தாஜ் கவிதைகள்

This entry is part of 35 in the series 20061012_Issue

தாஜ்


ரண களம்
————

எம் மக்களுக்கு
நவீனச் சித்திரங்கள்
புரிவதே இல்லை.
தீர அறிந்தவர்கள்
எப்பவும் மௌனம்.
இப்பவும் அதீதிகளே
சபையலங்காரம்.
மனிதர்களை பூதங்களாகவும்
பூதங்களை மனிதர்களாகவும்
உரக்கக் கணிக்கின்றார்கள்.
இறுகலான காட்சிகளின்
அமைப்பியல் அப்படி.

ஒடுக்கப்பட்ட குரல்களின்
கொந்தளிப்பான வடிவம் அது.
துண்டாடப்பட்ட ஜீவன்களால்
நிற்ம் மாறிய பூமி
ஊரின் பரப்பை விழுங்கும்
கல்லறைகள்
வானை முட்டும்
கந்தக மேக அலை
தீய்க்கப்பட்ட பசுமை
வீழ்த்தப்பட்ட ஆலம்
துவசமான பூங்கொடிகள்
அங்கே ஓடித்திரிந்து
வாழ்விடம் தேடும்
ஊனக்கிளிகளின்
படபடப்புமாய்
கோரப்பிடியில் இறுகுமது
சகோதரக் குடாமண்.
*****

அரங்கேற்ற நேரம்
———————-

பார்வைக்குத்
திறக்கப்பட்டது
என் சித்திரக் கூடம்.

தலைப்பு:
நிர்வாணம்.

விரிந்தே கிடந்தது
குறிப்பேடு.
கண்டுகொண்டவர்களின்
காலடிச் சுவடுகளும்
பதிவுவில்லை.

காலம் தாழ்கிறது.
காற்றின் பெரு வெளிக்கே
அள்ளி தரலாம்
நிச்சயம்
பேரண்டம் காணும்.
****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation