தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (7)

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

வெங்கட் சாமிநாதன்


இமையம் முற்றிலும் வேறான மனிதர், எழுத்தாளர். தலித் சித்தாந்தத்தை, தனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது போல அதை முற்றிலும் மறுப்பவர். அவர் ஒரு சாதாரண ஏழை பள்ளி வாத்தியாராக இருந்தது, சித்தாந்திகளுக்கு மிகவும் சௌகரியமாகப் போயிற்று. தம் சித்தாந்தத் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களுக்கு சரியான குறியாக இமையம் வாய்த் தார் என்று தான் சொல்லவேண்டும். இமையத்தை தம் சித்தாந்தத் தாக்குதல்களுக்கு இரையாக்கினால் அது ஒரு சிறந்த முன்னுதாரணமாகி, எட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற தலித் எழுத்தாளர்களையும் சித்தாந்தத்தைச் சொல்லி மிரட்ட சௌகரியமாக இருக்குமே, அவர்களும் . பயந்து தானே அடங்கிப் போவார்களே.. சொல்வதைக் கேட்காது தம் இஷ்டத்துக்கு எழுதிக் கொண்டிருக்கும் தலித் எழுத்தாளர்களிலேயே இமையம் தான் அதிகம் முரண்டு பிடிப்பவர். தன் சுதந்திரத்தை உரக்கக் கூவி அறிவிப்பவர். பூமணி போல, சோ. தருமன் போல இவருமல்லவா, தலித் பட்டைகளெல்லாம் எனக்குத் தேவை இல்லை. நான் தலித் எழுத்தாளர் இல்லை என்று போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார் என்று அவர்களுக்குக் கோபம். இது சுத்த அடங்காபிடாரித்தனம் இல்லையா? கோவேறு கழுதைகள் அவரது முதல் நாவல். நாவல் என்னவோ தலித்துகளின் அவல வாழ்க்கையைப் பற்றியது தான். இங்கு அவலப்படுவது ஒரு பிரிவு தலித் கிறித்துவர்கள். அவர்கள் அடிமை சேவகம் செய்வது அவர்களை விட சற்று பொருளாதார முன்னேற்றம் அடைந்து விட்ட இன்னொரு பிரிவு தலித் குடும்பங்களுக்கு. அவர்கள் வாழ்வது அரசு குடியிருப்புகளில். . கொஞ்சம் படித்து அரசு உத்யோகத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். குடிசைகளில் வாழும் கிறித்துவ தலித்துகள் அரசு குடியிருப்புகளில் வாழும் தலித்துகளின் வீட்டு துணிகளை சலவை செய்து கொடுப்பவர்கள்
தினம் காலனி வீடுகளுக்குச் சென்று வாயில் முன் நின்று மிச்சம் மீதி உணவு இருந்தால் கொடுப்பதை வாங்கி வரவேண்டும். இந்த தலித் கிறித்துவ குடும்பங்கள் முன்னேறிய தலித் குடும்பங்களுக்கும் தலித்துகள். தன் வீட்டுத் துணிகளை சலவை செய்பவன், தினம் வீட்டில் மிஞ்சிய சோத்தைக் கேட்டு வாங்கிப் போகவேண்டியவன் எப்படி தனக்குச் சமமாவான்? படித்து அரசு வேலையில் அமர்ந்து காரை வீட்டில் வாழும் தலித் இப்போது உயர் சாதிக்காரனாகி விட்டானே. உயர் சாதி மிதப்பில் அவன் சந்தோஷிக்கவேண்டாமா? அவனுக்கும் ஒரு தலித் இருந்தால் தானே தன் உயர் சாதி வாழ்வை அவன் அனுபவிக்க முடியும்?
தான் உயர்வதில்,மட்டுமல்ல நேற்றுவரை தன் சகாவாக இருந்த மற்றவனைத் தாழ்த்துவதிலும் ஒரு சுகம் உண்டே.
இமையத்தின் கோவேறு கழுதைகள் மிகவும் சச்சரவைக் கிளப்பிய, பல உண்மைகளைப் பட்டவர்த்தனமாகச் சொன்ன நாவல். அதைச் சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டுமே.

இரத்தின கரிகாலன் தலித் இல்லை தான். ஆனாலும் அவரும் தலித் மேடையில் மிகுந்த ஆர்வத்துடன் அமர்ந்து கொள்கிறார். அவருக்கு வரவேற்பும் மிகுந்த உற்சாகத்துடன் தரப்படுகிறது. அது எப்படியோ போகட்டும். அவரது கவிதைகள் ஏதோ சர்ச்சில் மன்னிப்புக்கோரும் சடங்காக மண்டியிட்டு இது காறும் தானும் தன் முன்னோர்களும் தலித்து மக்களுக்கு இழைத்து விட்ட பாவங்களையெல்லாம் மன்னித்து பாப விமோசனம் கேட்கும் பாவனை கொண்டவையாக இருக்கின்றன. அவர் தலித்துகளுக்கு ஒரு படியோ இரண்டு படியோ மேல் தட்டு சாதி என்று எண்ணுகிறேன் அந்த மன்னிப்புக் கோரல் தன் சாதியினரது மட்டுமல்லாமல் எல்லா உயர் சாதியினரையும் குறித்தது என்பதால், இத்தகைய சுய விமரிசனம், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரகள் அவ்வப்போது வலியுறுத்துவது போல, தாம் எத்தகைய தவறுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று தீவிரமாக நம்பும் தலித் சித்தாந்திகளுக்கும் தேவையான ஒன்று தான்.
இப்போது எல்லோருடைய கவனமும் பூமணியின் மீது குவிந்துள்ளது. பூமணியை இன்றைய தலித் எழுத்துக் களுக்கெல்லாம் முன்னோடி என்று சொல்ல வேண்டும். தலித் இலக்கியத்தின் தந்தை என்று சொல்லாமா? தலித் வாழ்க்கை பற்றி சிந்தித்தவர்கள் என்று இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல. தமிழ் இலக்கிய வரலாற்றிலிருந்து நிறையப் பேரைச் சொல்லலாமென்றாலும், தலித் வாழ்க்கையப் பற்றி எழுத தலித் சமூகத்திலிருந்தே வந்த முதல் எழுத்தாளர் பூமணி.
அப்படி ஒரு அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர் அவர். 1976-ல் வெளிவந்த அவரது பிறகு என்ற நாவல் உடனே தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல்லெனும் முக்கியத்துவம் பெற்றது

பிறகு நாவல் அழகிரி என்னும் செருப்பு தைப்பவனின் வாழ்க்கையைச் சொல்கிறது. அழகிரிக்கு இன்னொரு கிராமத்திலிருந்து அழைப்பு வரவே அங்கு செல்கிறான். அழகிரி மிகவும் அடக்கமானவன். அமைதியான குணம் கொண்டவன். அவனுக்கு என்ன இன்னல் வந்தாலும், யாரென்ன கெடுதல் செய்தாலும், இது தான் தனக்கு விதிக்கப்பட்டது என்று ஏற்று அமைதி அடைபவன். தணிந்து போவதையும் ஒரு புன்சிரிப்போடு, கௌரவத்தோடு ஏற்பவன். கருப்பன் என்று ஒரு அநாதைச் சிறுவன் அவனை வந்தடைகிறான். அந்தச் சிறுவனையும் அழகிரி தன் அணைப்பில் பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறான். கருப்பன் ஒரு சிறுவன் தான். அனாதை தான். பலமற்றவன் தான். ஆனாலும், அவனை வந்து சேரும் துன்பங்களையெல்லாம் கிண்டலோடு, கவலையற்று சந்திப்பவன். எதுவும் அவனை நிலைகுலையச்செய்வதில்லை. மாறாக, அவனது கேலியும், பயமின்மையும் மற்றவர்களைத்தான் நிலைகுலையச் செய்யும். ஒரு தலித் இப்படித்தான் தனக்கு விதிக்கப்பட்டுவிட்ட அவல வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டி யிருக்கிறது. கருப்பனின் குணச்சித்திரம் ஒரு ஆர்க்கிடைப் ஒரு விதி விலக்காக, வரவேற்கத்தக்க ஒரு ஆச்சரியமாக, கருப்பன் தலித் சித்தாந்திகளுக்கும் பிடித்துப் போய்விட்டான். அவனுடைய கிண்டல் தான் அவனிடமிருக்கும் பலமான ஆயுதமும். அரசியல் போராட்டத்துக்கான ஆயுதம். தன் எதிரிகளை முறியடிக்கும் ரகசிய ஆயுதம். என்று தலித் சித்தாந்திகள் மறுபடியும் ஒரு விதி விலக்காக சரியாகச் சொல்கிறார்கள். நிறைய தலித் எழுத்துக்களில் கருப்பன் என்னும் ஆர்க்கிடைப்பை வேறு வேறு பெயர்களில், சற்று மாறிய சாயல்களில் சற்று மாறிய குணச் சித்திரத்தில் காணலாம்,. ஆனால் எல்லாரும் கருப்பன்கள் தாம்.

பூமணியும் கூட மிக அமைதியான, சாதுவான, எதற்கும் கவலைப் படாத, மனிதர். தலித் முகாம்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் எனபதற்கெல்லாம் அவர் கவலைப் படுவதில்லை. பதிலும் சொல்வதில்லை. ஆனால் பூமணியை யாரும் அலட்சியம் செய்துவிட முடியாது. கொஞ்சம் வேண்டா வெறுப்புடன் தான், தவிர்க்கமுடியாது, அவரை அங்கீகரிக்கிறார்கள் சித்தாந்திகளும். ஆனால் பூமணிக்குரிய அளவில் அல்ல, முழுமையாகவும் அல்ல.

சோ தருமனும் அப்படித்தான். அவருடைய ஆரம்ப நாட்கள் தீப்பெட்டி, பட்டாசு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சொற்ப சம்பளத்துக்கு நாள் முழுதும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் சிறுவர்களிடையே கழிந்தன. அச்சிறுவர்களீண் ஏழ்மை சுமத்திய வாழ்க்கை அது. சோ. தருமனின் நசுக்கம் என்ற சிறு கதை இச்சிறுவர்கள் ஒரு இரவில் பட்டாசு வெடித்துச் சாவதைச் சொல்லும் சிறுகதை கதா பரிசு பெற்று மிகப் பரவலான கவனம் பெற்றது. அடுத்ததாக அவரது நாவல் தூர்வை நம் நினைவுகள் மறந்த ஒரு பழங்காலத்திய தலித் விவசாயிகளின் வாழ்க்கையைச் சொல்வது. வாய் மொழி மரபில் கதை சொல்வது போல, துண்டு துண்டான காட்சிகளையும், சம்பவங்களையும் பாத்திரங்களையும் நூல் கோர்த்தாற்போல் தருமன் அக்கால வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறார். நம் பெரியோர்களிடம் கேட்கும் வாய்மொழி மரபு கதை போலவே இதுவும் ஒளிவு மறைவு, பூடகமாகச் சொல்வதை பச்சையாகவும் வெளிப்படையாகவும் எவ்வித தயக்கமுமின்றி சொல்லிச் செல்கிறார் தருமன். அதுவே அந்த வாழ்க்கையின் வண்ணத்தையும் சுவாரஸ்யத்தையும் கூட்டிச் சொல்கிறது. பூமணியைப் போலவே சோ தருமனும் தலித் லேபிளை எவ்வித தயக்கமுமின்றி மறுப்பவர். மறுபடியும் பூமணிக்குச் சொன்னது போலவே சோ தருமனும் எவ்விதத்திலும் ஒதுக்கி விடக் கூடியவரும் இல்லை.

வழக்கமான இடமின்மையையே காரணமாகச் சொல்ல வேண்டும், நான் இந்த மலரில் சேர்க்க விரும்பி ஆனால் சேர்க்க முடியாது போன சில விஷயங்களுக்கு. இக்கட்டுரையின் ஆரம்பத்திலிருந்து நான் சர்ச்சித்திருக்கும் ஆழ்வார்கள், நாயன்மார்கள், குரு பரம்பரைப் பிரபாவம், நந்தன் கதை, பெரிய புராணம் இத்யாதியிலிருந்து சர்ச்சிக்கப்பட்ட பகுதிகளை மேற்கோளாகத் தர விரும்பினேன். புதுமைப் பித்தனும், பாரதியாரும் தலித் பிரசினையை மையமாகக் கொண்டு எழுதிய கதைகளும் என் மனத்தில் இருந்தன. இது மட்டுமல்லாமல், நாடகத் துறையில் தலித் பிரசினையை முன் வைத்து இயங்கும் புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் ஜீவா, முனைவர் குணசேகரனின் நாடகம் பற்றிப் பேசியிருக்கலாம். குணசேகரனின் நாடகத்திலிருந்து சில பகுதிகளைத் தந்திருக்கலாம். அத்தோடு தலித் சிற்பிகளின், ஒவியர்களின் படைப்புகளும் கூட இம்மலரை அலங்கரிக்கச் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன். இவையெல்லாம் சேர்ந்தால் இம்மலர் மிகவும் அளவு மீறிப் பெரிதாகியிருக்கும். எனவே அவையெல்லாம் சாத்தியமாகவில்லை. எது வரை சாத்தியம் என்று ஒரு சமரசத்திற்கு வரவேண்டியதாயிற்று. எது சாத்தியமாயிற்றோ அவை பின் வரும் பக்கங்களில்

Introduction
The Dalit in Tamil Literature – Past and Present – Venkat Swaminathan

Poems
Krishangini – Dalit
Karikalan – A Poem for us, Five Commandments Ruin

Ila Murugu – Poisoned shadows

Imayam – You and I, The Rattle and the Cow that changed hands.

Palamalai – Seeking Advice, Self Respect, Smiling stupidly, Paraveeran

Short stories

Bama – Annaachi

Perumal Murugan – The Mound

Abhimani – The Offering

Vizhi Pa Idaya Vendan – Livelihood

Sundara Pandian – Aarokiasami

Unjai Rajan – Anger

Pavannan – The Well

The Writers Speak

Imayam .- The Dalit issues here

Cho Dharuman – What is said and What ought to have been said

Perumal Murugan – Expression of Distress

Bama – Dalit Literature

Karikalan – For a Time when Distances get less…

T.Palamalai – About Myself and my poetic concerns)

(Indian Literature No. 193 – Sept. Oct. 1999)

Novels ( excerpts )

Imayam – The Mules

Sivakami – Anandaayi

Cho Dharuman- Thoorvai

Poomani – And Then

(Indian Literature No. 201 Jan-Feb, 2001)

(பின் குறிப்பு):

தலித் எழுத்தாளர்கள் தம் அனுபவத்தை எழுதுவது தான் தலித் இலக்கியமாககும் மற்றவர்களது மனிதாபிமானும் எட்டி நின்ற பார்வையுமே ஆகும் என்று எழுதியிருந்தேன். இந்த பாகுபாடு ஒரு இடைப்பட்ட கால கட்டத்துக்கே பொருந்துவதாகும். பின்னர் தலித் என்ற அடைமொழி அழிந்து பொது இலக்கிய பிரவாஹத்தில் அவ்வெழுத்துக்கள் சேர்ந்து கொள்ளும், அதில் பெருமாள் முருகனும் சோ தருமனும், இலக்கியாசிரியர்களாகவே அடையாளம் காணப்படுவார்கள். இந்த விளக்கத்தை தலித்துகள் எழுதுவது தான் தலித் இலக்கியமா? என்று கட்டுரையின் ஆரம்பத்தில் கேட்டவரகளுக்கு கடைசியில் தரலாம் என்று நினைத்தேன். இலக்கியாசிரியர்கள் தம்மை தலித் என்று எண்ணி எழுதுவதில்லை. அவர்கள் வாழ்க்கை தலித் வாழ்க்கையானதால் அது எழுதப்படுகிறது. அப்படித்தான் சோ தருமன், பூமணி, இமையம் எல்லாம் தம்மை தலித் என்று அடையாளப்படுத்தப் படுவதை விரும்புவதில்லை. – வெங்கட் சாமிநாதன்.

. . . .

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

வெங்கட் சாமிநாதன்



அனேகமாக பஞ்சும் பசியும் என்னும் சிதம்பர ரகுநாதனின் நாவலிலிருந்து தொடங்கும் இடது சாரி சோஷலிஸ யதார்த்த வகை தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் ஏதோ தொழிற்சாலையில் முன் தீர்மானிக்கப்பட்ட ஸ்பெஸிஃக்பிகேஷனுக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் போல, மார்க்சிஸ விமர்சகர்கள் கட்சியின் கொள்கைகளுக்கேற்ப தரும் சட்ட திட்டங்களை சரி வர அனுசரித்து படைக்கப்பட்டவை. அதற்கு கட்சி சார்ந்த விமர்சகர்களே பொறுப்பேற்க வேண்டும். கடைசியில் இந்த உற்பத்திப் பெருக்கத்தில், அதன் ஐம்பது வருடங்களுக்கும் மேல் நீண்ட கால வரலாற்றில் இந்த முற்போக்கு எனப்படும் எழுத்தாளர் சமூகத்தின் எழுத்துக்களில் ஒன்று கூட, திரும்பவும் ஒன்று கூட, இலக்கியம் என்று சொல்லத்தக்க குணம் கொண்டவையாக இருக்கவில்லை.

ஆனால் தலித் எழுத்துக்களின் சமாசாரம் வேறாகத்தான் இருந்துள்ளது. இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை, படித்த இளம் தலைமுறையைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்கள் தலித் வாழ்க்கையின் அவஸ்தைகளையும் அவதிகளையும் அன்றாடம் எதிர்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்த வாழ்க்கையின் கசப்பு தான் அவர்கள் எழுதும் அனுபவமாக இருக்கிறது. இதற்கு நேர் எதிராக முற்போக்கு எழுத்தாளர்கள் பாட்டாளிகளின் விவசாயிகளின் அன்றாடப் பாடை அறிவார்களோ இல்லையோ அது அவர்கள் எழுத்துக்கு சம்பந்தமில்லாத விஷயம். அவர்கள் எழுதுவது கட்சியின் தாக்கீதுகளை மார்க்சிஸ்ட் விமர்சகர்கள் மூலம் கேட்டு அதற்கேற்ப கதைகளையும் மனிதர்களையும் அவர்கள் உணர்வுகளையும் வடிவமைத்துக்கொள்பவரகள். அவர்கள் எழுத்துக்கும் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்க்கைக்கும் எந்த உறவு இருந்ததில்லை. ஆனால் தலித் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் தலித் அவதிகள், தலித் இலக்கிய சித்தாந்திகள் வரையரைத்துக்கொடுப்பது போலிருப்பதில்லை. இந்த அடிப்படை அணுகலில் தான், ஆரம்பம் தொட்டு நேற்று வரை நாம் காணும் சோஷலிஸ யதார்த்த வகை எழுத்தாளர்களும் திராவிட கழகங்கள் சார்ந்த எழுத்தாளர்களும் கட்சிக் கொள்கைகள் சார்ந்து எழுதுபவர்களாகவும், , தலித் எழுத்தாளர்கள் எதிர்ப்படும் வாழ்க்கை சார்ந்து எழுதுபவர்களாகவும் வேறுபடுகிறார்கள். சித்தாந்திகளோ தம் அரசியல் பார்வைகளை, ஆங்கிலத்திலிருந்து இன்னும் மற்ற மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப்படும் கொள்கைப் பிரகடனங்களிலிருந்து பெறுகிறார்கள்.

தலித் எழுத்தாளர்கள் நிச்சயமாக இன்றைய தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துள்ளார்கள். இது காறும் தமிழ் இலக்கியத்தில் பதிவு பெறாத உலகை, வாழ்க்கையை, அனுபவங்களை அவர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்தின் எல்லைக்குள் கொணர்ந்திருக்கிறார்கள். தலித் அல்லாதவர்கள் சிலர் சில எழுதியிருக்கிறார்கள் என்றால், அவை தலித் எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் உக்கிரத்தில், விவரப் பெருக்கத்தில், நேர்முக நெருக்கத்தில் இல்லை என்று சொல்ல வேண்டும். அவர்களின் மொழிக்கு ஒரு வண்ணம் உண்டு. நேரடித் தன்மை உண்டு. ஒரு உயிர்ப்பும், தாக்க வலுவும் உண்டு. அவை இதுகாறும் வாழ்க்கை யில் காணப்பட்டாலும், எழுத்தில் பதிவாகியிருக்கவில்லை

இப்பதிவுகளை முதலில் பூமணிதான் எழுபதுகளில் தொடங்கி வைத்தார்.. திரும்பவும் பூமணிக்கு இது ஒரு புதிய பாதையாக இருக்கவில்லை. இப்படி ஒரு வட்டத்தின் மொழியைக் கையாள்வது என்பது அவரது கண்டு பிடிப்பும் அல்ல. அவருக்கு முன் பி.ராஜம் அய்யரும், புதுமைப் பித்தனும் அவரவர் உலகின் மொழியைக் கையாண்டனர்,. பூமணி அந்த இழையைப் பற்றிக் கொண்டு தம் உலகின் அனுபவங்களின் மொழியைப் பதிவு செய்தார். இது காறும் தலித்துகளுக்கு தம் அவஸ்தைகள, தாம் அனுபவிக்கும் அவலங்களைச் சொல்ல ஒரு குரல் கிடைக்காதிருந்தது. பூமணியின் குரல் அந்த முதல் குரலாயிற்று

தொன்னூறுகளில் பெண்ணிய பிரசினைகளிலும் தலித் பிரசினைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த பாமா, எழுத்துலகிற்கு வருகிறார். அவர் கிறித்துவ கன்னிமாடங்களிலும் கூட கடைபிடிக்கப்படும் தீண்டாமை.யை நேரில் கண்டு அனுபவித்த அதிர்ச்சி அடைகிறார். ஏனெனில் கிறுத்துவ மடாலயங்கள் இந்து மதத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுதலை அளிப்பதாகச் சொல்லியே தாழ்த்தப்பட்ட மக்களை கிருத்த்துவத்திற்கு மதம் மாற பிரசாரம் செய்பவர்கள். பிரசாரம் ஒன்றும் நடைமுறை வேறாகவும் இருக்கும் நிலை ஏதேதோ கனவுகளுடன் உள்ளே நுழைகிறவர்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்படும்.. பாமா கிருத்துவ கன்னிமாடத்தில் தன் அனுபவங்களை சுயசரிதமாக கருக்கு என்னும் தலைப்பில் எழுதுகிறார். அதிலிருந்து ஒரு சில பகுதிகளை இங்கு தரலாம் என்று நினைத்தேன். ஆனால் காபிரைட் பிரசினைகள் இருப்பதாக பாமா சொல்கிறார். பாமாவின் கருக்கு இரண்டு விஷயங்களில் தலித் இலக்கிய சித்தாந்திகளின் கடுமையான பார்வைக்கும் கண்டனத்துக்கும் இலக்காகியிருக்க வேண்டும். சித்தாந்த காரனங்கள் பல. ஒன்று தீண்டாமை இந்து மதத்தில் மட்டுமே காணப்படுவது. மேலும் அதற்கு குற்றம் சாட்டப்பட வேண்டி யவர்கள் பார்ப்பனர்களே. இவை இரண்டும் சித்தாந்தங்கள். இரண்டாவது கிறித்துவத்திற்கு மதம் மாறிய பின்னரும் அங்கும் தீண்டாமை சர்ச்சுகளின் அனுமதியுடன் மேல் சாதி ஹிந்துக்களாக இருந்து கிறுத்துவத்திலும் தம் மேல்சாதி பழக்கங்களைக் கடைப்பிடிப்பவர்களின் வற்புறுத்தலால் தொடர்கிறது எந்த வித விக்கினமும் இல்லாமல் என்ற நிதர்சன உண்மை. இருப்பினும் அதை ஒரு கிறுத்துவர் வெளி உலகம் அறியச் செய்வது என்பது சர்ச்சும் ஏற்க இயலாத ஒன்று.
பார்ப்பனீயத்துக்கு எதிரான போராட்டத்திற்கு அணி திரட்டும் தலித் இலக்கிய சித்தாந்திகளுக்கு கிறித்துவ ஸ்தாபனங்களை அதன் உள் ரகசியங்களை வெளிப்படுத்தி விரோதித்துக் கொள்வது எப்படி ஏற்புடைய செயலாகும்?. இருப்பினும், சித்தாந்திகள் பாமாவைக் கண்டிப்பதற்கு பதிலாக கனிவு நிறைந்த கண்களோடு தான் பார்க்கிறார்கள். பாமா தன் பாட்டியின் பார்வையில் சொல்லும் தலித் வாழ்க்கையையும் எழுதியிருக்கிறார் சங்கதி என்னும் நூலில்

அண்ணாச்சி என்னும் சிறு கதையில் பாமா மிகுந்த ஹாஸ்ய உணர்வோடு, ஹாஸ்யமே எப்படி ஒரு சதிகார வேலையைச் செய்யக்கூடும் என்று சொல்வதாகத் தோன்றுகிறது. பெருமாள் முருகனின் ஏறு வெயில் என்னும் சிறு நாவலிலிருந்தும் சில பகுதிகளை இங்கு கொடுத்திருக்கவேண்டும். வெகு நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்த கவுண்டர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான பந்தங்கள், கால மாற்றத்தில், வாழ்க்கையின் கதி மாற, வெவ்வேறு நிலைகளில் அப்பந்தங்கள் அறுபடுவதைத் தான் ஏறு வெயில் சொல்கிறது. ஆனால் ஏறு வெயில் நாவலில் வரும் பாத்திரங்களின் பேச்சை, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது அவ்வளவு சுலபமில்லை. எனவே மேடு என்னும் அவரது சிறு கதை இங்கு தரப்படுகிறது. வயலில் வேலை செய்யும் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் பராமரிப்பில் ஒரு பெண் குழந்தை வளர்கிறது. ஆனால் பல வருடங்களுக்குப் பின் எதிர்பாராது சந்திக்கும் போது இருவரும் அன்னியப்பட்டுப் போகிறார்கள் இப்போது பெரியவளாக வளர்ந்து விட்ட பெண், தன்னை வளர்த்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்ணைப் பார்த்ததும் பழகி அறிந்த புன்னகைக்குக்கூட தாழ்த்தப்பட்ட வகுப்பினள் தகுதி அற்றவளாகிவிடுகிறாள். மனித உணர்வுகள் அறவே வற்றிப் போகும் நிலை தான். தலித் மக்கள் இப்படியான அவமானங்களை மௌனமாகத்தான் சகித்துக்கொண்டு வாழவேண்டி வருகிறது. பெருமாள் முருகன் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை. ஆனால் தலித் வாழ்க்கை அனுபவம் என்ன வென்பதை எவ்வளவு நெருக்கமாக உணர முடியுமோ எவ்வளவுக்கு ஒரு தலித் எழுதுதல் சாத்தியமோ அவ்வளவு நெருக்கத்தை தன் எழுத்தில் சாதித்து விடுகிறார்.. அது தான் எழுத்தைக் கலையாக்கும் அனுபவம்.

