யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 4

This entry is part of 41 in the series 20080508_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா1941. பெயர் மிஷா, ஏழுவயது யூதச் சிறுமி, பள்ளிக்குச் சென்று திரும்பிவந்து பார்க்க பெற்றோர்கள் நாஜிகளால் சிறைபிடிக்கபட்டு முகாமுக்கு அனுப்பிவைக்கப் பட்டிருக்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் அந்த யூதர்களுக்கான வதைமுகாம் இருப்பதாகச் சொல்கிறார்கள். தனது பெற்றோரை எப்படியாவது சந்திக்க வேண்டுமென்று துடிக்கிறாள். அவர்களைத் தேடி பெல்ஜியத்திலிருந்து புறப்படுகிறாள், முதலில் உக்ரெய்ன், ஜெர்மனி, போலந்து…என்று கடந்து வதைமுகாமைக் கண்டுபிடித்தாக வேண்டும். வழியெங்கும் இரண்டாம் உலகப்போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரம், மேற்கிலிருந்து கிழக்காக 3000 கி.மீ பயணித்தாக வேண்டிய கட்டாயம். ஒத்தாசைக்கு நம்பகமற்ற பழைய திசைகாட்டி.

உணவையும், உடைகளையும் திருடினாலன்றி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியாதென்பதுபோல நெருக்கடிகள், திருடுகிறாள். மனித மிருங்கங்களிடமிருந்து தப்பித்தாலன்றி உயிர்பிழைக்க முடியாதென்பதுபோல ஆபத்துகள், தப்பிக்கிறாள். ஓநாய்கள் கூட்டத்தில் ஒருத்தியாக வாழவேண்டிய கட்டாயம், வாழ்ந்து நம்மை வியப்பிலாழ்த்துகிறாள். துள்ளித்திரிந்து, குடைபிடித்ததுபோல கால்பாவி, விளையாட்டாய் சலசலக்கும் உடல்மொழி சிணுங்கலில் அடிநாதமாக சிறுமியின் உடலிலும் மனத்திலும் கசிகின்ற வலியும், வேதனையும், துன்பமும், மகிழ்ச்சியும், குறும்பும், சிரிப்பும் ஓர் மழைக்கால சிலுசிலுப்பு. அவ நம்பிக்கைக்கள் கேள்விகளாக உருப்பெற்று கால்கள் புதைய பனிப்பாலையில், கடுங்குளிரில், உடலை முன் வளைத்து நடக்கிறபோதும் சரி, அடர்த்தியான காட்டில் ஓநாய்களுடன் ஒருத்தியாய் வலம்வந்து குதூகலிக்கும்போதும் சரி மிஷாவாக நடிக்கிற சிறுமி மத்தில்து கொ·பார்ட், இயல்பாய் பாத்திரத்திரத்திற்குப் பொருந்தி நம் அன்பையும் அனுதாபத்தையும் சம்பாதித்துக்கொள்கிறாள். வாலைத் தாழ்த்தி உடல்குறுக்கி, சிறுமியை அணைப்பில்கொள்ள முனைவதுபோல நெருங்கி அன்பைவெளிப்படுத்தும் காட்டிலுள்ள ஓநாய்களிடம் மனிதருக்கு வேண்டிய குணமும்; அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச்சொல் என்ற நான்கின் வெளிப்பாடாக நாட்டிலுள்ள மனிதர்களிடம் விலங்குகளின் குணத்தையும் பார்க்கிறோம்.

‘ஓநாய்களுடன் வாழ்ந்து உயிர்பிழைத்த அனுபவம்(1)’ என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்து வரவேற்பினைப்பெற்ற திரைப்பட அனுபவத்தையே மேலே தந்திருக்கிறேன். இக்கதை இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஒரு யூதச் சிறுமிக்கு ஏற்பட்ட உண்மைச் சம்பவமென்று சொல்லப்பட்டது. மூலக்கதையைச் சம்பவத்தின் சூத்ரதாரியான சிறுமியே வளர்ந்து பெரியவளானதும் உண்மைக் கதை என்ற பெயரில் எழுதியிருந்தார், வெளிவந்த ஓரிருமாதங்களிலேயே அத்தனைப் பிரதிகளும் விற்று தீர்ந்தன, பதினெட்டு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு அத்தனை மொழிகளிலும் விற்பனையில் சாதனை புரிந்தது. நூலை வாசித்தவர்களும் சரி, அதைத் திரைப்படமாகப் பார்த்தவர்களும் சரி உருகிப்போனார்கள். நூல் வாசிப்பில் நிழலாக சிறுமியின் அனுபவங்களை உணரமுடிந்தவர்களுக்கு, திரையில் தத்ரூபமாக காட்டப்பட்ட அசலான காட்சிகளில் மனதைப் பறிகொடுத்து கண்கலங்கியிருக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள்: முதலாவது, இக்கதை உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படமாக்கப்பட்டதென்கிற நம்பிக்கை. இரண்டாவது மனித மனங்களுக்கு சொந்த சந்தோஷங்களைக் காட்டிலும் அடுத்தவர் துக்கங்கள் விருப்பமானவை, என்ற அசலான காரணம்.

கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்று படித்திருக்கிறோம். ஆனால் மேற்கத்திய பதிப்பகங்களுக்கு வறுமையைக் காட்டிலும், இளமைக்காலத்தில் பட்ட வேறுவகை துன்பங்களில் சுவாரஸ்யம் இருக்குமென்றால் அதைப் பிரசுரிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஒரு முறை பிரான்சிலுள்ள புகழ்பெற்ற பதிப்பகத்தைத் தேடி வந்த நபர், தான் இளமையிற் பட்ட கஷ்டங்களையெல்லாம் சொல்லி அதை விபரமாக எழுதியிருக்கிறேன், பதிப்பிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார், கதையைக்கேட்ட பதிப்பாளர் உருகிப்போனாராம், அதிலும் அந்நபர் ஆப்ரிக்க அரச குடும்பமொன்றின் வாரிசென்று சத்தியம் செய்ய, பதிப்பாளர் மனம் கொஞ்சம் கூடுதலாகவே இளகியிருக்கிறது. நல்ல காரியத்தைச் செய்யவென்றே சிலரிருப்பார்கள். அவர்களிலொருவர், “எதற்கும் உண்மையென்னவென்று அறிந்த பிறகு, காரியத்தில் இறங்கலாம்”, என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். பதிப்பாளர் தமது பத்திரிகையாளர்களை அனுப்பி விசாரிக்கவும் அப்படியொரு ஆளே இல்லையென்று பதில் வந்திருக்கிறது. மார்கெரித் துராஸ் என்பவர் சமீபத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பிரெஞ்சு பெண் எழுத்தாளர், 1996ம் ஆண்டு இறந்தார். பிரெஞ்சு மொழி அகாடெமியில் அங்கம் வகித்தவர். அவரது படைப்புலகம் என்பது சொந்த வாழ்க்கையின் மறுபதிப்பு என்றே பெரிதும் நம்பப்பட்டது. வாசிக்கிற எவருக்கும் அவரது சொந்த வாழ்க்கை இலக்கிய வடிவம் பெற்றதாகத்தான் நினைப்பு, ஆனால் அவரது சுயவரலாற்றை எழுதிய ழான் வல்லியே (Jean Vallier) உண்மை என்ற பேரில் துராஸ் நமது நம்பிக்கைகளுக்கு மாறாக நிறைய கட்டுக்கதைகளைச் சேர்த்திருப்பதாகச் பிரெஞ்சு இலக்கிய திங்களிதழொன்றிர்க்கு அளித்த செவ்வியில் கூறியிருக்கிறார்.

