‘ரிஷி’ யின் கவிதைகள்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

ரிஷி


(சமீபத்தில் சந்தியா பதிப்பகம் பிரசுரித்துள்ள வாக்கு என்ற தலைப்பிலான ரிஷியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் சில)

ஒருகோடியிலிருந்து மறுகோடிக்கு
தினம்
அறுநூறு முறை பயணமாகிறவர்
அடுத்திருக்கும் வீட்டிற்கு வர
அவகாசமில்லை,ஆரோக்கியமில்லை
யெனச் சொல்லும்
சாக்கின் போக்கில்
அவமானம் தாக்கிச் சிதையும்
அன்பின் செல்வாக்கு.


2) வாக்களிப்பு
அந்தக் கைபேசி படச் செய்தியில்
இடம்பெறுபவன் கூறுகிறான் :
“இத்தனை காலம் முட்டாளாய்
இருந்திருக்கிறேன்”.
அவன் கண்களின் அவலக்குரல்
அடிமன வேதனையாய்
எனக்குள் பரவுகிறது.
அந்தக் கன்னங்களில் உறைந்திருக்கலாகும்
கண்ணீர்க்கோடுகள்
எனக்குள்ளும் நீண்டுருளும் துளிகளாக _
ஆறுதலாய் வாக்களிக்கிறேன்
அவனே நானாய் :
“இனி இல்லை”.


3)ஆண்டியின் நந்தவனம்
யாருடைய பரிந்துரையின் பேரிலோ
எனக்குக் கிடைத்திருக்கலாகும்
அரூப தரிசனம்
என்னை அதிகம் யாசகியாக்க
மீறும் கையறுநிலை
சேராதிருக்கக் கடவது ஏதொரு வாசகரையும்.


4) உள்ளது உள்ளபடி
பத்து உடல்களில் ஒன்றாய் நீட்டிக் கிடத்தப்பட்டிருந்தேன்
கடலோரத்தில்.
படமெடுத்துக் காட்டி சிலரின் வீரியமும் காரியமும்
பத்திரப்படுத்தப்படலாம்.
அம்மணங்களை வெளியிடும் ஊடகங்கள்
ஆண்களை பேராண்மையாளர்களாக்கியவாறு.
உடலும் சடலமும் ஒன்றாகும், வெவ்வேறாகும்
பொழுதுகளில்
நிராயுதமனம் மீது அமிலத்துளிகள் தெறிக்க _
அன்புருக்கும்.


5) கவின் வானும்,கழிப்பறை வாசகமும்
ஆகாயமளவு அகல விரிந்த வெளி
அவர் வசமாகியிருக்கிறது.
கையோயும் வரை காவியங்கள் வரைந்து
கொண்டிருக்கலாம்,
கவின் ஓவியம் பல்லாயிரம் தீட்டி மகிழலாம்,
அல்பகல் நல்வாத்தியங்கள் மீட்டிப் பழகலாம்,
அளந்து பார்க்கலாம் வெறுமையின்
கனபரிமாணங்களை,
இன்மையின் உளதாம் தன்மையை…
வண்ணத்துப்பூச்சியாய், சிட்டுக்குருவியாய்,
வெண்பருந்தாய் சிறகடித்துப் பறக்கலாம்,
இரவிலிருந்து நட்சத்திரங்களையும், சொப்பனங்களையும்
திரட்டியெடுத்துப் பூரிக்கலாம்,
சிறுகுழந்தைகளின் கைகளில் வாரித் தரலாம்
மேகப்பஞ்சு மிட்டாய்களை…
என்னென்னவோ செய்ய வழியிருக்க
போயும்போயும் கரித்துண்டால் கழிப்பறைச் சுவற்றில்
கெட்ட வார்த்தைகளைக் கிறுக்கப் பரபரக்கும் விதமாய்
சக படைப்பாளியைப் பழிக்கப் புகும்
குரங்குமனம் கொள்ளத் தகுமோ வெனும்
கேள்விக்குண்டோ பதிலிங்கு சாமி…?


