இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 7

This entry is part of 37 in the series 20090625_Issue

நேசகுமார்சகோதரர் வஹ்ஹாபி அவர்களுக்கு, நண்பர் வெங்கட் சாமிநாதன் அளித்திருந்த விளக்கங்களை கண்டேன். மிகவும் அழகாக, அவருக்கே உரிய nostalgical நடையில் எழுதியுள்ளார். இதை தமிழில் எப்படி சொல்வது என்று சரியாகத் தெரியவில்லை. இனிய பழங்கனவு நடை என்று சொல்லலாமென்று நினைக்கிறேன். (அப்படி சொன்னால், அது ஆங்கில வார்த்தையை படிக்கும்போது எளிதாக புரிந்து கொள்வது போல புரிந்து கொள்ளப்படுமா என்பது தெரியாததால், இரண்டையும் எழுதுகிறேன் ).

மிகவும் அழகாக, நான் பல கட்டுரைகளில் திரும்பத் திரும்ப சொல்லும் விஷயத்தை வெ.சாவும் சொல்கிறார்:

//ஒரு காலத்தில் சதி, உடன் கட்டை ஏறுதல் எல்லாம் ஹிந்து சமுதாயத்தில் ஆங்காங்கே சில இடங்களில் இருந்தன தான். அப்போதும் அக்கொடுமைகளுக்கெல்லாம் சாஸ்திர நியாயம் சொன்னார்கள். இக்கொடுமைகளை எதிர்த்தவர்களை ஹிந்து விரோதிகள் என, மிலேச்சர்கள் என குற்றம் சாட்டினர். எந்த சாஸ்திரத்தில் எழுதியிருக்கிறது? என்று ராஜா ராம் மோஹன் ராய் கேட்டார். பதில் இல்லை. அது ஒரு கால கட்டம். அதைத் தாண்டி ஹிந்து சமுதாயம் வந்து விட்டது. யூத கிறித்துவ சமுதாயம் பெண்ணுக்கு கல்லெறிந்து சாவு என்று தண்டனை என்று கட்டத்தைத் தாண்டி வந்துவிட்டது போல. இன்று இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் மத, சாஸ்திர நியாயம் சொன்னால் சிரிப்பார்கள்.//

***

இதுதான் ஏனைய சமுதாயங்களுக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம். மற்றவர்கள் மதத்திலிருந்து, ஜாதியிலிருந்து, குல வழக்கங்களிலிருந்து, பாரம்பரியம் என்ற பெயரில் நிகழ்ந்தவைகளிலிருந்து தம்மை விலக்கி, தள்ளி நின்று பார்க்கிறார்கள். நாகரிகத்தை, முன்னேற்றத்தை, புதிய சமுதாய வழக்குகளை எடைபோட்டு ஏற்கத்தோன்றினால் ஏற்கின்றார்கள். நிராகரிக்க வேண்டும் என்று அவரவர் மனதிற்கு தோன்றினால் நிராகரித்து முன்னேறுகிறார்கள்.

ஆனால், இஸ்லாமிய சமுதாயம் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த காலத்தை பொற்காலமாக கணிக்கிறது. அப்போது நிகழ்ந்தவை சரிதான், நியாயமானதுதான் என்று வாதிடுகிறது. அக்காலத்தை மீண்டும் இன்று கொண்டுவர முயல்கிறது.