‘ஓநாய்களுடன் வாழ்ந்து உயிர்பிழைத்த அனுபவம்’ நூல்வடிவில் வந்தபோது சந்தேகங்கள் எழவில்லை. ஆனால் திரைப்படமாக வந்தபிறகு பல கேள்விகள் எழுந்தன. ஓநாய்கள்பற்றிய அறிவியலில் போதிய அளவு ஞானங்கொண்ட மருத்துவரொருவர், நூலை எழுதிய ‘மிஷா டெ·பொன்ஸ்கா’ சொல்லியிருக்கிற பல தகவல்களை அறிவியல் ரீதியாக மறுக்கிறார். ஒநாய்கள் இயல்பிலேயே மூர்க்க குணம்கொண்டவையென்றும், அவைகளோடு அதிக நாட்கள் வாழ்ந்து உயிர்பிழைத்திருப்பதென்பது கற்பனைக்கு உதவலாமேயொழிய உண்மைக்கு உதவாது என்றார். தவிர நூலில் சொல்லியிருப்பது போன்று சிறுமி பறவைகளைக் கடிப்பதும், எலும்புகளை மெல்வதும் அபத்தம், நடைமுறையில் சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொன்னார். இதற்கிடையில் நூலாசியருக்கும் அவரது அமெரிக்க பதிப்பாளருக்கும் வெகு நாட்களாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அப்பதிப்பாளர் பெண்மணியின் நதிமூலத்தைத் தேடியிருக்கிறார். நூலாசிரியர் பிறந்ததேதி 1937 என்று தெரிய வந்திருக்கிறது. இப்புதிய ஆதாரத்தின்படி இரண்டாம் உலகப்போரின்போது உண்மைக்கதை சிறுமிக்கான வயது நான்கேயன்றி அவர் எழுதியிருப்பதுபோல ஏழு அல்ல. தவிர உக்ரெய்ன் காடுகளில் ஓநாய்களுடன் அச்சிறுமி வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட காலங்களில் பெல்ஜிய மழலைப் பள்ளியொன்றில் பாபா பிளாக் ஷீப் பாடிக்கொண்டிருந்திருக்கிறார். இப்படிப் பூதங்கள் புறப்பட்டுக்கொண்டிருக்க, பெல்ஜியத்திலிருந்த யூத அமைப்பு தம் பங்கிற்கு சிலவற்றை மறுக்கிறது. உதாரணமாக பெல்ஜியத்தில் யூதர்களை சிறைபிடித்ததும் வதைமுகாமிற்கு அனுப்பியதும் 1942ம் ஆண்டு ஆகஸ்டுமாதமேயன்றி நூலில் குறிப்பிட்டிருப்பதுபோல 1941ல் அல்ல என்கிறார்கள். இறுதியாக நூலாசிரியரான பெண்மணியும், “தப்பு பண்ணிட்டேன், என்னை மன்னிக்கணும்”, என்பதுபோல “நீங்கள் எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல என்னுடைய உண்மையான பெயர் மிஷா டெ·பொன்ஸ்கா இல்லை மோனிக் தெ வீல், நான் எழுதியைதை உண்மையென்று நம்பிய உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெற்றோர்கள் சொந்தபந்தங்களென எல்லாவற்றையும் இழந்து தெருவில் நின்ற நா¡ன்கு வயது சிறுமியின் நிலைமையை எண்ணிப் பார்த்தீர்களெனில் நிலைமை விளங்கும். எனது வேதனைகளுக்கு நிவாரணம் தேடிக்கொள்ளவே இப்படியொரு புனைவினை கற்பிதம் செய்தேனேயன்றி வேறு காரணங்களில்லை” என்று கண்ணீர் சிந்துகிறார். பெண்களுக்குப் பொய்சொல்லும் சாமர்த்தியம் குறைவென்றுதான் நினைக்கிறேன்.

பொதுவாகவே எழுத்தாளனுக்கும், பேச்சாளனுக்கும் சொல்வன்மை போதும். அரசியல்வாதிக்கு இரண்டுமே தேவையில்லை அதிகாரமிருந்தால் போதும், அவன் சொல்வதனைத்தும் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை. கடந்த காலத்தில் திருடுவதற்கென்று வீடு புகுந்திருப்பான், தலைவரானபிறகு தலைமறைவு வாழ்க்கையென்று சுயவரலாறு எழுதுவான். பல சுயவரலாறுகள் புரட்டுகளால் கட்டமைக்கப்பட்டவை. பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால், மெய்போலும்மே மெய்போலும்மே! ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லி படையெடுப்பதும், பொய்யை உண்மையாகச் சித்தரித்து எழுதுவதும் ஒன்றுதான். சம்பந்தப்பட்ட நமது மனசாட்சிகளன்றி வேறொருவர் விரல்காட்டுவதற்கான சாத்தியங்களே இல்லை. சுயவரலாறுகள் என்று எழுதப்படுபவையும், சொந்த அனுபவங்களென நினைவுகூறப்படுபவையும், பல நேரங்களில் மிகைபடுத்தப்பட்ட புனைவுகளாக, தெருக்கூத்துகளில் நள்ளிரவுகளில் திரைவிலக்கி குதிக்கிற அரிதார கூத்தாடிகளை நினைவுபடுத்துவதுண்டு, விடிந்த பிறகு அம்முகங்களைப் பார்க்கவேண்டுமே!


1. Survivre Avec les Loups (A memoire of the Holocaust )

nakrish2003@yahoo.fr

Series Navigation