5 கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

தேனம்மை லஷ்மணன்


1. மாயை.
**************

எப்போதிலிருந்து என
தெரியவில்லை..
கற்பெனப்படுவது
பெண் உடல் மட்டும்
சம்பந்தப்பட்டதாக
நிறுவப்பட்டது என்பது

பெண் என்பது
அந்தரங்கம் மறைக்கும்
உள்ளாடையாகவும்

ஆண் என்பது
கௌரவத்துக்குரிய
பொன்னாடையாகவும்..

கால்மிதியாகவும்
கொடிக் கம்பமாகவும்
கற்பிதப் பெருமையாய்..

— கவிதை தேனம்மைலெக்ஷ்மணன்

============================================

2. சாயம்..
***************

கட்சியின் பெயராலோ
சாதி., இனம்., மொழி
மதத்தின் பெயராலோ

கறுப்போ., சிவப்போ.,
காவியோ., பச்சையோ
பூசப்படும் உங்கள் மீது..

குன்றிப்போய் விடாமல்
ஹோலியாய்க் கொண்டாடுங்கள்..
வர்ணங்கள் நிறைந்தது வாழ்வு..

பிறப்பு., வளர்ப்பு., வாழ்வு., வளர்ச்சி.,
விருப்பு சார்ந்துதான்
சாயங்கள் நம்மேல்
சவாரி செய்ய அனுமதிக்கிறோம்..

நம் சொந்த நிறமென்னும்
இயற்கைச் சாயம் தவிர
அனைத்தும் அழிந்துவிடும்..

சந்தர்ப்பங்கள் பொறுத்தோ.,
தேய்மானம் பொறுத்தோ.,
யாருக்கும் தெளிவு படுத்தும்
அவசியம் இல்லாமல்..

=====================================

3… சத்தம்..:-
*********************

ஒரு பழைய மிதிவண்டி
அல்லது ஒரு தையல் எந்திரம்
உண்டுபண்ணும் சத்தம்..

ஞாபகப் படுத்துகிறது
பால்யத்தில் பள்ளியில்
கொண்டு விட்ட அப்பாவையும்

கைகளால் சுற்றி
தலையணைக்கு உறை
தைக்கும் அம்மாவையும்..

=============================

4… மக்கள்..
***************

எத்தனை முறை ஏமாந்தாலும்
விலகி விடப் போவதில்லை
மத குருமார்களிடமிருந்தும்
நிதிச் சீட்டுக்களிலிருந்தும்..

===================================

5.. வோட்டுப்போடும் வேள்வி:-
***************************************

போட்ட ஓட்டுக்கு
அவிர்ப்பாகம் வாங்கிய
கட்சிதேவதைகள்
அட்வான்ஸ்டு வரமாய்..
பிரியாணிப் பொட்டலங்களும்
பணமும் குடமும் ஈந்து..

Series Navigation

தேனம்மை லஷ்மணன்

தேனம்மை லஷ்மணன்

5 கவிதைகள்

This entry is part [part not set] of 14 in the series 20010623_Issue

சேவியர்


1
தேசம் எனக்கு, தேசியக்கொடி உனக்கு….

இந்த அமெரிக்காவின் வெள்ளை வீடுகளின்
வெளிப்புறத்தில்
தேசியக் கொடியைக் காணும் போதெல்லாம்
என் பாரதம் எனக்குள் விழுகிறது.

எனக்குப் பிடித்த இடத்தில் கொடியைப் பறக்க விட
இன்னும் எனக்கு உரிமையில்லை.
ஐம்பதாண்டுச் சுதந்திரக் கோப்புகளில்
முடிச்சிடப்பட்டு
ஒதுக்கப்பட்டது எனது உரிமை.

எனது தேசம்,
எனது மூச்சுக்காற்று முதலில் விழுந்த நிலம்,
இன்னும் தொப்பூழ் கொடி அறுக்கப்படாத பாரதத் தாய்
மகனுக்கு மட்டும் மறுக்கப்படும் தேசியக்கொடி.

இதென்ன நியாயம் ?
தேசம் நமதென்றால்
தேசியக்கொடிக்கு மட்டும் கொழுகொம்பில்லையா ?

எந்த சட்டத்திலும் எழுதவில்லை.,
ஆனாலும் என் சட்டைப்பையில்
தேசியக்கொடி குத்திக்கொள்ள
வருடம் மூன்று நாளுக்கு மேல் அனுமதியில்லை.

பல்லில்லாச் சட்டங்கள் இன்னும்
பரணுக்குள் பதுங்கிக்கிடக்கின்றன.,
அவற்றின் காலடியில்
என் தேசியக்கொடி.

நகரமுடியாக் கால்களுடன் அசோகச் சக்கரம்,
பாயமுடியாப் பாதங்களுடன் சிங்கங்கள்,
நாங்கள் மட்டும் சட்டம் தின்னும் சைவப் புலிகளாய்.

அறியாமைக்கும் வறுமைக்குமிடையே
வறுக்கப்படும் தேசம்,
தேசத்தின் தீயைக் கொஞ்சம் தேகத்தில்
குத்த வேண்டும்.

தேசப்பற்று என்பது
பாகிஸ்தானின் படையெடுப்பில் மட்டும் பிறப்பதல்ல.
கார்கில் பள்ளத்தாக்குகளில் மட்டும்
பயிராவதல்ல.

எனக்கு உரிமை வேண்டும்
என் தேசத்தின் மூவர்ணக்கொடியை
என் முன்வாசலில் பறக்கவிட,

சட்டங்களின் அட்டைகளுக்குள் அடங்கிக்கிடக்கும்
அழகியக் கொடி
என் அலுவலக வாசலில் அழகாய்ப்பறக்க
அனுமதிவேண்டும்.

தாய் எனக்குச் சொந்தம்
தாய்ப்பால் தருவதற்கு விசாரணைக்கமிஷனா ?
தேசம் எனக்குச் சொந்தம்
தேசியக்கொடி மட்டும் உனக்குச் சொந்தமா ?

*****
2


ஒரு வழிப்பாதை…

பிரிய நண்பனே..
இழந்த பின்பு தான் புரிந்துகொண்டேன்
என்னிடம்
இருந்திருக்கின்றது என்பதை…

என் உள்ளம் முழுதும்
என் திறமைகளின் மேல்
நம்பிக்கை வைக்க மறந்துபோனதால்
நீர்ப்பாசனம் நின்றுபோன நதிகள்.
தலைகீழாய் நட்டுவைத்த தாவரங்கள்.

விதைத்தேர்வில் விழுந்துவிட்ட தருணங்கள்.
தேர்ந்தெடுத்தபின்
விதைக்க மறந்து விலகிப் போன கணங்கள்.
விதைத்த போது
நல்லநிலம் தேட மறந்த நாட்கள்….

என் சோம்பல்க் காலத்தின்
சாம்பல் நினைவுகளால்
அறுவடை நிலத்தில் இப்போது
வைக்கோல் மட்டுமே பயிராகிறது.

கடந்துபோன கணமும்,
முடிந்துபோன மூச்சும்
மடிந்து போன வாய்ப்புக்களும்,
பள்ளத்தாக்கில் விழுந்த பாறாங்கல் தான்.

இப்போது சிந்திக்கிறேன்.
வசந்தகாலத்தில் பழம் உண்ண மறந்து
பயிர் காய்ந்தபின் வயிறு வாடும் பறவையாய்
காலம் கடந்தபின் சிந்திக்கிறேன்.

அறிவுரைகள் என்பதெல்லாம்
சுதந்திரம் அறுக்கும் அரங்கள் என்று சொல்லி
இன்று நீ சிரிப்பதுபோல்
என் இளமையில் நானும் சிரித்தேன்.

ஆனாலும் முன்னோர் நட்டுவைத்தார்கள்
எனக்காக
சாலையோரத்தில் மரங்கள்.

****
3

இன்னொரு வழிப்பாதை…

பிரிய மகளுக்கு இன்று திருமணம்.
நெற்றிச் சுட்டி முதல்,
சமயலறைச் சட்டி வரை
எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தாயிற்று.

வாசலை மறைத்து நிற்கும்
பூவிலைத் தோரணங்கள்.
மெலிதாய்ப் புரண்டுவரும் இன்னிசை,
உறவினர், நண்பர் உற்சாக உரையாடல்கள்,
ராஜ கம்பீரத்துடன் மணமேடை.

காஞ்சிபுரக் கசவு நிறத்தில் கவிதைக் கன்னம்,
அலங்காரங்களின் அபினயத்தில்
அழகுப் பதுமையாய் மணப்பெண்.

பரிசுப் பொருட்களின் பளபளப்புக்கிடையே
தேய்ந்துகொண்டிருக்கிறது நேரம்.

மேடையில் யாகம் வளர்த்தாயிற்று,
நான் தேடிப்பிடித்த மாப்பிள்ளையும்
சிறுவயதில் என்னோடு ஓடிப் பிடித்து
விளையாடிய என் ஒரே மகளும் மேடையில்…

மந்திரங்கள் மெலிதாக வெளி விழத்துவங்கின,
அதோடு இழைந்து என் நினைவுகளும்.

மழலைக்கையால் மருதாணி தேய்த்து,
தூங்கும் போது நெஞ்சில் தூங்கி,
மீசை இழுத்து மூக்கைக் கடித்து
மூளைக்கு மின்சாரம் அனுப்பிய மகள்.

