கவிதைகள்

This entry is part of 29 in the series 20070201_Issue

ம.நவீன், மலேசியா


மிக பயங்கரமானது
ஏதாவது இடுக்கில்
கைவிடுகையில் தட்டுப்படும்
பிரிந்த நண்பர்களின்
வாழ்த்து அட்டைகளும்
அதன் வாசகங்களும்.

####################
எனக்குத் தெரியும்
மிகத்திறமையான எனது நீச்சல்
மரணத்தை நோக்கிதான் என்று.

###################

நேற்று
என் அறை சாவி தொலைந்துவிட்டது
அதை தேடி சென்ற
பூட்டையும் காணவில்லை
வியப்பாக உள்ளது
அவைகளுக்கு அறையில் உள்ள
எனது உடமைகளைப் பற்றி
கவலையில்லாதது.

######################

மிக நுட்பமானது
மரணச் செய்தியைச் சொல்ல
கதவு தட்டும் கைகள்
கொண்டிருக்கும் மொழி.

######################

காலியாய் இருக்கும்
வீட்டின் மூலையில்
பொருட்களை வைத்து நிரப்புதல்
அத்தனை சுலபமானதல்ல
காலியான இடம் தன்னகத்தே
எல்லா பொருட்களையும் கொண்டுள்ளது
ஆது சூனியத்தைத் தவிர

Series Navigation