கவிதைகள்

This entry is part of 52 in the series 20040108_Issue

தேவேந்திர பூபதி


அரூப வெளியில்

கூச்சல்களூடே

பீறிட்டெழும் யானை

புலனடக்கம் பேசித் திரியும் நாவுகள்

பொருள் புரியும் வரம் வேண்டி

குருமார்களின்

வாயில்களில் குடியிருக்கும் மனசு

கடைசி வரைக்கும்

திறக்காத கதவு

விளையாததன் காரணம் தேடி

பூமிக்கு விசாரனை

கீறிப் பிளந்து

உள் வைத்து தைத்து பின்

அன்னாந்து பார்த்து

முந்நூறு முட்டைக் கேட்கும்

ஊரெல்லாம் மக்கள்

************************************
ஆலகாலத்தை

படிமமாய் உடலில் புதைத்து

இடத்தைக் கொடுத்தாலும்

வலத்தைக் கொடுத்தாலும்

விஷ விஷமாய்த்தான்

காத்துக் கிடக்கும்

உயிரை வேண்டி

சுடுகாட்டுப் பித்தன்

பெண்ணைக் கைப்பிடிக்க

கல்யாண சுந்தரனாய்

புறப்பட்ட பொழுதினின்றே

ஆரம்பமானது

பித்தலாட்டம் திருவிளையாடலாய்

————————————————–

Series Navigation