கவிதைகள்

This entry is part of 37 in the series 20070329_Issue

தாஜ்தேடிய அழகு

கற்றுத் தந்த காலம்
வானவீதியை காட்ட
பறப்பதில் இருப்பு
உச்சமென்றானது
மனப்புத்தன்
சிரிப்பை கிழித்து
பறந்த க்ஷணம்
அந்தரத்தில்
தொலைந்தது
நிழலும்.


தந்தையின் காலம்

என் பிள்ளைகள்
படிக்கிறார்கள்
சுமக்க இயலா
சுமக்கவே
படிக்கிறார்கள்.

வீட்டில் யென்
அசைவுகளிலும்
பார்வை அகலா
சிரத்தையோடே
படிக்கிறார்கள்.

மண்ணில் யென்
பாதம் பதியும்
இதம் வேண்டி
காலணிகளை
விட்டுச் செல்ல
படிப்பால்
தெளிகிறார்கள்.

குறுக்கீடுத் தவிர்க்க
சப்தமற
காலடிகளை அளந்து
பாதை ஒற்றியே
நடக்க வேண்டியிருக்கிறது.

என் உடுப்புகளில்
கறைபட்ட எச்சங்கள்
இன்னும் அவர்களுக்கு
புலப்படாதது ஆச்சரியம்.

அவர்களது புத்தகக்
குவியலுக்குப் பக்கத்தில்
நான் நகலெடுத்த
என் கவிதைத்
தொகுப்பொன்று
விரிந்து கிடக்கிறது
இன்னொரு புத்தகமாக.

காலம் காலமாக
எல்லோரும்
கவிதைகளை
விரும்புவதில்லை
சந்தோஷமாக இருக்கிறது.நிர்வாண முகம்

கண்ணாடிக்கு முன்னால்
கண்கள் என்
முகம் தேடும் நேரம்
நிஜமான நண்பன்
உத்தம கணவன்
அன்பு பிரவாக தந்தை
அரசியல் பேச்சில்
சிவப்பவன்
பெண்ணுரிமை தாங்க
பேச்சிலும் தீரன்
கவிதையில் செய்திகள்
சொல்லும் ஆவலன்
இன்னும் அறிவு ஜீவியென
நேரத்திற்கு நேரம்
கட்டின காட்சிகள்
கிளர்ச்சி யூட்ட
புலி வேஷம்
பூனை வேஷம்
நரி வேஷம் நாய் வேசம்
இட்டுக் கலைத்ததும்
கூடவே விரிந்தது.


satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation