கவிதைகள்

This entry is part of 55 in the series 20031211_Issue

விக்ரமாதித்யன்


இருந்து
செய்யவேண்டிய வேலை
ஓடிக்
கொண்டிருக்க நேர்கிறது
ஓடியாடிப்
பண்ணக்கூடிய காரியம்
இருந்த
இடத்திலேயே இருக்கும்படியாகிவிடுகிறது

கஷ்டப்படுகிறவர்களைப் பார்க்கையில்
கஷ்டமாகவே இருக்கிறது
சந்தோஷமாய் இருக்கிறவர்களைக் கண்டால்
சந்தோஷம்தான்

மழை கொட்டக்கொட்ட
பச்சை போர்த்தும்
மரம் செடிகொடிகள்
நதி நிறைய நிறைய
மேனி காணும்
நஞ்சை பூமி
காசு பணம் சேரச் சேர
கொண்டாட்டம்தான்
ஜனங்களுக்கு

********************************************************

விக்ரமாதித்யன் கவிதை

பாதங்களுக்குக் கீழ்
பூமி
ஏறிட்டுப் பார்த்தால்
வானம்
காற்று
வீசுகிறது
உலைத்தீ
எரிகிறது
கொண்டல்கள்
கொட்டுகின்றன
பூமி
தந்துகொண்டேயிருக்கிறது
சூரியனோ சந்திரனோ
வானத்தில்
நட்சத்திரங்கள் சுடர்விட்டதும்
சாப்பிட்டுவிட்டுத் தூங்கலாமே பாப்பா
நமக்கென்ன
பிரச்னை வேறே

***********************************************************************

விக்ரமாதித்யன் கவிதை

மலை வளரும் என்கிறார்கள்
நம்ப முடியவில்லை
கடல்கொண்டது என்கிறார்கள்
நம்ப முடியவில்லை
வெள்ளம் வந்து அழித்தது என்பார்கள்
நம்பத்தான் வேண்டியிருக்கிறது
தீ அழித்தது எத்தனையோ என்பார்கள்
சூறாவளி இழப்பு என்பார்கள்
தெரியும்

பூமி தருகிறது
தெரியும்

வானம் பொழிகிறது
தெரியும்

தெரியவேயில்லை
தெரியவேயில்லை
தெரியவேயில்லை

எளிய தமிழ்
எப்படி கைகூடிவருகிறது

கவிதை
எப்படி தோன்றுகிறது

பாரதி
எப்படி வாழ்ந்தான்

ஒவ்வொரு காலத்திலும்
ஒரு பாரதி

*********************************************************

Series Navigation