கள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

வே.சபாநாயகம்


‘கள்ளர்’ என்ற சொல் பொதுவாக ‘களவுத்தொழில் புரிபவர்’ என்ற பொருளிலேயே வழங்கக்
காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை ‘எனி இந்தியன் பதிப்பகம்’ வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள ‘கள்ளர் சரித்திரம்’ என்ற நூலைப்படித்த
பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் ‘கார்காத்த வேளாளர்கள்’
காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, “கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்” என்பதைச் சொல்லிக் குறைப்படுவதுண்டு. ஆனால் கள்ளர் குலத்தவர், நாம் நினைப்பது போல தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்கள் அரசாண்ட இனத்தவர், அவர்களும் அவர்கள் இனத்தைச் சேர்ந்த மறவர், தேவர், அரையர் ஆகியோரும் தமிழகத்தில் தொன்றுதொட்டு
கோலோச்சியவர்கள் என்று இந்நூல் மூலம் தெரியவருகிறது. இந்த இனத்தவர் நாளடைவில் நலிவடைந்து, பெருமை குன்றி பின்னாட்களில் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நமக்கு அவர்களது பெருமை தெரியவில்லை. இன்று அவ்வினத்தவர் மீண்டெழுந்து சமூகத்தில் பல உயரிய பதவிகளிலும் அரசியலிலும் முன்னணிக்கு வந்துவிட்டாலும் இன்னும் அவர்களில் பலர் ஏழ்மையில் இருப்பதும், குற்றப்பரம்பரையினராகவே எண்ணப்படுவதும் குறித்து வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இனத்தைச் சேர்ந்த தொண்டைமான் பரம்பரையினர், நாம் அறிய புதுக்கோட்டை மன்னர்ர்களாக இருந்ததையும், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பரம்பரையினர் மறவர் எனவும், கள்ளர் இனத்தவரான சோழ மன்னர்களில் பலர் ஆண்ட நாடுகள் ‘கள்ளர் நாடு’ என்றே வழங்கப் பட்டிருப்பதையும், முத்தரையர் இனத்தவர் பல்லவ மன்னர்களாக இருந்ததையும், அரையர் என்பார் சோழ பாண்டிய நாடுகளில் தன்னாட்சி புரிந்திருப்பதையும், நாயன்மார்கள், ஆழ்வார்களிலும் இவ்வகுப்பினர் புகழ் பெற்றிருந்ததையும் – சங்க இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும், அரசாங்க கெசட்டீர்களையும் சான்று காட்டி நாட்டார் அவர்கள் ‘கள்ளர்’களின் பெருமையை நிறுவுகிறார்.

இந்நூல் 1932ல் முதன் முதல் வெளியானது. இதன் முன்னுரையில் ஆசிரியர், கள்ளர் இனத்தவர்களான ஜமீன்தார்களும், பாளையக்காரர்களும் சமீபகாலம் வரை செல்வமும் செல்வாக்கும் உடையவர்களாக வாழ்ந்திருப்பதை ‘இவ்வகுப்பினரைக் குறித்து எழுதினோர் யாரும் சிறிதும் ஓர்ந்தவரெனக்
காணப்படவில்லை’ என்னும் காரணத்தாலேயே இந்நூல் எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். மேலும், இன்று கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும்
கீழ்நிலை அடைந்தவர்களாய்க் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மையால் அத்தகை
யோர் சிறிதேனும் நன்மையடையத் துணை புரிதலே இதனை எழுதியதன் முதல் நோக்கம் என்றும் குறிப்பிடு
கிறார்.

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில்
அதிகமும் காணப்படும் கள்ளர் எனப்படும் பெருங்குழுவினரின் முன்னோர்கள் – பழைய நாளில் எவ்விடத்தில்
எந்நிலையில் இருந்தனர், இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது, இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பன போன்றவை இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.

