கவிதைகள்

This entry is part of 61 in the series 20040805_Issue

இவா


என் செல்லத் தோழி
சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறாள்
அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட
நாற்காலியில்…
தாடையும் தலையும்
சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது
கண்கள் திறக்க முடியாதவாறு
மூடப்பட்டிருக்கின்றன
கைகள் நாற்காலியின் கைகளுடன்
கட்டப்பட்டிருக்கின்றன
குரலை வைத்து என்னை
அடையாளம் கண்டுகொண்டாள்
போல…
அவள் விட்ட பெருமூச்சின்
சூட்டில் காற்றில்
அனல் பறக்கிறது.

—-

புதைந்து போன சொற்களின்
அர்த்தங்களைத் தேடி
புதைந்து கொண்டிருக்கிறேன்
இதோ சிறிது தூரம் சிறிது தூரம்
எனச் சொல்லி
ஆழமாய்ப் புதைந்து கொண்டிருக்கிறேன்
என்னைப் போலவே பலர்
உயிர்ப்பும் உணர்வும் அற்ற
ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது
மெதுவாகச் சென்று உற்றுப்பார்க்கிறேன்
திடாரென ஒரு அசைவு
கொண்ட அது மெதுவாய்ப்
புன்னகைத்து கட்டித்தழுவி
நெற்றியில் முத்தமிட்டது
அது உணர்வோடுதானிருந்தது
கண்கள் மிளிரச்சொன்னது
நாம்தான் அவைகளின் அர்த்தங்கள்

—-
ivaan@rediffmail.com

Series Navigation