தாலிபான், அடிப்படைவாத இஸ்லாம் மீட்சி பெறும் பாகிஸ்தானியப் பகுதிகளில் இருக்கும் நிலவரம் பற்றிய பிபிசி குறும்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு சிறு பெண் நான்காம் வகுப்புக்கு மேலே பெண்கள் பள்ளிக்கு செல்லக் கூடாது என்று தாலிபான் மதக்கட்டளை பிறப்பித்திருப்பதாக (ஃபத்வா) சொன்னது. அதைப் பற்றி அந்த விவரணப்படத்தில் விரிவாக சொல்லவில்லை. ஆனால், பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அதன் அடிப்படை விளங்கியது. அது இதுதான் – முஹம்மதுவின் இளம் மனைவி ஆயிஷாவோடு அவர் வாழ்க்கை நடத்தத் துவங்கியது ஆயிஷாவின் ஒன்பதாவது வயதில் என்ற ஒரு கருத்து இஸ்லாமிய அறிஞர்களிடையே/முல்லாக்களிடையே உண்டு. ஆறு வயது, ஏழு வயது என்றெல்லாம் கருத்து இருந்தாலும், அதிகபட்சம் அதை நீட்டிக்க ஏதுவாக இருக்கும் ஹதீது இந்த ஒன்பது வயதில் இல்லற வாழ்க்கை துவங்கியது என்ற ஹதீதுதான். எனவே இதை தாலிபான்கள் பிடித்துக்கொண்டு ஐந்து வயதில் பள்ளியில் சேர்ந்தால், ஒன்பது வயதாகும்போது நான்காம் வகுப்பிற்கு ஒரு பெண் குழந்தை வரும். ஆகவே, ஒன்பது வயதில் ஒரு பெண்(குழந்தை) இல்லற வாழ்க்கையில் ஈடுபட குறைந்த வயது என்பது கடவுளின் கட்டளை, அதனால் ஒன்பது வயதிற்கு மேலும் ஒரு பெண்(குழந்தை) ஆண்களை பார்த்தால், பேசினால் அது பாலியல் சீர்கேட்டிற்கு வழிகோலும், கடவுள் அதைக் கண்டு கோபப்படுவார், எனவே தாம் கடவுளின் வழிகாட்டுதலை, சத்திய மார்க்கத்தை, நேர் வழியை, மெய் வழியை உலகில் நிலைநாட்ட வேண்டுமென்றால், நான்காவது வகுப்பிற்கு மேல் இருக்கும் பெண்களின் கல்விநிலையங்களை எல்லாம் குண்டு வைத்து தகர்க்க வேண்டும், எரித்துவிட வேண்டும், அது மெக்காவுக்கு மேலே ஏழு வானங்களுக்கு அப்பால் அர்ஷில் அமர்ந்து உலகத்தை கண் கொத்திப்பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளின் உள்ளத்தை குளிரச்செய்து அவர் தமக்கு ஹூரிகளை, கை படாத கன்னிகளை தர ஏது செய்யும் என்று கருதியிருக்கின்றனர்.

ஆனால், இது சில மாதங்களிலேயே போய், எல்லா பெண்கள் பள்ளிக்கூடங்களையும் அவர்கள் அழிக்கும்படி ஆனது. மதவாதம் என்பது இப்படித்தான் செயல்படும். அது ஒரு முடிவில்லா கொடுஞ்சுழல். எல்லோரையும் மேலும் மேலும் கீழே கொண்டு போய்க்கொண்டே இருக்கும். அதுதான் இஸ்லாமிய அடிப்படைவாத விஷயத்தில் நிகழ்கிறது. முதலில் கேரளாவில் இஸ்லாமியப் பெண்கள் சுதந்திரமாக உடையணிந்துவந்தார்கள். பின்பு, அந்நிய ஆடவர்கள் வந்தால் பேருக்கு தலையில் துணியை இழுத்துவிட்டுக் கொள்வார்கள். அதன் பின்னர் முழு உடலை மறைக்கும் படி துணியை சுற்றிக்கொண்டார்கள்(இப்போதும் கேரளாவில் செட்டிலான பல தமிழ் இராவுத்தர் வீட்டு பெண்கள் இதைக் கடைப்பிடிக்கின்றனர், மதத்தின் பல அங்கங்களிலும் அங்கே இது நீள்கிறது. இது போன்ற விஷயங்கள் காரணமாகவே மாப்ளாக்கள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மலையாள முஸ்லீம்களை தாழ்வாகப் பார்ப்பதும் உண்டு). பின்பு புர்கா வந்தது. இப்போது தாலிபான் புர்காக்களை எங்கும் பார்க்க முடிகிறது. அடுத்ததாக, முழுவதும் மூடியிருந்தாலும், சவுதியில் இருப்பது போல ஆண் துணையின்றி தனியாக முஸ்லீம் பெண்கள் வரக்கூடாது என்ற மதக்கட்டளை கூட வரலாம்.

