என் தேசத்தில் நான் — சிறிய இடைவேளைக்குப் பின்னர்

This entry is part of 36 in the series 20060811_Issue

மதுமை சிவசுப்பிரமணியன்


செம்புழுதி
தீண்டத் தீண்ட
விளையாடி திரிந்த
என் பிஞ்சுப் பாதங்கள்
செங்குருதி
தீண்டிவிடும் என்பதற்காய்
திரியாமல்
இருக்கின்றன……

புகையிலைத் தோட்டத்தினூடு
பனிமூட்ட காலையின்
பள்ளி சென்ற
பொழுதின் உயிர்ப்புக்கள்…
சோதனைச் சாவடியினூடு
போர்மூட்ட சாலையில்
ஏனோ கிடைக்கவில்லை…..

பனம் பழங்கள்
பொறுக்கிய
தோப்புக்கள் எல்லாம்
வெறுமையாய்….
திரும்பிப் பார்க்கின்றேன்
அவை
சோதனைச் சாவடிகளை
அலங்கரித்திருந்தன……..

சந்தேக துன்புறுத்தல்களினால்
அடையாளங்களை
மூடிக் கொள்கிறேன்..
அடையாள அட்டை மட்டும்
விடாப்பிடியாய்
பிறந்த இடம் : இணுவில்
எனக் காட்டுகிறது…..

தினம் விரும்பும்
என் துறைமுக சாலைகள்
இன்று
முட்கம்பி வேலிகளுக்குள்…
மனது மட்டும்
அதை ஊடறுத்துப்
பார்த்து
காயம் பட்டுக் கொள்கின்றது…..

என் வீதிகளில்
வரும்
“த..யீ..ர்….” என்ற
தயிர்க்காரி
வருவதேயில்லை….
வரவே முடியாதோ
என்று நினைக்க மட்டும்
எனக்கு
சக்தியேயில்லை….

பஸ் பயணங்களில்
என்னை மறந்திருக்கும்
நான்
இப்போதெல்லாம்
கந்த சஸ்டி கவசத்துடன்
கிளைமோர் ஒன்றும்
வெடிக்காமல் இருக்க…..
காக்க காக்க
கனகவேல் காக்க……..

பாதம் வருடும்
அலைகள்
அளைய பிரியமாய்
இருக்கின்றேன்….
மனித வேட்டைகளால்
மனிதர்கள்
போவதில்லை என்ற
உண்மை
உறைக்காமல்;………

இராணுவச் சிப்பாயின்
நீ யார்? – என்ற
கேள்விக்கு
“இலங்கையன்” ( Sri Lankan )
எனச் சொல்லத்தான்
ஆசைப்படுகின்றேன்….
அவன் என்னை
“இலங்கைத் தமிழனாய்” ( Sri Lankan Tamil)
பார்க்கின்ற போதும்……

……………….
பிறந்த நற் பொன் நாடு
நற்றவ வானிலும்
நனி சிறந்தது – என
யார் சொன்னார்கள்?
திருத்தி எழுதிக் கொள்ளுங்கள்….
நாங்கள் சொந்த நாட்டில்
தான்
நரகத்தில் உழல்கின்றோம்……….

வலிக்கும் போதெல்லாம் இன்னும் தொடரும்………..

Series Navigation