அபிமானி, விழி. பா.இதயவேந்தன், உஞ்சை ராஜன் எல்லாம் தலித் வகுப்பில் பிறந்தவர்கள். அவர்கள் தாம் நேரில் கண்ட, தாமும் பங்கு கொண்ட அனுபவங்களைத் தான் எழுதுகிறார்கள். இவர்கள் எழுத்தில் காணும் சொற்சிக்கனமும், வெளிப்பாட்டு வீர்யமும் அவர்களது எழுத்து பெற்றுள்ள தேர்ச்சியைச் சொல்கிறது. இந்தத் தேர்ச்சி அவர்களுக்கு முன்னோடியாக இருந்த இலக்கியாசிரியர்களிடமிருந்து கொடையாகப் பெற்றது. அந்த முன்னோடிகளைத் தான் அவர்கள் மேல்தட்டு வகுப்பினராக இருந்த காரணத்தால் இத்தலைமுறை தலித்துகள் நிராகரிப்பதும். உஞ்சை ராஜனின் சீற்றம் என்னும் கதையை நான் விசேஷமாகக் குறிப்பிட வேண்டும். அடக்கி வைத்திருந்த கோபம் எல்லாம் கொதித்தெழும்போது அது வன்முறையில் வெடித்து வெளிக்கிளம்புவதை அக் சீற்றம் கதை சொல்கிறது. விழி. பா. இதயவேந்தனின் கதையில் வரும் பவுனுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினள் தான். அவள் சக்கிலியர்கள் செய்யும் வேலையைச் செய்ய மறுக்கிறாள். மறு பேச்சுக்கே அதில் இடமில்லை. ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தவள் இன்னொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினளைத் தனக்கு சமமாகக் கொள்ள மறுக்கிறாள். அவர்களுக்குள்ளேயே சாதி பேதங்கள், நான் உயர்ந்தவள், நீ தாழ்ந்தவள் என்னும் பாகுபாடுகள் மிக தீவிரத்தோடு பார்க்கப்படுகின்றன. இதையெல்லாம் சொல்வதா வேண்டாமா என்றெல்லாம் விழி பா. இதயவேந்தன் யோசிப்பதில்லை. நடக்கிற உண்மைதானே. சொல்லித் தான் ஆக வேண்டும் என்று சொல்லி விடுகிறார். இதை எப்படி தலித் இலக்கிய சித்தாந்திகள் சிரித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?. ஆனால் ஆச்சரியம். அவர்கள் என்ன காரணத்தாலோ இதய வேந்தனை பார்க்காதது போன்ற பாவனையில் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு விடுகிறார்கள்.

பாவண்ணன் தலித் இல்லை. அதே போல் பேராசிரியர் பழமலையும் தலித் இல்லை தான். ஆனால் தலித் முகாமுக்குள்ளிருந்து இவர்களை யாரும் இதுவரை உரிமையில்லாது உள்ளே நுழைந்து ஆக்கிரமித்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டி வெளித்தள்ளவில்லை. இவர்களும் தங்களை தலித் முகாமைச் சேர்ந்தவர்களாகச் சொல்லிக்கொள்வதில்லை. எப்படியோ இங்கும் இருக்கிறார்கள் அங்கும் இருக்கிறார்கள். எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனைப் போல. பாவண்ணன் நிறைய எழுதிக் குவிப்பவர். அவர் தன் பிராந்தியத்தில் வழங்கும் கதையைப் பயன்படுத்திக்கொள்கிறார் என்று நினைக்கிறேன். பழமலையும் தன் கவிதைக்கு இந்த வரலாற்றை[ப் பயன் படுத்திக் கொள்கிறார்./ பழமலையின் கவிதைகள் தனி ரகமானவை. வசனம் போலவே எழுதப்படுபவை. அத்தோடு உரையாடல் வடிவிலும். அமைந்தவை. எப்படியோ அவை கவிதையாக இயக்கம் கொண்டு விடுகின்றன. அவரது கவிதைகள் அவருக்கே உரியவை. ஒரு ப்ராண்ட் தரத்தையும் பெற்று அவருக்கு புகழையும் சம்பாதித்துக் கொடுப்பதில் வெற்றி பெற்றுள்ளவை அவர் கவிதைகள்.. இவ்விருவருடைய எழுத்துக்கள் தலித் முகாமில் வரவேற்பு பெற்றுள்ளன எவ்வித தடையுமின்றி.. பாக்கியம் செய்தவர்கள் தான்.

தலித் எழுத்து பற்றிய இச்சிறப்பு இதழுக்கான விஷயங்களை நான் சேகரித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு தலித் சித்தாந்தி-எழுத்தாளர்-தலித் இயக்கத்தவர், யார் யார் உண்மையில் தலித் எழுத்தாளர்கள், யார் யார் அங்கீகாரமின்றி தலித் முகாமுக்குள் நுழைந்தவர்கள் என்று எனக்கு தரம் பிரித்துக் கொடுத்து உதவ முன் வந்தார். எனக்கு ஆச்சரியமாகவும் திகைப்பூட்டுவதாகவும் இருந்தது நான் கேட்காது வரவிருந்த இந்த உதவி. இதுவே அவர்கள் உச்ச குரலில் கோஷமிட்டு எதிர்த்துப் போராடும் சாதி பாகுபாடு பார்க்கும் மனப் பானமையின் வெளிப்பாடு இல்லையென்றால் வேறு என்னவென்று இதைச் சொல்வது?

துரதிர்ஷ்டவசமாக, இடமின்மை காரணமாக இங்கு பிரதிநிதித்வம் பெறாத ஒரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் கிறிஸ்துவ குருமாராக நகரமுமில்லாத, கிராமமுமில்லாத இடைப்பட்ட ஒரு சின்ன டவுனின் சர்ச்சில் பொறுப்பேற்று இருப்பவர். அவரே ஒரு தனி ரக மனிதர் தான். அவர் ஒரு தலித் இல்லாத போதிலும் தலித்துகளின் முன்னேற்றத்துக்காகவே மிகுந்த முனைப்போடு செயல்படுபவர். சமூக முன்னேற்ற செயல்களுக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் IDEAS .என்னும் ஒரு அமைப்பை நடத்தி வருபவர். அவர் எத்தகைய காரியங்களில் ஈடுபட்டுள்ளார், உயர் ஜாதி ஹிந்துக்கள் கிருத்துவராக மதம் மாறிய பின்னும் தம் உயர் ஜாதி அந்தஸ்தை விட்டுவிட மனமில்லது ஜாதி பேதங்களை வந்த இடத்திலும், பேணுவதில் தீவிரமாக இருப்பதையும் அதற்கு சர்ச்சும் உதவியாக இருப்பதையும் கண்டு அதற்கு எதிரான தன் போராட்டங்களையும் அதில் தான் எதிர்கொண்ட கஷ்டங்களையும் பற்றிய வரலாற்றை ஒரு கற்பனைப் புனைவாக யாத்திரை என்ற தலைப்பில் எழுதி உள்ளார். இவர் தான் பாமா தன் அனுபவங்களை எழுத தூண்டுதலாக இருந்தவரும்.

சிவகாமி, தலித் எழுத்தாளர் சமூகத்தில் ஒளி வீசும் தாரகை என்று சொல்லலாம் . அத்தோடு இன்றைய தமிழ் இலக்கியத்தின் பிரதான பிரவாஹத்திலும் சேர்கிறவர். அவர் தலித் எழுத்தாளர் மட்டுமில்லை. பெண்ணிய வாதி மட்டும் கூட இல்லை. தன்னைச் சுற்றி நடப்பவற்றை, வாழ்க்கையை ஒரு தேர்ச்சியுடன் கூர்ந்து கவனிப்பவர். திரும்பவும் சொல்ல வேண்டும், யாரிடமிருந்தும் பெறப்பட்ட முன் தீர்மானிக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கையின் எப்பகுதியை, எந்த மனிதர்களைத் தான் எழுதத் தேர்ந்துகொள்ளும் வகையினர் இல்லை சிவகாமி. பழைய கழிதல் என்னும் தன் முதல் நாவலுக்கு அவர் கொடுத்த முடிவில் இத்தகைய தேர்தலின் நிழல் படிந்திருந்தாலும், விரைவில் அவர் தன்னைத் திருத்திக் கொண்டுள்ளார். அவருடைய அனுபவத்தில் கண்ட வாழ்க்கையின் கூறுகளை எழுதுவதில் அவர் தயக்கம் காட்டுவதில்லை. அவர் நாவல்களில் வெளிப்படும் வாழ்க்கையும் நமக்கு வழக்கமாகச் சொல்லப்படும் சட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட வாழ்க்கையும் அல்ல. அவர் நாவல்களில் வரும் முக்கிய பாத்திரங்கள் பொருளாதார வசதிகளோடு முன்னேறியவர்கள். அதிகார அரண்களின் தாழ்வாரங்களில் தம் அக்கறைகளுக்காக வலை வீசுபவர்கள். இதற்கான எல்லா தந்திரோபாயங்களையும் நன்கு அறிந்தவர்கள். அகங்காரம் கொண்டவரகள். எத்தகைய தவறான வழிகளுக்கும் அஞ்சாதவர்கள். மற்றவர்களைத் தம் வழிக்கு வளைத்துக் கொள்ளும் வழி முறைகளைத் தெரிந்தவர்கள். தம் பலத்தை முரட்டுத்தனமாக வெளிக்கட்டுவதில் ஒரு குரூர சந்தோஷம் அடைபவர்கள். தம் வசத்தில் விழும் எந்தப் பெண்ணையும் தம் இச்சைக்கு இரையாக்கத் தயங்காதவர்கள். இலக்கியம் தம் அரசியலுக்கான ஆயுதம் என்று நினைக்கும் சித்தாந்திகளுக்கு சிவகாமியின் எழுத்துக்கள் எந்த விதத்திலும் சிறிதளவு கூட பயன் தராதவை தான். இருந்தாலும், தலித் வகுப்பைச் சார்ந்த எழுத்தாளராயிற்றே அவர்! அவர் தம் கட்டுக்குள் அடங்காது திமிரும் போது அவரைக் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தானே கையாளவேண்டும்!. அதிலும் அவர் ஒரு பெண்ணாகவும், ஐ. ஏ. எஸ் அதிகாரியாகவும் இருந்துவிடும் பக்ஷத்தில்!. எந்த சமயமானாலும் யாரைப் பார்த்தாலும் அடிக்க தடியெடுத்துவிடுவது விவேகமான காரியமா என்ன? .

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)

This entry is part [part not set] of 42 in the series 20110327_Issue

வெங்கட் சாமிநாதன்


ஆனால் தொன்னூறுகளில் தான் நிறைய சிறுகதைக் காரர்களும், நாவலாசிரியர்களும் கவிஞர்களும் தலித் சமூகத்திலிருந்து வெளி வர ஆரம்பித்தார்கள். அவர்கள் தம் அணிவகுப்பிற்கு ஏந்தி வந்த தலித் கொடி அவர்கள் தோன்றிய காலகட்டத்தில் வீசிய தலித் அரசியல் காற்றில் பலமாகவே படபடக்கத் தொடங்கியது. கொஞ்சம் உறக்க நிலையிலேயே எப்போதும் சுகம் காணும் தமிழ் இலக்கிய சமூகத்தின் கண்கள் திறக்கவே, தலித் எழுத்தாளர்களும் தமிழ் சமூகத்தின் கவனத்தைப் பெறத் தொடங்கினர். புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கம் அற்ற தமிழ் பிரசுர உலகில், தலித் இலக்கியங்கள் மற்றவற்றைவிட அதிகமாகவும் வேகமாகவும் விற்பனையாவதாகச் சொல்லப்பட்டது. தலித் பிரசினைகளை எழுப்பவும், அவர்கள் உரிமைக்காக அரசோடு போராடவும், நீதி மன்றத்துக்கு எடுத்துச் சென்று வழக்காடவும் தயாராக பல குழுக்கள் தோன்றின. எந்த பொது மேடை உரையாடலும் தலித் உணர்வுகள் பற்றிய விஷயத்துக்கே இட்டுச் சென்றது. தலித் இலக்கியமே கூட தலித் அரசியலின் நீட்சியாகவே பேசப்பட்டது. தலித் உணர்வுகள், தலித் அழகியல் என்ற பார்வைகள் மேலெழுந்தன. தமிழ் சிந்தனையில் ஒரு சலனம் தொடங்கிவிட்டது தெரிந்தது. அச்சலனம் தொடர்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில், நாம் தலித் எழுத்தாளர்களைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினால், அந்த சிந்தனை, தலித் இலக்கிய உலகில் இயங்கும். தலித் இலக்கிய எழுத்தாளர்கள், தலித் சித்தாந்திகள். என்னும் இரண்டு சக்திகளை நம் பார்வைக்கு முன் வைக்கும். தலித் சித்தாந்திகள் பெரும்பாலும் நேற்று இடது சாரி சித்தாந்திகளாக இருந்தவர்கள். கட்சி கொடுத்த அரசியல் கொள்கை வழி தம் சித்தாந்தங்களை உருவாக்கிக்கொண்டு அதன் வழி இடது சாரி எழுத்தாளர்கள் எப்படி எழுதவேண்டும் என்று பாடம் நடத்தியவரகள். உலகம் முழுதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டைகள் அத்தனையும் இடிந்து சிதிலமாகிப் போகவே, அவர்களுக்குப் போக்கிடம் ஒன்று தேவையாகியிருந்தது. அகதிகளாக வசிப்பிடம் தேடிய அவர்களுக்கு அப்போது கண்முன் தெரிந்த தலித் எழுச்சி வசதியாகிப் போயிற்று. பின் என்ன? தலித்துகளோடு இணைந்தார்கள். தலித்துகளுக்கு தம் காலியான தலைமையையும் அனுபவப்பட்ட சித்தாந்த வழிகாட்டலையும் தரத் தொடங்கினார்கள். அவர்களுக்குத் தான் எந்த சமூகத்தையும் ஒன்றுபடுத்தி, ஒரு அமைப்பையும் ஏற்படுத்தி, அதற்கான சித்தாந்தத்தையும் கொள்கைகளையும் உருவாக்கி வழிகாட்ட எல்லாம் வேண்டிய அனுபவம் அவர்களிடம் தயாராக இருக்கிறதே. குருவாவதற்கு வேண்டிய தகுதியும் அனுபவமும் இருக்கிறது எல்லாம் இருந்தும் அவர்களுக்கு சிஷ்ய கோடிகள் வேண்டாமா? முன்னால் பாட்டாளி வர்க்க உணர்வுகளை வழிப்படுத்தியது போல இப்போது தலித் உணர்வுகளை வழிப்படுத்த வேண்டாமா? லெனினே உருவாக்கித் தந்த சித்தாந்தம் தானே, பாட்டாளிகளின் வர்க்கத்துக்கு பாட்டாளி வர்க்க உணர்வு என்ன என்பதை அறிவுறுத்தி. அதைப் பாட்டாளிகளின் மனத்தில் விதைப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் தலையாய கடமையாகும். இல்லையெனில் பாட்டாளி வர்க்க உணர்வு என்பது பாட்டாளிகளுக்குத் தெரிய வாய்ப்பு ஏது? ஆக அந்தப் பெரிய பொறுப்பை பாட்டாளிகளிடமா விட்டுவிடுவது? கூடாது. லெனின் சொன்னபடி,. அதைக் கட்சிதான் ஏற்கவேண்டும். அந்த அனுபவத்தை ஒட்டித்தான், இடது சாரி சித்தாந்திகள் புதிதாக தம்மை தலித் சித்தாந்திகளாக தாமே முடிசூட்டிக் கொண்டு, தலித் எழுத்தாளர்களுக்கு. தலித் இலக்கியம் எப்படி எழுதப்படவேண்டும் என வகுப்பெடுக்கத் தொடங்கினார்கள் அதற்கான சட்ட திட்டங்களை (do’s and don’ts) தாமே எழுதி நிர்வகிக்கத் தொடங்கினார்கள். அதன்படி தலித் இலக்கியத்தின் முதலும் அடிப்படியானதுமான சட்டம், தலித் எழுத்தாளர்கள் எழுதுவதே தலித் இலக்கியமாகும். இதில் என்ன தவறு இருக்க முடியும்?. நியாயமானது தான். சரி. ஆனால் இதற்கு அடுத்த படியாக, அவர்கள் இயற்றிய சட்டத்தின் இரண்டாம் விதி, “எது தலித் இலக்கியமாகும்?” இங்கு தான் சிக்கல் எழுகிறது.
நான் இதை விளக்க ஞானி என்னும் மார்க்ஸிஸ்ட் இலக்கிய விமர்சகர் சொல்வதையே மேற்கோள் காட்ட வேண்டும்

ஞானி வெகு நீண்ட காலமாக இடது சாரி இலக்கியத்தில் தோய்ந்தவர் அவற்றின் சித்தாந்தியாக இருந்தவர். ஆனால், சமீப காலமாக அவர் மாஜி இடது சாரி சித்தாந்திகள், எழுத்தாளர்களின் காலாவதியாகிப்போன சோஷலிஸ் யதார்த்த வாதங்களை மிகக் கடுமையாகச் சாடி வருகிறார். ஆயினும் இன்னம் அவர் தன்னை இடது சாரியாகவே அடையாளம் காட்டிக்கொள்கிறவர். இனி அவரே பேசட்டும்:

“தலித் சமூகத்தை அரசியல் அரங்கில். பார்ப்பனர் மற்றும் உயர் சாதியினருக்கு எதிரான அரசியல் அரங்கில் முன் நிறுத்துவது அவர்கள் (கட்சி சார்ந்த மார்க்ஸீயர்கள்} நோக்கம். படித்த தலித் இளைஞர்களை இயக்கத்தினுள் திரட்ட இவர்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள். தலித் இலக்கியத்தை தலித் தான் படைக்க முடியும் என்கிறார்கள். தலித் இலக்கியத்தில் அழகியல் பார்க்க வேண்டியதில்லை என்கிறார்கள். அறம், நேர்மை, தியாகம், முதலிய பண்புகளைப் பார்ப்பனீய பண்புகள் எனக் கூறுகிறார்கள். தலித் இலக்கியத்திடம் குறை காண்பவர்களைச் சாடுகிறார்கள். தலித் அல்லாதவர்கள் எழுதியவை, எழுதுகிறவை தலித் இலக்கியமாக முடியாது என்கிறார்கள்.”

(ஞானி – தலித்தியம் ப.30 காவ்யா பிரசுரம் 1996)

சாதீய அரசியலை நோக்கமாகக் கொண்டு தலித் இலக்கியக் கோட்பாடு வகுப்பவர்கள், தமிழகச் சூழலில் மேலே குறிப்பபிட்ட மார்க்சீயரின் இலக்கியக் கோட்பாட்டின் தொடர்ச்சியான சற்று வேறுபட்ட பதிவுதான் என்று இதைக் கருத முடியும். இவர்கள் சாதீய சமுதாயத்தினுள் தம்மைத் திணித்தவர்கள் என பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்துகின்?றனர். தலித் மக்களிடம் காணப்படும் குண திரிபுகள் உயர்சாதியினர் தமக்குள் பதித்தவை என்று கூறுகிறார்கள். தமக்கு மேற்பட்ட சாதியினரைப் பழித்துக் கூறுவதைத் தங்களுக்குத் தேவையான குணம் என்று கூறு கிறார்கள். வசை மொழிகள் மூலம் தமக்குள் பதிந்துள்ள கோப தாபங்களை விடுவித்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள்.” பழையன கழிதலும் (சிவகாமி என்னும் தலித் எழுத்தாளரின்) நாவலில் கவுண்டர் சமூக திமிர்த்தனத்துக்கு எதிர்வினையாக காத்தமுத்து (தலித்) தன் முனைப்போடு நடந்து கொள்கிறார். தன் எல்லைக்குள் வரும் மூன்றாவது பெண்ணையும் தனக்கு உடமையாக்கிக் கொள்கிறார். படித்த இவருடைய மகள் கௌரி தன் தந்தையிடம் குற்றம் காண்கிறாள். காத்தமுத்துவிடம் உள்ள குணத்திரிபைச் சிவகாமி வெளிப்படுத்துகிறார். ஆனால் தலித் விமர்சகர் காத்தமுத்துவிடம் குணம் காண்கிறார். இவ்வாறு சிவகாமி பார்ப்பது தலித் சாதிக்குள் தோன்றிய படித்த நடுத்தர வர்க்கத்தின் போக்கு என்கிறார் விமர்சகர். கன்னியர் மடத்தில் பெண்கள் காமத்துக்கு இரையாவதை அல்லது இரையாக்கப் படுவதை(”கலக்கல்” விடிவெள்ளி} மறைத்திருக்க வேண்டும் என்று இந்தக் கோட்பாட்டாளர் கூறுகிறார். இவரும் இன்னும் சிலரும் தலித் மக்களிடம் காணப்படும் சில கலாச்சாரக் கூறுகளை எதிர் கலாசாரக் கூறுகள் என கூறுகின்றனர்.”

( ஞானி, தலித்தியம் ப.29-30)

(குறிப்புகள் ;

(1) சிவகாமி, ஒரு தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி.
(2) தடித்த எழுத்துக்கள் சொல்லப்பட்டவைக்கு அழுத்தம் தர என்னால் இடப்பட்டவை}
(3) தலித்தியம்: தொகுப்பு, காவ்யா பிரசுரம், 1996)

”கட்சி சார்ந்த மார்க்சீயர் முன்பு எவ்வாறு தம் “எதிரிகளிடம்” மூர்க்கத்தனமாக நடந்துகொண்டார்களோ அதேபோல் இவர்களும் எதிரிகளைக் கண்டுபிடித்து மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார்கள். சிவகாமி நம்மவர் என்பதால் அடக்கமாக விமர்சனம் செய்கிறார்கள். இமயத்தை வெளியில் வைத்து சாடுகிறார்கள். அறிவழகன் போன்றவர் தம் வட்டத்தில் இல்லையென்பதால் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். டேனியல் வர்க்கப் பார்வையின் எல்லைக்குள் வைத்து தலித் மக்கள் வாழ்வையும் போராட்டத்தையும் எழுதினார். ஆனால் அவரைத் தலித் அரசியல் எல்லைக்குள் வைத்து சுருக்கப் பார்க்கிறார்கள் .பூமணியின் ”பிறகு” இவர்களின் பார்வை எல்லைக்குள் சங்கடத் தோடுதான் வருகிறது. ஆனால் அவரின் நைவேத்தியம் இவர்களின் பார்வைக்கு வெளியே நிற்கிறது. “புதிய தரிசனங்கள்” (பொன்னீலன்) இவர்கள் பார்வைக்குள் வருவதில்லை.
(மே.கு. பக்கம் 30)

மேற்கோள்கள் சற்று நீண்டவை தான். ஆனால் தவிர்க்க முடியாதவை. ஏனெனில், ஞானி ஒரு காலத்தில் அதிகார பூர்வமான மூத்த மார்க்ஸீய விமர்சகராக இருந்தவர்.. இப்போது தம்மை அதிகார பூர்வமான தலித் இலக்கிய விமர்சகராக முடிசூட்டிக் கொண்டுள்ளவர்கள் ஒரு காலத்தில் எத்தகைய மார்க்சீய சித்தாந்திகளாக இருந்தார்களோ அந்த வகையைச் சேர்ந்தவராகத்தான் ஞானியும் ஒரு காலத்தில் இருந்தவர். இப்போதும் அவர் தம்மை மார்க்சீயராகத் தான் கூறிக்கொள்கிறார் என்ற போதிலும், பழைய கட்சிக் கொள்கைக் கட்டுப்பட்டின் இறுக்கத்திலிருந்து இப்போது தன்னை விலக்கிக் கொண்டுள்ளார்.
ஆகவே அவரை முழுதும் மேற்கோள் காட்டுவது அதிகார பூர்வத்துக்கும், நம்பகத்தன்மைக்கும் முத்திரை பதிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை கொத்தளங்கள் ரஷ்யாவிலும் ஏன் சீனாவிலும் கூட இடிந்து தரைமட்டமாகிவிட்ட நிலையில் ஞானி சுதந்திரமாகச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்,.

ஞானி எடுத்துக் காட்டியிருப்பதைப் போல, தலித் சித்தாந்திகள் தம் கோட்பாட்டிலும் அதன் பிரயோகத்திலும் முன்னுக்குப் பின் முரணாகவே செயல்படுகிறார்கள். இமையத்தை அவர்கள் ஏற்பதில்லை. ஏன்? இமையம் தலித் சமூகத்துக்குள்ளேயே பேணப்படும் வகுப்புப் பிரிவினைகளையும் அதன் ஏற்றத்தாழ்வுகளையும், அவர்கள் தமக்குள் பத்திரமாகப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளும் தீண்டாமையையும் வெளிப்படுத்துகிறார். மறைப்பதில்லை.. இம் மாதிரியான தலித்துகள் செய்துகொள்ளும் சுய விமர்சனம், உயர்சாதியினருக்கும் பார்ப்பனீயத்துக்கும் எதிராக அவர்கள் கோஷமிட்டுக்கொண்டிருக்கும் போராட்டத்தை பலவீனப் படுத்திவிடும் என்பது அவர்கள் வாதம். ஆனால் இதே சுய விமர்சனத்தை அவர்கள் அங்கீகரிக்கும் விழி. பா. இதயவேந்தன், அபிமானி போன்ற தலித் எழுத்தாளர்களின் எழுத்திலும் காணும்போது சித்தாந்திகள் வாய் பொத்திக் கொள்கின்றனர். ஏன்? அபிமானி பற்றி ஒரு தலித் சித்தாந்தி எழுதுகிறார்.

”அனைத்துச் சாதிக் கொடுமைகளுக்கும், தீண்டாமைக்கும் காரணமாக விருப்பது பாப்பனீயம் தான் என்று அம்பேத்கர் வெகு தீர்மானமாகச் சொல்லியிருந்தாலும், நாம் கண்முன் காணும் யதார்த்தங்களும், இன்றும் கிராமங்களில் நிலவும் உண்மைகளும், அம்பேத்கரின் வாசகங்களின் ஆழத்தில் புதைந்திருக்கும் உண்மையை அறிந்துகொள்ள தடையாயிருக்கின்றன.. தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் அத்தனைக்கும் பொறுப்பாக இருப்பது பிற்படுத்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் தான். எனவே, தலித்துகளின் அரசியல் போராட்டத்திற்கான உடனடித் தேவை, பிறபடுத்தப்பட்ட சாதியினருக்கு எதிராகப் போராடுவது தான். ஆனால் ,இத்தேவை தான், பிற்படுத்தப் பட்ட சாதி மக்களும், தலித்துகளும், ஒடுக்கப்பட்டோரும், சிறுபான்மை இனத்தவரும், ஒன்று திரண்டு, பார்ப்பனருக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கிக்கொள்வதற்கு தடையாக இருக்கிறது. தலித் அரசியல் பற்றி அம்பேத்கரின் தூரதிருஷ்டிப் பார்வை அளித்த தீர்மானமான முடிவுகளுக்கு எதிராக இந்த வாழ்க்கை எதார்த்தம் நம் பார்வையை மறைத்துக்கொண்டு நிற்கிறது”

(மறுபடியும், தமிழ் மூலத்திலிருந்து நான் மொழிபெயர்த்து வைத்துக் கொண்ட ஆங்கில.ப் பதிவின் தமிழாக்கம் இது – அதன் வாசக குறைகளோடு. கருத்து மாற்றம் இராது என்றே நம்புகிறேன்}

Right from the horse’s mouth அப்படித்தான் இருக்கிறது இந்த மாஜி மார்க்சீய தலித் இலக்கிய சித்தாந்திகளின் தலித் போராட்ட அக்கறைகள். நிலத்தடி யதார்த்தங்கள், வாழ்க்கை உண்மைகள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டுள்ள சித்தாந்தங்களுக்குள் அடைபடுவதற்கு வசதியாக முறுக்கி வளைத்து, ஒடித்து……

விழி பா. இதயவேந்தன், மலம் அள்ளும் சமூகத்தில் பிறந்தவர். இப்போது அவரிடம் கைநிறைய பல்கலைக் கழக பட்டங்கள் கொண்டவர். அவர் ஊர் முனிசிபல் அலுவலகத்தில் பணி செய்பவர். அவருடைய எழுத்துக்கள் காட்டும் உலகமும் உண்மைகளும், தலித் சித்தாந்திகளின் கோட்பாட்டு வாய்ப்பாடுகளை கண்டு கொள்ளாதவை. முற்றிலும் மறுப்பவை. ஆனால் சித்தாந்திகள் அவரை ஒன்றும் சொல்வதில்லை. கிறிஸ்துவ கன்னிமாடங்களில் நடக்கும் ஆபாச நடவடிக்கைகளை பாமா (தலித் கிறித்துவர்) எவ்வித தயக்கமுமின்றி எழுதுகிறார். பாமா அக்கன்னி மாடங்களில் இருந்தவர். ஆனால் அவரையும் சித்தாந்திகள் ஒன்றும் சொல்வதில்லை. பாமா அவர்களுக்கு செல்ல குட்டித் தங்கச்சி.. ஒரு விரல் கூட அவருக்கு எதிராக நீளாது. கடைசியில் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எப்படி விளங்கிக்கொள்வது? நீங்கள் என்ன எழுதினாலும், எப்படி எழுதினாலும், நீங்கள் எந்த குழுவை, வகுப்பைச் சேர்ந்தவர், எந்தக் கட்சியின் ஆள் என்பனவே நம்மாளா இல்லையா,நீங்கள் எழுதியுள்ளது அங்கீகரிக்கப்பட்டு தலித் இலக்கியமாக முத்திரை குத்தப்படுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.

தலித் இலக்கியம் தலித்துகளால் தான் எழுதப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஏனெனில் தலித் அவன் வாழ்க்கையில் பட்ட அவஸ்தைகளையும் துயரங்களின் வலியையும் அவன் தான் எழுதமுடியும். தலித்தாக பிறந்து விட்ட கொடுமையை அதன் அர்த்தத்தை அவன் தான் உணரமுடியும். மற்றவர் எழுதுவதெல்லாம் மனிதாபிமானம் தான். இரக்க சிந்தனைகள் தான். சக மனிதனின் உணர்வுகளை உணரும் சினேக பாவம் தான். தலித் அல்லதவர் ஒரு பார்வையாளன் தான். மூன்றாம் மனிதன் தான். ஆனால் ஒரு தலித்தின் எழுத்து, முன் தீர்மானங்களோடு பிரகடனப் படுத்தப் பட்ட கோட்ப்பாட்டு வாய்பாடுகளுக்கு ஒத்து வராவிட்டால், அவன் வாழ்க்கை கோட்பாடுகளுக்கு பிரதியாக இல்லாவிட்டால்,, ஒரு தலித்திடமும் அதிகார வேட்கையும் மேலாண்மை உணர்வுகளும், மனித விரோத செயல்பாடுகளும் காணப்பட்டால் அதை எழுதுவதும், ஒரு உயர் சாதிக்காரனிடம் மனிதாபி மானமும் தலித்திடம் இரக்க சிந்தனையும் காணப்பட்டால், அந்த எழுத்துக்கள் தலித் இலக்கியமாக சித்தாந்திகளால் ஏற்கப் படுவதில்லை. அந்த தலித் எழுத்தாளரிடம் தலித் இலக்கியம் படைக்கத் தேவையான தலித் பிரக்ஞையும், தலித் நுண்ணுணர்வுகளும் இல்லையென தீர்மானிக்கப் படுகிறது. இனி அவன் செய்ய வேண்டியது யாது? ஒரு தலித் சித்தாந்தியின் அலுவலகம் சென்று அவனிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தலித் இலக்கிய அங்கீகாரத்திற்கான விதி முறைகள் சட்ட திட்டங்கள் என்னென்ன வென்றும், எதெது காணாவிட்டாலும் சொல்லப்பட வேண்டும், எதெது, கண்டாலும் காணாது கண் மூடிக்கொள்ளவேண்டும் என்ற பட்டியல்களையும். கற்று தெளியவேண்டும். தலித் இலக்கியம் படைப்பது என்பது இவ்வளவு கடுமையானதும், சிரமமானதுமான காரியமாக இருக்கும்போது அதை தலித் எழுத்தாளரின் பொறுப்பில் விடுவது என்பது அறியாமை தான். சாத்தியமற்ற காரியம் தான்.

ஒரு மாஜி கம்யூனிஸ்ட் முகாமைச் சேர்ந்தவனும், அவனது பூர்வீக கோட்டைச் சிறை சிதிலமடைந்து அகதியாக வந்துள்ளவன் அவன், கட்சி விதிகளுக்கேற்ப வாழும் மன அமைப்பும் மூளைச் சலவையும் பெற்றவன், அவன் தலித் இலக்கிய முகாம் ஒன்றுக்குள் புகுந்தானானால் அவனிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? தமிழ் நாட்டின் முற்போக்குகள் முகாம் மாறினாலும் வெகு காலமாகப் படிந்த பழக்கங்கள் அவர்களை சுலபத்தில் விடுவதில்லை. அதிலும் உதறக் கடினமானவை, அதிகார ஆசையும் , கட்டளை பெற்றுக் கட்டளையிடும் அதிகாரப் பசி வேட்கையும்.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

வெங்கட் சாமிநாதன்


புதுமைப் பித்தன் (1907 – 1948) போன்ற ஒரு பெரிய கலைஞன், தலித் பிரச்னையை அவர் பார்வைக்கேற்ப வேறு விதமாகத் தான் கையாள்கிறார். அவர் ஏற்கனவே சுப்பிரமணிய பாரதி தன் சந்திரிகையின் கதை என்ற நாவலில் தலித் விடுதலைக்குத் தந்த ஒரு லக்ஷியத் தீர்வைக் {டெபுடி கலெக்டர் கோபாலய்யங்கார் தன் நண்பர் வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் வேலை செய்து வந்த மீனாட்சி மீது காதல் கொண்டு பிரம்ம சமாஜ முறைப்படி கலப்பு மணம் செய்துகொள்கிறார்.) கேலி செய்யும் வகையில் அக்கதையின் பின் நிகழ்வுகள் யதார்த்தத்தில் என்னவாக இருக்கும் என்று சித்தரிக்கிறார். ஊரும் நண்பர்களும் கேலிசெய்கிறர்கள். “போயும் போயும் இவருக்கு ஒரு இடைச்சி தானா கிடைத்தாள்? என்று. படுக்கை அறை மயக்கம் ஏதும் பிரச்சினையைக் கிளப்பாது என்றாலும், அய்யங்காரின் லக்ஷியக் கனவுகளை நிறைவேற்ற இப்படி ஒரு கல்யாணம் செய்து கொண்டால், எழும் பிரச்சினைகள் முதலில் அவர் வீட்டுச் சமையலறையிலிருந்தே தொடங்கும் அதற்கும் முன்னால் தன்னை, மீனாட்சி “சாமி” என்றழைப்பதை முதலில் கவனிக்க வேண்டும்.. சமயலறையிலிருந்து வரும் கறிக்குழம்பு அடுத்த பிரச்சினை. இதையெல்லாம் அவர் சமாளித்து விடுவதாகவும் கடைசியில் மீனாட்சி, கோபாலய்யங்காரை, “ஏ பாப்பான்” என்றும் அவர் மீனாட்சியை “அடி என் எடச்சிறுக்கி” என்று செல்லமாக ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதாகவும் கதையை முடிப்பதும், பாரதியைக் கேலி செய்ய வந்த இந்தக் கதை அதே ஒரு எதிர்மறை லட்சியமாக முடிவதைத் தவிர்க்க முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் புதிய நந்தன் என்னும் இன்னொரு கதையில் வித்தியாசமான இன்னொரு பார்வை தெரிகிறது. இது இருபதாம் நூற்றாண்டு ஆதனூரில் நிகழும் கதை. பழைய ஆதனூர் பண்ணையாரின் இந்தத் தலைமுறையின் பிரதிநிதி ராமநாதன் அவன் தன் கலெக்டர் பதவியை உதறிவிட்டு காந்தியின் விடுதலைப் போராட்டத்திலும் ஐக்கியமாகி, ஹரிஜன விடுதலையிலும் நம்பிக்கை கொண்டு போராடி, ஜெயிலுக்குச் சென்று சிறையிலிருந்து வெளிவந்ததும் கிராமத்துக்குத் திரும்புகிறான். அங்கு பண்ணையில் வேலை செய்யும் ஒரு பறை சாதிப் பெண்ணைப் பார்த்ததும் அவளிடம் அவனுக்கு ஆசை .கொப்பளிக்கிறது சின்ன முதலாளிக்கு தன்னிடம் ஆசை என்பதிலும் அதற்கு இடம் கொடுப்பதிலும் அவளுக்கு சந்தோஷம் தான். என்றாலும், கல்யாணம் என்ற பேச்சுக்கு இடமில்லை அவளைப் பொருத்த வரை. “அதெப்படி முடியும் சாமி” என்று மறுக்கிறாள். அவள் தந்தை கருப்பனுக்கோ இது மகா பாதகமான காரியம். ஐயர் எஜமானுக்கு பறச்சாதிப் பொண்ணு எப்படி ஒத்துப் போகும்?

