கவிதைகள்

This entry is part of 42 in the series 20031023_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்


ரமலானே வருக! இறையருளை தருக!!
உலகம் அழிக்கும்
மடமை ஒழிக்க
உலகம் வியக்கும்
மறையை வழங்கிய
உயர்வான
ரமலானே வருக! இறையருளை தருக!!
உலகம் அழிக்கும்
மூடநம்பிக்கை ஒழிக்க
உலகம் காக்கும்
இஸ்லாம் அருளிய
துணிவான
ரமலானே வருக! இறையருளை தருக!!
புனித மாதம்
பசியில்லாத இறைவனை
பசிபொறுத்து உணரும்
மாதம்
பெருமான் நபிகள்
போற்றி புகழ்ந்த
மாதம்
மாறாத மறையாத
மறைகுரான் இறங்கிய
மாதம்
பசியெனும் ஏழையினாடையை
பணக்காரரும் அணியும்
மாதம்
கஞ்சனாய் இருந்தவரும்
கணக்கின்றி வாரிவழங்கும்
மாதம்
இரும்பிதயம் படைத்தவரும்
இதயம் கனியும்
மாதம்
விரட்டப்பட்ட ஷைத்தான்
விலங்கு பூட்டப்படும்
மாதம்
அகிலமாளும் அல்லாஹ்வின்
அருள்மழை பொழியும்
மாதம்
முக்காலம் அறிந்தவராம்
முஹம்மதுநபி அகமகிழும்
மாதம்
இந்த
புனித மாதம்
நோன்பு
தொண்டையில் தாகமிருக்கும்
வயிற்றில் பசியிருக்கும்
மனம் நாடாது
பொறுத்து இருக்கும்
வறுமை அல்ல
கடமை..
ஜகாத்*
கழுத்துவரை தேவையிருக்கும்
கையளவே காசிருக்கும்
மனம் விரும்பி
ஜகாத் கொடுக்கும்
விரயம் அல்ல
விவேகம்..
(ஜகாத்* – ஏழைவரி)
நபிமொழி
பசி வந்தால்
பத்தும் பறக்கும்
– இது பழமொழி
பசி பொறுத்திருந்தால்
சொர்க்கம் திறக்கும்
– இது நலமொழி
என்றும் நல்லமொழி
எங்கள் நபிமொழி
முற்றும்.

===================================================================
dul_fiqar@yahoo.com.sg

Series Navigation