கவிதைகள்…

This entry is part of 47 in the series 20040603_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி (சிங்கப்பூர்)


1.கப்பல்… கப்பல்…

அவன்
சின்னஞ்சிறியவன்
என்னுயிர் சேர்ந்தவன்.

நான்
பூவரைந்து காட்டினால்
பூவாய் மலர்ந்து புன்னகைப்பான்.

காளையை வரைந்தால்
முட்டு என்று ஓடுவான்.

குருவியைத்தான்
வரைய நினைத்தேன்.

அவன்
கப்பல் என்றான்.

அந்நேரம்
எழுதுகோல் எழுதாமல்
பிடிவாதம் பிடிக்க…
அவனும் கேட்காமல்
அடம் பிடிக்க…


கைமூடி கைதிறந்தால்
கையில் காசுபோல…
காகிதத்தை
மடித்தேன்…பிரித்தேன்…
கப்பல்…

இனிய கடிதத்தை
எழுதி மடித்ததில்…
பிரித்துப் படித்ததில்…

எழும் மகிழ்ச்சி
எனக்கும் அவனுக்கும்.

உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
உரக்கக் கத்தினான்
கப்பல்…கப்பல்…

கற்றது கையளவு என்பார்கள்…
அவனுக்கு
கடலும் கையளவு…

2.இல்லை இல்லை

பூக்காத மரத்தில்
பறித்த பூ ?

பதரைக் குத்தி
புடைத்த அரிசி ?

திறந்த கூண்டில்
இருந்த குருவி ?

அம்புக்குத் தப்பி
வீழ்ந்த புறா ?

உழுதவன் கணக்கில்
எழுதி வைக்கும் இலாபம் ?

நிரில்லாக் காவிரியில்
நீந்தியிருக்கும் மீன் ?

சிவகாசி மத்தாப்பு
சிரித்த பின் மிச்சம் ?

விடிந்த பின் வானில்
வெளிச்சமிடும் தாரகை ?

புறபடும் நொடியில்
அடைந்த தூரம் ?

ஓடி முடித்து
நின்ற நொடி வேகம் ?

விண்வெளி மிதக்கையில்
விழ வைக்கும் ஈர்ப்பு ?

புத்தகம் புறட்டினான்
சின்னவன் என்னவன்
கிளையிலிருந்த
கிளிகளை எண்ணினான்.

கிளிகள் பறந்த பின்
கிளையிலிருப்பது ?

இருப்பது
இல்லையென்று சொல்லாமல்
கிளையில் கிளி
சுழி என்றான்
சுட்டிப்பயல்.

3.ஓவியமாய்…

உங்களுக்கனுப்ப வாங்கிய
வாழ்த்தட்டை படத்தில்
உங்களோடு நானுமிருக்கிறேன்.

ஆமாம்
யார் கண்ணிலும் படாமல்
அந்த ஒவியத்தில்
அதோ…
அந்த மரத்துக்குப் பின்
மல்லிகைப்பூச்செடி மறைவில்
நீங்களும் நானும்
ஒளிந்து பிடித்து
விளையாடிக்கொண்டிருக்கிறோம்
வெகுநேரமாய் இந்த
வாழ்த்தட்டை வண்ணப் பூங்காவில்.

—-
thamilmathi@yahoo.com

Series Navigation