6) கண்ணாடி வீட்டுக் கற்கள்
உமையொரு பாகனாய், சிநேகனாய்,
ஒருபோதும் தம்மைப் பாவித்தறியாப்
பேராண்மையாளர்கள் நிறை பாவனையுலகம்
அது.
பெண்களெல்லாம் அங்கிங்கெனாதபடி
உருவப்பட்ட துணியணிகள் காற்றில் பறக்க
இரவு பகல், மழை வெய்யிலெப்போதும்
குத்தாட்டம் ஆடிக் கொண்டிருப்பது
கட்டாய தண்டனையாக்கப்பட்டிருக்கிறது
அங்கே.
பகடைகள் எத்தாலும் உருட்டப்பட்டுக்
கொண்டிருக்கும் சூதாட்டக் களம் அது.
ஒரு தனிநபர் பெண்ணை இழிவு செய்ய,
தண்டிக்கும் சட்டம்.
அதையே பலர் கூடி
சின்ன பெரிய திரைகளில் வண்ணமயமாய்ச் செய்ய_
விருதளிக்கப்படுகிறது கலைப்படைப்பென்று.
என்றும் சடங்காய், காமக்கிடங்காய்
பெண் மதிப்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
அப் பெருநிலத்துவாசிகள்
சில உண்மைகள் துலங்க வேண்டி
உடலை முன்வைத்துக் கவியெழுதும்
பெண்களை
ஏசலும், புறம் பேசலும் அறமோ சொல்
பழம் நீ பாரதி..!


7) வாகரை கிராம வெறுங்கால்கள்
எடுக்க எடுக்க குறையாமல் வந்து கொண்டிருந்தன_
வளைந்த ஆணிகள், விஷ முட்கள்
கூர்கற்கள், குண்டூசி, கண்ணாடிச் சில்,
சிகரெட் பீடி துண்டுகள்,
கொதித்து உருகிக் கொண்டிருக்கும் தார்,
கருந்தேள் கொடுக்கு, துருப்பிடித்த அரை ‘ப்ளேட்’,
ஸே·ப்டி பின்கள், ஸ்டாப்ளர் பின்கள்,
தகரப் பட்டைகள்,இரும்புக் கம்பிகள்,
இன்னமும்…
என்னமாய் கடுத்திருக்கும்…
மனதில் கோர்த்த சீழ்
கண்ணில் ரத்தமாய் வழிந்திருக்கும்..
வலித்தாலும் சத்தமாய் அழவியலாது…
அழுதாலும் அது விழலுக்கிறைத்த நீராய்…
பொழுதும் வரவாகும் கொச்சை வார்த்தைகள்…
காலணிகளுக்கான நியாயத் தேவையில்
நள்ளிரவிலும் கொதித்திருக்கும் உச்சி.


8) ஆளுக்கொரு
சிலருக்கு சிங்கம்,
சிலருக்கு பெருமாள்,
சிலருக்கு கோவில்,
சிலருக்கு ரயில்நிறுத்தம்,
சிலருக்கு சரணாலயம்,
சிலருக்கு சண்டைக்களம்,
சிலருக்கு ஏறுமுகம்,
சிலருக்கு இறங்குமுகம்…
ஆறுமுகம் கடவுளா, மனிதனா,
மயிலா, மனமா, மாயத்தோற்றமா,
ஏற்றமா, ஏமாற்றமா,
கனவா, நம்பிக்கையா, சதியா,
இதமா, கதிமோட்சமா,
அதிகாரமா…
இகவாழ்வின் மீட்சிக்கொரு மார்க்கமாய்
நிதமும் நான் இறங்கிக் கொள்ளும்
பணியிடம்
சிங்கப்பெருமாள்கோயில்.


9) திறந்த முனை
கானகத்தை கானகமாக்கியவாறு,
கடவுள் பாதி மனிதன் பாதியாய்,
எனில், மிருகமாதல் பழகாமல்
போய்க் கொண்டிருந்தாயாம் உன் பாட்டில்…
கதை சொன்ன அன்புத் தாத்தா இன்றில்லையாயினும்
என்றும் உண்டு தானே!
‘இருள் பகலாகும், பகல் திருவாகும் உன் தடத்தில்’
என்பார்.
என்றும் மூடிய உள்ளங்கையாய் திகழ்ந்த உன்
முழு உருவம்
எங்கே யென்று தேடத் தலைப்பட்டதில்லை
இத்தனை காலம்.
இழைபிரித்தால் இறுதியில் எல்லாம்
வெங்காயம்தானோ வென…
‘அரசகுலத்தவன் இன்பதுன்பத்தில் சாதாரணர்களுக்கு
என்ன வேலை’ யென்று
எனக்கான காட்டில் போய்க் கொண்டிருந்தேன்.
இன்று முதுகில் அம்புகளோடும் எதிர்ப்படும் நீ…
அங்கிங்கெனாதபடி ஒளி-ஒலி வெளிகளிலெல்லாம்
அருல்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஆண்டவரும், ஆள்பவரும்,
வறியோர் காவலராய் தம்மை விளம்பரப்படுத்தியவாறு
அரண்மனைகளைப் பெருக்கிக் கொண்ட வண்ணமே.
மரவுரி தரித்தவன் தோள்கண்டு தோளே கண்ட
விழிகளுக்குள்
சித்திரத்தன்ன செந்தாமரை முகம் விரிய,
அரசனும் ஆண்டியுமற்ற ஒரு பேரொளியாய்
பிறக்கும் நீ புதிதாய்
திறந்தமுனைக் கவிதையாய்.


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

ரிஷி

ரிஷி

‘ரிஷி’ யின் கவிதைகள்

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

‘ரிஷி’


1/ முடியும் வேளை

மணியடித்துக் கொண்டிருப்பதாய் ஒரு சிறு அதிர்வு
மனதின் செவிப்பறையில்.
இனி எழுதிப் போட வேண்டியது எதுவுமிருப்பதாகத்
தெரியவில்லை.
வகுப்பு முடிந்து விட்டதென்று வெளியே குறிப்புணர்த்தி
நிற்கிறது காலம்.
அடுத்து செல்ல வேண்டிய சிறப்பு வகுப்பு எதுவுமில்லை.
கூவிக் களைத்த பெருமூச்சுடன்
கரும்பலகையை ஏறெடுத்துப் பார்க்கிறேன்.
சிற்றெறும்புக் கூட்டமாய் அதன் பரப்பெங்கும்
நெரிசலாய் தொற்றிக் கொண்டிருக்கின்றன வார்த்தைகள்.
பார்த்துப் பார்த்துப் பரபரவென்று பிரதியெடுத்துக்
கொண்டிருந்த மாணாக்கனும் போயாகி விட்டது
எப்போதோ…
சிறுபகுதியும் எஞ்சாத வண்ணம் கைவலிக்கத்
துடைத்து முடிக்கிறேன்.
தண்ணீரையும் மீறி தடங்கள் சில தெரிய-
கண்ணை மூடி அவற்றை இல்லாமலாக்குகிறேன்.
இமைகளுக்குள் விரியும் கரும்பலகை மேல்
தருவித்த மறதியைப் போர்த்தி வைத்து விட்டு
என்னை யெனக்கே அந்நியமாக்கிக் கொள்ள
பழகிக் கொண்ட வாக்கில்
வெளியேறி
அண்ணாந்து பார்க்கிறேன்.
கரும்பலகை போல் துடைத்து விட்டதாய்க்
காட்சியளிக்கிறது ஆகாயம்.
நிர்மல வானத்தில் எத்தனை புனைவு என்ற
நினைப்பெழுவதைத் தவிர்க்க முடியவில்லை.


2/ வெண்புரவிகளும், பட்டத்துயானைகளும், ஒரு-சிறிய நாய்க்குட்டியும்.

வர்ணமயமான விழாப்போதுகளிலெல்லாம்
வெண்புரவிகளும், பட்டத்துயானைகளும்
புடைசூழ வந்திறங்கும்
இளவரசிகளும், மகாராணிகளுமே
உங்கள் வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும்
உரியவர்.
அறியாது
வேகவேகமாய் சிறிய வால் குழைத்து ஆட்டி
பின்னோடித் துள்ளிக் குதித்து வரும்
கள்ளங்கபடமில்லா நாய்க்குட்டியை
புறக்கணிப்பால் எட்டியுதைத்து
விரைந்து கொண்டிருக்கிறீர்கள் அப்பால்.
அந்த நாய்க்குட்டியின் கருவிழிகளில் தெரியும்
கையறுநிலை யதன் வாழ்வின் சாபமாக
ஒரு ஓரமாய் பின்தங்கிச்
சுருண்டிருக்கும் அது-
எதிர்ப்பார்ப்பிலிருந்து ஏமாற்றத்திற்கு உருண்டோடும்
கற்பகோடிக் காலத்தின் இழுவிசைப் பரப்பில்.
பின் எப்போதோ ஒரு நாளின்
வெறுமையில்
மறுபடி யந்தப் பிரியத்தில் குழைந்த வாலை
உங்கள் மனம் விழையும் நாளில்
நீங்கள் எத்தனை உரக்கக் கூவியழைத்தாலும்
கேட்காத தொலைவில்
நிலைகொண்டிருக்க வேண்டும் அது.


