யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6

This entry is part of 40 in the series 20080522_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


ஒலிம்பிக் விளையாட்டின் வரலாறு ஆதி கிரேக்கர்களின் வரலாற்றோடு சம்பந்தப்பட்டது, உணர்விலும், பங்கேற்ற விதத்திலும் அந்த நாள் கிரேக்கர்கள், இன்றைய ஒலிம்பிக் நடைமுறைகளினின்று பெரிதும் மாறுபட்டிருக்கின்றனர். இன்றைக்கும் பங்கேற்கும் நாடுகளுக்கு அந்நாடுகளைச் சேர்ந்த வீரர்களால் பெருமை என்பது உண்மையேயெனினும், அக்காலத்தில் மதச் சடங்கென்ற பேரில், கடவுளுக்கான காணிக்கை மற்றும் வழிபாடுகளுள் ஓர் அங்கமாக அது இருந்து வந்திருக்கிறது. தனிமனிதர் வெற்றி தனிமனிதர் சாதனை என்ற உணர்விலிருந்து, தங்கள் சார்ந்த சமுதாயத்தின் மகிழ்ச்சி, கூட்டுச் சாதனை என்ற உணர்வு பெரிதாகப் போற்றப் பட்ட காலம். தவிர உடல் பயிற்சி என்பது கிரேக்கர்களுக்கு முக்கியம்: பலம்வாய்ந்த உடல், மனதை நன்றாக வைத்திருக்குமென்ற நம்பிக்கை. ரோமானியர்கள் இதனையே Mens sana in corpore sano” என்று சொல்ல ஆரம்பித்தார்கள், அதாவது ‘a sound mind in a sound body’.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

என்று தமிழில் திருமூலர் சொல்லவும் படித்திருக்கிறோம். இலியாடில் வருகிற புகழ்பெற்ற ஓட்டப்பந்தயமும், கவிஞர் ஹோமெர் வர்ணணைக்கு உட்பட்ட பரிசுப்பொருட்களையும் நினைவிருக்கிறதா, மிகவும் சுவாரசியமாக எழுதியிருப்பார். இலியாடில், போட்டி என்பது ஓட்டத்திற்கு மாத்திரமல்ல, கவிதைக்கும் இசைக்குங்கூட நடக்கிறது. ஒலிம்பிக் போட்டியின் தோற்றம், கர்த்தாக்கள் குறித்த புராணக் கதைகளுக்கும் குறைவில்லை. பெலோப், ஹெர்க்குலீஸ் இருவரையும் தொடர்பு படுத்திக் கதைகளுண்டு.

முதல் ஒலிம்பிக் கி.மு. 776ல் நடைபெற்றதாக வரலாறு. ஜேயுஸ் கடவுளின் பேரால் நடத்தப்பட்ட ஆரம்பகால போட்டியில் எலிஸ், பைஸா நகரத்து வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆலயத்தின் பின்புறம் வளர்க்கப்பட்ட ஆலிவ் மரத்தின் இலைகளில் தயாரிக்கப்பட்ட வளையங்கள் கீரிடமாகச் சூட்டப்பட்டன. வீரர்கள் அவற்றைத் தலையிலணிந்தபடி திடலில் சுற்றி வந்திருக்கிறார்கள். நாளடைவில் மற்ற கிரேக்கர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர். இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர்களால் வழங்கப்பட்ட ரோமானியக் குடியுரிமை, கிரேக்கர் அல்லாதவர்களையும் போட்டியில் பங்கு பெற வைத்தது.

இன்றைய ஒலிம்பிக் போட்டியை நினைவுறுத்தும் ஆரம்ப கால பந்தயங்களில் பன்னிரண்டு நாடுகள் கலந்து கொண்டிருக்கின்றன. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் நிறுத்திவைக்கபட்ட இப்பந்தயம், மீண்டும் 1896ம் ஆண்டிலிருந்து புத்துயிர் பெற்றதெனலாம். 1916, 1940, 1944 உலகப்போர்கள் காலத்தில் ஒலிம்பிக் விளையாட்டுகள் கிடப்பில் போடப்பட்டன. 1948லிருந்து மீண்டும் ஒலிம்பிக் பந்தயம் தொடங்கப்பெற்று நான்காண்டுகளுக்கொருமுறை நடந்து வருகிறது.

1964ல் ஜப்பான், 1988ல் தென்கொரியா, 2008ல் சீனா என்று, ஒலிம்பிக் விளையாட்டினை நடத்தும் பெருமையை மீண்டும் ஆசியா பெற்றிருக்கிறது. பல துறைகளிலும் வளர்ந்து வரும் நாடென்ற வகையில் சீனாவுக்கென்று இருபத்தொன்பதாவது ஒலிம்பிக் விளையாட்டினைத் தேர்வு செய்ததில் நியாயமிருந்தது. ஒலிம்பிக் விளையாட்டினை உலக நாடுகள் பங்கேற்கும் விழாவென்று சொல்லிக்கொண்டாலும், இதுவரை ஐரோப்பியர்கள் அல்லது ஐரொப்பிய வம்சாவளிகளுக்கே அதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் கிடைத்து வந்திருக்கின்றன. ஆக சீனாவில் முதன்முறையாக ஒலிம்பிக் விளையாட்டு என்பது வரவேற்கக்கூடியதே.

ஒலிம்பிக் விளையாட்டில் உலக அரசியலும் அவ்வப்போது எதிரொலிப்பதுண்டு. 1972ம் ஆண்டு மேற்கு ஜெர்மனி ம்யூனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தின்போது பாலஸ்தீனிய தீவிரவாதிகள், பதினோரு இஸ்ரேல் ஒலிம்பிக் வீரர்களை படுகொலை செய்தனர். 1976ம் ஆண்டு கனடாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 36 ஆப்ரிக்க நாடுகள் பங்கேற்கவில்லை. அப்போதைய இனவாத வெள்ளையர் பிடியிலிருந்த தென் ஆப்ரிக்க நாட்டிற்கு தனது ருக்பீ பந்தாட்டக் குழுவை நியூசிலாந்து அனுப்பிவைத்ததை ஆப்ரிக்க அரசுகள் ஏற்கவில்லை. நியூசிலாந்து, ஒலிம்பிக்கில் பங்கேற்பதை அவர்கள் எதிர்த்தனர். 1980ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில், சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான ஆக்ரமிப்பிற்கு ஆட்சேபம் தெரிவிக்கிற வகையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கலந்துகொள்ளவில்லை. 1952ல் முதன் முதலாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட சோவியத் யூனியன் தன் பங்கிற்கு 1984ல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்த போட்டியில் இடம்பெறாமல் விலகிக்கொண்டது.

சீனாவுக்குத் திபெத்தால் பிரச்சினை, ஒலிம்பிக்கினை முன் வைத்து. மற்றபடி சீனாவால்தான் திபெத்துக்குப் பிரச்சினை என்பது உலகறிந்த செய்தி. இன்றைய திபெத்தின் பரிதாபமான நிலைக்கு ஆங்கிலேயர்களுக்கும் நிறைய பங்கிருக்கிறது. திபெத்தியர் இனம், மொழி, கலாசாரத்தால் சீனர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். திபெத்திய வரலாறு ஏழாம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் திபெத்தும்- சீனாவும் மங்கோலியர் ஆட்சிக்கு உட்பட நேர்ந்ததை இன்றைய பிரச்சினைக்கு ஆரம்பமெனலாம். பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை தலாய்லாமாவின் நிர்வாகத்தில் திபெத் இருந்து வந்திருக்கிறது. திபெத்திய நிர்வாகத்தை ஒரு மடாதிபதியின் நிர்வாகமென்றே எடுத்துக்கொள்ளவேண்டும், புத்தமத துறவிகளே எல்லாமாக இருந்தனர். திபெத்தையும் லாமாக்களின் வாழ்க்கை முறையையும் புரிந்துகொள்ள Tuesday Lobsang Rampa* எழுதியுள்ள நூல்களை அவசியம் (படித்திராத நண்பர்கள்) வாசிக்க வேண்டும், அவற்றுள் Third Eye மிக முக்கியமானது. அதிலும் புத்தமடத்தில் சேர்ந்து தனது பால்ய வயதில், லாமாக்களால் அவருக்கு மூன்றாவது கண் திறக்கப்படுவதைக் குறித்து எழுதியிருந்ததை வாசித்தபோது, ஏன் இதை எழுதுகிறபோதுகூட உடல் நடுங்குகிறது. பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் திபெத்தியர்களின் தலைவிதியை பிரிட்டிஷாரும் சோவியத் யூனியனும் பங்குபோட்டுக்கொண்டு கிழித்ததுபோக, 1908ல் பிரிட்டிஷ் துருப்புகள் திபெத்தைவிட்டுப் புறப்பட திபெத்தியர்களுக்குத் சீனாவால் தலைவலி ஆரம்பித்தது. 1950லிருந்தே திபெத்திற்கு இரண்டு அரசாங்கம். ஒன்று சீனா, மற்றொன்று தலாய்லாமா தலைமையில் இந்தியாவிலிருந்து கொண்டு திபெத்தியர்கள் நடத்தும் அரசாங்கம். திபெத்தை உரிமைகோர சீனாவிற்கு பத்து காரனங்களென்றால் திபெத்தியர்களுக்கு ஆயிரத்தெட்டுக் காரணங்கள் வரலாற்றடிப்படையில் இருக்கின்றன. திபெத்தியர்களின் கலாச்சாரவளத்தை திட்டமிட்டே சீனா அழித்து வருகிறது. திபெத்தியர்களின் எதிர்ப்பினை சீனர்கள் ஈவிரக்கமின்றி அடக்கிவருகிறார்கள். லாமாக்களுக்கு விசாரணையின்றி மூன்றிலிருந்து இருபதாண்டுகள்வரை சிறைதண்டனை விதிப்பது சர்வசாதாரணம்.