முன்னதாக மிகப் பழைய நாளில் இந்தியா முழுதும் பரவி இருந்த நாகர் என்ற ஒரு வகையினர் பற்றிய வரலாறு கூறப்படுகிறது. முதல் அத்தியாயத்தில், அவர்கள் வாழ்ந்த நாகநாடு பற்றியும், அங்கு வாழ்ந்த
நாகர்கள், அதன் பின் நிகழ்ந்த – தமிழ்நாட்டுக்கு திராவிடர், ஆரியர் வருகை, நால்வகை வருணப் பாகுபாடு எழுந்த சூழ்நிலை பற்றியெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில், நாக பல்லவ சோழர் மற்றும் கள்ளர் பற்றிய செய்திகளை, சங்ககாலம் முதற்கொண்டு அகநானூறு, புறநானூறு போன்ற பழம்பெரும் நூல்களில் பதிவாகியுள்ளவற்றை எடுத்துக்காட்டி கள்ளர் இனத்தவரின் பல்வேறு பிரிவினரான பல்லவர், சோழர், பாண்டியர் நாடாண்ட பகுதிகள், மற்றும் அவர்களின் இனத்தவரான மறவர், தேவர், அரையர் பற்றிய விவரங்களுடன் ஆசிரியர் கவனப்படுத்துகிறார்.

இவர்களின் பொதுப் பெயரான ‘அரையர்’களின் முற்கால நிலமை மூன்றாம் அத்தியாயத்தில்
சொல்லப்படுகிறது. கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த வகுப்பினர் என்று
வலியுறுத்திய பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களைப் பட்டியலிடுகிறார் ஆசிரியர்.
இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு
களிலிருந்து அறியப்படும் அப்பெயர்களாவன: கச்சிராயன், காடவராயன், காடுவெட்டி, காளிங்கராயன்,
சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான், நந்திராயன், நாடாள்வான், பல்லவ
ராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன். இவ்வாறே வேறு சில பெயர்களும் கல்வெட்டுகளில் காணப்படுவதையும் குறிப்பிடுகிறார். நூலின் இறுதியில் 348 பட்டப் பெயர்கள் கொண்ட பட்டியல் பின்னிணைப்பாக்கத் தரப்பட்டுள்ளது.

12வது நூற்றாண்டி எழுந்த தமிழ் நூல்களில் இருந்தும் இன்னோரின் உயர்ந்த நிலை வெளிப் படுவதை, முதற் குலோத்துங்கனுடைய முதலமைச்சராக இருந்த கருணாகரத் தொண்டைமானை உதாரண
மாகக் காட்டி நிறுவுகிறார். இனி, கள்ளர் சிற்றரசர்களாய் இருந்த காலத்தில் பல இடங்களில் அரண்கள் கட்டியதையும் பட்டியலிடுகிறார்.

நான்காம் அத்தியாயம் இக்குலத்தாரில், அரசரும் குறுநில மன்னருமாய் உள்ளாரின் வரலாறு காட்டப்
படுகிறது. இவற்றில் 1686 முதல் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான்களின் பரம்பரையினரின்
விவரங்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகள், ‘நாடு, நாட்டுக்கூட்டம்,
நாடுகாவல்’ என்னும் ஐந்தாம் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழரது நாடு தமிழ்நாடு என வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர் மிகுந்துள்ள நாடு கள்ளர்நாடு, எனவும் கள்ளகம் எனவும் வழங்கப் பட்டுள்ளது. சோழ நாடு, தொண்டை நாடு, திருமுனைப்பாடிநாடு, கொங்கு நாடுகள் ஆகியவை பல மண்டலங்களாகவும், கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டிருக்கின்றன. மதுரைக் கள்ளர்நாடுகள் என பத்து நாடுகள் சொல்லப்பட்டுள்ளன. கள்ளர் நாடுகளில் கிராம பஞ்சாயத்து வழக்கமாக இருந்ததை அவர்களது ஆட்சிமுறை பற்றிய தஞ்சை மாவட்ட கெசட்டை ஆதாரம் காட்டி ஆசிரியர் விளக்குகிறார். அடுத்து கள்ளர்
களின் நாடுகாவலின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்.

