கவிதைகள்

This entry is part of 42 in the series 20060324_Issue

சாரங்கா தயாநந்தன்


ரோமங்களின் கதை

என்மனத்தின் ஆசைகள்
ரோமங்களாய்….
பிள்ளைப்பராயத்தில் அவை
பொன்னிறமாய்த் துலங்கின.
மனோரம்யமிக்க அவற்றின்
மயிர்க்கால்கள்
அன்னைமடித் தூக்கத்திலும்
அன்றலர்ந்த மல்லிகை காவி
குதி தொடும் கூந்தலிலும்
இளந்தென்றல் வருடுமோர்
இனிய பொழுதின் ஊஞ்சலிலும்
ஆரம்பங் கொண்டிருந்தன.
பருவ வயது தொடக்கமுற்றதும்
இருள் விலகியிருக்காததுமான
ஒரு அதிகாலைப் பொழுதில்
எனது ‘பால் ‘ விலகிய
தொடுகைக்கான பிடிப்பை
உணர்ந்த போது
கரிய நிற ரோமம்
ஒன்றின் தோற்றத்தினை
மனதோரங் கண்டேன் நான்.
ஆயினும்….
என் முதிர்கன்னிமையை
வெறிச் சிரிப்போடு
காலம் கடக்கின்ற
இந் நிகழ் காலத்தின்
ஒற்றை இறகான
நேற்றில் அதிர்ந்தேன்.
பொன்னிற ரோமங்கள்
எதுவும் அங்கில்லை.
மனதின் உடல் முழுதும்
விரவியிருந்தன
கரிய நிற ரோமங்கள்.
ஒரு மிருகத்தினது போல….


குழந்தையின் அழுகை

அழுகையில் மனசு கரைகிறது.
பூமுகம் குழம்பி
விழிகள் சிவந்து தளம்பும்
குழந்தையின் அழுகை
கொஞ்சமும்
சகிப்பிற்குரியதல்ல.
கன்னங்களில் வழிகிற
கண்ணிரின்
கோடிடும் எத்தனிப்பை
தன் புறங்கைத் தேய்ப்பில்
தோற்கடிக்கிறது குழந்தை.
கண்ணீரானது தேம்பியபடி
பார்ப்போர் மனதில் ஒட்ட.
பின்னர்
அழுகைக்குச் சக்தியற்று
அதை விசும்பலாக
மாற்றுகிறது குழந்தை.
விசும்பலின் களைப்பில்
கேவலுக்குத் தாவுகிறது.
சிறிது பொழுதிற்கப்பால்
மெளனத்தை
அழுகையின் சத்தக்குறைப்பாக
அர்த்தங் கொண்டபடிக்கு
மழை மந்தாரக் கவிவை
பிஞ்சுமுகத்தில் தேக்கியபடி
வெற்றுத் தரை பார்த்து
உட்கார்ந்திருக்கிறது.
இப்போதும் கூட
ஊட்டம் மிக்க
உணவுக் கோப்பையுடன்
எட்டிப் பார்க்கிற
தாயின் முகத்தில்
உணவுண்ண விரும்பாத தன்
பிடிவாதத்தை வீசியடிக்கிறது .
—-

nanthasaranga@gmail.com

Series Navigation