3/ வலிநிவாரணி தரும் வலி


வலிநிவாரணியைத் தேடிய வண்ணமிருக்கிறீர்கள்,
வேண்டி வரவழைத்த வண்ணமிருக்கிறீர்கள்,
வழிபட்ட வண்ணமிருக்கிறீர்கள்…
வனைந்தும், புனைந்தும், வார்த்தும், உருக்கியும்
அகழ்ந்தும், புரட்டியும், வேள்விகள் நடத்தியும்
இருந்த வாக்கில் நீங்கள் செய்து வரும் ஆயத்தங்க-
ளிலெல்லாம்
உங்களுக்கு நீங்களே கட்டிக் கொள்ளும்
தாயத்துக்களுக்கப்பால்,
உடுக்கைகளுக்கப்பால், கிண்கிணி-கண்டா
மணிகளுக்கப்பால், மிக
உக்கிரத் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கின்றன
உங்களால் உருவாக்கப்பட்ட வலிகள்.


4/விளையாட்டாய் வீசியெறியப்படும் வெடிகுண்டுகள்


விளையாட்டாய், வெகு இயல்பாய் வீசியெறியப்
படிகின்றன சில வெடிகுண்டுகள்.
அவற்றின் விளைவாக ஏற்படும் ரணகாயங்கள்
ஆற பலகாலம் பிடிக்கிறது.
அசையவே முடியாமல் நலிந்து கிடக்கும் வேளை
மிகத் தனித்துவம் வாய்ந்த மயிலிறகும்,
மந்திரக்கோலுமாய்
உயிர்ப்பிக்கப்படுகிறேன்.
மறுபிறவியடைந்ததாய் மனம் நிம்மதியுணரத் தொடங்க
மறுபடியும் வீசியெறியப்படுகின்றன வெடிகுண்டுகள்-
விளையாட்டாய்… வெகு இயல்பாய்…


5/பராமரிப்பு


மேய்ச்சல் நிலத்தில் புதர்மண்டிக் கிடக்கிறது.
குழந்தைக் கால்களின் குதூகலத் தேடல்கள்-
குருவிகளின் சிட்டு மூக்குத் துழாவல்கள்-
மந்தகதியில் லயங்களை மீட்டியவாறு
நகர்ந்து கொண்டிருக்கும் எருதுகள்-
பல்லக்குக் ‘கிளியோபாட்ரா’க்களாக
அவற்றின் முதுகில் பவனி வரும் காக்கைகள்…
எல்லாப் பாதைகளும் ரோமாபுரி நோக்கிச் செல்ல-
எல்லாப் பாதங்களும் ஒரே உருவந் தாங்க-
பதியும் திருவடிகளுக்காய் புல்வெளியை
பஞ்சு மிருதுவாய் வெட்டிச் சீராக்கியும்,
மொட்டையாய் மழித்தும் புதுப்பித்துப்
பேணி வந்த நாட்களின் நினைவில்
தூர்ந்து கிடக்கும் குட்டையில்
நீர் சுரக்கும் போல் சில கானற்குமிழ்கள்.


6/உனக்கானதும், உன்னாலானதும்


உன் குரல் வழி பெருகிய கடலில்
மிதந்து வந்த
தோணியில் ஏறிக் கொண்டு
அடிவானைத் தொடும் புள்ளியை நெருங்கப்
பிறந்ததொரு ஆலாபனையின் உச்சத்தில்
சரசரவெனக் கீழிறங்கிய மின்னலேணியில்
கால் வைத்த மறுகணம்
என்னைத்
தன்னுள்ளிழுத்துக் கொள்கிறது நிலா…!
உனக்கான நிலவினுள்ளிருந்து
இசைத்தபடி இருக்கிறாய் நீ…


7/ பாட்டுத் திறத்தாலே பாலித்திட வேண்டும்


அநாயாசமாய் ஆங்கிலம் பேசிய மறுகணம்
அப்பட்ட கிராமத்தானாகிப் போன அந்த
அற்புத மொட்டைத் தலையனின் பாட்டில்
முடிச்சவிழ்த்துக் கொண்டன என் உடல் நரம்புகள்…
எனக்கு நானே குறிசொல்லிக் கொள்ளும்
ஒரு சாமியாடலில்
எலும்புகள் நெகிழ்ந்து கொடுக்க,
வெட்டியெடுத்து பத்திரப்படுத்தியிருந்த சிறகுகள்
மறுபடியும் தோள்களில் பொருந்திக் கொண்டன.
மழையின் அறிகுறியாய் ஈர விழியோரங்கள்.
சூறாவளிச் சுரங்கமாகிறேன்!


