வாழ்க்கை

This entry is part of 29 in the series 20060303_Issue

கவிஞர் புகாரி


மீன் தொட்டிகள் அழகானவை
அதனுள் நீங்தும் தங்க மீன்
காண்பதற்குக் கொள்ளை அழகு

ஆனால்…
திமிங்கிலங்களுக்கு
மீன் தொட்டிகள் சரிப்படாது
அது சுதந்திரமாய்
நீலக் கடலில் நீளப்பாயும்
இயற்கை அழகோடு
கம்பீரமாய் நீந்தித் திரியும்
.

சிலைகள் அழகானவை
செதுக்கச் செதுக்க அழகு கூடும்
செதுக்குபவன் கைகளில்
சிலிர்ப்போடு பேசும்

ஆனால்…
அந்த நீல மலைத்தொடரை
செதுக்குவதென்பது நடவாது.
அது தானே தடம்போட்டு
தானே நடைபோட்டு
நீண்டு வளர்ந்த நீல மலைகள்
இந்தச் சிலை அதன்
இயற்கை அழகின்முன்
காணாமல் போய்விடும்

.

அந்தக் கூண்டு தங்கத்தால் ஆனது
அதனுள் அந்தக் கிளிக்கு
அத்தனைப் பராமரிப்பும் உண்டு
இறகுகள் நீவிவிடப்படும்
பால்பழம் கொடுக்கப்படும்
பன்னீரில் குளிப்பாட்டப்படும்
நாக்கைச் சுழற்றிப்
பேசக் கற்றுத்தரப் படும்

ஆனால்…
வேடந்தாங்கல் பறவை
சிறகின் சுதந்திரத்தை
அனுபவிக்கிறது
வானவெளியில் சிறகடிக்கிறது
நினைத்ததை உண்கிறது
நினைத்த இடம் பறக்கிறது
அதன் சுதந்திரம்
இந்தக் கூண்டுக்கிளிக்கு வராது

.

ஒரு குரங்கைக் கண்டேன்
அழகழகாய் சட்டை மாட்டிக்கொண்டு
சிங்காரமாய்ச் சீவிக்கொண்டு
குச்சைப் பார்த்துக் குட்டிக்கரணம் போட்டு
நிறைய சம்பாதிக்கிறது

கைத்தட்டும் கூட்டம்
ஏராளம் ஏராளம் ஆனால்
அதன் தந்தைக் குரங்குபற்றி
அதற்குத் தெரியாமலேயே
போய்விட்டது

.

குட்டைமரம் பார்த்திருப்பீர்கள்
ஜப்பானியர் கிள்ளிக் கிள்ளியே
ஒரு மாபெரும் மரத்தை
குள்ளமாக்கியிருப்பார்கள்
அதைப் பார்வையிட
உலகில் பல்லாயிரம் மக்கள்
அதைப் படைத்துவிட்ட
பெருமை ஆயுளுக்கும் போதும்

அந்த அருங்காட்சியகத்தில்
அணிவகுத்த கும்பலிடம்
காட்டு மரங்களுக்கும் இதற்கும்
என்ன வித்தியாசம் என்பதுமட்டும்
மறைக்கப்பட்டு
மறக்கடிக்கப்பட்டுவிடும்

—-
buhari@gmail.com

Series Navigation