கவிதைகள்

This entry is part of 46 in the series 20060217_Issue

சேவியர்பெறுதல்

ஆயிரம் பேர்
கூடியிருக்கும் அவையில்
எனக்குப்
பொருளுதவி செய்யாதே.

விரும்பினால்
என் குடிசைக்கு வந்து
யாருமறியாமல் தந்து போ
நீ
தரவிரும்பியவற்றை.
கனம் குறைந்திருந்தாலும்
மனம் நிறையும் எனக்கு.

உன்னுடைய
அன்பளிப்புகளை
ஆலய முற்றங்களில்
கூனிக் குறுகிப் பெற்றுக் கொள்ள
வலிக்கிறது.

நான்
ஏழையென்பதை
பிரகடனப் படுத்துவதற்காய்
பொதுக்கூட்டங்கள்
போடாதே.

பசியை விட
பட்டினியை விட
சாவை விடக் கொடுமையானது
எல்லோரையும் விட
நான் தாழ்ந்திருப்பதாய்
நீ
அறிவிப்புக் கூட்டம் நடத்துவது.

எனக்குத் தருவதாய்
சொல்லிக் கொள்கிறாய்.
ஆனால்
தருவதை விட
அதிக மதிப்புள்ள
கர்வத்தைப் பெற்றுக் கொள்கிறாய்.

போகும் போது அதற்காய்
சின்னதாய்
ஒரு
நன்றியாவது சொல்லி விட்டுப் போ.

துளி

நீளமான
ஒரு
மழைத்துளி போல
அகல் விளக்கில் எரிகிறது
ஒரு துளி நெருப்பு.

பதறியோடும் பறவைக்கூடம் போல
நாலாபக்கமும்
சிதறி ஓடக் காத்திருக்கிறது
அந்த
ஒரு துளிக்குள்
ஒளிந்திருக்கும் ஏழ் கடல்.

பெருமழையின்
முதல் துளி
அழகாய் தான் விழுகிறது.

நாற்படை போல
வெறித்தனமாய் ஓடி
நாலா பக்கமும் முற்றுகையிட்டு
ஊரைக்
கைப்பற்றிக் கொள்ளாதவரை

திரிக்கு மேல்
அமைதியாய் அமர்ந்திருக்கும்
சுடரைப் போல
மழை அழகாய் தான்
இருக்கிறது.

சிறு காற்றுக்கே
அணையக் கூடுமெனினும்
ஏதாவது ஒரு கரம்
அதை
ஆதரவாய்ப் பொத்திக் கொள்கிறது.

ஏதாவது
ஒரு உள்ளங்கை
ஆனந்தமாய் பெற்றுக் கொள்கிறது.

ஒரு
துளியாய் இருக்க விடுங்கள்
என்னை.
விதிக்கப்பட்ட
துளி நேர வாழ்க்கையில்.

உனது குரல்

எப்போதோ
நீ விட்டுச் சென்ற
குரலின் விரல்களை
இன்னமும்
இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.

பார்வையற்ற ஒருவனின்
பாதங்களுக்குக்
கீழே
பரவும் வெளிச்சம் போல
பயனற்று வழிகிறது
என் எதிர்பார்ப்பின் கதறல்.

உன் குரலில்
இப்போது
இனிமை கூடியிருக்கலாம்.
அல்லது
கரகரப்பு கலந்திருக்கலாம்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றில்
மிகப் பழமையான
சிற்பம் போல,
அதிகபட்சக் கவனத்துடனே
அன்றைய உன் குரலை
பாதுகாக்கிறேன்.

அந்தக் ஒலிக்குள் இருக்கும்
மொழி
என்னைக் காயப்படுத்திய
விலகலின் வார்த்தை தான்,
ஆனாலும்
விலக்காமல் வைத்திருக்கிறேன்.

ஒருவேளை
அந்தக் குரல் தொலைந்து
போனால்,
மீண்டும் ஒரு குரலுக்காய்
உன் வாசலுக்கு
யாசகனாய் வருவேனோ என்னும்
பயத்துடன்.

அழுத்தக் கோடுகள்

தேவதைகளின்
சிறகசைப்பில் சரிசெய்ய
இயலாதவற்றை
ராச்சசிகளின் நகக்கீறல்கள்
ரட்சிப்பதில்லை.

தேவதைச் சாரலில்
மோட்சம் அடையாதவர்கள்
பேய்மழையின் கைபிடித்து
பரமண்டலங்களுக்குப்
பயணிப்பதும் நிச்சயமில்லை.

மெல்லினங்களின்
இறகுகளில் தான்
பறந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

வல்லினங்களின்
பளு அறுத்து வீசிவிடின்
மனசும்
இலேசாகிப் பறக்கத் துவங்கும்.

எனினும்…
இறக்க இறக்க
உயிர்த்துக் கொண்டே தான்
இருக்கின்றன
எறும்பின் முதுகில்
எந்திரக் கற்கள்.

எத்தனை தான்
தேவாலயப் பீடங்களிலும்
பலிபீடங்களிலும்
கண்ணீர்த் துளிகள்
இரத்தம் சிந்திக் கொண்டிருந்தாலும்

வறுமைக் கோட்டை
அழிக்க இயலாத
மழை
பொழிந்து கொண்டிருந்தாலென்ன
அழிந்து கொண்டிருந்தால் தான் என்ன ?

Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation