தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

This entry is part of 41 in the series 20110220_Issue

வெங்கட் சாமிநாதன்


(தில்லி சாகித்ய அகாடமியின் iஇரு மாதாந்திர இதழ் Indian Literature-ன் தமிழ் இலக்கியத்தில் தலித் எழுத்தும் தலித்துகளும் என்னும் சிறப்பிதழுக்காக (No. 193 – September-October, 1999) எழுதப்பட்ட The Dalit in Tamil Literature – Past and Present) என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவாக்கம்)

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் –

வெகு காலமாக தலித் மக்கள் இந்த சமூகத்தில், மனித ஜீவன்களாகவே மதிக்கப்பட்டதில்லை. சமூகத்தில் அவர்கள் எதிர்கொண்ட புறக்கணிப்பு அவ்வளவு கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. இருந்த போதிலும், அதே சமயம் அவர்கள் எதிர்கொண்ட இத் தாழ்வு நிலையை, கொடுமையைப் பற்றிய வேதனையோடு கூடிய சிந்தனையும், அவர்கள் விரூப்பங்களையும் கனவுகளையும்
அங்கீகரித்த ஆதரவும், இலக்கியங்களிலும், தத்துவார்த்த சிந்தனையிலும் வெளிப்பாடு பெற்றிருப்பதையும் காண்கிறோம். வேறு எங்கு காணப்பட்டாலும் காணப்படாவிட்டாலும், தமிழ் நாட்டின் இலக்கியத்தில் வரலாற்றில் .தலித்துகளின் கனவுகளும் லட்சியங்களும் பேசப்பட்டிருக்கின்றன, போற்றப்பட்டிருக்கின்றன. சிறப்பிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் உள்ளன. அவர்களை கடவுள் அருள் பெற்றவர்களாக, அவரது கருணைக்குப் பாத்திரமான புண்ய புருஷர்களாக, மேல் தட்டுகளில் இருப்போ ரையும் உள்ளடக்கிய மொத்த சமுகத்தாலும் தொழத்தக்கவர்களாக காவியங்கள் பாடுகின்றன. கோவில்களில் அவர்கள் சிலைகள் ஆழ்வார்ளாக, நாயன்மார்களாக வீற்றிருக்கின்றன. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், அவர்தம் காலத்துக்கு முன் வாழ்ந்த நாயன்மார்கள் அனைவரையும் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரும் தேவாம்சம் கொண்டவர்கள் என்றும் சிவனின் அருள் பெற்றவர் எனறும் அவர்களுக்கு முன் தாம் ஒரு எளிய தொண்டனே என்றும் தன் திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்துப் பேசியுள்ளார். அத்தகைய பெரியார்களில், பள்ளர் சமூகத்தில் பிறந்த திருநாளைப் போவார் என்று சிறப்பிக்கப்படும் நந்தனாரும் ஒருவர். நந்தனார் கோயில் தாளவாத்தியங்களுக்கு தேவையான பதனிடப்பட்ட தோல், நரம்பு, கோரோஜனை முதலிய பொருட்களைத் தயாரித்து அளிக்கும் வேலையைச் செய்து வந்தவர். இன்னொருவர் கண்ணப்பன் என்னும் வேடர் குலத்தைச் சேர்ந்தவர். அவர் பக்தி தனி ரகமானது. எச்சிலைத் துப்பி சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தவர். அவர் தாமே முதலில் கடித்து ருசி பார்த்த மாமிசத் துண்டுகளையே நிவேதனமாக சிவனுக்குப் படைத்தவர். ஈசனின் கண்களில் ரத்தம் வடிவது கண்டு துயருற்று தன் கண்களை பெயர்த்துத் தந்தார் என்று சொல்கிறது அவரைப் பற்றிய கதை. திருநீலகண்டர் என்று போற்றப்படும் நாயனார் பிறப்பிலும் தொழிலிலும் ஒரு குயவர்.. சிவனடியார்களையெல்லாம் உபசரித்து அவர்களுக்கு திருவோடும் தானமாகத் தருவதை வழக்கமாகக் கொண்டவர். தாழ்ந்த் குலமாகக் கருதப்பட்ட பாணர் வகுப்பில் பிறந்த இன்னுமொரு நீலகண்டர், வீணை வாசிப்பதிலும் வல்லவரானதால் திருநீலகண்ட யாழ்ப்பாணர், என்று அறியப்பட்டவரும், 63 நாயன்மார்களில் ஒருவருவருமாவர். கோயில் வாயில் முன் நின்று வீணை வாசித்துக்கொண்டே சிவனைப் போற்றிப் பாடுபவர். மதுரை மன்னன் சௌந்திரபாண்டியனின் கனவில் மாத்திரம் அல்ல, ஆலவாய் கோயில் அர்ச்சர்கரின், இன்னும் மற்ற சிவனடியார்கள் கனவில் சிவன் தோன்றி கோயில் வாயிலில் தன்னைப் பாடும் தன் பக்தனை கோவிலுக்குள் அழைத்து வந்து, அவரைத் தரையில் அல்ல, பலகையில் அமர்த்தி வீணையை மீட்டிப் பாடச் செய்யப் பணித்ததாக பெரியபுராணம் சொல்கிறது. இவர்கள் எல்லாம் சிவனடியார்கள். இவர்களது பெயரையும் வரலாற்றையும் ஏழாம் நூற்றாண்டு சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையிலிருந்தும், பன்னிரண்டாம் நூற்றாண்டு சேக்கிழாரின் பெரியபுராணத்தி லிருந்தும் தெரிந்து கொள்கிறோம்.. இன்னுமொருபாணர்,. இவர் விஷ்ணு பக்தர், திருப்பாணாழ்வார் என்றே அறியப்படுபவர், இவரும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் பற்றிச் சொல்லப்படும் செய்தி போலவே, இவரைப்பற்றியும் வரலாறு சொல்லப் படுகிறது. அவரது யாழிலிருந்து பிறக்கும் நாதம் ”நாராயணா”, என்று ஒலிப்பது கண்ட சேனை முதலியார் யாரும் அறியாதுட் இவரது கரத்தில் இலச்சினை பதித்துச் சென்றதாகவும் பின்னர் இவ்விலச்சினை கண்ட அரங்க முனிவர் இவரைத் தோளில் சுமந்து அரங்கன் சனனதிக்குள் பெருமாளின் முன் இறக்கி விட்டதாக வைணவ வரலாறு சொல்கிறது. இச்சம்பவம் காரணமாகவே இவர் முனிவாகனார் என்றும் பெயர் பெற்றவர். நாயன்மார்களைப் பற்றியாவது இலக்கியச் செய்திகளும் வரலாறுமே உண்டு. ஆனால், திருப்பாணாழ்வாரோ ‘அமலனாதி பிரான்’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள் கொண்ட ஒரு பிரபந்தமே பாடி வேதமாகப் போற்றிப் பாடப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் இடம் பெற்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. பெருமாளின் திவ்ய தோற்றத்தை அங்கம் அங்கமாக பாதாதி கேசம் வர்ணித்துப் பாடிய காரணத்தால், இவ்வகையில் இதுவே முன்னோடி கிரந்தமாகவும் கருதப்படுகிறது. 30 வயதே வாழ்ந்தவர் திருப்பாணாழ்வார்

சிவனை வழிபட்ட 63 நாயன்மார்களிலும், விஷ்ணுவை வழிபட்ட 12 ஆழ்வார்களிலும், அரசர்களும் உண்டு., வணிகர்களும் உண்டு. அந்தணர்களும் உண்டு. பெண்களும் உண்டு. தலித்துகளும் அவர்களோடு சமதையாக புண்யபுருஷர்களாகப் போற்றி வணங்கப் படுகிறார்கள். அவர்களை ஏதும் இன்றைய அரசியல் செயல்பாடு போல கண் துடைப்பாக, சமாதானப்படுத்து வதற்காகவோ, அவர்கள் ஆதரவைப் பெறுவதற்காகவோ, தன்னலத்திற்கான பகடை களாகவோ, பயன்படுத்த இச்சிறப்புக்கள் செய்யப்படவில்லை.. மற்றவர்கள் எவ்வாறு அரசர் என்பதற்காகவோ, மந்திரிகள் அல்லது தானைத் தலைவர் என்பதகாகவோ போற்றப்படவில்லையோ அது போல இவர்களும் தலித் என்ற காரணத்திற்காக ஆழ்வாராகவோ நாயன்மாராகவோ போற்றப்படவில்லை. இவர்கள் அனைவரும் தம் திறத்தால் வாழ்க்கையால், பக்தியால் சிறப்புப் பெற்றவர், அனைத்து சமூகத்தாலும் வணங்கப்பட்ட பெரியார் வரிசையில் தலித்துகளும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று கொள்ளவேண்டும். தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை .மனிதர்கள் கவனிக்கத் தவறிய போது தெய்வமே இடை புகுந்து அவர்களைச் சிறப்பித்திருக்கிறது,