அறிவுச் சுடரின் அத்தனை இழைகளையும்
மொத்தமாய் அள்ளி வந்து
என்னை மெத்த மகிழ்த்திய மகள்.

வீட்டின் ஒவ்வோர் அறைகளிலும்
கலைக்கப் பட்ட பொருட்களும்,
அடுக்கப் பட்ட அவளது நினைவுகளும் தான்.

பாதக் கொலுசுப் பாவாடை பிராயம்,
தாழத் தழையும் தாவணி வயது,
புதிதாய் பிறக்க வைத்த புடவைப் பருவம்
காலம் முன்னோக்கியும் நினைவுக் கடிகாரம்
பின்னோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

நாளை முதல்
என் மூச்சுக் காற்றில் பாதி
இன்னொரு ஊரில் உலாவப் போகிறதா ?

சத்தங்கள் இல்லாமல் இந்த வீடு
மெளனத்தோடு சண்டையிடப் போகிறதா ?

வீட்டு முற்றத்து மல்லிகைச் செடி
வாசமில்லாத பூவை பிறப்பிக்கப் போகிறதா ?

நினைவுகள் மனதில் விழ விழ
கால்கள் களைப்படகின்றன.

கெட்டிமேளம் கெட்டிமேளம்…
சத்தங்கள் நொடியில் வேகம் பிடிக்க.
கண்களின் ஓரத்தில் வெது வெதுப்பாய்
வழிகிறது சந்தோஷம் குழைத்த சோகம்.

கண் எரிகிறது,
யாகம் ஏன் இவ்வளவு புகைகிறது ?
கூடி இருப்பவர்கள் பேசுகிறார்கள்.

சட்டென்று என் கைவிட்டுவிட்டு
கடற்கரைக் கூட்டத்தில் ஓடி மறையும்
ஒருவயதுக் குழந்தையாய் என் எதிரில் மகள்.
அவள் கலங்கிய கண்ணருகே
கதறும் மன அலை ஒட்டிச் சென்ற இன்னொருதுளி கண்ணீர்…

****
4

இடிபாடுகளில் கட்டப்பட்டவை…

யாருமே நினைத்திருக்கவில்லை
இப்படி நடக்குமென்று.
கம்பீரமாக நின்றிருந்த எங்களூர்ப் பாலம்
கம்பிகள் உடைய விழுந்து விட்டது.

எங்கோ பெய்த
மழையின் துளிகள் ஒன்று சேர்ந்து
பரிவாரங்களோடு போருக்குப் புறப்பட்டதில்
பாலம் பலியாகிவிட்டது.

அரசாங்கப் பேருந்து முதல்
ஆட்டுக்கிடாக்கள் வரை
ஆடி ஆடி ஓடிய பாலம் அது.

யார் போட்ட பாலம் அதென்றோ
எப்போது போட்டதென்றோ
இதுவரை யாருமே யோசித்ததில்லை.

சாவுக்குப் பின் பீறிட்டுக் கிளம்பும்
பாசம் போல,
உடைந்த பிறகு ஆங்காங்கே
ஒப்பாரிகள் உருவாக.,

கலெக்டருக்கு கடுதாசி கொடுப்பதா ?
மந்திரிக்கு மனுக்கொடுப்பதா ?
முதுகெலும்புடைந்து போன பாலத்துக்கு
யார் கட்டுப் போடுவது ?
பெட்டிக்கடை ஓரங்களெங்கும் பட்டிமன்றங்கள்.

வந்து கொண்டிருந்த பேருந்து
பாதி வழியோடு நின்றுபோனது.
பள்ளிக்கூடம், சந்தை எல்லாம்
தூரமாய் ஆகிப்போனது,

செல்லப் பிள்ளையாய் ஊருக்கு நடுவே ஓடும் ஆறு
முதன் முதலாய்
பூமிக்கு பாரமாகத் துவங்கியது.

***
5

தாழ் திறவாய்…

உண்மை சுடும்.
உண்மை தான்.

நம் கழுத்துக்குக் கீழ்
கத்தி வைக்கப் படும் வரை
ஆயுதம்
மிக அழகானதாய் தெரியும்.

துப்பாக்கி முனை
நம் தொண்டைக் குழிக்குள்
திணிக்கப்படும் வரை
நிலமையின் வீரியம் புரிவதில்லை.

நம் தலைக்கு குறிவைக்கப்படும் வரை
காதுகள்
கேட்பவை எல்லாம்
தலைப்புச் செய்திகள் தான்.

தோல்வி,
ஏமாற்றங்கள்,
எதிர் வீட்டைத் தட்டும்போதெல்லாம்
கதவைத் தாழிடுவதை
நிறுத்திக் கொள்வோம்.

நாளை ஒருவேளை
சுண்டுவிரல் நம்மை நோக்கியும்
சூண்டப்படலாம்.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்