ஆறாம் அத்தியாயமான கடைசிப்பகுதி, கள்ளர் குலத்தில் புகழ் பெற்றிருந்த பக்தர்கள், ஞானிகள், புலவர்கள், வள்ளல்கள் பற்றி பல அரிய தகவல்களைத் தருகிறது. பெரிய புராணத்தில் கூறப்பட்ட திருத்
தொண்டர்களில் கூற்றுவர், நரசிங்கமுனையரையர், ஐயடிகள் காடவர்கோன், மெய்ப்பொருளார் ஆகிய ஐவரும்
இக்குலத்துக் குறுநிலமன்னராவர். திருமால் அடியவரான திருமங்கை ஆழ்வாரும் இவ்வகுப்பினர் தான். புலவர்கள் பலராலும் புகழ்ந்தேற்றப்பட்ட வள்ளல் அரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத ராசாளியாரும்
தமிழ்ப் புலமை வாய்ந்த பெண்மணிகள் சிலரும் இவ்வகுப்பினரின் பெருமைக்குக் காரணமாவர்.

இவ்வினத்து ஜமீன்தார்களும் பெருந்தனக்காரர்களும் பண்டுதொட்டுச் செய்த அறச் செயல்கள் பலவாகும்.
கோயில்களுக்குத் திருப்பணி செய்தும், அன்ன சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்தும், குளங்கள் வெட்டியும், தரும வைத்தியசாலை அமைத்தும் போற்றுதலுக்கு உரியவராக இருந்துள்ளனர். போர் புரிதலிலும் இவ்வகுபினர் விருப்பமுடையோராய் இருந்து வீரச்செயல்கள் பல புரிந்துள்ளனர்.

இவ்வளவு சிறப்பும் புகழும் பெற்று வாழ்ந்தவர்களின் இன்றைய நிலை குறித்து, இவ்வினத்தைச் சேர்ந்த
வரான நூலாசிரியர் நாட்டார் அவர்கள் கவலையும் வருத்தமும் தெரிவிக்கிறார். கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும், காவல் மற்றும் நீதித் துறைகளில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களாகவும் பலர் இருந்தபோதும், இவ்வினத்தவரில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர், பொருளிழந்து வாழ்க்கையை நடத்த முடியாதபடி தத்தளிப்ப வராய் இருப்பதையும். ஆடம்பர வாழ்க்கையாலும், மதுவுக்கும் தீயபழக்ககங்களுக்கும் அடிமையாகி சீரழிந்திருப் பதையும் வேதனையோடு குறிப்பிடுகிறார். இவர்கள் மீண்டும் பழைய உன்னத நிலைபெற சில யோசனைகளை தன் அவாவாகவும் சொல்கிறார்.

1932ன் வெளியான இந்நூலின் மறுபிரசுரத்தின் பதிப்பாளரான திரு.கோ.ராஜாராம் அவர்கள் தனது
பதிப்புரையில் ‘ஒரு சமூகத்தின் உபக்குழுக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக சாதியைக் காணும் முயற்சியை
இந்த மறுவெளியீடு தொடங்கி வைக்கும் என்று நம்புகிறோம். இந்தியச் சமூகத்தில் மட்டுமல்லாமல், ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற சாதி அமைப்பைப் பற்றியும், கீழைநாடுகளின் சமூக அமைப்பு பற்றியும் மேலும் ஆய்வுகள் வளர இந்நூல் ஒரு புதிய தொடக்கமாய் அமையும் என நம்புகிறோம்’ என்கிறார். நூலை வாசித்து முடித்த
பின்னர் நமக்கும் அந்த நம்பிக்கை ஏற்படவே செய்யும். 0

நூல்: கள்ளர் சரித்திரம்
ஆசிரியர்: நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்