கவிதை

This entry is part of 48 in the series 20060519_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


நீங்கள் என் கவிதையொன்றில் இறங்கி நீந்த தொடங்கிவிட்டீர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக்கொண்டு சிரமமின்றி நீந்துகிறீர்கள் நீங்கள் எவ்வளவு ஆழமாக சென்றபோதிலும் ஆழத்தில் செல்வது போல உணராமலிருக்கிறீர்கள் ஏதோ அசாம்பாவிதம் நடக்கிறது என்று நினைக்கிறீர்கள் உண்மையில் கவிதையில் இறங்கவில்லை என்றும் கூட என் கவிதையை புரிந்து கொள்ள சிலப்பதிகாரத்தில் கூட பாய்ந்தீர்கள் எவ்வளவோ முயற்சிக்கு பின்னும் எதுவுமே அகப்படவில்லை இது கவிதையென்று எண்ணிக்கொண்டு கவிதையின் ரிஷிமூலம் தேடி எதிமுகமாய் நீந்திக்கொண்டிருக்கிறீர்கள் ஆறுபோலிருக்கும் அந்த கவிதையில் பல கிளைக் கவிதைகள் வந்து சேருவதை கண்டு கொண்டீர்கள்.அடுக்கடுக்காய் பல கவிதைகள் மிகுந்த சிரமம் கொண்டு நீந்தியபோதிலும் எதுவும் அகப்படாமல் நீங்கள் சிரமமுறுவதைக் கண்ட என்கவிதை கவிதை பற்றிய ஞாபகங்களை உங்களுக்கு நினைவுகளாக்குகிறது.கவிதையில் இறங்காமலே நீந்திக்கொண்டிருக்கிறீர்கள் கவிதைக்கு உள்ளும் புறமும் ஒரு கவிதையைப்போல.

———————-
mujeebu2000@yahoo.co.in

Series Navigation