நான்கு கவிதைகள்

This entry is part of 42 in the series 20030626_Issue

சங்கன்


நன்றியறிவிப்பு
———–

மண்வாசனை,
ஈரப்பதமான காற்று,
முதலாய் நனைந்திட
மொட்டைமாடியில் நான்.


ஓட்டைக்கூரை
———–

பெளர்ணமி இரவில், வீடு முழுக்க வெள்ளிக்காசுகள்;
மழைக்கால இரவில், பாதி நிரம்பிய அலுமினிய பாத்திரங்கள்.


சம்ஹார சோதனை
—————

என் சாமி பெருசா
உன் சாமி பெருசான்னு
வெட்டிகிட்டு செத்தாங்க
குருதிப்புனல் உண்டாச்சு
ஊர் உலகம் ரெண்டாச்சு
கெட்டவங்கள ஒழிச்ச
சந்தோஷத்தில கமுக்கமா
சிரிச்சிக்குதுங்க
சாமிக ரெண்டும்;
ஆனாலும், செத்த சில
அப்பாவி உசுருக்காக
கலங்குதுங்க
கண்ணுக நாலும்.


கரைகிறேன் நான்
————–

‘மலை உச்சியின் மீதமர்ந்து
தியானிப்பேன் நான்

வீசும் மெல்லிய காற்றில்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைவேன் நான்

கரைந்து கரைந்து
பிரபஞ்சமெங்கும்
வியாபித்திருப்பேன் நான்

பிண வாடையுடன் அல்ல;
உயிர் வாடையுடன்,
பல கோடி கண்களுடன்… ‘

என்னும் இறவாநிலை
என் கனவாக,
நனவாக நான்
நடைபிணமாக…

***
May 17 2003
sangan@junglemate.com

Series Navigation