கவிதைகள்

This entry is part of 40 in the series 20031204_Issue

நண்பன்


1. கால்கள்……………
***********

சாலையோரம்
கழிவோடு கழிவாக
அமர்ந்திருக்கிறான் –
அங்கு வந்து செல்லும்
பல கால்களையும்
பார்த்துக் கொண்டே…..

வளர்ச்சியை முடித்ததும்,
இன்னும் வளருகின்றதும்,
வளராமல் சூம்பிப் போனதும்
எனப் பலப்பல
கால்கள்
அவன் கவனம் கருகின்றன…..

சாதியைத்
தேடாத பார்வையால்
கால்களைப்
பார்த்துக் கொண்டிருக்கிறான்.

சில கால்களின்
வசீகர அழகு
அவன் உத்தேசத்தை
மறக்கடிக்கும் –
பசியை மறக்க
வைக்கும்
புகை வலிப்பைப் போன்று…

எல்லாக் கால்களையும்
கவனிப்பது
அவன் உத்தேசமில்லை –

நீர் வற்றிய குளத்து
கொக்கைப் போல
அவன்
கவனமெல்லாம்
அணி செய்யப்பட்ட
கால்களைத்
தேடிக் கொண்டிருக்கும்….

இன்றைய
இரவுப் பொழுதிற்கு
இரை கிடைக்குமா –
இந்தக் கால்களில்
ஒன்றிலிருந்து ?

அரக்கப் பசியுடன்
கால்களைக்
கவனமாகப்
பார்த்துக் கொண்டிருந்தான் –
பக்கத்தில்
வேலையற்றுக் கிடந்தன
ஊசியும், நூலும்…..
****************************************

2. வார்த்தைகள்………..

வார்த்தைகள்
கை தேர்ந்த
முகமூடியாளர்கள் –

ஒரே சமயத்தில்
ஒன்றாக, பலவாக
பிறப்பெடுக்கும்.

நுகர்வோர் தரமறிந்து
சேவகம் செய்யும்
கை கட்டி….

தடுக்கினால்
குழியும் பறித்து விடும்
பலர் முன்னிலையில்.

இந்த வார்த்தைகளிடம்
கொஞ்சம் எச்சரிக்கையோடு
இருங்கள் –
தனியே ஒன்று;
கூடினால் இன்னொன்று –
வேடமிடுவதில்
இவைகளும் மனிதர்கள் தான்…….

***********************************************
3. பசுவதை……………

கட்டாக்காலி மாடு
நடுவீதியில் –
இரைமீட்டிக் கழிக்கும்.
பிளாட்பாரத்து வாசி
வாழ்க்கையைப் போல.

மடிவற்றிய மாடுகள்
நடுத் தெருவில்
சோரமுற்று
சுமந்து கொண்டு வந்தால்
வீட்டுக்குள் அன்பாக சேர்ப்பு…

மடியில் கனமுள்ள
மாடுகள்
நன்றாகக் கவனிக்கப் படும் –
சத்து ஊசிகள் குத்தப் பட்டு.

இல்லையென்றால் –
அனாதை ஜீவனம்…

சுவரொட்டி உரித்து…
பந்தக்கால் வாழை திருடி…
எச்சில் தொட்டியில் பிச்சையெடுத்து…
என்று ஏதோ ஓர் வகையில்
வாழ்க்கை ஜீவனம்…

இங்கு….
பசுவதை
கழுத்தை அறுப்பது
மட்டும் தான்.
***************************************
pmdshaji@sify.com

Series Navigation