கவிதைகள்

This entry is part of 48 in the series 20040610_Issue

பாஷா


காத்திருக்கிறேன்

உன் தங்கைகளுக்காகவும்
சொப்பனத்திற்கு பிந்திய பின்னிரவுகளில்
உன் உறவுகளை நினைத்து
என் நெஞ்சில்
நீ வடிக்கபோகும் கண்ணீருக்காகவும்
என் காதலை
என் நெஞ்சில் சமாதிவைத்து
மலர்கொத்தும் வைத்துவிட்டேன்!

ஒருவருக்கொருவர் உடன்வர முடியாத
திசைகளின் விளிம்பில்
ஒரு நாள் சந்தித்தோம்
நீ வந்த திசையின்
சாலையிலெல்லாம் நீ
தெளித்த கண்ணீர்.
ஒரு புன்னகையை மட்டும்
உன்னிடமிருந்து வாங்கி
உன்னை உன் திசை
அனுப்பிவிட்டு
கரையான்களாய் அரிக்கும்
உன் நினைவுகளுக்கு
வெற்று வெளியில்
சிதைமூட்டிகொண்டிருக்கிறேன்!

இருந்தாலும்….
உன் ஜானவாசத்தில்
என் ஜன்னலோரம் தாமதிக்கும்
உன் உறவு கூட்டம்
உன்பெயர்கொண்ட கடவுள்
வானொலியில் அடிக்கடி ஒலிக்கும்
உனக்கு பிடித்த பாடல்
நீ விரும்பி கேட்கும் அரிசிமுறுக்கு.
இவையாவும்
உன் நினைவுகளை
எரியும் சிதையிலிருந்து
எடுத்து போடுகிறது!

காதலை காற்றில்
கரைத்து வாழ்க்கை
அங்கிகரித்த அந்தஸ்த்தின்
பரிவட்டத்தை தரித்திருக்கிறாய்
இன்னும் நான்
உன் நினைவுகளுடன் மட்டுமே
போராடி தோல்வியுற்று
ஆயுளை அவசரமாய் கழிக்க
ஆண்டவனிடம் வரம்கேட்டு
நீ வரும் குளக்கரையில்
கல்லெறிந்து காத்திருக்கிறேன்!
—-
நிராகரிப்பு

மழைகழுவிய சாலையில்
நிலைகுலைந்த நிர்வாண பிச்சைக்காரியாக
ஏழைவீட்டில் மரபுசிறையிலிருக்கும்
இளம் விதவையாக
ஆயிரம்காலத்து பயறுக்காய்
ஆறாண்டுகளாக அரிதாரம்தரிக்கும்
கனவுசுமந்த பெண்ணின்
கனத்த மெளனாமாய்
நரைகொண்டு உடல்கூனி
தீர்ந்த இருமல் மருந்தை
தன்மகனிடம் சொல்ல
வார்த்தகள்கோர்த்து ஒத்திகைபார்க்கும்
கிழவனின் வறட்டு இருமலாய்
காற்றின் திசையாவும்
நிராகரிப்பு….

தரையோடு தரையாக தேயினும்
திரும்ப திரும்ப எழும் வீம்பாய்
விழுந்த இடத்திலேயே
வீழ்ந்துகிடக்கும் விரக்தியாய்
உரிமைகள் மறுக்கப்பட்டபோதும்
உயரத்தைமட்டும் பார்க்கும் பிடிவாதமாய்
ஒருதலை காதலில்
உயிர்துறக்கும் மடமையாய்
ஒன்றாய் தோன்றி
பலபரிமாணங்களெடுக்கும்
நிராகரிப்பு….

சுடலைமாடனாடும் செங்காட்டில்
சவக்குழியாவும் சொல்லும்
கதையிலெல்லாம் கருவாக இருக்கும்
நிராகரிப்பு….
—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation