தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)

This entry is part of 46 in the series 20050401_Issue

தமிழில்: சிபிச்செல்வன்


நற்குணம்
நீ ஒரு பெண்
அதை மறக்ாமலிருப்பது நல்லது
உன் வீட்டு வாசற்படியைக் கடக்கும்போது
ஆண்கள் ஷாடையாகப் பார்ப்பார்கள்.
நீ தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால்
ஆண்கள் உன்னைத் தொடர்ந்து வந்து விசிலடிப்பார்கள்.
நீ தெருவைக் கடந்து பிரதான சாலையில் நடக்க ஆரம்பித்தால்
ஆண்கள் உன்னை ஒழுக்கங்கெட்ட பெண்ணென்று திட்டுவார்கள்.
உனக்கு நற்குணமில்லையெனில்
நீ திரும்பி போகலாம்,
நற்குணமிருந்தால்
இப்போது நீ நடந்துகொள்வதைப்போலவே
தொடர்ந்து செய்
ஓடு! ஓடு!
உன் பின்னால் ஒரு நாய்க்கூட்டம்
ஞாபகம், ராபீஸ், (வெறிநாய்க்கடிநோய்)
உன் பின்னால் ஒரு ஆண் கூட்டம்
ஞாபகம், பாலுறவு நோய் (சிபிலிஸ்)
ஒரு சில வார்த்தைகள்
“எல்லா வீடுகளிலும் அவர்கள் ஒரு பொருளை விற்கிறார்கள்.”
– யார் அவர்கள் ?
“பெண்கள்”
– அவர்கள் எதை விற்கிறார்கள் ?
“சுதந்திரம்”
– வாங்கும் பொருளுக்கு மாற்றாக எதைத் தருவார்கள் ?
“கொஞ்சம் உணவு தருவார்கள், அணிந்துகொள்ள கொஞ்சம் புடவைகள்”
மேலும் கொஞ்சம் வாரமொருமுறை மாமூல் உடலுறவு” இருக்கிறது.
– சுதந்திரத்தைத் தவிர இந்த உலகில் வேறு என்ன பெரியதாக என்ன இருக்கிறது ?
சுதந்திரத்திற்கு விலையில்லை. மனித உரிமை சட்டத்தின் பார்வையில் இவை சட்டத்திற்குப் புறம்பானவை.
“அவள் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இந்தச் சமூகம் சட்டப்படி அவளுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை”
தன் சொந்த காலில் நிற்பதற்கும், நடப்பதற்கும் அவளால் முடியுமா ?
“இதுவரையில் இல்லை”
– அவளுடைய உணவு, உடைக்கு யாரையும் சந்திராமல் தானே வாழ முடிவெடுத்தால் அவளால் சிரிக்கவும் பேசவும் இயலுமா ?
‘இதுவரையில் இல்லை. ‘
நமது சமூகத்தின் வழக்கம் என்னவெனில் விற்கப்பட முடியாதவற்றை ஏளனமாகப் பார்ப்பது.
– இந்த சட்டதிட்டங்களை யார் உருவாக்கினார்கள் ?
“சில ஆண்கள் ?”
மகத்தான விஷயம்தான், நல்லது ஆண்கள் நன்றாக அறிவார்கள்
வியாபார தந்திரங்களையும், நிறுவனத்தின் சில்லறைத்தனமான விதிமுறைகளையும்.
—-
sibichelvan2003@yahoo.co.in

Series Navigation