வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 1-உன் கூந்தல் தோட்டமும் சில பட்டாம்பூச்சிகளும்

This entry is part of 55 in the series 20041104_Issue

வெண்ணிலாப்ரியன்.


**
எல்லாப்பட்டாம்பூச்சிகளும்
தூங்கிய பிறகுதான் – நீ
குளித்துவிட்டு
கூந்தலை விரித்தாய்…

ஆயினும்
எப்படியோ
வந்துவிட்டிருக்கின்றன- பார்
இதோ
இரண்டு பட்டாம் பூச்சிகள்.
**

உன் கூந்தலில்
நான்
விழுந்தது
தலைப்புச்செய்தியோ.. ?
உன்
கூந்தலை நோக்கி
பட்டாம்பூச்சிகளின்
படையெடுப்பு.
**

என்னைப் பைத்தியமாக்கியது போதும்
இனிமேலும்
குளித்துவிட்டு
கூந்தலை உலர்த்தாதே!
பாவம் பட்டாம்பூச்சிகள்.!
**

வண்ணத்துப்பூச்சியின் மனைவி
விவாகரத்து கேட்கிறாள்.

உன் கூந்தலிலேயே
பழியாய்க்கிடக்கிறானாம்
அவள் கணவன்.

இன்னொரு முறை
அவன் வரும்போது
உனது
கூந்தலை விரித்து வைக்காதே!
தான் மோசம் போய்விட்டதாய்
அந்தபட்டாம்பூச்சியின் மனைவி
என்னைப் பார்க்கும்போதெல்லாம்
புலம்புகிறாள்
அவளுடைய கூந்தலை என்னிடம் காட்டி.
**

வண்ணத்துப்பூச்சிகள்
விண்ணப்பம் போடுகின்றன.

இருக்கும் நிறங்கள் போதாம் அதற்கு
இன்னும் வேண்டுமாம்.

ஒரே ஒரு நாள்
மட்டும்
உன் கூந்தலில்
ஒதுங்க வேண்டுமாம்
ஆறு கால பூஜையும் நடத்தி.
**

பட்டாம்பூச்சியிடம்
பெர்மிஷன்
கேட்டுவிட்டுதான்
நானும் வந்தேன் முதலில்.

இப்போது
பாவம் – பட்டாம்பூச்சிகள்!
என் அனுமதி வேண்டி
இரவிலும் நீண்ட கியூவில்.
***

பேருந்தில்
ஜன்னலருகில் அமராதே!
பார்
எவ்வளவு தூரம்தான்
பறந்து வருகின்றன
பட்டாம்பூச்சிகள்!
***

உனக்குள்__
நேற்று..
அது!
இன்று..
நான்!
நாளை…
யாரோ!

உன் கூந்தலில்__
நேற்று…
அது மட்டும்!
இன்று…
நானும்!
நாளை…
நான் மட்டும்!
***

பூந்தோட்டமெல்லாம்
வெறிச்சோடிக்கிடக்கின்றன..

பூக்களெல்லாம்
புலம்புகின்றன..

கன்னியாகவே
காலத்தைக்கழிக்கின்றனவாம்
பூக்கள்!

போதும்.
கூந்தலை தவழவிடாதே!
பூக்கள் பிழைத்திருக்கட்டும்
தன் சந்ததிகளோடு!
பட்டாம் பூச்சிகள்
பூக்களையும்
நாடட்டும்!
**

என்ன அதிசயம் ?
கூந்தலில் இருந்து
அவைகளை விரட்டிவிட்டு
உன்
முகம் பார்த்தால்
அட!
அங்கேயும்
இரண்டு பட்டாம்பூச்சிகள்
இறக்கைகளைச்சிமிட்டி!
**

என்ன செய்வது ?
தொந்தரவு தாங்க முடியவில்லை.

நிரந்தரமாய்
அந்த
அறிவிப்புப்பலகையை வைத்துவிட்டேன்
உன் கூந்தலில்!

‘இங்கே பூக்கள் விற்பனைக்கல்ல ‘

‘பட்டாம்பூச்சிகள்
நுழைய அனுமதி இல்லை ‘

‘வெண்ணிலாப்ரியன்- ஜாக்கிரதை ‘

Series Navigation