கவிதைகள்

This entry is part of 47 in the series 20040603_Issue

புதுவை ஞானம்


ஆணவத்தின் உச்சம்
****

என்று தணியும்….
வாய்ப்புக்கும் வசதிக்கும்
பேறுக்கும், புகழுக்கும்
தவித்தலையும் தாகம் ?
கருக்கலில் எழுந்து
நடுநிசியில் தலை சாய்க்கும்
நாய்ப் பிழைப்பு.

கழுதை மேல் பயணித்தும்
பஞ்ச கல்யாணி மேல்
பவனி வரும் பேராசை.

அமைச்சர்களாக இருந்த போதிலும்
அரச பதவி மேல் மோகம்.

கூற்றுவனின்
ஐந்தொகைக்கு அஞ்சாமல்
உண்ணவும் உடுத்தவும்
உளைச்சலும் உழைப்பும்.

பேரனுக்கும் மைந்தனுக்கும்
பெருஞ்செல்வம் தேடுமிவர்
ஒரு பொழுதும் ஓயார்
மறுபுறத்தைப் பாரார்.

வாய்ப்பும், வசதியும்
பேறும் புகழும்
விதிக்கப்பட்டிருக்கிறது-
ஏற்கனவே.

எப்போதும் ஒதுக்க வேண்டும்
நெஞ்சத்தின் கபடுகளை
ஆழமும், அகலமும் ஆன
ஒழுக்கத்தின் நற்கனிகள்-
நேர்மையும், சத்தியமும்.

ஆராயாமல் செய்யப்படும்
சின்னஞ்சிறிய தவறுகள் கூட
பெற்றுத் தந்துவிடும்
வானுலகின் தண்டனையை.

இதுவரை புலப்படா விட்டாலும்
காலாகாலத்தில் தண்டித்து விடும்
தெய்வ நீதி.

வேதனையும், வீழ்ச்சியும்
ஏற்படுவது ஏனென்று
எரிக்கும் சூரியனைக் கேட்டால்
நெறிமுறைகளை மீறி
அண்டத்தின் ஒழுங்கை
அலங்கோலமாக்கும்
‘ஆணவத்தின் உச்சம் ‘ -என்பான்.

— மூலம்; யுவான் சுவாங்
[JOURNEY TO THE WEST
Eng. by Anthony C.YU

****

முரண்பாடில்லை
****

புகழுக்காக அலைபவர்கள்

புகழுக்கே பலியாவார்கள்.

பொருளுக்கு அலைபவர்கள்

பொருளாலே அழிவார்கள்.

புலிவால் பிடித்தவர் தாம்

பதவிக்கு அலைபவர்கள்.

பாம்பு சுற்றிய காலுடன் நடப்பவர்கள்

சலுகை தேடுபவர்கள்.

நீலம் கவிந்த மலைகளிலும்

நீலம் தெளிந்த நீரோடைகளிலும்

கவலையற்று வாழும் நம்

வாழ்க்கைக்கு

ஈடாகுமா ? அவர் தம்

இழிவாழ்க்கை ?

வறுமையிற் செம்மை தேடும் நமக்கு

விதியுடன் முரண்பாடில்லை.

****

பண்டமல்ல பிண்டம்
****

நொந்து சலித்துப் போன

குடும்பத்தலைவன்

(அலுவலகம்) – தொழிற்சாலையில்

உழைத்துக் களைத்து உளைத்துப் போன

(வணிகன்) – தொழிலதிபர் – அதிகாரி

குடும்பத்திற்குள்

பெரும்பாலும்

ஒன்றுக்கொன்று

முட்டாள் தனமாக முரண்படுவதும்

சூழலுக்குச் சூழல்

மாறுபடுவதுமான

உட்பொருளைச் சுமந்து சுமந்து

இளைத்துப் போனவர்கள்

என்பது மட்டுமல்ல….

வெவ்வேறு
உள்முகமான சமூகப் போக்கின்
உயிரிகளாக உண்மையில்
சாட்சிய மாகிறவர்கள்.
இணை இணையான
பொருட்கள் அல்லர்.

