கவிதைகள்

This entry is part of 35 in the series 20070301_Issue

சோ.சுப்புராஜ்எதுவுமில்லை புதிதாய்
எதுவுமில்லை புதிதாய்
எல்லாம் என்றைக்கும் போலத்தான்
தினசரிகளின் ஒரே மாதிரியான சுழற்சி!

எல்லாச் செலவுகளும் முதல் தேதிக்கும்
எல்லாக் காரியங்களும்
விடுமுறை தினங்களுக்குமாய்
தள்ளிப் போடப்பட்டு
தள்ளிப் போடப்பட்டு
நாட்கள் நகரும் நத்தைகளாய்…….

எப்போதும் கண்களில் கொஞ்சம்
தூக்கம் மிச்சமிருக்கிறது;
முழுசாய் தூங்கி விழித்த
இரவென்று எதுவுமே இல்லை;
கனவுகளற்ற தூக்கம்
சாத்தியப் படுவதில்லை ஒருநாளும்…..!

கனவுகளில் மட்டும்
பச்சையம் இருந்திருந்தால்
உலகிற்கே தீர்ந்து போயிருக்கும்
உணவுப் பிரச்சினை!

இரைச்சலாகிப் போனது
இயல்பு வாழ்க்கை;
இயந்திரங்களின் உறுமலில்
கறுப்பாய் விடிகின்றன நாட்கள்!

அழுக்குத் தேய்த்துக் குளிக்க அவகாசமில்லை;
மென்று தின்ன நேரமில்லாமல்
விழுங்கிப் போகிறோம் உணவுகளை;
வயிறே பிரதானமான வாழ்விலும்
பிந்தித்தான் போகின்றன
சாப்பாட்டு வேளைகள்!

ஓடுகிறோம்; ஓடுகிறோம்;
ஓடிக்கொண்டே இருக்கிறோம்….
எதற்கென்று தெரியவில்லை;
எங்கென்றும் புரிவதில்லை;
ஓட்டம் மட்டும் தொடர்கிறது
வெறிகொண்ட வேகத்தில்
விழுமியங்களை விழுங்கியபடி…..!


கூண்டுக்கிளி
கூண்டிலடைத்த கிளி ஒன்றை
கொண்டு வந்து மாட்டினார்கள்
என் வீட்டு முற்றத்தில்…..

வயதின் வலிகளோடும்
புறக்கணிப்பின் இரணங்களோடும்
புரண்டு கொண்ண்டிருந்த எனக்கு
கிளியின் வருகை
களிப்பூட்டுவதாய்த் தானிருந்தது….

எனது இறுமலும் கிளியின் மழலையும்
இசையென இயைந்து போனதும்
சினேகமானோம் சீக்கிரமே1
ஆயினும்…….
எப்போதும் கீச் கீச்சென்றபடி
எதையோ பறிகொடுத்த பாவணையில்
சீக்கிரமே அலையலாயிற்று கிளி!

சின்ன அரவம் கேட்டாலும்
சிலிர்த்து நடுங்கியது;
எலி தேடி அலையும் பூனையின்
புள்ளிக் கண்களின் பசிவெறியோ
கிலி கொள்ளச் செய்தது கிளியை…..

சிறுவர்களின் உயிருள்ள பொம்மையாய்
சின்னஞ் சிறு கிளி!
உண்ணப் பழங்கள்; உறங்கக் கூண்டு
எல்லாம் கிடைக்கிறது; இருந்தும்
விரிந்த வானத்தில் சிறகசைத்துப்
பறந்த சந்தோஷம்
கூண்டுக்குள் கிடைக்குமா கிளிக்கு?
கிராமத்தின் வீதிகளில்
சுதந்திரமாய் சுற்றி அலைந்த
பால்யம் நினைவிலாடிய தெனக்கு!

பறந்து பார்க்கத்தானே கிளி அழகு!
கூண்டுக்குள் அடைத்து இரசிப்பது
குரூரமாயிருந்தது எனக்கு;

பள்ளிக்கும் பணிக்குமாய்
பலரும் கிளம்பிப் போனபின்
கிளியும் நானும் தனித்திருந்த வேளையில்
கூண்டைத் திறந்து வைத்து
பறந்து போக அனுமதித்தேன்;
வெளியே போகாமல் கிளி
வேடிக்கை பார்த்தது என்னை!

ஒருவேளை பயப்படுகிறதோ என்றெண்ணி
ஒளிந்து பார்த்தேன் கொஞ்ச நேரம்!
சலனமில்லை கிளியிடம்;
சாவகாசமாய் உலவியது உள்ளேயே!
வழிமறந்து போயிருக்கலாமென்று
கூண்டுக்குள் கை நுழைத்து கிளி பிடித்து
வெட்டவெளியில் வீசினேன் பறந்து போவென்று…..
தத்தி தத்தி நடந்து
தானே கூண்டிற்குள் நுழைந்து
ஓரத்திற்குப் போய் ஒடுங்கிக் கொண்டது;
வெளியேற்றி விடுவேனென்கிற பயத்தில்
வெடவெடவென நடுங்கி பம்மிக் கொண்டது;

பழகிய சிறை வாசம் பாதுகாப்பாக
பறத்தல் மறந்த கிளிக்கு
விரிந்த வானம் வெறுமையாயிற்றோ!
ஐயகோ….
மனித அவலம் கிளிக்குமா……?


விக்கல்; சில நினைவுகள்
தலையில் தட்டவும் யாருமற்ற
தனிமையில் இரையெடுக்கும் போது
முதல் கவளம் சோறே விக்கிற்று!
சிறுவயதில் அடிக்கடி விக்கும்;
அப்போதெல்லாம்
ஆறுதலாய் தலையில் தட்டி
அன்பாய் சொல்வாள் அம்மா
‘உன்னை யாரோ நினைக்குறாங்கடா’!
இப்போது…..
யாரிருக்கிறார் நினைப்பதெற்கு?
ஞாபக அடுக்குகளில் துழாவினால்
பெருமூச்சே மிஞ்சிற்று!

பால்யகால நட்பெல்லாம்
பள்ளி இறுதி நாளன்றில்
பசுமை நிறைந்த நினைவுகளே….
பாடியதோடு கலைந்து போயிற்று !

கல்லூரி கால நட்போ
கத்தை கத்தையான கடிதங்களில்
செழித்து வளர்ந்து
நலம்; நலமறிய அவா; எனும்
கார்டு கிறுக்கல்களில் குறுகி
வருஷத்துக் கொருமுறை
வாழ்த்து அட்டைகளாய் சுருங்கி
கடைசியில் வேலை கிடைத்ததும்
கரைந்து காணாமலே போயிற்று!

அலுவலக உறவுகளெல்லாம்
அசட்டுப் புன்னகைகள்;
அவ்வப்போது கைகுலுக்கள் தவிர்த்து
ஆழமாய் வேர் பிடிப்பதில்லை மனதில்….

சொந்தம் சுற்றமெல்லாம்
சடங்கு சம்பிரதாயங்களில்
முடங்கிப்போய் வெகு நாளாயிற்று!

இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கும்
இயந்திர வாழ்க்கையில்
யாரும் யாரையும்
நெஞ்சார்ந்து நினைப்பதற்கு நேரமேது?


பால்ய சினேகிதி
முச்சந்தியில் வாகன நெரிசலில்
மூச்சிறைக்க நின்றிருந்தபோது
பின்கொசுவம் வைத்த சேலைகட்டி
பிள்ளையை இடுக்கியபடி கடந்துபோன
பேதைப் பெண்ணிடம்
பால்ய சினேகிதியின் சாயல்!

ஒருவேளை….ஒருவேளை….
நீயே தானோ……..?
அலைமோதும் நினைவுக்குள்ளும்
அனலடிக்குதடீ…..!

திருக்கார்த்திகை தினமொன்றில்
உரிமையாய் என் தலையில் நீ
தேய்த்துப்போன
ஒட்டுப்புல்லின் அடர்த்தியாய்
உதிர்கின்றன உன் நினைவுகள்!

அம்மணமாய் நாமலைந்த நாட்களில்
தொடங்குகிறது நமக்கான அந்தரங்கம்!
உன் “அரைமுடி” கேட்டு நானழுததாக
சின்ன வயதில் சொல்லிச் சொல்லி
சிரித்திருக்கிறாள் அம்மா!

செப்பு வைத்து நீ சோறாக்க
வயலுக்கு போவதாய் சொல்லி – நான்
வைக்கோற் போரில் விளையாடிவர
சோறு குழம்பு கூட்டென்று
மண்ணைக்குவித்து பரிமாறி
அவுக் அவுக் என
பாவணைகளில் தின்று முடித்ததும் – அம்மா
பசிக்கிறதென்றபடி ஓடியிருக்கிறோம்….!