***

இங்கே ஒரு முக்கியமான, ஆனால், இந்த திண்ணை விவாதங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை குறிப்பிட வேண்டும். வெங்கட் சாமிநாதன் என்ற பிறப்பால் பிராம்மண ஜாதியைச் சேர்ந்தவர்கள் தற்போது மதச்சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் துறப்பதையும் நிந்திப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால், தமிழ் சமுதாயத்தில் பிராம்மண வெறுப்பு என்பது எப்போதோ நிகழ்ந்த நிகழ்வுகளை, எப்போதோ நிலவிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட குழுவை குற்றம் சாட்டுவதிலும், நிந்திப்பதிலும், இகழ்வதிலும், வெறுப்பை பரப்புவதிலுமே இருக்கின்றது.

அதே விஷயங்களை இன்று செய்யும், அதைவிட வன்மையாக செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை எந்த திராவிட இயக்கத்தவரும் கண்டிப்பதில்லை, நிந்திப்பதில்லை. இவ்வளவு ஏன், அப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வது கூட இல்லை.

***

பிராம்மண வெறுப்பு என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆபிரகாமிய கருத்தியல். ஆபிரகாமிய மதங்களில் எப்போதும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். அவை தன்னையொத்த கருத்தியல்களையே உடனடியாக அழிக்கப்பட வேண்டியவையாக கருதும். உதாரணமாக, பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால் இந்துக்களை விட அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் அதிகம் வெறுப்பது அஹமதியா முஸ்லீம்களை.

உலக அளவில் எடுத்துக் கொண்டால், சிலை வழிபாடு செய்யும் இந்துக்களை விட அதிகம் வெறுப்பு பரப்பப் படுவது யூதர்களுக்கு எதிராகத்தான். இத்தனைக்கும் யூதர்கள் ஏகத்துவத்தை ஏற்பவர்கள், அந்தக் கோட்பாடு புறப்பட்டதே யூதர்களிடமிருந்துதான். ஜிஹாத், பிராம்மண வெறுப்பு ஆகியவற்றின் ஆதிமூலம் யூத சமுதாயம் தான்.

ஆபிரகாமியக் கருத்தியலை ஒத்ததுதான் பிராம்மணீயம். இங்கே நான் இதைக் குறிப்பிடும்போது ஒரு விளக்கத்தை அளிக்க வேண்டும். திராவிட இயக்கம் பிராம்மணீயத்தை நிந்திப்பதாக சொல்லி பிராம்மணர்களை நிந்தித்தது. ஆனால், நான் பிராம்மணீயத்தை நிந்திக்கவும் இல்லை, அதனுடன் பிராம்மண ஜாதியில் வந்தவர்களை சேர்த்துப்பார்த்து நிந்திக்கவும் இல்லை. பிராம்மண வெறுப்பை நிந்திக்கும்போது, அதனுடன் சேர்த்து பிராம்மணீயத்தை ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ விரும்பவில்லை. இதே விஷயம் இஸ்லாத்துக்கும் பொருந்தும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விமர்சிப்பது வேறு, இஸ்லாமியர்களை வெறுப்பது வேறு. இந்த வித்தியாசத்தை நான் ஆரம்பத்திலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன். அதனால் தான் எனது எழுத்துக்களில், பேச்சில், வாதங்களில் எப்போதும் அடிப்படைவாத இஸ்லாத்தை குறிப்பிடுகிறேன் அல்லது பொதுவான இஸ்லாமியர்களிடமிருந்து அடிப்படைவாதிகளை பிரித்துக்காண்பதற்கு இஸ்லாமிஸ்டுகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறேன். தனிப்பட்ட முறையில் நான் மிகவும் அன்பு செலுத்தும், நட்பு பாராட்டும் இஸ்லாமிய நண்பர்கள், தோழிகள் உள்ளனர்.

