கவிதைகள்

This entry is part of 42 in the series 20031023_Issue

சேவியர்


பறிக்கப்பட்டவைகள்

—————————————

0

மங்களமா இருக்கும்
வாங்கிக்கோங்க,
கக்கத்தில் இடுக்கிய
கூடை நிறைய
வாசனையோடு நிற்பாள்
பூக்காரி.

பூக்களுக்கே வலிக்காமல்
பூக்களை
பூ போல
அள்ளிக் கொள்தல்
அவளுக்கு விரல் வரம்.

பூக்களைச் சுற்றிச் சுற்றி
அவள்
விரலுக்கும்
முழங்கைக்குமிடையே
வாசனைக் கயிறுகள்
இறுகியிருக்கக் கூடும்.

நல்ல பூ இல்லையா ?
என்றுதான்
பேச ஆரம்பிக்கிறார்கள்,
பேரம் பேச முடிவெடுத்தோர்.

பூவை
பூவாய்ப் பார்க்காமல்
பணமாய்ப் பார்க்கப்
பழகிவிட்டோம் நாம்

ஆயுள் முயற்சி
செய்தாலும்
ஒரு மொட்டை
நம்மால்
மலர வைக்க இயலுமா ?

எந்த தறியில் நெய்தேனும்
ஓர்
இதழின் மென்மையில்
ஆடை தயாரிக்க ஆகுமா ?

புரிந்து கொள்ளவேண்டும்
நாம்.

பணம் கொடுப்பது
பூக்காரிக்குத் தான்
பூவுக்கல்ல.

0

—————————————

கவிதை 2

முரண்கள்

—————————————

முரண்கள்.

0

வழியெங்கும்
தெருப்பிள்ளையார்,
பெரியார் நகர்.

0

நாத்திகன் சொன்னான்
பெரியார் தான்
கடவுள்.

——————————————
கவிதை 3

மழை நிறுத்தங்கள்

——————————————

0

சொல்லாமல்
படியேறி வந்த
பள்ளித் தோழன் போல,
சன்னல் வழியே
கதவைத் தட்டியது மழை.

வானத்துப் புன்னகையின்
ஈர வடிவத்தை
இமைகளிலும்
இறுக்கிக் கட்டி,

அதன்
குளிர்க் குழந்தைகளை
உள்ளங்கைகளில்
ஏந்தி,

அதன்
சிதறிய முத்தங்களை
கன்னக் கோப்பைகளில்
சேகரித்து,

சிலிர்த்துப் போய்க்
கிடந்தேன்
மேகம் தன்
அவிழ்ந்த சுருக்குப் பையை
இறுக்கிக் கட்டும் வரை.

கடிகாரம் துரத்த
வெளியே வந்தால்,

தன்
புனிதத் தோள்களெங்கும்
சாக்கடையைச்
சுமந்து கொண்டும்,

தன்
மெல்லிய மேனியை
சேறுக்குள்
புதைத்துக் கொண்டும்,

வழிமறித்துக் கிடந்தது
வானக வரம்
வீதிகளில் சாபமாய்

அல்லல் பட்டு,
அலுவலகம் நுழைந்து
நிமிர்ந்தால்,
மீண்டும்
ஜன்னலைத் தட்டியது
மழை,
அறிமுகமான தோழனாய்.

விரல் நீட்டி
வரவேற்றேன்
அதே ஸ்னேகத்தோடு.

0

———————————–

Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation