தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

சின்னக்கருப்பன்


மேற்குவங்காளத்தின் முதல் இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஆலியா முஸ்லீம் யுனிவர்சிட்டியில் வங்காள மொழி விரிவுரையாளராக வேலை பெற்ற சிரின் மிட்டியா (Sirin Middya) கடந்த மார்ச்சிலிருந்து நூலகத்தில்தான் வேலை செய்கிறார். காரணம் அவர் புர்கா போட மறுத்ததுதான்.

மதரஸா மாணவர் சங்கம் எல்லா பெண் விரிவுரையாளர்களும் புர்கா போட்டுத்தான் கல்லூரிக்கு வந்து பாடம் நடத்தவேண்டும் என்று வற்புறுத்துகிறது. இதனால், மற்ற விரிவுரையாளர்கள் புர்கா போட்டாலும் நான் போடமாட்டேன் என்று இவர் மறுத்துவிட்டார். அதனால் நூலகத்தில் வேலை. பல்கலைக்கழக துணைவேந்தர் இவருக்காக வாதாடவில்லை. மேற்கு வங்காள கம்யூனிஸ்டு அரசும் கண்டுகொள்ளவில்லை. இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. வெளியிட்டு எட்டு நாட்கள் கழித்து பல்கலைக்கழக நிர்வாகம் இவரை புர்கா இல்லாமலேயே விரிவுரையாளர் வேலையை செய்யலாம் என்று கேட்டுகொண்டிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, இவர் “டீஸண்டாக” உடை உடுத்திக்கொண்டு விரிவுரையாற்றலாம் என்று அனுமதித்திருக்கிறது. மேற்குவங்காள மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹசானுர் ஜமான் ஒரு பிரச்னையும் இல்லாதபோது பத்திரிக்கைகளுக்கு சென்று பிரச்னையை கிளப்பியுள்ளார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். தான் மீண்டும் வேலைக்கு போகும்போது எப்படிப்பட்ட வரவேற்பை பெறுவோம் என்பதை பற்றி பயப்படுவதாக சிரின் கூறியிருக்கிறார்.

யாராவது ஒரு பெண், ”புர்கா போடுவது எனக்கு பிடிக்கும்” என்றால் யாரும் தடுக்கபோவதில்லை. ஆனால், புர்கா போட்டுத்தான் பள்ளிக்கூடம் வரவேண்டும் என்று இப்போது தீவிரவாத மாணவர் சங்கங்கள் சொல்லுகின்றன. இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை என்ற போர்வையில் எல்லா சிறுபான்மையினரையும் தீவிரவாதிகளின் கையில் தள்ளும் வேலையை, அதுவும் ஆண் தீவிரவாதிகளின் கையில் தள்ளும் வேலையைத்தான் நமது அறிவுஜீவிகள் செய்துவருகிறார்கள். ஒரு இந்துத்துவ சார்புடைய குழு , பாரில் குடிக்கும் பெண்களை அவமானப்படுத்துவது எவ்வளவு கண்டிக்கத்தக்கதோ அதே போல கண்டிக்கத்தக்கதுதான் புர்க்கா போடவேண்டும் என்று பெண்களை வற்புறுத்துவதும். பாரில் குடித்த பெண்களை அவமானப்படுத்திய இந்துத்துவ அமைப்பு மீது கரித்து கொட்டியதில் ஒரு துளி அளவு, இந்த பெண்ணின் உரிமைக்கும் பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! இது காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் கடுமையான பரிணாமத்தை அடைந்ததை நமது அறிவுஜீவிகள் அறிந்தே இருப்பார்கள். புர்கா போடாததால் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டும், கால்களில் ஆசிட் ஊற்றப்பட்டும் பெண்கள் அச்சுறுத்தப்பட்ட பின்னால் முஸ்லீம் பெண்கள் புர்கா போடுவதை வழக்கமாகவே ஆக்கிகொண்டுவிட்டார்கள். ஆண்கள் புர்கா போட வேண்டும் என்று அச்சுருத்தி பத்து பேர் மீது ஆசிட் ஊற்றினால் நான் கூட புர்கா போடுவேன். ஆண்கள் விரும்பித்தான் புர்கா போடுகிறார்கள்; நான் விரும்பித்தான் புர்கா போடுகிறேன் என்று சத்திய வாக்குமூலம் கொடுக்கவும் தயார். இதுதான் இந்திய அறிவுஜீவிகள் விரும்பும் சுதந்திரமா?

புர்கா போடுவது ஒருவருக்கு டீசண்டாக இருக்கலாம். புர்கா போடுவது எனக்கு இண்டீசண்டாக இருக்கிறது. புர்கா போடும் ஒரு பெண் அந்த தெருவில் போகும் ஒவ்வொரு ஆணையும் அவமதிக்கிறாள்; ஒவ்வொரு ஆணின் பார்வையிலும் காம இச்சைதான் இருக்கிறது என்று அவள் கருதுகிறாள்; அது ஒவ்வொரு ஆணையும் அவமதிக்கிறது என்றே கருதுகிறேன்.

புடவையோ சல்வார் கமீஸோ அந்த பெண்ணுக்கு பிடித்த ஒரு உடையை அவள் அணிந்துகொள்வது அவள் விருப்பம். விரும்பி அணியும் அந்த உடைக்கு மேல் எதற்கு புர்கா?

வங்காள இஸ்லாமிய மாணவர்களின் டீசெண்ஸியும் கேரள PFI டீசென்ஸியும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது.

http://www.indianexpress.com/news/kerala-engineer-forced-to-wear-veil;-protect-her-hc-tells-police/659686/

Kerala engineer forced to wear veil; protect her, HC tells police

இந்த பெண் ஜீன்ஸை போட்டுவிட்டதால் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டார் என்று இவரை புர்கா போட வற்புறுத்தும் பிஎஃப்ஐ உறுப்பினர் முகம்மது கவுகோலி கூறுகிறாராம். ஜீன்ஸை போட்டதால் இஸ்லாமை வேறு அவமரியாதை செய்துவிட்டாராம். அப்படியென்றால் இந்தியாவில் எத்தனை கோடி பேர்கள் இஸ்லாமை அவமதிக்கிறார்கள் என்று இவர் கணக்கு போட்டிருக்கிறார் என்பதை பார்த்து ஆச்சரியமே வருகிறது. ஆண் முஸ்லீம்கள் ஜீன்ஸ் போட்டால் இஸ்லாமுக்கு அவமரியாதையா இல்லையா என்று தெரியவில்லை.

இந்த ஒழுக்க போலீஸ்தனம் கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி, இஸ்லாமிய தீவிரவாதிகள், தொலைக்காட்சிகள் என்று பரந்து விரிந்திருகிறது. இதனை இந்திய அரசாங்கமோ, கேரளாவை ஆளும் கம்யுனிஸ்டு கட்சியோ தடை செய்யவோ நிறுத்தவோ ஒரு முயற்சியும் எடுக்கவும் இல்லை. கம்யூனிஸ்டு கட்சி செய்யும் ஒழுக்க போலீஸ்தனத்தை கம்யூனிஸ்டு கட்சியே தடுக்கமுயலுமா என்ன? இதில் நீதிபதிகள் இந்த முகம்மது கவுகோலியை நீதிமன்றத்திற்கு வரச்சொல்லி கேட்டிருக்கிறார்கள். இது ஈவ் டீஸிங் கேஸில் உள்ளே பிடித்து போட்டு 12 வருட தண்டனை கொடுத்தால் இது போன்ற அராஜகங்களுக்கு முடிவு வரும். ஆனால் இந்திய அரசாங்கம் சிறுபான்மையினர்களது தீவிரவாதத்தை முக்கியமாக இது போன்ற தாலிபானியத்தை ஊக்குவிப்பதாகவே நடந்துகொள்கிறது. இந்த தாலிபானிய சமாச்சாரங்கள், இஸ்லாமிய தீவிரவாதம் கொடிகட்டி பறக்கும் காஷ்மீரிலும், கம்யூனிஸ்டுகள் சீராட்டி தாலாட்டி வளர்க்கும் மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் தொடர்ந்து நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

**

”டீசென்ட்” என்பதை வரையறுக்கும் அதிகாரத்தில் உள்ள இந்த மாணவர் சங்கத்தலைவருக்கு சில கேள்விகள் உண்டு. எது டீசென்ட் என்பதை வரையறை செய்ய எதனை பயன்படுத்தினீர்கள்? இந்தியாவில் சமண முனிவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறார்கள். சற்றேறக்குறைய 3000 வருடங்களுக்கு பழைய பாரம்பரியம் அவர்களது. நிர்வாணமாக கையில் ஒரு விசிறியும், ஒலிக்கும் பாதக்குறடுகளுமாக இந்த நிலத்தில் நடந்து செல்கிறார்கள். அவர்கள் டீசெண்ட் இல்லை என்று நீங்கள் அவர்களை கொன்றுவிடுவீர்களா? அல்லது அவர்களுக்கு புர்கா போட்டு விடுவீர்களா? இந்தியாவில் ஒரு உடையையும் உடுத்தாமல் பனிமலைகளில் தியானத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான இந்து துறவிகள் இருக்கிறார்கள். இவர்களது பாரம்பரியம் இன்னமும் நீண்டது. இவர்களுக்கும் புர்கா போட்டு விடுவீர்களா? இந்த அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? இந்திய அரசு கொடுத்திருக்கிறதா? அல்லது முஸ்லீம்களுக்கு மட்டும் எது டீசண்ட் என்பதை வரையறை செய்ய உங்களுக்கு யாரேனும் அதிகாரம் கொடுத்திருக்கிறார்களா? எல்லா முஸ்லீம்களிடமும் வாக்குக்களை வாங்கி அவர்கள் ஒத்துக்கொண்டு இந்த அதிகாரத்தை பெற்றீர்களா? அல்லது தான் தோன்றித்தனமாக இந்த அதிகாரத்தை எடுத்துகொண்டீர்களா?

**

இந்த கேள்விகளை நாம் கேட்காமல் இருந்தால் இவர்கள் தானாக எடுத்துகொண்ட அதிகாரத்தை நாமும் அங்கீகரித்தால் போல் ஆகிவிடும். அது மட்டுமல்ல, நான் முன்னரே பலமுறை எழுதியிருப்பதுபோல, இந்தியாவின் ஒழுக்கவிதிகளை நிர்ணயிப்பவர்கள் இவர்களைப் போன்றவர்களே. புடவை உடுத்துவது காட்டிமிராண்டித்தனம், பிகினி போடுவது ஒருவகை நாகரிகம், புர்கா போடுவது மற்றொரு வகை நாகரிகம் என்று நாகரிகத்துக்காக இந்தியர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் இருவரும் புடவை கட்டுவது காட்டிமிராண்டித்தனம் என்பதில் உறுதியாக
இருப்பார்கள்.

சிறுபான்மை மத உரிமைகள் என்ற பெயரில் இந்தியாவில் அரசாங்கம் வளர்ப்பது தாலிபானியம்தான். அதனை எவ்வளவு வார்த்தைகளிலும் “சொல்லாடல்களிலும்” மறைத்தாலும் அதுதான் வெளிப்படையாக சாதாரண பாமரனான எனக்கு தெரிகிறது.

**
(அடுத்த வாரம், தாலிபானியத்தை வளர்க்கும் இந்திய அறிவுஜீவிகள்)

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்