கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை

This entry is part of 41 in the series 20080117_Issue

வாஸந்தி


சமீபத்தில் நான் சென்னையில் சந்தித்த ஒரு பிரபல ஆங்கில ஏட்டின் ஞாயிறுப் பதிப்பின் ஆசிரியர் பதவியில் இருக்கும் தோழி அலுப்பும் வெறுப்புமாகச் சொன்னார். ” நமது அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி நம்பமுடியாத அளவு விரிந்திருக்கிறது. நான் சில கிராமங்களுக்கு வேலை நிமித்தமாகப் போயிருந்தபோது நமது இளைய தலைமுறையினரின் ஆர்வத்துக்கும் தாகத்துக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் நமது அரசியல் வாதிகள் போடும் கோஷங்கள் இருப்பதைக் கவனித்தேன். யாருக்காக அவர்கள் அந்த கோஷங்கள் போடுகிறார்கள்? காலாவதியான, இன்றைய யதார்த்தத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சித்தாந்தங்களை, பழமைவாத கருத்துக்களை ஏன் தேவையற்ற
ஆக்ரோஷத்துடன் முழங்குகிறார்கள்?”
தோழியின் அங்கலாய்ப்பு அர்த்தமுள்ளது என்பதை என்னால் மறுக்கமுடியவில்லை. அவள் தன்னைக் கட்டுப் படுத்திக்கொள்ள இயலாமல் புலம்பித் தீர்த்தாள்.
‘இன்றைய தலைமுறை முன்னேறத் துடிக்கிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகு அதிகரித்துவிட்ட வாய்ப்புகளை உபயோகித்துக்கொள்ளும் அவசரத்தில் எல்லாரும் இருக்கிறார்கள். கிராமத்து இளைஞர்கள் கூட ஆங்கிலக் கல்வியும் கம்ப்யூட்டர் அறிவும் இன்றைய அவசியமான தேவை என்று உணர்ந்துகொண்டு செயல்படுகிற சமயத்தில் தனித் தமிழ் கோஷம் போடுவதிலும் கண்னகி சிலைபற்றின விவாதத்திலும் யாருக்கு அக்கறை இருக்கும்?’ என்பது தோழியின் கேள்வி. சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்துவதை விட்டு சித்தாந்த கோஷங்கள் யாருக்கு லாபமென்று போடப்படுகின்றன? யாருக்காக இந்த வேஷம்?

சாமான்ய மக்களுக்கும் நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமில்லாமல் போய் வெகு காலமாகிறது. கோஷங்களும் வேