கவிதைகள்

This entry is part of 41 in the series 20040909_Issue

வந்தியத்தேவன்


மனித நேயம்

– வந்தியத்தேவன்

புழக்கடை இறுக்கமாயிருந்தது வெக்கை வெளியிலா
துணைவியின் இடை வெளியிலா
விளங்கவில்லை வெளியே வந்தேன்

மாதக்கடைசியாய் கும்மிருட்டு பயமுறுத்தியது
ஈனஸ்வரத்தில் நம்பிக்கை தெருவிளக்காய் மினுக்கியது
சேருமிடம் தெரியாமல் நடக்கும்போது
ஞானியாயுணர்ந்தேன் நம்புங்கள்

கழுதை விட்டுப்போன குட்டிச்சுவற்றில் சப்தம்
இதென்ன ஒன்று இரண்டென கதம்பக் குரல்கள் ?
பொதுக்கழிப்பறை சுவாரசியத்தில்
எட்டிப் பார்க்கும் மனம் கட்டுப்படவில்லை

கார்த்திகை மாதக் களைப்பில் தாய்
குட்டிகள் முலைக்காம்புகளுடன் மோதல் நடத்தின
தெரு நாய்க்கு உணவில்லையெனில்
ஜகத்தினையழிக்க எவனாவது சபதமா பூண்டான் ?

உள்ளுணர்வு உந்த ஆபத்தோவென
தாய்நாய் எழும்ப குலைப்பு மட்டும் பயமாயில்லை
கர்ப்பத்தில் ஊட்டச்சத்துணவு கிட்டவில்லை போலும்

இல்லத்தில் பழையது இரவு வைத்தால் ஊசிவிடும்
நாய்க்கிடலாமென்றால் வெக்கை மீண்டும் வெளிப்பட்டது
போன பிறவியில் புரவலனாய் நொந்திருப்பேன்

ஆந்தையாய் மாறி உலவியபின் இரவில் கோழித்தூக்கம்
புழுக்கம் மட்டும் இன்னும் இறுக்கமாய்
அன்றாட அலுவலுக்கு பலியாடாய் சிங்காரிப்பு

பழக்கமான பாதை பார்த்துச் சலித்த முகங்கள்
கேட்டு மரத்த சப்தங்களில் மொய்க்கும் ஈக்களின் சப்தசுரம்
நிமிர்ந்து பார்த்தேன் ஏதாலோ அடிபட்டிறந்த தாய்நாய்

உள்ளே புரியாத பாகமொன்று மளுக்கென்று ஒடிந்தது
பழசு போட்டிருந்தா புழக்கடையிலே தூங்கியிருக்குமோ ?

புதுசாய் கண் திறந்த குட்டி முறைத்தது
வளர்ந்தபின் என்னை கட்டாயம் கடிக்கலாம்
எதிலும் அடிபட்டிறக்காமலிருந்தால்

கானல் கனவு

– வந்தியத்தேவன்

இருட்டறையில்
அகல்விளக்கு
இருளைக்
கொன்றதாய்
இறுமாப்பு

அமைதியாய்
அதனடியே
ஆடியது
நிழல்

====
t_sambandam@yahoo.com

Series Navigation