8/ மழையின் மாயாஜாலமும், மிகைப்படுத்தப்பட்டதொரு- கவிபிம்பமும்


ஏதோவொரு ரசவாத நிகழ்வை எதிர்பார்த்து
அதற்கான ஆயத்தங்கள் என்னவென்றறியலாகா
அவசத்தில் மனம்.
அலைக்கழிப்பில் தினங் கழியும்
அலிபாபாவின் ‘திறந்திடு ஸிஸே’மா…?
‘ஆலீஸி’ன் அற்புத உலகமா…?
‘மைதாஸி’ன் கரமா…?
‘சாம்ஸன்’ தலைமுடியா…?
எனில்_
வானவில்லின் முதுகேறி வரும் ஒரு
சின்ன முயலாய் நிலவு எதிர்ப்பட-
விதிர்த்துப் போகாதிருக்க வேண்டும் நான்.
விழிப்புடனிருக்க வேண்டும்_
மழையின் மாயாஜாலம் நிகழ்த்தும் ரசவாதம்
மிகைப்படுத்தப்பட்டதொரு கவிபிம்ப நினைவில்
என்னைக் கடந்து சென்று விடாதிருக்க.


9/ஒருவழிப் பாதை


ஒருவழிப் பாதை நாக்கு…
தெரிந்தும் புறப்பட்டு
இடைவழியில் தடை செய்ய முயன்றும்
இயலாமல்
பிடி நழுவிய பொருளின் புவியீர்ப்பு விசையாய்
இலக்கை எட்டியாக வேண்டிய சோகம் தாக்க
தன்னைத் தான் வசைபாடியவாறு
மூர்க்கமாய்
முன்னேகிக் கொண்டிருந்தது என் வாக்கு.


10/ஆயிரங்கால அகதியின் அகழ்வாராய்ச்சி


நள்ளிரவில் அங்கே
ஆயிரங்கால அநாதையாய் நின்று கொண்டிருக்கிறாள்-
அந்த அகதி.
மண்ணோடு இரண்டறக் கலந்திருந்த காரணத்தாலேயே
அடிவானத்திறாய் விரட்டப்பட்டவள்.
பரிச்சயமில்லாத முகங்கள் சுற்றிலும்….
பழகிய முகமொன்றை மறுபடி காண வேண்டி
நினைவின் நெம்புகோலால்
காலத்தைப் புரட்டிப் போடத் தொடங்கினாள்.
பரபரவென்று தோண்டத் தோண்ட
அத்தனை உயிர்ப்போடு மேலெழும்பிய
புன்னகைகளும்
வருடல்களும்
கண்ணிமைப் போதில் வெறும் பனையோலை
யெழுத்துக்களாகிப் போவதைக்
காணும் திராணியில்லாமல்
விழிமூடி நின்றாள் வெகுநேரம்.
அவள் முகமெங்கும் கவிந்திருந்தது
ராணி வேடந் தரித்த
பணிப்பெண்ணின் அடிமனத் தவிப்பும்,
அவமானமும்.
விமோசனமும், நிவாரணமும் தரவும்,பெறவும்
முடியாத வறியவளாய்
மிகத் தன்னந்தனியாய் அவள் அருந்தும்
அந்த ஒரு கோப்பை சூடான காப்பி
உணரச் செய்யும் பரிவதிர்வுகளுக்கு
அவளுடைய என்றுமான நன்றிகள் உரித்தாகின்றன.


11/ தொலைவின் அகல்விரிவு


நீலாங்கரை வீடொன்றில்
நள்ளிரவில் கேட்கும் ‘கூர்க்கா’வின்
கைத்தடியோசை
‘நேபாள’த்தின் சில தெருக்களில் எதிரொலிக்கிறது;

கடலூரில் குடிசை வீடொன்றின்
தந்தை இருமும் ஒலி
மும்பையில் கூலி வேலை செய்யும் சிறுவனின் நெஞ்சில்
கோழையாய்த் திரள்கிறது…


12/ போரும் இழப்பும்


நீங்கள் ·பிடில் வாசிக்கலாம்,
பிறிதொன்று வாசிக்கலாம்…
போர் நடந்து கொண்டிருக்கிறது
அன்பைத் தவிர வேறெதையும் தந்தறியாத இதயமொன்றில்
உக்கிரமாய் ஊடுருவிய முப்பது தோட்டக்களில்
இறப்பைச் சாதித்தது எது என்று
துருவியாராய முற்படுமளவுக்கு
அத்தனை குரூரமானவரா நீங்கள்…?
இரத்தச் சகதியில் தேடித் துழாவிய கையை
வெளியே எடுத்துக் கொள்ளும் போது
கவனமாய்ப் பாருங்கள்.
விரல்களில் சிடுக்காகியிருக்கும் தசைநார்களும்,
நாளங்களும், நரம்பிழைகளுமாய்
அறுபட்டுத் தொங்கிக் கொண்டிருப்பவை
மரணமடைந்தவரின் மனமும், மறுவாழ்வும் மட்டுந்தானா…?

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

ரிஷி

ரிஷி