****

கரையோர அலைகள்
****

விருப்பு , வெறுப்பு
சினம் , சமரசம்
நம்பிக்கை, அவநம்பிக்கை என
நிரந்தரமான
உணர்ச்சிப் பிழம்புகள்
ஏதொன்றும் இல்லை – ஓர்
உயர்மட்டப் புரிதலில்
சிறப்பாகவும், பருண்மையாகவும்
விசேஷமாகவும், ஸ்தூலமாகவும்
வரையறை செய்து – எவ்விதமாகப்
பொதுமைப்படுத்தினும்
ஒவ்வொரு உணர்ச்சியும்
ஒருவர் அல்லது மற்றவரின்
குழுச் சார்பை பொறுத்த
உள்வாங்கலின்
விகற்பமான வெளிப்பாடு தான்.
சமூகச் சார்பின் பின்புலத்தில்
ஒருவனின்
உள்ளும், புறமும் ஆன
உறவுகளுக்குப்பால்
அடிப்படையான
உணர்வுகளோ
உணர்ச்சிகளோ
ஆளுமையோ
இல்லவே இல்லை.

****

சீறும் புயலில்

குமுறும் கடலில்

தத்தளிக்குமொரு தோணியில்

நம் பயணம்

ஒருவருக் கொருவர்

கை கோர்த்து

நம்பிக்கையளிப்பது

நம் தலையாய கடமை.

****

மனமற்ற மனம்
****

மனம் தான் புத்தர்
புத்தர் தான் மனம்
மனமும் , புத்தரும்
உன்னதமானவை.
மனமும் இல்லை
பொருளும் இல்லை
என்று நோக்கினால்
தர்மகாயம்
உன்னுடையதாகும்
காட்சியும் இல்லை
வடிவமும் இல்லை
தர்மகாயத்துக்கு.
முத்தன்ன ஜொலிப்பில்
பலதையும், பிரதிபலிக்கும்
உடலற்ற உடல்தான்
உண்மைக் காயம்.
வடிவற்ற வடிவம்தான்
உண்மை வடிவம்.

****

உயர்வு தாழ்வு பேசும் மனம்
****

வடிவமும் இல்லை
வெளியும் இல்லை
வெற்றிடமும் இல்லை
வருதலும் இல்லை
போதலும் இல்லை இல்லை ‘
முரணுமில்லை
சமனுமில்லை
உளதுமில்லை
அலதுமில்லை
கொடுத்தலும்
எடுத்தலுமில்லை
நம்பிக்கையின்
ஏக்கமும் இல்லை.
உள்ளிலும்
வெளியிலும்
ஒளிரும் சுடர் ஒன்றே.

****

துளி மணலில்
****

துளியத்தனை மணலில்
பல்லாயிரம் துகள்கள் கொண்ட
புத்தரின் ஆட்சி
ஒரு மனம் அல்லது
ஓர் உடல்
பதினாயிரமாய்க்
காட்சி தருகிறது.
மனமற்ற மனநிலையைக்
கைக் கொள்ள வேண்டும்.
இம்மாட்சிமையறிய.
பிணைப்பும் களங்கமும்
அற்றது தான் தூய வினை.
நல்லதும் பொல்லதும்
பலதும் செய்யாதே ‘
சாக்கிய முனியைச்
சரணடையும்
சன்மார்க்கம்
இது வென்றுணர்.

****

பாழ்
****

ஒரு கணமும்
விடுதலறிது
‘தாவோ ‘ – வை
விடுக்க
முடிவது
‘தாவோ ‘ அல்ல.
தெய்வீக ஆயுதங்கள்
களவு போனால்
தேடியவன் உழைப்பு
பாழ் ‘ பாழ் ‘ ‘ பாழ் ‘ ‘ ‘

****

தீர்வின் கனி
****

பிரதோஷத்துக்குப்
பிரதோஷம்
அமுதின் சுவை
இயல்பானது – நிலை
முழுமையானது.
பொறுக்கி எடுத்ததை
ஸ்புடம் போட்டு (உலையிலிட்டு)
வஸ்திர காயம் செய் (சுத்திகரி)
தீர்வின் கனி
மேல் உலகில்
உள்ளது.

(அமாவாசைக்கும் பெளர்ணமிக்கும் மூன்று நாள் முன்பு வருவது பிரதோஷம்.)

