான்கு சுவர் மட்டுமே
என்னைச் சுற்றி- ஆயினும்
நால்வகைப் போர் நடக்கிறது

ஒருவரிக்குள் அடைக்கப் பார்க்கின்றேன்
முயன்றும் கூட தோற்கிறேன்
காரணம்
நான் அடைத்து வைக்க நினைப்பது
என் கற்பனையை மட்டுமல்ல
என் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் தான்

3.
சில சமயங்களில் சூன்யமாகிப் போகிறேன்
எனக்கு நானே
புரியா விடைக்குள்
தெளிவான வினாவுடன்
காத்திருக்கிறேன்

சில சமயங்களில் புரியாமல் போகும்
மற்றவர்களுக்கு
என் கவிதைகள்
சில நேரங்களில் எனக்கும் தான்

என் பக்கத்து நாற்காலி
காலியாகத்தான் உள்ளது
என் உள்ளமும்.

கண்ணாடியில்
என் முகம் காணத் தயங்குகிறேன்
என் தனிமையை
அது அடையாளம் காட்டிவிடுமோ என்று.

குளிர்ந்த காற்றை விட
தெளிந்த வெப்பம்
மேலானதுதான்
என் தனிமைக்கு.

என் இதழ்கள்
சிரிப்பை வெளிப்படுத்தக்கூட
தயங்குகின்றன.
என் அழுகையும் உடன் வருமோ
என்ற பயத்ததால்.

எனது பேனாவின் நுனியில் நிற்கின்றேன்
தயங்கியபடி
எனக்கான வார்த்தைகளை தேடி.

எனது கவிதைகள் கூட விரும்பவில்லை
எனது இறுக்கத்தை.

-சு.சுபமுகி(மாணவி)

அனுப்பியவர்: issundarakannan7@gmail.com

Series Navigation