கவிதைகள்

This entry is part of 35 in the series 20070301_Issue

சோ.சுப்புராஜ்இலவசங்கள்
சமைக்க மசாலாக்கள்
சல்லாபிக்க காண்டம்கள்
சருமத்திற்கு களிம்புகள்
முகத்திற்கு பௌடர்
முலை வளர மூலிகைகள்
குளிக்க சோப் மற்றும் ஷாம்ப்புகள்
பற்பசைகள்; தலைவலித் தைலங்கள்
மகளிரின் மாதப் பிரச்சினைகளூக்கும்
தீட்டுத் துணி பொட்டலங்கள்;
இன்னும் என்னென்னெவோ
எல்லாம் கிடைக்கும்
எங்கே? புத்தகக் கடைகளில்; அதுவும்
குறைந்த விலைகளில் கூடவே
மெலிந்த தமிழிதழ் ஒன்றும்
தருவார்கள் இலவசமாய்…..
வாசிக்க ஒன்றும் தேறாது; ஆயினும்
வாங்கி வர மறக்காதீர்கள்
குழந்தைகளின் மலந்துடைத்து
குப்பையில் வீச
உதவும் உத்திரவாதமாய்…….!


தாம்பத்யம்
உனக்கும் எனக்குமான
கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது
நம் திருமண நாளிலிருந்து……

இருவரும்
ஒருவரை நோக்கி ஒருவர்
இழுக்கத் தொடங்கினோம் மூர்க்கமாக!

அவ்வப்போது தன்னிலை மறந்து
ஒருவரை நோக்கி ஒருவர்
நகர்ந்து விட நேர்ந்தாலும் சீக்கிரமே
இயல்புக்குத் திரும்பி
இழுவையை தொடர்கிறோம்…..

கயிற்றின் மையம்
இற்றுக் கொண்டிருக்கிறது;
இருவரின் கைகளிலும் கொப்புளங்கள்
கால்களும் தளர்ந்து போயின
இருந்தும்
இழுவையின் பிடி மட்டும்
இன்னும் இன்னுமென
இறுகிக் கொண்டு தானிருக்கிறது…..

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு
விளையாட்டு விதிகளையும் மீறி
வெகுதூரம் வந்து விட்டோம்;
விலகிப் போவது சாத்தியமில்லை
விட்டுக் கொடுக்கவும் மனமில்லை
இலக்குகள் எதுவுமின்றி வெறும்
பழக்கத்தால் தொடர்கிறோம்;
அவ்வப்போது பாவணைகளிலும்…….!


எங்கெங்கு சென்றாலும்
பிரமுகர்களைப் பார்க்கப் போகிறார்கள்
மரியாதை நிமித்தம்
மாலைகளுடனும் சால்வைகளுடனும்….

கோயில்களுக்குச் செல்கிறார்கள்
அனேக வேண்டுதல்களுடனும்
அர்ச்சகர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கான
சில்லரைகளுடனும்….

சிறைக்கூடங்களுக்குச் செல்கிறார்கள்
சிற்றுண்டிகளுடனும்
சிதைந்த வாழ்க்கை சித்திரங்களுடனும்….

மருத்துவமனைகளுக்குப் போகிறார்கள்
ஆறுதல் மொழிகளுடனும்
ஆர்லிக்ஸ் மற்றும் பழங்களுடனும்…..

இழவு வீடுகளுக்குப் போகிறார்கள்
வலிமிகு இரணங்களுடனும்; சிலர்
வலிந்து வரவழைத்த கண்ணீருடனும்….

உறவுகளைத் தேடிப் போகிறார்கள்
குசல விசாரிப்புகளுடனும்
குழந்தைகளுக்கான தின்பண்டங்களுடனும்…..

நண்பர்களை நாடிப் போகிறார்கள்
பொங்கிப் பெருகும் நினைவுகளுடனும்
பொசுங்கிய கனவுகளுடனும்…..

தெப்பக் குளங்களுக்குப் போகிறார்கள்
குளிக்கும் ஆவலுடனும்; சிலர்
மீன்களுக்கான பொரிகளுடனும்…..

தெரு நாய்களைத் தாண்டிப் போகிறார்கள்
பயமும் பதுங்களுமாய்
திருடர்களும் உயிர்களை நேசிக்கும் சிலரும்
வீசிப் போகிறார்கள்
கொஞ்சம் பிஸ்கட்டுகளையும்….

இறந்த பின்பும் சுமந்து போகிறார்கள்
நிறைய பாவங்களையும்
நிறைவேறா ஆசைகளையும்; சிலர் மட்டும்
உதிர்கிறார்கள் ஒரு பூவைப் போல்
உரமாகிறார்கள் வேரடி மண்ணிற்கே….!


எதிரெதிர் இலக்குகள்
அந்தரத்தில் தொங்குகிறது
நமக்கான ஒற்றையடிப் பாதை
எதிரெதிர் திசைகளில்
நமது இலக்குகள்!

ஏதேதோ புள்ளிகளில் பயணம் தொடங்கி
எதிரும் புதிருமாய்
நிற்கிறோம் இப்போது;
விலகவோ துளியும் இடமில்லை
இருபுறமும் அதல பாதாளம்
எப்படி அடைவது
அவரவர் இலக்கை…..?

சேர்ந்து நடக்கத் தொடங்குவோம்
வேறுவழி எதுவுமில்லை இருவருக்கும்;
உலகம் உருண்டை என்பது
உண்மையானால்
இருவர் இலக்கையுமே கடந்தும்
தொடரலாம் நம் பயணம்…..!


