கவிதைகள்

This entry is part of 48 in the series 20060203_Issue

சேவியர்


கலைதல்

காலையில்
அங்கே இருந்த நிழல்
மாலையில்
அங்கே இல்லை.

காலையில்
மெளனமாய் நின்றிருந்த
காற்று
இப்போது
அவ்விடத்தில் இல்லை.

அப்போது பார்த்த
ஓரிரு பல்லிகளை
இப்போது
காணவில்லை

காலையில்
வீட்டுக்குள் கிடந்த
நான்கைந்து துண்டு
வெயில்கள் கூட
வெளியேறியிருக்கின்றன.

ஆனாலும்
கதவு திறந்து நுழைகையில்
நினைத்துக் கொள்கிறோம்
எல்லாம்
அப்படியே இருக்கின்றன.


இரகசியம்

உன்னிடம்
இரகசியங்கள்
இல்லையென்றே கருதியிருந்தேன்
அக்கணம் வரை.

நீ
சொல்லியவை எல்லாமே
இரகசியங்கள்
என்றும்
பிரசுரிக்கத் தகுதியற்றவை என்றும்
அக்கணம் தான்
எனக்கு அறிவித்தது.

இரகசியங்கள்
இரசிப்பதற்கானவை அல்ல
அவை
குருதி தோய்ந்த
வலிகள் என்பதையும்
அக்கணமே தெரிவித்தது எனக்கு.

இனிமேல்
என்னிடம் சொல்ல
உனக்கு
இரகசியங்கள் இருக்கப் போவதில்லை.

நானே
உனக்கு ஓர்
இரகசியமாகி விட்ட பிறகு.


அப்பாவே தான்

அப்பா தான்
எல்லாம் கற்றுத் தந்தார்.
எல்லாம்.

மரண வீடுகளில்
ஒலிக்கும்
ஒப்பாரியை விட
மிக மிக நீளமானது
அதைத் தொடர்ந்து நிலவும்
மெளனம்,
என்பது உட்பட.


புதிதென்று ஏதுமில்லை

‘இன்று என்ன புதிதாய் ? ‘
என்று
ஆரம்பித்தே பழகி விட்டாய்.

பழையவற்றை
அசைபோட யாருக்கும்
நேரமிருப்பதில்லை.
தேவையானதெல்லாம்
புதியவை மட்டுமே.

அந்தப் புதியவற்றின்
வால் பிடித்துக்
கீழிறங்கினால்
பழைய படிக்கட்டுகள்
இடறுகின்றன.

எப்போதோ
புதியதாய் விசாரிக்கப்பட்ட
பழையவை.

எழுதி முடித்ததும்
பழையதாய்ப் போய்விடும்
இந்த
கவிதை உட்பட
எதுவுமில்லை என்னிடம்
புதியதாய்.


நானில்லாத பொழுதுகள்

பின்னாலிருந்து
கண்ணைப் பொத்திச் சிரிக்கிறது
உன் பிரியம்.

உன் பெயரைச் சொல்ல
எனக்குச்
சங்கடம் நேர்வதில்லை
எப்போதும்.

என் கண்ணைப் பொத்தும்
உரிமை
உனக்கே உரியது
என்பதால் மட்டுமல்ல.

உன்
பெயரை உரக்கச் சொல்லும்
வாய்ப்பு
அவ்வப்போது தான்
வாய்க்கிறது
என்பதற்காகவும் தான்.


Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation