கவிதைகள்

This entry is part of 31 in the series 20060908_Issue

கோ.கண்ணன்


(அறிமுகம்:- கோ.கண்ணன். தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில்

தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். முனைவர் பட்டம் பெற்ற இவருடைய முனைவர் பட்ட ஆய்வு ‘தமிழ் நாவல்களில் தலைமுறை இடைவெளி’ காவ்யா பதிப்பகத்தால் நூல் வடிவம் பெற்றுள்ளது. சமகாலத் தமிழ்க் கவிதைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். துணைக்கு ஆள் கிடைக்கும் போதெல்லாம் நவீன தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்கு போய் வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். தன்னளவில் ஒரு நுட்பமான கவிஞரும் கூட. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘ஓசைகளின் நிறமாலை’ விரைவில் வெளிவர உள்ளது. இந்தத் தருணத்தில், கண்ணன் (அவரைப் போன்ற பிறர்) பார்வையிழந்தவர் என்பதைச் சொல்ல வேண்டியது அவசியமா? அனாவசியமா? இதுகுறித்து இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. இரண்டு கருத்துக்களுமே பொருட்படுத்தத் தக்கவையே. என்றாலும், பார்வையற்றவர்களுக்கு எழுத்தறிவு கிடைப்பதும், அப்படியே கிடைத்தாலும் பாடபுத்தகங்கள் ‘பிரெய்ல்’ எழுத்தில் கிடைப்பதே கடினமாக இருக்கும் போது , படித்துக் காட்ட ஆள் கிடைப்பது சிரமமாக இருக்கும் போது அவர்களுக்கு இலக்கியம் அறிமுகமாவதற்கான வழிகள் வெகு சொற்பமாகவே இன்றளவும் நடப்புண்மையை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர் பார்வையிழந்தவர் என்ற தகவலையும் தர வேண்டிய தேவை உணரப்படுகிறது. சமகால இலக்கியம் பற்றி அறிவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு அரிதாகவே வாய்க்கின்றன என்று பல பார்வையற்ற மாணவர்கள் வருத்தமாகச் சொல்லக் கேட்பதுண்டு. போதிய வாய்ப்புகளும், வழிவகைகளும் செய்து தரப்பட்டால் புதிய படைப்பாளிகள், வாசகர்கள் தமிழுக்குக் கிடைப்பது நிச்சயம். சமீபத்தில் திரு. சுகுமார் (‘நெருப்பு நிஜங்கள்’), தாயாரம்மாள்(உதயக்கன்னி), மு.ரமேஷ்(‘வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம்’) முதலிய பார்வையற்றவர்களின் கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவை பரவலான கவனம் பெற வேண்டும். பெறும் என்று நம்புகிறேன். கண்ணனின் வரவிருக்கும் கவிதை நூலிலிருந்து சில கவிதைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
– லதா ராமகிருஷ்ணன்)

1/ பந்தயம்

ஓடுதல்
எல்லையை அடைதல்
முச்சிரைத்தல் என்பவை
எவர்க்கும்
எக்காலத்துக்கும்
எவ்விடத்தும்
பொதுவான ஒன்ட்ரு தான்.
ஆயின்
பந்தயம் என்பது
எப்படி
சமமாய் சாத்தியமாகும்?

2/ப்ரியமுடன் யாழ்மதிக்கு

ஜலதரங்க இசைபொழியும்
எனது கை குடை
கோவர்த்தன கிரிசுமந்த
கோபாலனாய் நீ.
கொற்ற குடை நிழல் கீழ் தங்கிடும்
குடிமகனாய் நான்.

3/அப்பாவின் வாசனை

கண்ணனின் கவசகுண்டலம் போல், அப்பாவோடு
சேர்ந்தே பிறந்திருக்கக் கூடும் இது.
தீர்த்தமாடிய கங்கையாலும் கழுவ முடியாதது.
ஒரு நாளும் அப்பா செயற்கை மணப் பூச்சுக்களாலோ,
வாசனை திரவியங்களாலோ
களங்கப்படுத்தியதில்லை இதனை.
அப்பாவின் அடிச்சுவட்டோசை செவிபோகும் முன்
யானையின் மணியோசையாய் நாசியில் நுழைந்து
உறையும் இது.
இதயத்தில் சிலிர்ப்பூட்டும் அப்பாவின் உடல்வாடை
தனித்துவம் மிக்கது;
மகத்துவம் நிறைந்தது.
உழைப்பின் பொருளை எந்த அகராதியிலும்
துலாம்பரமாய் துலக்கிக் காட்டுவது.
மண்மணம் நிறைந்தது
மண்ணில் கரைந்தது அப்பாவின் வாடை.

4/ பதிவுகள்

எவரெவர் கால்களுக்கெல்லாமோ
நிர்ப்பந்திக்கப்படும்
நான் கடக்க வேண்டிய பயண தூரம்.

எவெரெவர் தோள்களுக்கெல்லாமோ
சுமத்தப்படும்
என்னுடைய சிலுவை பாரம்.

எவரெவர் விழிகளிலெல்லாம்
அலையலையாய் விரியும்
எனக்கான
வாசிப்பின் பக்கங்கள்.

எவரெவர் திருவாஇகளிலெல்லாமோ
ஒளி-ஒலிபரப்பு செய்யப்படும்
எனக்கான கேள்வி, காட்சிகள்.

எவரெவர் விரல்களிலோ
மலை மலையாய் குவிந்திடும்
என்னுடைய எண்ணப் பதிவுகள்.

நானும்
அத்தனை கால்களையும்,
அத்தனை தோள்களையும்,
அத்தனை முகங்களையும்,
அத்தனை கரங்களையும்,
ஆரத்தழுவித் தழுவி
முத்தமிட்டு, முத்தமிட்டு
ஆனந்தமாய் முறுவலிப்பேன்
அழுது ஓய்ந்திடும் சிறு குழந்தையென.

5/என்ன செய்யலாம்?

(ஆத்மாநாமின் தாக்கத்தில் எழுதப்பட்ட கவிதை)

காகிதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்?
குழந்தையோடு குழந்தையாய் பொம்மைகள்
செய்து விளையாடலாம்.
முடியா விட்டால்
கிழிக்கப்பட்ட மனசைப் போல
சுக்குநூறாக்கிடலாம்.
காகிதம் கோபித்தால் கழிவிரக்கம் கொண்டு
மண்டியிட்டு அதனிடம் மன்னிப்பு கோரலாம்.

காகிதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்?

பொறுப்பான ஆசிரியரைப் போல
தேவையான குறிப்புகள் எழுதலாம்.
ஒரு கவிஞனைப் போல , குடிக்காமல் போதை கொண்டு
பொருள் பொதிந்த, பொருள் புரியாச் சொற்களைக்
காகிதத்தில் உதறிக் கொட்டலாம்.
கதாநாயகன் போல், வில்லன் போல்
சட்டப்படி, சட்டமேந்தி
மக்களைத் திகைக்கச் செய்யலாம்.
‘மைக்கேல் ஆஞ்ஜெலோ’வைப் போல்
மறையா ஓவியம் தீட்டலாம்.

காகிதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்?

என்னமும் செய்யலாம்.
ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கலாம்.
வேண்டாமென்றால் தகர்க்கலாம்.
வேறென்ன செய்யலாம்?
காதலரைப் போல கவலையின்றி
கடிதங்கள் போடலாம்.

வெள்ளைக் காகிதத்தை வைத்துக் கொண்டு
என்ன செய்யலாம்?
வெற்றுக் காகிதத்தை வைத்துக் கொண்டு
என்ன செய்யலாம்?
வெள்ளைக் காகிதத்தில் , அதன் வெறுமையில்
ஒரு புத்தன் பிறந்தான்.
காற்றுச் சிறகேந்திப் பறக்கும் ஒற்றைக்
காகிதம் போல் நாமும்
பற்றற்ற சுதந்திரவாதியாய் பறக்கலாம்.

-கோ.கண்ணன்

Series Navigation