***

ஆபிரகாமியத்துக்கு தனது இனம் இந்த பிராம்மண இனவாதம் – பிராம்மணீயம் என்பது அடியாழத்தில் புரிந்திருக்கிறது என்றே கருதுகிறேன். அதனால் தான் அது இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் தனது பிரதான எதிரியாக பிராம்மணர்களைக் கண்டது. யூத எழுச்சியிலும், கிறிஸ்துவ பரவலிலும் இதை காணலாம். முதலில் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டது பாகன்களிடையே இருந்த பிராம்மண(அதாவது இந்திய பிராம்மண ஜாதிகளைப் போன்ற) ஜாதியினர்தான்.

இதைப் புரியாமலேயே மூளைச்சலவை செய்து ஏற்றோம் நாம். விளைவு, அப்பட்டமான வெறுப்பு பிராம்மணர்கள் மீது பரப்பப் பட்டது. இதன் வீச்சு இல்லாத பிராம்மணரல்லாதோரை நான் கண்டதில்லை. நான் உட்பட அவ்வப்போது இதற்கு பலியானதும் உண்டு. ஒரு பெரிய மீம் ஆக, சிந்திக்காமல் நாம் உணர்வு நிலையில் இருந்து செயல்படும் கருத்தியலாக இந்த பிராம்மண வெறுப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டுள்ளது.

இஸ்லாமிய ஆய்வை மேற்கொண்ட ஒரு கட்டத்தில் நான் இந்த பிராம்மண வெறுப்பு, அதன் அடிப்படைகள் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் மீதும் இஸ்லாமிய சமூகத்தினுள் நிலவுவதைக் கண்டேன். நம்மிடையே பிராம்மணர்கள் பற்றிய பிரச்சாரக்கற்பனைகள் பல உண்டு. பிராம்மணர்கள் கோழைகள் என்ற கற்பிதம் உண்டு. இது ஒரு பெரிய புரட்டு என்பதும் அதை விளக்க தனியே கட்டுரை எழுத வேண்டும் என்பதும் தனி விஷயம் என்றாலும், அதே கற்பிதம் இந்து சமுதாயம் பற்றி இஸ்லாமிய சமூகத்தில் நிலவுவதைக் கண்டேன். அடிபணிந்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆனார்கள், ஆயிரமாண்டுகளாக அடிபணியாதவர்களே, சுதந்திர விரும்பிகளே இந்துக்களாக இன்றும் நிற்கின்றார்கள் என்பதை எந்த இஸ்லாமியரும் கவனிப்பது கிடையாது.

அதே போல, பிராம்மணன் என்றால் சூழ்ச்சி செய்பவன் என்ற கருத்தாக்கம் நம்மிடையே உண்டு. பிராம்மணன் என்பவன் நயவஞ்சகன், எதிர்த்து போரிடாமல் முதுகில் குத்துபவன், ஒழுக்கமற்றவன், வாழ்க்கை நடத்துவதற்காக எதையும் செய்யத் தயங்காதவன் என்ற வெறுப்பியல் கருத்துகள் தமிழ் சமுதாயத்தில் திராவிட இயக்கங்களால் பரப்பப்பட்டதைப் போலவே, இந்துக்களைப் பற்றி இஸ்லாமியரிடையே அதே கருத்துக்கள், அதே வார்த்தைகள், வசவுகள் நிலவுவதைக் கண்டேன். இது ஆரம்பத்தில் பெரிய அதிர்ச்சியாகக் கூட இருந்தது.தமிழ் இஸ்லாமியர்களிடையே புழக்கத்தில் உள்ள ‘மாவு’ என்ற தமிழரைக் குறிக்கும் வசைச் சொல்கூட பெரும்பாலும் கோழை என்ற அர்த்தத்தில் பொதுவாக பயன்படுத்தப் படுகிறது. இப்போது வஹ்ஹாபிசம் பரவப்பரவவே எங்கும் காபிர் என்ற வார்த்தை தமிழரைக் குறிக்க பயன்படுத்தப் படுகிறது.

***

இஸ்லாமியர்களிடையே காபிர்களுக்கு எதிரான இந்த வெறுப்பியல் தங்களது வித்தியாசங்களை மறைத்துக்கொள்ளவும், அதை மீறிய ஒரு சகோதரத்துவத்தை கொண்டு வரவும் பயன்படுவதைப் போலவே, தமிழ் சமூகத்தில் நம்மிடையே உள்ள பிரச்சினைகளை, வித்தியாசங்களை மூடி மறைக்க, கண்டும் காணதது போல் மூளைச்சலவை செய்ய பிராம்மண வெறுப்பு பயன்படுகிறது.

இஸ்லாமிய சமூகத்தில் மேல் வர்க்கம் இதை தமக்கு வசதியாக பயன்படுத்திக் கொள்வதைப் போலவே, நமது இடைப்பட்ட ஜாதிகள் (intermediary castes), இந்த பிராம்மண வெறுப்பை வசதியாக பயன்படுத்திக் கொண்டன.

முதலில் இதனால் பெரும் பலன் பெற்றது வெளாள சாதிகள் தாம். திராவிட இயக்கத்தினால் பெரும் பலன் பெற்றது வெளாள சாதிகள். பின்பு எம்.ஜி.ஆரின் பிளவு, அவரின் வளர்ச்சி வெளாளருக்கு அடுத்த படிநிலையில் இருந்த சாதிகளுக்கும், பாமகவின் பரவல் வளர்ச்சி அடுத்த படிநிலையில் இருந்த சாதிகளுக்கும் (பாமக எதிர்பார்க்கவில்லை என்றால் கூட அதன் வளர்ச்சி தென் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வன்னியரல்லாத மிகவும் பிற்பட்ட சாதிகளுக்கு உதவி செய்தது) உதவியது. இப்படி இடைப்பட்ட சாதிகள் தொடர்ந்து எல்லா வசதிகளையும் பெற பிராம்மண வெறுப்பு என்ற கருத்தியல் பெருந்துணை புரிந்தது.

இதனால் அடைந்த பலன்கள் பல், வியாபாரத்தில் – அரசியலில் – நிலவுடமையில் – கல்வியில் – பதவிகளில் – அதிகாரத்தில் – வசதியில் – சமூக அந்தஸ்தில் இன்று பிற்பட்ட சாதிகளின் சொர்க்க புரியாக தமிழ்நாடு விளங்குகிறது. எனது சாதியினால் வாழ்க்கையில் எத்தனை கதவுகள் திறந்திருக்கின்றன என்று இப்போது பின்னோக்கிப் பார்க்கிறேன். இதனால், ஒடுக்கப்பட்டது பிராம்மணரிடையே பின் தங்கியிருந்தோரும், தலித்துகளிடையே பெரும்பான்மை சமுதாயமும் தான். பிராம்மணர்களிடையே இருந்த உயர்வர்க்கம், நடுத்தர வர்க்கம் ஆகியவை சமாதானப்படுத்திக்கொண்டு ஒட்டி வாழ்ந்தது அல்லது புலம் பெயர்ந்தது. தலித்துகளிடையே புத்திசாலிகள் அந்தஸ்தும், வசதியும், அதிகாரமும் பெற்று தமது சமுதாயத்திடையே ஒரு சிறு குழுவை தமக்கென உருவாக்கிக் கொண்டனர். வெளிப்படையாக இல்லையென்றாலும், மிக இயல்பாக அந்த குழுவிடம் பி.ச/மி.பி.ச ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு எல்லா வசதிகளையும் தந்து, அந்த குழுவர்க்கத்தின் செயல்பாடுகளுக்கு பாதுகாப்பளித்து ஆனால், இது ஒரு சிறு குழுவாக மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொண்டது.

***

இந்த பார்கெய்ன்/பரிவர்த்தனை மிகவும் இயல்பாக, மெதுவாக, யாரும் கவனிக்கா வண்ணம் நிகழ்ந்திருப்பதைப் பார்க்கலாம். எந்தவொரு தலித் பிரமுகரையும் எடுத்துக் கொண்டால் சொந்தத்தில் ஒரு எம்.எல்.ஏ, எம்.பி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், நீதிபதிகள் என்று இருப்பதைப் பார்க்கலாம். சிற்சில சமயங்களில் ஒரே குடும்பத்தில் எல்லாமே குவிந்திருப்பதைப் பார்க்கலாம். இப்படி ஒரு குழு உருவானது திட்டமிட்டு நிகழவில்லை என்றாலும், அப்படி உருவாகிறாற்போல் பொதுசமுதாயம் பார்த்துக் கொண்டது. இது அவர்களுடன் ஒரு எழுதப் படாத ஒப்பந்தத்திற்கும், பெரும் எண்ணிக்கையிலான தலித் சமுதாயத்தின் கவனம், கோபம் பிற்பட்ட சமுதாயத்தின் மீது திரும்பாத வகையிலும் கவனமாக பாதுகாப்பு சுவரொன்றை ஏற்படுத்தியது.

இதுவே இன்றைய இஸ்லாமிய சமூகத்திலும் நிகழ்வதைப் பார்க்கலாம். திட்டமிட்டு சவுதி, பாகிஸ்தான் போன்ற நாடுகளால் பரப்பப்படும் அடிப்படைவாதம், முன் வைக்கப்படும் வஹ்ஹாபிசம் அங்கே இருக்கும் ஆளும் உயர்வர்க்கத்திற்கு பேரம் பேச வசதியாக இருக்கிறது. அவர்களது நிலை தாழாமல், மற்ற இஸ்லாமியர்களை தள்ளி வைக்க, அடக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப ஏதுவாக இருக்கிறது. வழிகேடு, சீர்கேடு, தமிழ் சமுதாயத்தின் ஒழுக்கக் கேடுகள் என்று தாவா செண்டர்களின் கணினி மையங்களிலிருந்து, கொடையாக அளிக்கப்பட்ட மடிக்கணினிகளிருந்து எலக்ட்ரானின் புலம்பலை, பிரச்சாரத்தை நிகழ்த்தும் வஹ்ஹாபிகளில் எவரும் சவுதி அரச குடும்பத்தை, அரபி உயர்வர்க்கத்தை, அதன் சீர்கேடுகளை, அதன் ஒடுக்குமுறைகளை எதிர்க்க மறுப்பதை, கவனிக்க மறுப்பதை காணலாம். தமக்குள்ளாக நிலவும் பாரபட்சங்கள் இந்து சமுதாயத்தில் நிலவுவதை விட அதிகம் என்பதை காணமறுக்கிறார்கள் அவர்கள். இத்தனை நூற்றாண்டுகள் கழித்து சவுதியின் மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு கறுப்பு இமாம் நியமிக்கப் பட்டிருக்கிறார். பிலால் பற்றி கவிதை என்ற பெயரில் எதையவது கிறுக்கும் வஹ்ஹாபிகள் இத்தனை நூற்றாண்டுகாலம் நிலவிய இனவெறியை, இனவெறுப்பை கவனிப்பதும் இல்லை, கவனத்தில் கொண்டு வந்தாலும் கூட அதற்குப் பின்னால் எதையாவது இறைவனின் திட்டத்தை கண்டுபிடித்து முன்வைக்கிறார்கள். ஈராக்கில் காயடிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட கறுப்பின அடிமைகளின் கதை சொல்லும் குடியிருப்புகள் இன்று அமெரிக்க படை அங்கே சென்ற பின்பே உலகின் கவனத்திற்கு வருகின்றன. சவுதியின் கறுப்பினத்தவர்களைப் பற்றி, அவர்கள் மீது அங்கே நிலவும் ஒடுக்குமுறை பற்றி, சூடானில் அழித்தொழிக்கப்பட்ட மில்லியன் கணக்கிலான கறுப்பினத்தவர் பற்றி இன்றும் இஸ்லாமிய சமூகம் கவனிப்பது கிடையாது.

