இறைவன் எங்கே ?

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

அனந்த்


<>0<>0<>0<>

என்னை நானே தெரிந்துகொண்டு
… இறைவன் யாரென்(று) அறியு(ம்)முன்பே
முன்னை நாள்நான் பிறந்ததுமே
… முதியோர் தாங்கள் படைத்தஒன்றைக்
கன்னம் வைத்தென் உளம்புகுத்திக்
… ‘கடவுள் இதுதான் ‘ என்றனரே;
சின்னம் அதனை உதறிஎன்றோ
…தெரிவேன் எனக்குள் உண்மையினை ?

கண்ணில் தெரியும் காடுமலை
…கடலும் வானும் கதிரவனும்
எண்ணற் கரிய வகையினிலே
…என்னை ஈர்த்(து) ‘எம் புறஉருவின்
வண்ணத் தடியில் மறைந்திருக்கும்
…மருமம் தன்னை நீதுலக்கின்
திண்ணம் அறிவாய் இறையை ‘எனச்
…செப்பக் கேட்டேன் தினந்தினமும்

கண்ணை மூடி உறங்கையிலே
…கனவில் தோன்றும் காட்சிகளின்
உண்மை உணர்ந்தால் இறையோனின்
…உருவம் தெரியும் எனநினைத்து
மண்ணில் கற்ற மாந்தரிடம்
…வருந்திக் கேட்டும் அடிமனத்தின்
திண்ணம் பெறஓர் வழியின்றித்
…திணறித் தவித்த வேளையிலே

வானம் பிளந்த வகையாக
…மனமும் வெடிக்க அதனூடே
ஊனம் எதுவும் இல்லாமல்
…உவகை ஒன்றே உணர்வாக
மோனம் என்ற மொழிபேசி
…முழுதும் மறந்த நிலையினிலே
நானே இறைவன் எனஅறிந்தேன்
…நாடேன் இனிமேல் யாரையுமே!
====

Series Navigation

அனந்த்

அனந்த்