கவிதைகள்

This entry is part of 41 in the series 20071115_Issue

சோ.சுப்புராஜ்


ஒலிக்கிறது கைத்தொலைபேசி
ஒருமுறை கூட
என் கைத்தொலைபேசி
ஒலிக்காத நாளில்
உணர்கிறேன் நான்
இறந்து போனதாய்……
**** **** ****
தனக்குத் தானே
பேசிச் சிரித்து அழுது அரற்றி
கொஞ்சிக் குலவி
சண்டையிட்டு சர்ச்சித்து
தனிவழியே போனவளை
மூளை பிசகியவளோ என்று
யோசித்து முடிப்பதற்குள்
கண்ணில் பட்டது அவளின்
கைத்தொலைபேசியின்
காதுமடல் ஒலிவாங்கி……!
**** **** ****
விழித்திருக்கும் போதெல்லாம்
நிறைய நிறையப் பேசினார்கள்;
குறுஞ்செய்திகளை
குறைவின்றி அனுப்பி மகிழ்ந்தார்கள்;
நேரில் சந்தித்த போதுதான்
பேச எதுவுமற்று மௌனமாய்க்
கலைந்து போனார்கள்
தங்கள் தங்களின்
கைத்தொலைபேசிகளுடன்……..!
**** **** ****
எத்தனை பிரியமானவர்க ளென்றாலும்
கைத்தொலைபேசியில்
அவர்களை அழைக்க
கலக்கமாகவே இருக்கிறது;
அவர்களுக்கு
விருப்பமான பாடலையோ
கடவுளைத் தேடும் இசையையோ
காக்கை எச்சங்களைப் போல – நம்
காதுகளுக்குள் பீய்ச்சி
அடித்து விடுகிறார்களென்பதால்…….!
**** **** ****
அடர்ந்த இருளிலும்
துளியும் பயமின்றி தனியாக
நடந்து போகிறாள் அவள்;
பிரியமானவர்களுடன்
கைத் தொலைபேசியில்
பேசிக் களித்தபடி……!
**** **** ****
எழுதியவர் :
engrsubburaj@yahoo.co.in

Series Navigation