கருப்பனுக்கு ஒரு மகனும் கூட. பாவாடை. அவனுக்கு படிக்க ஆசை. ஜான் ஐயர் என்னும் வேளாள கிருத்துவர் அவனை முதலில் கிருத்துவனாக்கி, ஜான் தானியேல் என்று நாமகரணம் செய்வித்து பத்தாங்கிளாஸ் வரை படிப்பிக்கிறார். அவனுக்கு ஜான் ஐயரின் மகள் மேரி லில்லியிடம் காதல் பிறக்கிறது. இதை அறிந்த ஜான் ஐயருக்கு வந்த கோபத்தில், “பறக் கழுதை, வீட்டை விட்டு கீழே இறங்கு” என்று அவனை கழுத்தைப் பிடித்து வெளியே துரத்துகிறார். அவர் வேளாளக் கிருத்துவர். அவனோ கிருத்துவனான பறையன். கோபம் கொண்ட ஜான் தேனியேல், ராமசாமிப் பெரியாரின் சுமரியாதை இயக்கத்தில் சேர்ந்து விடுகிறான். தன் தங்கை மேல் ராமநாதன் என்னும் பாப்பானுக்கு ஆசை என்று தெரிந்ததும் அவனுக்கும் ஜான் ஐயருக்கு வந்த மாதிரியே கோபம் வருகிறது. எல்லா ஜாதிக் கொடுமைகளுக்கும் காரணமே இந்த பாப்பார சாதி தானே. அதை எப்படி அவனால் தாங்கிக்கொள்ள முடியும்? அந்தப் பாப்பான் தன் தங்கையை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் தான். ஆனாலும்,. இந்த[ப் பாப்பானுங்கள எப்படி பொறுத்துக்கொள்வது? கடைசியில் புதுமைப் பித்தன் கதை, “இதில் யார் புதிய நந்தன்? என்ற கேள்வியோடு முடிகிறது.

இந்தக் கதைகள் எல்லாம் புதுமைப் பித்தன் எழுதத் தொடங்கிய அவரது இருபதுகளின் பிராயத்தில் எழுதப்பட்டவை. இச்சிறு கதைகள் கலைவடிவில் குறைபட்டனவாகத் தோன்றலாம். ஆனால் அந்த வயதிலேயே, லக்ஷியத்துக்கும் நடைமுறை வாழ்க்கை உண்மைகளுக்கும் இடையேயான பெரிய வெளியையும் முரண்களயும் அவர் அறிந்திருந்தார். அது மட்டுமல்ல, அரசியல் சித்தாந்திகளும் அரசியல் வாதிகளும் சமூகப் பிரசினைகளுக்கு அளிக்கும் வாய்ப்பாட்டுத் தீர்மானங்களின் உணர்ச்சியற்ற வெளிப்பாடுகளையும் அவற்றின் போலித்தனத்தையும், அவை உள்ளீடற்ற பொக்கை என்பதையும் அறியும் பிரக்ஞை அவருக்கு இருந்திருக்கிறது. அப்பிரக்ஞை எழுப்பிய கேள்விகளுக்கு இவ்வளவு ஆண்டுகள் கழிந்த பின்னும் பதில்கள் கிடைத்த பாடில்லை. காலம் மாறியிருக்கிறது தான். மனிதனும் மாறியிருக்கிறான் தான். இருப்பினும்…..யார் புதிய நந்தன்? கட்சிகளும் சித்தாந்திகளும் தரும் வார்ப்புகள் பதில்கள் ஆக மாட்டா..

எண்பதுகளின் பின் பாதியிலிருந்து தான், இன்னும் சரியாகச் சொல்லப் போனால், தொன்னூறுகளின் முன் பாதி வருடங்களில் தான் தலித் எழுத்துக்கள் என ஒரு திட்டமிட்ட செயல்பாட்டின் குரலாக இலக்கிய வெளிப்பாடு வரத் தொடங்கியது., ரொம்பவும் பழைய சமாசாரம் என்றும் சொல்ல முடியாது. சமீபத்திய நிக்ழ்வு என்றும் சொல்ல முடியாது. இலக்கிய வரலாறு என்று பார்த்தால் சமீபத்திய நிகழ்வும் தான். தலித் இலக்கியத் தோற்றத்திற்கான காரணம், தமிழ் நாட்டைப் பொருத்த வரை பல நிகழ்வுகள் ஒரு கட்டத்தில் ஒருங்கே சங்கமித்தது தான். ஒன்று பரணில் தூக்கி எறியப்பட்டிருந்த மண்டல் கமிஷனின் அறிக்கை, சில திடீர் அரசியல் காரணங்களுக்காக வெளிக் கொணரப்பட்டது. அது இந்தியா முழுதும் பெரும் கிளர்ச்சியைத் தூண்டியது. தமிழ் நாட்டை என்னவோ அது பாதிக்கவில்லை. தமிழ் நாட்டில் ஒதுக்கீடு என்பது மிகப் பழைய சமாசாரம். அது இங்கு யாரையும் திடுக்கிட வைக்கவில்லை. இரண்டாவது தூண்டுதல், அம்பேத்கார் நூற்றாண்டின் சந்தர்ப்பத்தில் அம்பேத்கரின் எழுத்துக்களும் வாழ்க்கையும் பெரிய அளவில் ஆங்கிலத்திலும், மொழி பெயர்க்கப்பட்டுத் தமிழிலும் அச்சிடப்பட்டு வெளிக் கொணரப்பட்டன

தாழ்த்தப்பட்ட மனித சமுதாயத்தின் விடுதலைக்கு ஒரு தேவ தூதன் . அம்பேத்கர் வடிவில் தேவைப்படவே, நினைவுகளி லிருந்து மங்கி மறைந்து கொண்டிருந்த அம்பேத்கர் திரும்ப கண்டெடுக்கப்பட்டார். தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து வருவது மட்டுமல்லாமல், வன்முறையும் கொந்தளிப்பும் தீவிரமடைந்து வருவதை, சாதிகளை ஒழிக்கவே தான் பிறந்ததாகவும் அதுவே தம் முழுமூச்சும் போராட்டமும் என்று கோஷமிட்டுக்கொண்டிருந்த திராவிட இயக்கம் இந்தக் கொடுமைகளை, வன்முறைகளைக் கண்டு கொள்ளாது தம் கோஷங்களையே உரத்து சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அவரகள் கோஷத்துக்கும் சாதி ஒழிப்புக்கும் சம்பந்தமில்லை என்ற சமாசாரங்கள் வெளிச்சத்துக்கு வந்தது. .

இத்தகைய சூழலில் தான் கோடாங்கி, களம், மனுஷங்கடா, தலித், கிழக்கு, நிறப்பிரிகை போன்ற நிறைய பத்திரிகைகள் தலித் பிரச்சினைகளை முன்வைத்து வெளிவரத் தொடங்கின விளிம்பு, விடியல் போன்று தலித் எழுத்துக்களை பிரசுரிப்பதற்கென்றே புத்தக வெளியீட்டு ஸ்தாபனங்களும் தோன்றின. தலித் [பிரசினைகளை மையமாகக் கொண்டு போராடவும் பல ஸ்தாபனங்கள் தோன்றின. தலித் பிரசினைகளை மாத்திரமெ தம் அக்கறையாகக் கொண்ட நாடகக் குழுக்களும் தோன்றின. நாடகங்கள் எழுதப்பட்டன.

இவையெல்லாம் எண்பதுகள் தொன்னூறுகளின் நிகழ்வுகள். ஆனால் ஒரு தூரத்துப் பழமையில் இவர்களுக்கு முன்னோடிகளும் சில இருந்தது இப்போது தேரியவந்துள்ளது. 1871-ல் பஞ்சமன் என்ற பெயரில் ஒர் தலித் பத்திரிகை வெளி வந்ததாகத் தெரிகிறது. 1897-ல் பறையன் என்ற பெயரிலும் ஒரு பத்திரிகை வெளிவந்ததாகக் கேள்விப் படுகிறோம். இரட்டை மலை சீனிவாசன் என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். அவர் முதலில் மகாத்மா காந்தியால் உந்தப் பட்டவராக இருந்ததாகவும் பின்னர் நீதிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றியவராகவும் தெரிகிறது. தலித் பிரச்சினைகளை முன் வைத்து இயங்கிய வர்களின் ஆரம்பத்தைக் கண்டறிய இவ்வளவு தூரம் தான் பின் செல்ல முடிகிறது.

தலித்துகளின் அனுபவங்களையும் அவர்கள் தொடர்ந்து பெற்று வரும் ஏமாற்றங்களையும் பற்றி முதலில் பேச ஆரம்பித்தவர் தமிழவன் என்னும் பேராசிரியர், விமர்சகர். அவர் தலித் கிறுத்துவரா, அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து கிறுத்துவராக மதம் மாறியவரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. சாதியை ஒழிக்க உரத்துக் குரல் எழுப்புவோர் நிறைந்த இன்றைய தமிழ் நாட்டில் அடுத்தவனோடு எத்தகைய உறவை வைத்துக்கொள்வது என்பதற்கான முன் ஏற்பாடாக, முதலில் அவனது ஜாதி என்ன என்பதை தெரிந்து கொண்டு பின் அதற்கேற்ப தம் உறவுகளைத் தீர்மானித்துக் கொள்ள அல்லது மாற்றிக்கொள்ள ஆத்திரமும் அவசரமும் காட்டுகிறவர்களையே, அவர்கள் சாதி ஒழிய கோஷம் இடத் தொடங்கிய காலத்திலிருந்து பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறோம். இந்த சாதி உணர்வு கோஷமிடுபவர்களின் ரத்தத்திலேயே ஊறியது. அவர்களில் உயிர் அணுக்களில் நிறைந்து காணப்படுவது. அது எவ்வளவு தீவிரம் கொண்டதோ அவ்வளவுக்கு அவர்கள் கோஷம் உரத்ததாக இருக்கும். இதெல்லாம் திராவிட இயக்க கட்சிகளின் சாதி ஒழிப்புப் போராட்டத்தின் கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால வாழ்வின் கொடை. தமிழவன் கர்நாடக பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருப்பவர். எனவே அவருக்கு கர்நாடக மாநிலத்தின் தலித் போராட்டங்கள் பற்றியும் தலித் இலக்கியங்கள் பற்றியும் நன்கு தெரியும். அதன் காரணமாகவே இயல்பாக தமிழ் நாட்டின் தலித் இயக்கங்களின் செயல்பாடு, தலித்துகள் நிலை, தலித் எழுத்துக்கள் என்பன பற்றியெல்லாம் யோசிக்கத் தூண்டப் பட்டிருக்கிறார். இவ்விஷயங்கள் பற்றி அவர் தானும் தன் நண்பர்களும் சேர்ந்து வெளியிடும் படிகள் என்ற இலக்கியச் சிறு பத்திரிகையில் எழுதியிருக்கிறார். அவர்தான் இதுபற்றியெல்லாம் இன்றைய கால கட்டத்தில் முதலில் பேசியவர் என்று நான் நம்புகிறேன். அவர் படிகள் பத்திரிகையில் எழுதியதிலிருந்து ஒரு முக்கிய பகுதியை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

தமிழ் நாட்டில் நடப்பது ஒரு மோசடி வேலை. இந்த மோசடியின் பெருமை திராவிட இயக்கத்தாரையே சாரும். அம்பேத்கர், புலே போன்றாரைப் பற்றி பெரியார் பேசத் தொடங்கியதால், திராவிடர் கழகத்தை தலித்துகள் நம்பினார்கள். ஆனால் திராவிட கழகத்தாரின் எண்ணத்தில் திராவிடர் கழகம் என்பது தமிழர்கள் கழகம் என்று தான் பொருள் பட்டது. (அதாவது உயர் சாதியினரான வெள்ளாளர்கள் மாத்திரமே திராவிட கழகத்தின் சிந்தனையில் தமிழர்கள் ஆவார்கள். அம்பேத்கர் பேரைச் சொல்லிக் கொண்டே அவர்கள் தலித்துகளை ஏமாற்றினர். அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை விளைவிக்கவும் இன்னம் இது போன்ற பிற தேவைகளுக்கும் தான் தலித்துகள் அவர்களுக்கு வேண்டும்.. திராவிட இயக்கத்தவர் தமிழ் நாட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியதும் உயர் சாதி ஹிந்துக்கள், கீழ வெண்மணியிலும், புளியங்குடியிலும் விழுப்புரத்திலும் தலித் மக்களைக் கொலை செய்யத் தொடங்கினர், அப்போது தான் தலித்துகள் இந்த மோசடியை உணர்ந்தனர். இப்போது தலித்துகள் ஒன்று பட்டு போராடத் தொடங்கிவிட்டனர். இப் போராட்டங்களை தமிழ் இலக்கியத்தில், தமிழ் வரலாற்றில் பதிவு செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது.”

