மீண்டும் ஒருமுறை

This entry is part of 22 in the series 20050819_Issue

புஷ்பா கிறிஸ்ரி


திரும்பிப் பார்க்கிறேன்
கனவு தெரியவில்லை..
தெரிந்தால் நிச்சயம்
அந்தக் கவுதாரி, காக்கை, ஆட்காட்டி
கத்துவது என் காதுகளில் கேட்கும்
குளத்துக்கருகில் குந்திக்கொண்டிருக்கும்
கொக்குக்கு மீன் கிட்டுமோ
நிச்சயம் என் கண்களில் கொக்கு தெரியும்
அது என் ஊர்பற்றிய கனவு தான்
தொடரட்டும் என்று நினைத்துத்
திரும்பிப் படுத்தேன்
தூக்கம் கலைந்து விட கனவு பறந்து விட
கண்கள் தூங்க மறுக்க
ஏக்கம் நெஞ்சை நிறைக்க
மீண்டும் அந்தக் கனவு வருமா ?
வயல்வெளிகளில் தெரிந்த பச்சை நிறமும்
அங்கே கண்ட பச்சை அலைகளும்
கடற்கரை அருகில் தெரிந்த வெள்ளை அலையும்
காலாற நடந்த ஈர நிலமும்
மண்ணில் கால்பதித்த போது
வந்த மனச்சாந்தியையும்
என் கனவு கலைந்து
அழித்து விட்டதே!
மீண்டும் வருமா என் கனவு
கண்களுக்குள் தெரிந்திடுமா
காட்சிகள் மறையாமல்
மீண்டும் வந்திடுமா ?


Series Navigation