இது ஏதோ ஒரு கால கட்டத்தோடு நின்றுவிட்ட ஒன்று அல்ல. இது பற்றி நாம் அறிய வரும் எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 10-ம் நூற்றாண்டில், நம்பி ஆண்டார் நம்பி, தேவார நால்வரின் பாடல்களைத் தேடித் தொகுத்த போது, சுந்தரர் போலவே,, தாமும் தாம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் நந்தனார், திருநீலகண்டர், கண்ணப்பர் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்து நாயன்மார்களையும் சிறப்பித்துப் பாடுகிறார். இதை அடுத்து வந்த பன்னிரண்டாம் நூற்றாண்டு சேக்கிழார், நாயன்மார் அறுபத்து மூவர் பற்றிய வாழ்க்கையையும் மிக விரிவாகச் சொல்லும் பெரிய புராணம் என்னும் ஒரு பெரும் காப்பியத்தையே இயற்றுகிறார்./ அது தமிழ் இலக்கிய வரலாற்றில், வாழ்க்கை வரலாற்றுப் பதிவில் ஒரு மைல் கல்லாகிறது. இவ்வரலாற்றுக் காவியத்திலிருந்து தான் நாம் நந்தனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திரு நீலகண்டர் போன்றோர் எத்தகைய சமூக அவமதிப்புகளை எதிர்கொள்ள் வேண்டி வந்தது பின் சிவபிரானே இடைபுகுந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டி வந்தது என்பதை அறிகிறோம். எட்டாம் நூற்றாண்டில் வந்த சுந்தரமூர்த்தி இவர்களைப் பற்றிப் பேசும் வரை இவர்களைப் பற்றி ஏதும் செய்தி இல்லை. இவர்கள் வாழ்ந்த காலம் எது என்பதும் இன்று வரை தெரியாது. திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தவிர. அவர் திருஞான சம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர்,. திருஞான சம்பந்தரோடு அவர் பாட, இவர் யாழ் வாசித்து உடன் செல்ல, ஞானசம்பந்தர் செல்லும் க்ஷேத்திரங்களுக் கெல்லாம் உடன் சென்றவர். திருஞான சம்பந்தர் ஒரு பால சன்னியாசி. கவிஞர். சிவ பக்தர். அந்தணர். அவர் ஒரு தலித் வைணிகரை, தம் கூட்டத்தோடு சேர்த்துக்கொண்டார். அவரும் ஒரு சிவ பக்தர், வீணை வாசிக்கும் கலையில் தேர்ந்தவர் என்ற காரணத்திற்காக அந்த அந்தணருக்கு இவர் தாழ்ந்த சாதியினர் என்பது தடையாயிருக்கவில்லை.