இங்கே கிளப்பப் படும் பிராம்மண வெறுப்பியல் என்பது இடைப்பட்ட சாதியினருக்கு தரும் பாதுகாப்பை, வசதியை, உப்பரிகையைப் போலவே அங்கும் இந்த பிறமத/பிற சமூக வெறுப்பு உயர் சமூகத்திற்கும், அந்த உயர்சமூகத்தை எட்ட முயலும் இடைப்பட்ட சமூகத்திற்கும் வசதியைத் தருகிறது. வசதி வரும்போது அது நபியின் சுன்னாஹ்வை பின்பற்றுவதால் கிடைக்கும் வளப்பேறாக அங்கே கருதப்படுகிறது. இங்கேயோ நாங்களிங்கே ‘பெரியார் இல்லையென்றால் நாமெல்லாம் ஆடு மேய்த்துக் கொண்டிருப்போம்’ என்று எதோ பக்கத்தில் கேரளாவில், கர்னாடகாவில், ஆந்திராவில் இடைப்பட்ட சாதிகள் எல்லாம் பிராம்மண சேவகம் செய்து கொண்டிருப்பது போன்ற கற்பனையில் உழன்று கொண்டிருக்கிறோம். பெரியார் துதி என்பது நபி புகழ்சி போன்ற ஒரு மத அந்தஸ்தை பெற்றுவிட்டது நம்மிடையே.

***

இஸ்லாமிய ஆய்வு என்பது எனது பல பார்வைகளை மாற்றியிருக்கிறது. எல்லா வகையிலும் நான் மாறிவிட்டதாக, மேம்பட்டுவிட்டதாக நான் கருதவில்லை. சில சமயங்களில் இஸ்லாத்தைப் பற்றி நான் சொல்லும் அதே குற்றச்சாட்டை நானும் செய்கிறேன் என்று கூட தோன்றும். சிற்சில சமயங்களில் வாழ்வே பல படிநிலைகளில் இஸ்லாமாகக் கூட தென்படுவதும் உண்டு. அப்படிநிலையில் மேலே இருப்பது இஸ்லாம், அவ்வளவே.

ஆனால், மாற்றங்களை முழுமையாகக் கொண்டு வரவில்லை என்றாலும் கூட அடிமனதில் நெருடலை, பார்வையில் ஒரு புதிய கோணத்தை, புரிந்துணர்வில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அதில் ஒரு முக்கியமான மாற்றம் இந்த பிராம்மண சாதி பற்றிய பார்வை. இந்த வெறுப்பியலைப் பற்றி, கருத்தியலைப் பற்றி கொஞ்சமாவது எழுதுவதன் மூலம் நான் எனது குற்றவுணர்வை குறைத்துக் கொள்ள முயல்கிறேன். இதைச் செய்யாமல், ‘இஸ்லாமிய சமூகத்தினுள் இருக்கும் பெரும்பான்மையோர் காபிர்களுக்கு எதிரான வெறுப்பியலை மசூதியினுள், தமது சமூகத்தினுள் எதிர்க்கவில்லை, தமக்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக அமைதி காக்கின்றனர்’ என்ற எனது குற்றச்சாட்டுக்கு தார்மீக நியாயத்தை எனக்குள்ளாகவே கற்பித்துக் கொள்ளவும் முயல்கிறேன். இஸ்லாமிய சமூகத்தின் வசதி, சவுகரியம் என்பது காபிரின அழிப்பின் மீது கட்டமைக்கப் பட்டிருப்பதைப் போலவே நானும், நான் சார்ந்த சமூகமும் அடித்தள மக்களின் உழைப்பையும், வேறு எவருக்கோ கிட்டவேண்டிய கனிகளை சூழ்ச்சியால், வன்முறையால் பறித்துக் கொண்டிருப்பதையும் உணர முடிகிறது. இதிலிருந்து வெளிவர முடியவில்லை, அது சாத்தியமில்லை, அதற்கான தைரியம் எனக்கில்லை என்பது புரிந்திருந்தாலும், இந்த புரிதலை ஏற்படுத்தியதற்காகவாவது இந்த இஸ்லாமிய ஆய்வுக்கு நன்றி சொல்ல வேண்டும்.


நேசகுமார்

http://nesakumar.blogspot.com

Series Navigation