வீடு

This entry is part of 30 in the series 20050715_Issue

றகுமான் ஏ. ஜமீல்


பறவைகளினதும்
பாம்புகளினதும்
கூடுகள் பற்றிய கனவுகள் போலவே
எங்களது கனவும்
வீடாகவே இருந்தது.

அப்பா கொல்லன் உலையில்
ஆயுளைக்காய்ச்சி
அம்மா பன்பிடுங்கி
தன்னை இழைத்து
நான் பிறதேசமொன்றில்
குப்பைகொட்டி
ஒவ்வொரு கல்லாய் சேர்த்து
பார்த்து பார்த்து
நிர்மாணித்த எங்கள் வீடு.

குடி புகுந்து
இரவு அகலவிரித்து உறங்கி
முற்றத்து மல்லிகைக் கொடியில்
மொல்லென படர்ந்திருக்கும்
பனிக் குடங்களை முகத்திலுதறி
சிலிர்க்கும் அதிகாலை.

கடல் விரண்டு
ஊரைச் சுருட்டி உதறி
எங்கள் வீடிருந்த தடத்தில்
தூரத்து வீடொன்றின் இடிபாடும்
கனவுகளும் சிதறிக் கிடந்தது.
கூட்டி எடுக்க முடியாத படி.

கடல் முன்றலில்
இராட்சத பாம்புபோல்
நீண்டு படுக்கும் சாலையின்
சிறு துண்டென புதைந்துகிடக்கிறது.
எங்களது வீடும் கனவும்.

றகுமான் ஏ. ஜமீல், இலங்கை

Series Navigation