(ஒரு குறிப்பு. மேலே நான் மேற்கோள் காட்டியிருப்பது, நான் முதலில் இந்தியன் லிட்டரேச்சர் பத்திரிக்கைக்காக தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்ததிலிருந்து திரும்ப என வார்த்தைகளில் தமிழில் தந்துள்ளது. குறிப்பிட்ட படிகள் இதழ் என்னிடம் இல்லை. அதன் வருடம் மாதம் போன்ற விவரங்களும் என்னிடம் இல்லை. தமிழ் வாசகங்கள் என்னதாக இருந்தாலும், தமிழவனின் கருத்துக்கு உண்மையாகத் தான் என் இரண்டாம் மொழிபெயர்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன். இனி வரும் பல மேற்கோள் பகுதிகளும் இப்படித் தான் இருக்கும். )

இதைத் தொடர்ந்து, தமிழவன் கர்நாடகாவிலும் மகாராஷ்டிரத்
திலும் என்ன நடக்கிறது என்பது பற்றி எழுதுகிறார்

கடந்த அறுபதுகளில், திராவிட கழகம் தமிழ் நாடு அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு வருட காலத்துக்குள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழவெண்மணி, என்ற கிராமத்தில் உயர் சாதி ஹிந்து பண்ணை முதலாளிகள் ஹரிஜனங்கள் வாழ்ந்த குடிசைகளூக்கு தீவைத்தனர். அதில் சிக்கிய குழந்தைகளும், பெண்களும் கொண்ட குடிசை வாழ் ஹரிஜன மக்கள் அனைவரும் தீயில் கருகி சாம்பலாயினர். இந்த படுகொலை பற்றி ஞானக் கூத்தன் எழுதிய கவிதை ஒன்று பரவலாக அறியப்பட்ட, பேசப்பட்ட ஒன்று. அவர் பிராமணர். இந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்திரா பார்த்த சாரதி எழுதிய குருதிப் புனல் என்ற நாவலும் தில்லி சாஹித்ய அகாடமியின் பரிசு பெற்றது. அந்த நாவல் பின்னர் ஒரு நீண்ட பலத்த சர்ச்சைக்கும் உள்ளாகியது. கீழவெண்மணி படுகொலைக் கான காரணங்கள் பற்றி பலர் பல வேறுபட்ட விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள். ஒரு தரப்பினருக்கு அது சாதிச் சண்டை. உயர்சாதி ஹிந்துக்களுக்கும் தலித்துகளுக்கும் இடையேயான சாதிக் கலவரம். இன்னொரு தரப்பினருக்கு.அது வர்க்கப் போர். பண்ணை முதலாளிகளுக்கும், பண்ணைத் தொழிலாளிகளுக்கும் இடையேயான வர்க்க[ப் போராட்டம். மூன்றாவது பார்வை, தமிழ் நாவலாசிரியர், இந்திரா பார்த்த சாரதி தன் நாவலில் முன் வைத்தது, இது ஆண்மையிழந்த பண்ணை முதலாளி தன் இயலாமையின் ஆத்திரத்தில் தலித் பன்ணை வேலையாட்களைத் தீக்கிரையாக்கிப் பழி தீர்த்துக்கொண்டார் என்பது. அவரவர்க்கு அவரவர் பார்வை உண்டு தானே.

இதெல்லாம் போக, தலித்துகளால் தலித்துகளின் வாழ்க்கை பற்றி இலக்கியப் பதிவு, பூமணி எழுதிய பிறகு என்ற நாவல் தான். அது தமிழ் இலக்கியத்தில், தலித் இலக்கியத்தைத் தொடங்கி வைத்த ஒரு மைல்கல். ஆனால் பூமணி தன்னை தலித்தாகப் பிரகடனம் செய்து கொள்வதில்லை. தன் எழுத்துக்கள் தலித் இலக்கிம் எனப் பெயர் சூட்டப்படுவதையும் அவர் விரும்புவதில்லை. இந்நாள் வரை இல்லை. தமிழ் இலக்கியம் என்ற பேராற்றுப் பிரவாஹத்தில் தன்னையும் ஒருவனாக, தன் எழுத்தும் அப்பிரவாஹத்தில் சேரும் ஒன்றாக, தலித் என்ற அடைமொழி அடையாளங்களின் துணை இன்றி அறிய,ப்படுவதையே அவர் விரும்புகிறார். .

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

வெங்கட் சாமிநாதன்


(தில்லி சாகித்ய அகாடமியின் iஇரு மாதாந்திர இதழ் Indian Literature-ன் தமிழ் இலக்கியத்தில் தலித் எழுத்தும் தலித்துகளும் என்னும் சிறப்பிதழுக்காக (No. 193 – September-October, 1999) எழுதப்பட்ட The Dalit in Tamil Literature – Past and Present) என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவாக்கம்)

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் –

வெகு காலமாக தலித் மக்கள் இந்த சமூகத்தில், மனித ஜீவன்களாகவே மதிக்கப்பட்டதில்லை. சமூகத்தில் அவர்கள் எதிர்கொண்ட புறக்கணிப்பு அவ்வளவு கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. இருந்த போதிலும், அதே சமயம் அவர்கள் எதிர்கொண்ட இத் தாழ்வு நிலையை, கொடுமையைப் பற்றிய வேதனையோடு கூடிய சிந்தனையும், அவர்கள் விரூப்பங்களையும் கனவுகளையும்
அங்கீகரித்த ஆதரவும், இலக்கியங்களிலும், தத்துவார்த்த சிந்தனையிலும் வெளிப்பாடு பெற்றிருப்பதையும் காண்கிறோம். வேறு எங்கு காணப்பட்டாலும் காணப்படாவிட்டாலும், தமிழ் நாட்டின் இலக்கியத்தில் வரலாற்றில் .தலித்துகளின் கனவுகளும் லட்சியங்களும் பேசப்பட்டிருக்கின்றன, போற்றப்பட்டிருக்கின்றன. சிறப்பிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் உள்ளன. அவர்களை கடவுள் அருள் பெற்றவர்களாக, அவரது கருணைக்குப் பாத்திரமான புண்ய புருஷர்களாக, மேல் தட்டுகளில் இருப்போ ரையும் உள்ளடக்கிய மொத்த சமுகத்தாலும் தொழத்தக்கவர்களாக காவியங்கள் பாடுகின்றன. கோவில்களில் அவர்கள் சிலைகள் ஆழ்வார்ளாக, நாயன்மார்களாக வீற்றிருக்கின்றன. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், அவர்தம் காலத்துக்கு முன் வாழ்ந்த நாயன்மார்கள் அனைவரையும் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரும் தேவாம்சம் கொண்டவர்கள் என்றும் சிவனின் அருள் பெற்றவர் எனறும் அவர்களுக்கு முன் தாம் ஒரு எளிய தொண்டனே என்றும் தன் திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்துப் பேசியுள்ளார். அத்தகைய பெரியார்களில், பள்ளர் சமூகத்தில் பிறந்த திருநாளைப் போவார் என்று சிறப்பிக்கப்படும் நந்தனாரும் ஒருவர். நந்தனார் கோயில் தாளவாத்தியங்களுக்கு தேவையான பதனிடப்பட்ட தோல், நரம்பு, கோரோஜனை முதலிய பொருட்களைத் தயாரித்து அளிக்கும் வேலையைச் செய்து வந்தவர். இன்னொருவர் கண்ணப்பன் என்னும் வேடர் குலத்தைச் சேர்ந்தவர். அவர் பக்தி தனி ரகமானது. எச்சிலைத் துப்பி சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தவர். அவர் தாமே முதலில் கடித்து ருசி பார்த்த மாமிசத் துண்டுகளையே நிவேதனமாக சிவனுக்குப் படைத்தவர். ஈசனின் கண்களில் ரத்தம் வடிவது கண்டு துயருற்று தன் கண்களை பெயர்த்துத் தந்தார் என்று சொல்கிறது அவரைப் பற்றிய கதை. திருநீலகண்டர் என்று போற்றப்படும் நாயனார் பிறப்பிலும் தொழிலிலும் ஒரு குயவர்.. சிவனடியார்களையெல்லாம் உபசரித்து அவர்களுக்கு திருவோடும் தானமாகத் தருவதை வழக்கமாகக் கொண்டவர். தாழ்ந்த் குலமாகக் கருதப்பட்ட பாணர் வகுப்பில் பிறந்த இன்னுமொரு நீலகண்டர், வீணை வாசிப்பதிலும் வல்லவரானதால் திருநீலகண்ட யாழ்ப்பாணர், என்று அறியப்பட்டவரும், 63 நாயன்மார்களில் ஒருவருவருமாவர். கோயில் வாயில் முன் நின்று வீணை வாசித்துக்கொண்டே சிவனைப் போற்றிப் பாடுபவர். மதுரை மன்னன் சௌந்திரபாண்டியனின் கனவில் மாத்திரம் அல்ல, ஆலவாய் கோயில் அர்ச்சர்கரின், இன்னும் மற்ற சிவனடியார்கள் கனவில் சிவன் தோன்றி கோயில் வாயிலில் தன்னைப் பாடும் தன் பக்தனை கோவிலுக்குள் அழைத்து வந்து, அவரைத் தரையில் அல்ல, பலகையில் அமர்த்தி வீணையை மீட்டிப் பாடச் செய்யப் பணித்ததாக பெரியபுராணம் சொல்கிறது. இவர்கள் எல்லாம் சிவனடியார்கள். இவர்களது பெயரையும் வரலாற்றையும் ஏழாம் நூற்றாண்டு சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையிலிருந்தும், பன்னிரண்டாம் நூற்றாண்டு சேக்கிழாரின் பெரியபுராணத்தி லிருந்தும் தெரிந்து கொள்கிறோம்.. இன்னுமொருபாணர்,. இவர் விஷ்ணு பக்தர், திருப்பாணாழ்வார் என்றே அறியப்படுபவர், இவரும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் பற்றிச் சொல்லப்படும் செய்தி போலவே, இவரைப்பற்றியும் வரலாறு சொல்லப் படுகிறது. அவரது யாழிலிருந்து பிறக்கும் நாதம் ”நாராயணா”, என்று ஒலிப்பது கண்ட சேனை முதலியார் யாரும் அறியாதுட் இவரது கரத்தில் இலச்சினை பதித்துச் சென்றதாகவும் பின்னர் இவ்விலச்சினை கண்ட அரங்க முனிவர் இவரைத் தோளில் சுமந்து அரங்கன் சனனதிக்குள் பெருமாளின் முன் இறக்கி விட்டதாக வைணவ வரலாறு சொல்கிறது. இச்சம்பவம் காரணமாகவே இவர் முனிவாகனார் என்றும் பெயர் பெற்றவர். நாயன்மார்களைப் பற்றியாவது இலக்கியச் செய்திகளும் வரலாறுமே உண்டு. ஆனால், திருப்பாணாழ்வாரோ ‘அமலனாதி பிரான்’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள் கொண்ட ஒரு பிரபந்தமே பாடி வேதமாகப் போற்றிப் பாடப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் இடம் பெற்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. பெருமாளின் திவ்ய தோற்றத்தை அங்கம் அங்கமாக பாதாதி கேசம் வர்ணித்துப் பாடிய காரணத்தால், இவ்வகையில் இதுவே முன்னோடி கிரந்தமாகவும் கருதப்படுகிறது. 30 வயதே வாழ்ந்தவர் திருப்பாணாழ்வார்