வாக்குமூலம்
என் வழ்க்கை என்னுடையதில்லை;
நதிபோல் குறுகி
கரைகளுக்குள் அடங்கி நடக்காமல்
பாதைகளற்ற நீரோட்டமாய்
கிடைத்த வெளிகளில்
கிளைத்துப் போகிறதென் வாழ்க்கை!

என் பயணத்தின் திசைகளை
எதெதுவோ தீர்மானிக்க
இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கிறேன்!

இளவயதின் இலட்சியங்கள் எல்லாம்
சிதறிப் போயின சீக்கிரமே;
சின்னத் தடயமுமில்லை
வரித்துக் கொண்ட வாழ்க்கையை
வாழ்ந்ததின் அடையாளமாக…..!

தமிழ் இலக்கியம் படிக்கும்
தாகமிருந்தது பால்யத்தில்;
எதிர்காலப் பயம் பற்றிய
பொறியில் விழுந்ததில்
பொறியாளனாய் வெளியேறினேன்; குடும்பத்தின்
பொருளாதார சிரமங்களையும் மீறி……!

கலை இலக்கியத்தை வாழ்க்கையாய் வரிக்கும்
கனவுகள் இருந்தது நிறைய
கஞ்சிக்கும் வழியற்றுப் போகுமென்ற கவலையில்
உத்தியோகம் பார்த்துத்தான்
உயிர் வளர்க்க நேர்ந்தது…..!

காதலித்து கலப்பு மணம் புரிந்து
சாதியின் வேர்களைக் கொஞ்சம்
கில்லி எறியும்
வேகம் இருந்தது ஆயினும்
சுயசாதியில் மணமுடித்து
சுருங்கி வாழத்தான் வாய்த்தது….!

உயிர் குழைத்து உருவாக்கிய அம்மாவை
மகாராணியாய் பராமரிக்க
ஆசை இருந்தது மனம் நிறைய; ஆயினும்
பிழைப்புக்காக பிறிதொரு நாட்டில் நானுழல
பிறழ்ந்த மனதுடன் பிதற்றியபடி
பிச்சைக்காரியாய் வீதிகளில் அவள்
அலையத்தான் நேர்ந்தது…..!

கிராமத்துடனான
தொப்புள் கொடி உறவருந்ததில் – அம்மா
உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற
உண்மை கூட தெரியாமலே போனது….!

கடுகு போல் சிறுக வாழாமல்
ஊறுணி போல் கிராமத்திற்கே
உபயோகமாய் வாழ்ந்து விடுகிற
இலட்சியங்கள் கொண்டிருந்தேன்; ஆயினும்
சொகுசான பட்டணத்து வாழ்வில்
சொத்து சேர்ப்பதே
வாழ்வின் தேடலானதில்
வறண்டு தான் போனேன்
இதயத்தில் துளியும் ஈரமற்று……!

சிறுசிறு கணக்குகளிலும்
சில்லரைப் பிணக்குகளிலும்
நட்புகள் நழுவிப் போயின;
சொந்தமும் சுற்றமும்
விலகிப் போய் வெகு நாளாயிற்று;
பிரியங்களையும் பிரேமைகளையும் மீறி
மனைவியுடனான உறவும்
முறுக்கிக் கொள்கிறது அடிக்கடி…..!

விரிந்து பரவும் வெறியோடு
வேர் பிடிக்கத் தொடங்கினேன்;
சுற்றிலும் வேலியிட்டு
சூனியத்தை அடை காத்தேன்
கிளை விரித்துக் காத்திருந்தும்
அண்டவில்லை புள்ளினமெதுவும்
அப்புறந்தான் புரிந்ததெனக்கு
வளர்ந்து வந்தது முள் மரமென்று…..!.

இலைகள் பழுத்து உதிர்ந்து விட்டன
மொட்டுக்களெல்லாம்
மலராமலே கருகி விட்டன
காயில்லை; கனியில்லை; அதனால்
விதைகளும் விழுகவில்லை
மொட்டை மரமாய் நிற்கிறேன்
வெட்ட வெளிதனில்…..
வீழ்ந்தால் விறகுக்காவது ஆவேனோ
வெறுமனே மட்கி
மண்ணோடு மண்ணாகிப் போவேனோ….!

குறுங்கவிதைகள்

நெரிசல் மிகுந்ததாயிற்று வாழ்க்கை
நெருக்கித் தள்ளுகிறார்கள்
எல்லோரும் என்னை;
நானும் மற்றவர்களை…..!


யாவரும்
கடந்து போகிறார்கள்
புள்ளினங்களை;
பதற வைக்கும் அவசரங்களோடும்
பறத்தலின் பரவசங்களோடும்;
உயிர்களின் பசி உணர்ந்த
சிலர் மட்டுமே
வீசிப் போகிறார்கள்
கைப்பிடியளவு தானியங்களையும்…..!


விதிக்கப்பட்ட வாழ்க்கை
ஒரே ஒரு நாள் தான்; ஆயினும்
எத்தனை சந்தோஷமாய்
அலைந்து பறக்கும் ஆவலுடன்
புற்றிலிருந்து புறப்படுகின்றன
மழை ஈசல்கள் –
வாசலில் காத்திருக்கும்
வலைகளையும் மீறி…..!


விட்டில் பூச்சிகளுக்கு
விஷமாகும் வெள்¢ச்சம்;
உவமையாகும்
ஒளிமயமான வழ்வுக்கும்….!


சோ.சுப்புராஜ்

engrsubburaj@yahoo.co.in

Series Navigation