கவிதைகள்

This entry is part of 37 in the series 20070830_Issue

அனிதா


1. வறண்ட பகல்களும் உறைந்த இரவுகளும்

கதவும் ஜன்னலும் மூடியே கிடக்கும்.
பழகிவிட்ட இருளில்
சுவர் மூலைகளின் ஒட்டடை எடுக்கிறேன்
கால்களின் கீழே அலை இழுக்கும் மணலாய்
உயிர் குறுகுறுக்கும்
தேனீர் அருந்தி நினைவு கலைக்கிறேன்
வெளிச்சமும் நிறங்களும் மூளைக்குள்
வேர் விட்டுப் படரும்
சிதறிய எண்ணங்கள் சேர்க்கச் சேர்க்க சிதறும்
காத்திருக்கும் காகங்கள் மோகத்தோடே அலறும்
வியர்வை கசகசப்பும் பழகமறுக்கும் தனிமையும்
மரபு மீறியும் சாவி தேடும்.
வெளியேற மறுக்க வலிமை சேர்க்கிறேன்
உனக்காய் என்னுள் குறுகிக் கிடக்கிறேன்
இன்றொரு பொழுது இனிதே கழிந்தது
இனி நாளையும்.

2. குளத்துப் பறவை

தங்கம் தெளித்த கோவில் குளத்தில்
நீர் கிழிக்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்தன‌
வெள்ளைப் ப‌ற‌வைக‌ள
க‌ல்லெடுத்துத் த‌ண்ணீர்க் குழிக‌ள் ப‌றித்துக்கொண்டிருந்த‌வ‌ன் மேல்
எச்ச‌ம் க‌ழித்துப் ப‌ற‌ந்த‌து இன்னுமொன்று.
ஏதோ அத‌னாலிய‌ன்ற‌து.


anithu21@gmail.com

Series Navigation