சிவனை வழிபட்ட 63 நாயன்மார்களிலும், விஷ்ணுவை வழிபட்ட 12 ஆழ்வார்களிலும், அரசர்களும் உண்டு., வணிகர்களும் உண்டு. அந்தணர்களும் உண்டு. பெண்களும் உண்டு. தலித்துகளும் அவர்களோடு சமதையாக புண்யபுருஷர்களாகப் போற்றி வணங்கப் படுகிறார்கள். அவர்களை ஏதும் இன்றைய அரசியல் செயல்பாடு போல கண் துடைப்பாக, சமாதானப்படுத்து வதற்காகவோ, அவர்கள் ஆதரவைப் பெறுவதற்காகவோ, தன்னலத்திற்கான பகடை களாகவோ, பயன்படுத்த இச்சிறப்புக்கள் செய்யப்படவில்லை.. மற்றவர்கள் எவ்வாறு அரசர் என்பதற்காகவோ, மந்திரிகள் அல்லது தானைத் தலைவர் என்பதகாகவோ போற்றப்படவில்லையோ அது போல இவர்களும் தலித் என்ற காரணத்திற்காக ஆழ்வாராகவோ நாயன்மாராகவோ போற்றப்படவில்லை. இவர்கள் அனைவரும் தம் திறத்தால் வாழ்க்கையால், பக்தியால் சிறப்புப் பெற்றவர், அனைத்து சமூகத்தாலும் வணங்கப்பட்ட பெரியார் வரிசையில் தலித்துகளும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று கொள்ளவேண்டும். தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை .மனிதர்கள் கவனிக்கத் தவறிய போது தெய்வமே இடை புகுந்து அவர்களைச் சிறப்பித்திருக்கிறது,

இது ஏதோ ஒரு கால கட்டத்தோடு நின்றுவிட்ட ஒன்று அல்ல. இது பற்றி நாம் அறிய வரும் எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 10-ம் நூற்றாண்டில், நம்பி ஆண்டார் நம்பி, தேவார நால்வரின் பாடல்களைத் தேடித் தொகுத்த போது, சுந்தரர் போலவே,, தாமும் தாம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் நந்தனார், திருநீலகண்டர், கண்ணப்பர் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்து நாயன்மார்களையும் சிறப்பித்துப் பாடுகிறார். இதை அடுத்து வந்த பன்னிரண்டாம் நூற்றாண்டு சேக்கிழார், நாயன்மார் அறுபத்து மூவர் பற்றிய வாழ்க்கையையும் மிக விரிவாகச் சொல்லும் பெரிய புராணம் என்னும் ஒரு பெரும் காப்பியத்தையே இயற்றுகிறார்./ அது தமிழ் இலக்கிய வரலாற்றில், வாழ்க்கை வரலாற்றுப் பதிவில் ஒரு மைல் கல்லாகிறது. இவ்வரலாற்றுக் காவியத்திலிருந்து தான் நாம் நந்தனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திரு நீலகண்டர் போன்றோர் எத்தகைய சமூக அவமதிப்புகளை எதிர்கொள்ள் வேண்டி வந்தது பின் சிவபிரானே இடைபுகுந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டி வந்தது என்பதை அறிகிறோம். எட்டாம் நூற்றாண்டில் வந்த சுந்தரமூர்த்தி இவர்களைப் பற்றிப் பேசும் வரை இவர்களைப் பற்றி ஏதும் செய்தி இல்லை. இவர்கள் வாழ்ந்த காலம் எது என்பதும் இன்று வரை தெரியாது. திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தவிர. அவர் திருஞான சம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர்,. திருஞான சம்பந்தரோடு அவர் பாட, இவர் யாழ் வாசித்து உடன் செல்ல, ஞானசம்பந்தர் செல்லும் க்ஷேத்திரங்களுக் கெல்லாம் உடன் சென்றவர். திருஞான சம்பந்தர் ஒரு பால சன்னியாசி. கவிஞர். சிவ பக்தர். அந்தணர். அவர் ஒரு தலித் வைணிகரை, தம் கூட்டத்தோடு சேர்த்துக்கொண்டார். அவரும் ஒரு சிவ பக்தர், வீணை வாசிக்கும் கலையில் தேர்ந்தவர் என்ற காரணத்திற்காக அந்த அந்தணருக்கு இவர் தாழ்ந்த சாதியினர் என்பது தடையாயிருக்கவில்லை.

நான்கு நூற்றாண்டுகள் கழித்து, பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்திலிருந்து தான் நந்தனாரை கோயிலுக்குள் அனுமதிக்கும் முன்னர் தில்லை வாழ் அந்தணர் தீக்குளிக்கச் செய்தனர் என்ற செய்தி நமக்குத் தெரியவருகிறது. தாழ்ந்த குலத்தில் பிறந்த அழுக்குகள் நீங்கி, அவர் பூணுல் தரித்த அந்தணராக வெளிவந்ததாகச் சொல்கிறது பெரிய புராணம். இத்தகைய சோதனைக்கு நந்தனார் மட்டுமே ஆட்படவேண்டி வந்திருக்கிறது. கண்ணப்ப நாயனாருக்கோ, திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கோ, திருநீலகண்டருக்குமோ, அல்லது திருப்பாணாழ்வாருக்குமோ இத்தகைய சோதனைகள் விதிக்கப் படவில்லை. அவர் தீக்குளித்து பூணூல் அணிந்த அந்தணர் சொரூபத்தில் வெளிப்பட்ட கதையை நாம் நம்ப வேண்டாம். அத்தோடு நந்தனாரின் வாழ்வும் முடிந்ததாகவே இன்று வாழும் நாம் கொள்ளலாம். இன்று நம்மோடு வாழும் சித்தாந்திகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் நந்தனார் தீக்குளிக்க வைக்கப்பட்ட கதை மிகுந்த உவப்பளிக்கும் பிராமண துவேஷப் பிரசாரத்திற்கு உதவும் சலிப்புத் தராத விஷயமாகிப் போனது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல.

இதையெல்லாம் மீறி இதில் நாம் பார்க்கவேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. எட்டாம் நூற்றாண்டிலோ பத்தாம் நூற்றாண்டிலோ சொல்லப்படாத, பன்னிரண்டாம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்ட இக்கதைகள் அவ்வப்போது அவை தோன்றிய வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.. இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. இவர்கள் போற்றி வணங்கத் தக்க புண்ய புருஷர்களாக சிற[ப்பிக்கப் பட்டுள்ளனர். இவர்களது சிலை வடிவங்கள் தென்னிந்தியாவின் ஒவ்வொரு வைஷ்ணவ சிவன் பெரிய கோயில்களில் தரப்படுத்தப் படாத ஒரே வரிசையில் நமக்கு தரிசனம் தருகின்றன.. அறுபத்து மூவர் உற்சவ மூர்த்திகளாக உலா வருகின்றனர்.

ஒரு மா சே துங், தன் சகா லியூ ஷாவ் சீ யை, டெங் சியாவ் பிங்கை, சூ டேவை, தனக்கு சமமாக அங்கீகரிப்பதை விட்டு விடுவோம். இவர்கள் வாழ்ந்த சுவடையே முற்றிலுமாக அழிக்கத் தான் முயற்சிகள் மேற்கொண்டார் என்பது வரலாறு.. அதே போல ஸ்டாலினும் கூட அத்தகைய ஸ்தானத்தை ட்ராட்ஸ்கிக்கோ இன்னும் மற்ற சகாக்களுக்கோ அளித்தாரா என்பதை எண்ணிப் பார்க்கலாம். 1936-ல் நிகழ்ந்த The Great Purges- க்குப் பிறகு அவர்கள் பெயரையும் வாழ்ந்த தடங்களையும் அழிக்கத் தான் இவர்களுக்கெல்லாம் தோன்றியது. இன்றைய அரசியலிலும் அவர்களது இன்றைய வாரிசுகளால் இயன்ற அளவு இம்முயற்சிகள் சிறிய பெரிய அளவில் நடந்து வருவதைக் காணலாம். அவர்கள் இயன்ற அளவு என்பது அவர்கள் ஸ்டாலின், மாவோ போல சர்வாதிகாரிகளாக இல்லாது போன காரணத்தால் தான்..

இந்திய சமுதாயமும், வரலாறும், குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் சமுதாயமோ, இலக்கியமோ, வரலாறோ அப்படி இருந்ததில்லை. இதற்குக் காரணம், சமூகத்தில் நிலவிய தீண்டாமைகளையும் அநீதிகளையும் மீறி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பார்த்து மன வேதனைப் பட்டவர்களும், அத/ற்கு எதிராக சிந்தித்து செயல்பட்டவர்களும் ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த சமூகத்தில் தோன்றி செயல்பட்டிருக்கிறார்கள், சமூகத்தை மாற்ற முனைந்திருக்கிறார்கள் என்பதே… அவ்வப்போது இது பற்றியெல்லாம் சிந்தித்தவர்கள், சுய விமரிசனம் செய்தவர்கள், அவர்கள் செயல்படவும் செய்தார்கள் என்பதைத் தான், சிவனோ பெருமாளோ அவர்களுக்காக மனமிரங்கி அவர்களைக் காப்பாற்றியதாக இலக்கியங்களும் கலைகளும் சொல்கின்றன. அதைத் தான் அவர்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் எழுதி அவற்றிற்கு ஒரு அழியா வாழ்வு கொடுத்திருக்கின்றனர். இல்லையெனில் ஏன் இவற்றை இந்த சமூகம் பாதுகாத்து அதற்கு ஒரு மேலான இடத்தைத் தந்து சிறப்பித்தார்கள்? இவர்கள் பாதுகாத்தும் சிறப்பித்தும் வாழ்வு தந்ததால் தானே அவை இன்றைய பிரசாரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிராமணர்களைப் பழிக்க ஏதுவாயிருக்கிறது!

இந்த கதைகளிலேயே குறிப்பாக, நந்தன் கதை தான் மிகவும் பிரபலமானதும், அதிகம் பயன்படுத்தப்படுவதும் புகழ் பெற்றதும் ஆகும். சேக்கிழாருக்கு அறுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1780களில் பிறந்த கோபால கிருஷ்ண பாரதியார் என்னும் ஆசாரம் மிகுந்த, பக்தியும் சங்கீத ஞானமும் கொண்டிருந்த ஒரு பிராமணர், சேக்கிழாரின் திருநாளைப் போவார் கதையை எடுத்துக்கொண்டு அதற்கு தன் கற்பனையில் உதித்த சம்பவங்களையும் பாத்திரங்களையும் சேர்த்து ஒரு நீண்ட சங்கீத கதா காலட்சேப ரூபம் கொடுத்தார். அதில் அவர் கற்பனையில் உருவான ஒரு பிராமண பண்ணையார் தீவிர ஆசாரத்தில் தோய்ந்தவர். கோபால கிருஷ்ண பாரதியின் ஹீரோவான நந்தனுக்கு எதிரான வில்லன். ஆக கோபால கிருஷ்ண பாரதியார் 600 வருஷங்களாக தமிழ் சமூகம் மறந்திருந்த ஒரு நந்தன் கதையை, தன் கதா காலட்சேபத்துக்கான பொருளாகத் தேர்ந்தெடுப்பானேன்?, அதில் தன் பிராமண சமூகத்தையும், தான் வழுவும் ஆசாரத்தையுமே குற்றம் சாட்ட பெரிய புராணத்தில் இல்லாத ஒரு பிராமண பண்ணையாரை வில்லன் பாத்திரமாக சிருஷ்டிப்பானேன் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. அறு நூறு வருஷப் பழம் கதையை அவர் தன் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மூலம் மறுபடியும் பிராபல்யப் படுத்திராவிட்டால், நந்தன் சிதையில் எரிந்தது 12-ம் நூற்றாண்டுப் பழங்கதையாகவே நின்றிருக்கும். அவர் கீர்த்தனை வெளி வந்த பிறகு அது மக்களிடையே பிரபலமாகி, பெரும் புகழ் பெற்றது. அதன் பின் வந்த வருடங்களில், நந்தன் கதை மேடை நாடகமாக, திரைப் படமாக பலமுறை, பல வடிவங்களில் பலரால் கையாளப்பட்டு வந்துள்ளது. நம் தலைமுறையில் இந்திரா பார்த்த சாரதியும் தன் பங்கிற்கு தம் சித்தாந்த கற்பனை வளங்களை நந்தன் கதைக்குச்
சேர்த்து நந்தன் கதை என்று அதற்கு நாடக வடிவம் தந்துள்ளார்.
புத்தி ஜீவிகளும், கிராமீய, செவ்வியல் நாடகக் கலைஞர்களும் தம் பங்குக்கான பிராமண சாடலைத் தொடர்ந்து வருகின்றனர் இந்தச் சாடல், தொடர்ந்த் சாடல், அவர்கள் மீது பார்வை திரும்பி அவர்களது நம்பிக்கைகளும் சிந்தனைகளும் எத்தகையன என்ற விசாரணையிலிருந்து அவர்கள் தப்பிக்க வகை செய்கிறது என்பதும் இச்சாடலில் அவர்கள் பெறும் லாபமும் அரசியல் வாழ்வும். . . .

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்