மெளனவெளி

This entry is part of 46 in the series 20050311_Issue

செல்வநாயகி.


****
அண்டைவீடென்ற உரிமையில்
நாளிதழுக்கோ தொலைபேசிக்கோ
நம் அழைப்புமணி அழுத்த ஆளில்லை
வாங்கியேதீரவேண்டுமென்ற வற்புறுத்தலோடு
கதவுதட்டுவதில்லை கீரைக்காரி

சந்திப்பிள்ளையாரின் பதினொருமணிப்பூசைக்கு
கோயில்மணியெதுவும் அடிக்கும்வாய்ப்பில்லை
யாரையோ பார்க்கவந்தகையோடு
முன்னறிவிப்பின்றி வாயிலில்நிற்கும்
உறவினர்வருகை இல்லவேஇல்லை

பால்காரர் சைக்கிள்மணி
பூக்காரி கத்தல்மொழி
எதிர்வீட்டுமுன் ஆட்டோஒலி
எதுவுமில்லாத மெளனவெளி

இணையம்,புத்தகம்,தொலைக்காட்சி
எல்லாம்சலித்து எழுந்துவிடநேர்ந்தால்
தன் வெட்டப்படாத நகங்கள்கொண்டு
யாரின்குறுக்கீடுகளுமின்றி என்னை
தயவுதாட்சண்யமற்றுக் கீறத்தயாராகின்றன
நம் அமெரிக்கவாழ்வுப் பகற்பொழுதுகள்
நீவேலைக்கும் குழந்தை பள்ளிக்கும்
போய்விட்டதைத் தெரிந்துகொண்டு.
—-
snayaki@yahoo.com

Series Navigation