கவிதைகள்

This entry is part of 60 in the series 20040429_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)


ஒட்டு மாமரம்

அந்தப்பக்கம் போய்
ஆண்டுகள் ஆகிவிட்டன

ஒரே ஊருக்குள்ளிருந்தும்
எட்டிப்பார்க்காமல் திரும்பியது
என் மனத்தில் சுமைதான்

அதன் நினைவையும்
நிழலையும்
நான் அதிகமாகத்தான்
எழுதியிருந்தேன் என்பதைவிட
ஆழமாய் உணர்ந்து
அவதிப்பட்டிருக்கிறேன்

எட்டிப்பார்க்காததை எண்ணி
அது ஏதோ வாய்திறந்து
அழுவதாக நினைத்து
மனம் தானாகக்கனத்துக்
கரைகிறது கண்களில்

கோடையின் வாடையை
வரவிடாமல் தடுத்த
அதன் அடர்த்தியை
உணர்ந்தவர்கள் எல்லாம்
கைதிகள் ஆனார்கள்

விடுதலை வேட்கையை
விட்டுத்-தாலைத்தார்கள்

சூரியக்குதிரைகள்
நுழைய முடியா
அடர்த்தி அரண்

நான்
அதன் அணைப்பில்
து-ங்கி விழித்தவன்

அதன் பரிசுகளைச்
சுவைத்து ருசித்தவன்

எப்போதோ வரும்
மின்னல் நினைப்போடு இருந்து-காண்டு
எழுதிக்குவிப்பதில்
எத்துணைப் போலித்தனம்
என்னிடம்…!
—-
மேகமே ஒரு கேள்வி!
பிச்சினிக்காடு இளங்கோ , சிங்கப்பூர்

படைபடையாய் வான்தரையில்
படையெடுக்கும் கூட்டமே
படையெடுக்கக் காரணம்தான்
பகருவீர்கள் கொஞ்சமே! —- மண்ணில்

விடையிலாது ஏங்குகின்ற
விளைபயிர்கள் பார்த்துதான்
விழிநீரைச் சிந்தவே
விரைந்துவந்தோம் நாங்களே

வெள்ளுடைதான் žருடையோ
விதவைக்கோ லம்தோனுதே
விதவைகூட வான்வெளியில்
வீதியுலா ஆகுமோ ?—- விண்ணில்

உள்ளக்குறை உள்ளவர்கள்
ஒருவர்கூட இல்லையே
உலவநாங்கள் விதவைபோல
ஒருதடையும் இல்லையே!

உப்புநீரில் மூழ்கமூழ்க
உடல்தூய்மை போனதோ
உப்புநீரில் குளிக்கயுங்கள்
உள்ளம்மிக ஒப்புமோ ?—-போற்றும்

ஒப்பிலாத மழைவளத்தை
உலகம்உய் யதூவவே
உப்புநீரா ? பார்ப்பதில்லை
உள்ளம்மிக ஒப்புமே

மழையிலாது வாழ்வதற்கு
மனிதயினம் முயலுமோ
மழைமறந்து மரமழித்து
மனிதன்வா ழஇயலுமோ!—-நாளும்

தழைத்திருக்கும் இயற்கைவளம்
தரணியெங்கும் காணவே
உழைத்துநாங்கள் சிந்துகிறோம்
உயர்மழையாம் வியர்வையை

ஏழையென செல்வரென
இரண்டுப்பார்வை இல்லையே
இருளடைந்த நெஞ்சிருக்கும்
இழிபிறப்பு தொல்லையே –ஓங்கும்

தோழமையை உயிரினங்கள்
தோள்கொடுத்துப் பேணவே
தோன்றுகிறோம் கார்முகிலாய்
தொழுதுநீங்கள் வணங்கவே
—-
ilango@stamford.com.sg

Series Navigation