****

திடஉரு
****

நூற்றாண்டுகள் உருண்டோடுகின்றன
ஓடையில் பிரவகிக்கும் வெள்ளம் போல.
ஆயுள் பரியந்தம் ஆற்றிய பணிகள்
நொப்பும், நுரையுமாய்…
நேற்றைய முகம் ஜொலித்தது
மாம்பழச் சிவப்பாய். ஆனால்
இன்றைய நெற்றி குருதியற்று
பனித்துகளாய்ப் பாரித்து….
கரையான் புற்றெனக் கலைந்து போயிற்று
வாழ்வெனும் மாயத்தோற்றம்.
‘திரும்பி வா — திரும்பி வா ‘ எனக்
கருங்குயில் அழைக்கிறது.
இரகசியமாய்ச் செய்யப்படும்
நற்பணிகள் நீட்டிக்கக் கூடும் வாழ்வை
ஒழுக்காற்றில் ஒழுக
கழிவிரக்கம் தேவையில்லை – ஏனெனில்
விண்ணுலகம் அதனைக்
கவனித்துக் கொள்ளும்.

****

ரசவாதம்
****

நீரும், நெருப்பும் கலந்து
ஒன்றையொன்று இழுக்கும் – இத்தகைய
இணையொன்றை உருவாக்க
அன்னை பூமியின் அருள் வேண்டும்.
வெறுப்பும், பகையுமின்றி
மூன்றையும் கலக்க வேண்டும்.
நீண்ட நதியில் நீரும்
அகண்ட வானில் நிலவும்.
முதல் கால் ஆணுக்கும்
பின் கால் பெண்ணுக்கும்
பெண்ணுக்கு மத்தியில்
ஆணுக்கு இடையில்
உலோக நீரை(metal water)
திடவுருவின்
திரவத்தை
எப்படிப் பெறுவாய் ?

****

போகுமிடம் வெகு தூரமில்லை
****

பிறப்பிலிருந்து மூப்புவரை
நடக்கலாம் – பின்னர்
மீண்டும் இளமை பெறும் வரை.
ஆயிரம் முறை இவ்வாறு சுழன்றாலும்
அடைய வேண்டிய இலக்கு
அப்பாலுக்கும் அப்பால்.
எண்ணத் திண்மையில்
கண்ணுற்று நோக்கினால்
எல்லாப் பொருளிலும்
புத்தரைக் கண்டால்
எல்லா சிந்தனைகளும்
தோற்றுவாய்க்குத் திரும்பினால்
அக்கணம் அடைவாய்
ஆன்மீக மலையை.

–யுவான் சுவாங்

****

சோதி
****

மங்கலாக இருந்தது சிந்தனை
இளமைக்காலம் தொட்டே.
மந்த கதியான சோம்பல் வாழ்க்கை
ருசித்திருந்தது எனக்கு.
பயிற்றுவிக்கவில்லை என் இயல்பை
கடைப்பிடிக்கவில்லை சத்திய நெறியை.
நாட்களைக் கடத்தி வந்தேன்.
மாயையிலும், குழப்பத்திலும் – திடாரென
சந்திக்க நேர்ந்தது
நிச்சலனத்தில் வீற்றிருந்த
சத்திய புருஷனை
வெப்பத்தையும் குளுமையையும்
வாதத்தையும், பித்தத்தையும்
வகைத்துரைத்தார் எந்தனுக்கு
வாழ்வு என்பது முடிவற்ற துயரம்
விட்டொழி உலகியலை என்றார்.
மனந்திருந்து ‘ ஒருநாள்
வாழ்வின் அந்திமத்தை எட்டுவாய்
அப்பொழுது….
காலம் கடந்த பின்னர்
எண்வகைத் தவிப்பும்
மூவகைப் பாதையும்
வெருட்டி விழிக்க வைக்கு என்றார்.
உன்னிப்பாய்க் கேட்டு
உறுதி பூண்டேன் மனந்திருந்த.
வருந்தி மனம் மாறி
வாழ்பியல்பை விட்டொழிந்தேன்.
ஊழ்ப்பயனாய்
உயர்ந்ததோர் குருவாகி
விண்ணையும், மண்ணையும்
நவகோளின் சுழற்சியையும்
வியத்தகு அற்புதங்களை
விளங்க உரைத்ததுடன்
நவகோளின் குளிகைதனை
நயமாக ஊட்டிவிட்டார்.
இரவும் பகலுமாய்த்
தொடர்ந்து என் பயிற்சி
சிரசின் சேற்றுப் பரப்பையும்
உட்காலின் ஊசித்துளைகளையும்
சென்றடைந்தது நவ பாஷாணம்.

****

Series Navigation