தானியத்தை மென்று
நுனி நாக்கில் ஏந்தி நாம் வளர்த்த
புறாக் குஞ்சுக்கு
புகட்டி இரசித்திருக்கிறோம்….!
காடுகளில் தேடி அலைந்து
பொன்வண்டுகளைப் பிடித்து
தீப்பெட்டிகளில் வளர்த்திருக்கிறோம்!

வெயிலில் அலைந்து கதை பேசியபடி
சாணி பொறுக்கியிருக்கிறோம்;
மரநிழலில் ஓய்வெடுத்தபடி
வேப்ப முத்துக்கள் சேகரித்திருக்கிறோம்!

களிம்ண்ணில் கோயில் கட்டி
கடவுள் சிலை வடித்து
வீடுவீடாய் கொண்டு காட்டி
எண்ணெய் வாங்கி வந்து
விளக்கேற்றி விளையாடியிருக்கிறோம்….!

உணர்ச்சிகள் அரும்பாத வயதில்
புணர்ச்சி என்று புரியாமலே
உறுப்புக்களை ஒட்டி வைத்து
புருஷன் பொஞ்சாதி என்று
உறவாடி மகிழ்ந்திருக்கிறோம்…..!

பக்தி கொஞ்சமும் இல்லாமல் – உன்
பக்கத்தில் நடந்து போகிற சந்தோஷத்திற்காகவே
மலையேறிப் போய்
சாமி கும்பிட்டுத் திரும்பிய நாட்கள்!

சைக்கிள் கற்றுக் கொள்ளும் சாக்கில்
பரஸ்பரம் பரிமாறிக் கொண்ட
பவள முத்தங்கள்!
என் கைகளில் தவழ்ந்து
நீ பழகிய நீச்சல்!
உன் கைகளுக்குள் அடங்கி
நான் சிலிர்த்த மோகம்!

புத்தம் புதிய பூவாக நீ வந்திருந்து – என்
மனங் கொள்ளை கொண்ட
மயானக் கொள்ளை!
நீ வராமல் போனதால்
அழகிழந்த தெப்பத் திருவிழா!

இன்னும் இன்னுமென….
நெஞ்சின் ஆழத்தில் இனிக்கும்
நினைக்க நினைக்க சிலிர்க்கும்
நினைவுகள் ஏராளம்!

அறியாத வயதில் அருகிருந்தோம்;
வளர வளரத்தான்
விலகிப்போனோம் வெகுவாக….
கல்வி பிரித்தது; காலம் நம்மை
வேரோடு பிடுங்கி வீசி எறிந்தது
திசைக் கொருவராய்……..

திருவிழாவில் தொலைந்த சிறுபிள்ளைகளாய்
தேடிக் கண்டடையவே முடியாதபடி
தொலைந்து போனோம்
நீண்ட நெடுங்காலமாய்……


நவீன தாலிகள்
நவீன பெண்களுக்குத் தான்
எத்தனை எத்தனை தாலிகள்!

கம்பீரமாய் கழுத்தில் தொங்கும்
கம்பெனியின் அடையாள அட்டை;
மாலையாய்த் தழுவி
மனதை நிறைக்கும் கைத்தொலைபேசி!

மருத்துவரென்றால் ஸ்டெத்தாஸ்கோப்;
கணிணி நிபுணி என்றால்
கழுத்திலொரு ஞாபக குறுந்தகடு!
இன்னும் என்னென்னவோ
அத்தனையையும் சுமக்கிறார்கள்
அலாதியான சந்தோஷங்களுடன்….!

புருஷர்கள் அணிவிக்கும்
பொன் தாலிகள் தான்
காலத்திற்கும் கனக்கும் நகரவிடாமல்…..!
யானைகளுக்கு அங்குசங்கள்;
நம் பெண்களுக்கு
தாலி என்னும் மஞ்சக்கயிறு!பெய்யெனப் பெய்யும்

கோயிலுக்கெல்லாம் போவதில்லை அவள்;
கொழுநன் தொழுவதெல்லாம்
கழுவேற்ற வேண்டிய
சடங்குகளில் ஒன்றென்பாள்;
பெண்ணுக்கு அழகென்று வள்ளூவன்
பரிந்துரைத்த பழக்கங்களையெல்லாம்
தீயிலிட வேண்டுமென்பாள் தீவிரமாய்!