ஒலிம்பிக் தீபம் தொடரோட்டமாக கொண்டு செல்லப்பட்ட இடங்களிலெல்லாம், திபெத்திய ஆதரவாளர்கள் இடையூறுகள் செய்தார்கள். கடைசியாக எவெரெஸ்ட் உச்சிக்கு முதன் முறையாக ஒலிம்பிக் தீபத்தை கொண்டு சென்று போங்கடா புண்ணாக்குகளா என்று சொல்லும் வகையில் படமெடுத்து சீனர்கள் மேற்கத்திய பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தனர். ஆசியாவின் தாதாவாக இருக்கும் சீனாவிடம் மேற்கத்திய அரசுகளும் சரி, உலகில் ஜனநாயகத்தைத் தன்னை விட்டால் காப்பாற்ற நாதியில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவும் சரி திபெத்துக்காக உரத்தக் குரலில் வக்காலத்தெல்லாம் வாங்கப்போவதில்லை. மாட்டார்கள். எளியாரை வலியார் அடித்தால், வேடிக்கைத்தான் பார்க்க முடியும் விலக்கியா வைக்க முடியும். திபெத்தியர்களாலும், பர்மியர்களாலும் இங்கே யாருக்கு என்ன லாபம். சொந்த நாட்டில் மனித உரிமைக்காக நீட்டி முழக்கமிடும் மேற்கத்திய தலைவர்கள், சீனத் தலைவர்களைப் பார்க்கப்போகிறபோது வாலை சுருட்டிக்கொள்கின்றனர், தைலாபுரம் தோட்டத்தில் எதுவென்றாலும் பேசலாம். கருணாநிதியைப் பார்க்கப் போகிறபோது, பா.ம.க. தலைவர்கள் பவ்யமாக குழைந்து பேசுவதில்லையா அதுபோல. கடுஞ்சொல் தயவைக் கெடுக்குமென்று மேற்கத்தியர்களுக்குத் தெரியாதா என்ன?

மே பன்னிரண்டாந் தேதி சீன நாட்டில் இயற்கை வேறொன்றை எழுதிவைத்திருந்தது. அதைத் தொடர்ந்து கடந்தத் திங்கட்கிழமை சீனாவின் இன்னொரு முகத்தைப் பார்க்கமுடிந்தது. கையறுநிலையில், சொந்த பந்தங்களையும், வாழ்வாதாரங்களையும் இடிபாடுகளுக்கிடையே தேடிச் சோர்வுறும் மக்களை, பூகம்பப் பேரழிவிற்குப்(2) பின்னே தொடர்ந்து பார்த்துவந்த நமக்கு, பலியான உயிர்களுக்கும், வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் மௌன அஞ்சலிசெலுத்தவென்று, கட்டுப்பாட்டுடன் கலந்துகொண்ட சீனமக்களின் திடங்கொண்ட முகம் அளித்த வாழ்க்கைப் புரிதல் அது. பொருளும், ஆயுதமும் கொடுத்திருந்த வல்லமையும் பெருமிதமும், சிற்சில நொடிகள் பூகம்பத்தில் ஆட்டம் கண்டிருக்கிறதென்ற உண்மையும் அதில் ஒளிந்திருந்தது.

திபெத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கும், ஒலிம்பிக் தீபத்திற்கு உலகமெங்கும் ஏற்பட்ட இடையூறுகளுக்கும், தலாய் லாமாவே காரணமென்று சீனத் தலைவர்கள் குற்றம் சாட்ட, அவர் பலமுறை மறுத்திருக்கிறார். இப்போது நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தலாய் லாமா மீது சீனத் தலைவர்கள் குற்றச் சாட்டினை வைப்பதற்கு முன்பாக அவர் முந்திகொள்ளவேண்டும், நடந்து முடிந்த பூகம்பத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லையென எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் ஓர் அறிக்கை விடவேண்டும். அவர் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் மேற்கத்திய தலைவர்கள் திபெத்தின் நலன்கருதி அப்படியொரு புத்திமதியைக் அவருக்குக் கூறியிருப்பார்களென்றே நினைக்கிறேன்.

—————————————————————————————————–
1. http://www.lobsangrampa.org/
2. http://www.chine-informations.com/actualite/photos-du-tremblement-de-terre-en-chine-de-mai_9421.html


nakrish2003@yahoo.fr

Series Navigation