நான்கு நூற்றாண்டுகள் கழித்து, பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்திலிருந்து தான் நந்தனாரை கோயிலுக்குள் அனுமதிக்கும் முன்னர் தில்லை வாழ் அந்தணர் தீக்குளிக்கச் செய்தனர் என்ற செய்தி நமக்குத் தெரியவருகிறது. தாழ்ந்த குலத்தில் பிறந்த அழுக்குகள் நீங்கி, அவர் பூணுல் தரித்த அந்தணராக வெளிவந்ததாகச் சொல்கிறது பெரிய புராணம். இத்தகைய சோதனைக்கு நந்தனார் மட்டுமே ஆட்படவேண்டி வந்திருக்கிறது. கண்ணப்ப நாயனாருக்கோ, திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கோ, திருநீலகண்டருக்குமோ, அல்லது திருப்பாணாழ்வாருக்குமோ இத்தகைய சோதனைகள் விதிக்கப் படவில்லை. அவர் தீக்குளித்து பூணூல் அணிந்த அந்தணர் சொரூபத்தில் வெளிப்பட்ட கதையை நாம் நம்ப வேண்டாம். அத்தோடு நந்தனாரின் வாழ்வும் முடிந்ததாகவே இன்று வாழும் நாம் கொள்ளலாம். இன்று நம்மோடு வாழும் சித்தாந்திகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் நந்தனார் தீக்குளிக்க வைக்கப்பட்ட கதை மிகுந்த உவப்பளிக்கும் பிராமண துவேஷப் பிரசாரத்திற்கு உதவும் சலிப்புத் தராத விஷயமாகிப் போனது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல.

இதையெல்லாம் மீறி இதில் நாம் பார்க்கவேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. எட்டாம் நூற்றாண்டிலோ பத்தாம் நூற்றாண்டிலோ சொல்லப்படாத, பன்னிரண்டாம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்ட இக்கதைகள் அவ்வப்போது அவை தோன்றிய வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.. இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. இவர்கள் போற்றி வணங்கத் தக்க புண்ய புருஷர்களாக சிற[ப்பிக்கப் பட்டுள்ளனர். இவர்களது சிலை வடிவங்கள் தென்னிந்தியாவின் ஒவ்வொரு வைஷ்ணவ சிவன் பெரிய கோயில்களில் தரப்படுத்தப் படாத ஒரே வரிசையில் நமக்கு தரிசனம் தருகின்றன.. அறுபத்து மூவர் உற்சவ மூர்த்திகளாக உலா வருகின்றனர்.

ஒரு மா சே துங், தன் சகா லியூ ஷாவ் சீ யை, டெங் சியாவ் பிங்கை, சூ டேவை, தனக்கு சமமாக அங்கீகரிப்பதை விட்டு விடுவோம். இவர்கள் வாழ்ந்த சுவடையே முற்றிலுமாக அழிக்கத் தான் முயற்சிகள் மேற்கொண்டார் என்பது வரலாறு.. அதே போல ஸ்டாலினும் கூட அத்தகைய ஸ்தானத்தை ட்ராட்ஸ்கிக்கோ இன்னும் மற்ற சகாக்களுக்கோ அளித்தாரா என்பதை எண்ணிப் பார்க்கலாம். 1936-ல் நிகழ்ந்த The Great Purges- க்குப் பிறகு அவர்கள் பெயரையும் வாழ்ந்த தடங்களையும் அழிக்கத் தான் இவர்களுக்கெல்லாம் தோன்றியது. இன்றைய அரசியலிலும் அவர்களது இன்றைய வாரிசுகளால் இயன்ற அளவு இம்முயற்சிகள் சிறிய பெரிய அளவில் நடந்து வருவதைக் காணலாம். அவர்கள் இயன்ற அளவு என்பது அவர்கள் ஸ்டாலின், மாவோ போல சர்வாதிகாரிகளாக இல்லாது போன காரணத்தால் தான்..

இந்திய சமுதாயமும், வரலாறும், குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் சமுதாயமோ, இலக்கியமோ, வரலாறோ அப்படி இருந்ததில்லை. இதற்குக் காரணம், சமூகத்தில் நிலவிய தீண்டாமைகளையும் அநீதிகளையும் மீறி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பார்த்து மன வேதனைப் பட்டவர்களும், அத/ற்கு எதிராக சிந்தித்து செயல்பட்டவர்களும் ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த சமூகத்தில் தோன்றி செயல்பட்டிருக்கிறார்கள், சமூகத்தை மாற்ற முனைந்திருக்கிறார்கள் என்பதே… அவ்வப்போது இது பற்றியெல்லாம் சிந்தித்தவர்கள், சுய விமரிசனம் செய்தவர்கள், அவர்கள் செயல்படவும் செய்தார்கள் என்பதைத் தான், சிவனோ பெருமாளோ அவர்களுக்காக மனமிரங்கி அவர்களைக் காப்பாற்றியதாக இலக்கியங்களும் கலைகளும் சொல்கின்றன. அதைத் தான் அவர்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் எழுதி அவற்றிற்கு ஒரு அழியா வாழ்வு கொடுத்திருக்கின்றனர். இல்லையெனில் ஏன் இவற்றை இந்த சமூகம் பாதுகாத்து அதற்கு ஒரு மேலான இடத்தைத் தந்து சிறப்பித்தார்கள்? இவர்கள் பாதுகாத்தும் சிறப்பித்தும் வாழ்வு தந்ததால் தானே அவை இன்றைய பிரசாரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிராமணர்களைப் பழிக்க ஏதுவாயிருக்கிறது!

