கவிதைகள்

This entry is part of 32 in the series 20071004_Issue

உஷா தீபன்


மனம்
ஒன்றில் அதுவாகி அதனில் மற்றொன்றாய்
என்னுள் நானாகி பிறரில் நானாகும்
எதையும் காண எப்படியும் காண

எங்கோ ஜனித்ததொன்றை
எண்ணித்தொலைய கருமம்
இங்கே நிகழ்வதைத்தான்
என்றோ மறந்துபோகும்
நுட்பத்தில் நுட்பமாய்
நுணுகிப் புகுந்து பரவி


இயற்கையும் செயற்கையுமாய்
எதிலும் நிறைந்து வளரும்
கங்கையொடு கழிவு
நன்மையொடு தீமை
சோலையும் பாலையும்
சோகமும் மகிழ்வும்
எண்ணச் சுடரில்
எகிறிவிட்ட பொறியாய்
எல்லாமும் நிகழும்
அதுவே தோற்றுவாய்!சொல்லிவிடு

படித்தது போதும்: எழுது மற்றவர்களுக்கு ஏதாவது விஷயஞ் சொல்


உன் கருத்தை உலகுக்குத் தெரிவி ஓங்கிக் குரலெழுப்பு


உட்கார்ந்து போகாதே
ஏட்டுச்சுரக்காய்
கறியாய் உதவட்டும்
அவநம்பிக்கை போக்கி ஆத்மசுகம் தேடு
அஞ்சுக்கு ரெண்டு
பழுதிருக்காது
முடிவுஅனைத்தும்
மூளைக்கே சொந்தம்
பிறருக்கும் அதுபோலே
ஆனாலும்
நீ சொல்வதைச்
சொல்லிவிடு
இறக்கிவிட்டோம் என்ற
எண்ணமேனும் மிஞ்சும்


அம்மா
கங்கையானாலும்
காவிரியானாலும்
எங்கோவோர் மூலையில்
ஏதோவோர் மலையிடுக்கில்
ஒரு சின்னதான ஜனனத்தில்
உயிர்த்து எழுந்து
தவழ்ந்து இறங்கி
பல்கிப்பெருகும்
புகுந்த இடத்தில்
முற்றிலும்
புதிதாய்
பூமியில் பரவும்
போகுமிடமெல்லாம்
தாகம் தணித்து
காணும் நிலமெல்லாம்
கசிந்து செழிப்பாக்கி
புவியை வளமாக்கும்
ஒரு ஜீவநதிதலைமை

தேசம் முழுதும்
குப்பை கூளம்
சுத்தம் பண்ண நினைச்சுத்தான்
துடைப்பத்தைக் கொண்டு வச்சோம்


துடைப்பமே குப்பையாச்சு


தூசிகளும் அதிகமாச்சு


தேசம் முழுக்க குப்பை கூளம்
தேவை ஒரு புதுத்துடைப்பம்


ushadeepan@rediffmail.com

Series Navigation