ஆயினும்……
காகிதப் பூக்களே கவர்ச்சி என்றும்
கட்டிடங்களின் பிரம்மாண்டமே
நாட்டின் வளர்ச்சி என்றும்
கற்பிதங்கள் நிறைந்த
கடும்பாலை வெளியில் வாழ நேர்ந்த
வெயில் கொளுத்திய ஒரு நாளின்
மங்கிய மாலை வேளையில்
வெளியில் கிளம்பிய புருஷனிடம்
மழை பெய்யுமின்று மறக்காமல்
குடைகொண்டு போங்களென்றாள்;அவன்
மறுத்தபோதும் திணித் தனுப்பினாள்!

கட்க்கத்தில் கனக்கும் குடையுடன்
மனைவியை மனதுள் வைதபடி
வெளியில் சென்ற வேலை முடித்து
வீட்டுக்குத் திரும்பும் வழியில்
அதிசயமாய்ப் பிடித்தது
அடைமழை!
துளியும் நனையாமல் வீடு திரும்பியதும்
மனைவியிடம் கேட்டான்
எப்படி அறிந்தாய்
இன்று மழை பெய்யுமென்று?
நீயும் பத்தினி தான்……..!

முறைத்தபடி சொன்னாள் அவள்;
மன வலியை
முகத்தில் படிக்க முடிவது போல்
மழைவழி அறிய வானத்தை
வாசிக்கத் தெரிந்தால் போதும்…..!
பத்தினி என்கிற
பாசாங்குகள் தேவையில்லை;முதுமை; சில முறையீடுகள்

முடியில் சாயம் பூசி கறுப்பாக்கலாம்;
முகச் சுருக்கங்களை
கிரீம்களில் அழுத்தி மறைக்கலாம்;
விரட்டலாம் முதுமையின் வீச்சங்களை
வாசணை திரவியங்கள் தெளித்து….

இஸ்திரி போட்ட உடைகளை இன்பண்ணி
இளமையாய் தோற்றமளிக்கலாம்;
வாலிபத்தைப் பெண்களிடம் நிரூபிக்க
லேகியங்கள் கிடைக்கின்றன நிறையவே!

ஆயினும்
ஞாபக அடுக்குகளில்
குவிந்து கொண்டிருக்கும் குப்பைகளும்
துடைக்கத் துடைக்க பெருகும்
தூசுகளும்
கடந்த காலங்களின் வயதைக்
காட்டிக் கொடுத்து விடுகின்றனவே
எப்படி மறைத்தாலும்…….!


குறுங்கவிதைகள்
உலகம் சுருங்குகிறது கிராமமாக…..
விரிந்து கொண்டிருக்கின்றன
மனிதர்களுக்குள்ளான இடைவெளிகள்!
**** **** ****
கடவுள் இல்லை என்று
எத்தனை தீவிரமாய் நம்பினாலும்
நெருக்கடிகள் நேரும் போதெல்லாம்
அலைபாயும் மனம் சரணடையும்
ஆண்டவனிடமே…..!
**** **** ****
காலம் கடந்து கொண்டிருக்கிறது – நமது
கர்வங்களை நகைத்தபடி
தத்துவங்களைத் தகர்த்தபடி…..!
**** **** ****
அங்கீகாரங்களுக்கு அலைகிற
அவலம் தொடர்கிறது
ஆயுள் முழுதும்…..!
**** **** ****
கவனம்; மிகக் கவனம்
கையாளுங்கள் கண்ணாடி மாதிரி
கொஞ்சம் பிசகினாலும் நொறுங்கி விடும்
மனித மனங்கள்…..!
**** **** ****
வருஷந் தவறாமல் வாங்கிக் குவித்தும்
அனுப்ப யாருமில்லாததால்
என்னிடமே தேங்கிப் போயின
காதல் வாழ்த்து அட்டைகள்!
**** **** ****
ஒருவருடனும்
ஒத்துப்போக முடிவதில்லை;
ஒதுங்கி வாழ முயன்றாலோ
கொல்கிறது தனிமை!
**** **** ****
உயிரோடிருக்கும்போது ஒருவாய்
உணவும் தந்து உபசரிக்காதவர்கள்
பிணத்திற்குப் படைக்கிறார்கள் விதவிதமாய்
பிரியத்தினால் அல்ல;
பேய் பற்றிய பயத்தினால்….
**** **** ****
– சோ.சுப்புராஜ்

Series Navigation