இந்த கதைகளிலேயே குறிப்பாக, நந்தன் கதை தான் மிகவும் பிரபலமானதும், அதிகம் பயன்படுத்தப்படுவதும் புகழ் பெற்றதும் ஆகும். சேக்கிழாருக்கு அறுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1780களில் பிறந்த கோபால கிருஷ்ண பாரதியார் என்னும் ஆசாரம் மிகுந்த, பக்தியும் சங்கீத ஞானமும் கொண்டிருந்த ஒரு பிராமணர், சேக்கிழாரின் திருநாளைப் போவார் கதையை எடுத்துக்கொண்டு அதற்கு தன் கற்பனையில் உதித்த சம்பவங்களையும் பாத்திரங்களையும் சேர்த்து ஒரு நீண்ட சங்கீத கதா காலட்சேப ரூபம் கொடுத்தார். அதில் அவர் கற்பனையில் உருவான ஒரு பிராமண பண்ணையார் தீவிர ஆசாரத்தில் தோய்ந்தவர். கோபால கிருஷ்ண பாரதியின் ஹீரோவான நந்தனுக்கு எதிரான வில்லன். ஆக கோபால கிருஷ்ண பாரதியார் 600 வருஷங்களாக தமிழ் சமூகம் மறந்திருந்த ஒரு நந்தன் கதையை, தன் கதா காலட்சேபத்துக்கான பொருளாகத் தேர்ந்தெடுப்பானேன்?, அதில் தன் பிராமண சமூகத்தையும், தான் வழுவும் ஆசாரத்தையுமே குற்றம் சாட்ட பெரிய புராணத்தில் இல்லாத ஒரு பிராமண பண்ணையாரை வில்லன் பாத்திரமாக சிருஷ்டிப்பானேன் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. அறு நூறு வருஷப் பழம் கதையை அவர் தன் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மூலம் மறுபடியும் பிராபல்யப் படுத்திராவிட்டால், நந்தன் சிதையில் எரிந்தது 12-ம் நூற்றாண்டுப் பழங்கதையாகவே நின்றிருக்கும். அவர் கீர்த்தனை வெளி வந்த பிறகு அது மக்களிடையே பிரபலமாகி, பெரும் புகழ் பெற்றது. அதன் பின் வந்த வருடங்களில், நந்தன் கதை மேடை நாடகமாக, திரைப் படமாக பலமுறை, பல வடிவங்களில் பலரால் கையாளப்பட்டு வந்துள்ளது. நம் தலைமுறையில் இந்திரா பார்த்த சாரதியும் தன் பங்கிற்கு தம் சித்தாந்த கற்பனை வளங்களை நந்தன் கதைக்குச்
சேர்த்து நந்தன் கதை என்று அதற்கு நாடக வடிவம் தந்துள்ளார்.
புத்தி ஜீவிகளும், கிராமீய, செவ்வியல் நாடகக் கலைஞர்களும் தம் பங்குக்கான பிராமண சாடலைத் தொடர்ந்து வருகின்றனர் இந்தச் சாடல், தொடர்ந்த் சாடல், அவர்கள் மீது பார்வை திரும்பி அவர்களது நம்பிக்கைகளும் சிந்தனைகளும் எத்தகையன என்ற விசாரணையிலிருந்து அவர்கள் தப்பிக்க வகை செய்கிறது என்பதும் இச்சாடலில் அவர்கள் பெறும் லாபமும் அரசியல் வாழ்வும். . . .

Series Navigation