பாரதீ…

This entry is part of 43 in the series 20030918_Issue

புதியமாதவி. மும்பை


பாரதி..
‘நீ படி ‘ என்றாய்
படித்தோம்

‘பட்டங்களை எடு ‘ என்றாய்
எடுத்து முடித்தோம்.

பட்டமும் பதவியும்
எங்கள் நிலையை
உயர்த்தும் என்றாய்
உயர்த்தியது
எங்கள் விலையை


ர்
த்
தி

து..!!!

இருட்டறையில்
இலவசமாக
விற்கப்பட்ட
நாங்கள்
இன்று-
பட்டப்பகலில்
பணத்திற்காக
விற்கப்படுகின்றோம்!

அடுப்பறை விறகுக்கு
ஒருபக்கம் தீ
இந்த-
அலுவலக விறகுக்கு
இருபக்கமும் தீ..!

வாழ்க்கையில்
ஒருதடவைதான்
தீக்குளித்தாள் சீதை.
இன்று-
வாழ்வதற்காகவே
நித்தமும்
தீக்குளிக்கின்றாள்
பதிவிரதை..!!

பார்ர்ர்ர்ர்ரதி.!!
உன்
அக்னிக்குஞ்சு
அணுவாகி விட்டது..
வெடிக்கும்முன்பே
விழித்து எழு..

அன்புடன்,

புதியமாதவி.
மும்பை
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation