காலம்

This entry is part of 47 in the series 20030510_Issue

பவளமணி பிரகாசம்


வளரும் வயதினிலே,
வட்ட நிலவு முகத்திலே
கூனல் பாட்டி பார்த்தேன்;
கண்மூடி படுத்தவுடன்
கனவின்றி உறங்கினேன்.

பிள்ளைப் பருவத்திலே,
புத்தக நடுவினிலே
பீலியின் இறகு வைத்து
பொறுமையாக பார்த்திருந்தேன்,
குட்டி போட காத்திருந்தேன்.

விடுமுறை நாட்களிலே,
பாட்டி வீட்டு மாடியிலே,
பாப்பா நொண்டி ஆடினேன்,
பல கதைகள் கேட்டறிந்தேன்,
கூட்டாஞ்சோறு உண்டிருந்தேன்.

வாலறுந்த பட்டமாய்
வெகு தூரம் பறந்த பின்னே,
கண் மூடி முழிப்பதற்குள்
காலம் ஓடி விட்டது,
கனவு போல நேற்றிருக்கு.

சிதறிய நெல்லிக்காயாய்
சேக்காளி கூட்டமும்
சேர்ந்த இடம் தெரியலை,
கபடில்லா கடந்த நாளை
எண்ணி மனமும் ஏங்குது.

நிலவில் கிழவி இருப்பதை
நம்பவில்லை பேரனும்,
மயிலிறகில் மயங்கிட
நேரமில்லை பேத்திக்கு-
என்னடா கிரகமிது!

அத்தனையும் புரியுதிப்போ,
அப்பட்டமாய் தெரிகிறது,
விளங்காத விபரமும்
வெட்டவெளிச்சமாகுது,
கற்பனைக்கு வேலையில்லை.

சின்ன மின்னணு திரையிலே
விரல் நுனியின் ஆணையில்
அனைத்துலகும் விரியுது,
ஆளை அசத்திப் போடுது-
விந்தையான காலமிது.

எட்டி விலகி போகாமல்,
ஏக்கத்தோடு பாராமல்,
விரும்பி இந்த வித்தையை
கற்றுத் தெளியும் காலம்,
வென்று களிக்கும் காலம்.

ஏறுகின்ற வயது,
மாறுகின்ற கலைகள்,
வேறுபட்ட சுவைகள்,
கூறுகின்ற பாடம்
உறுத்தாத காலம்.
***
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation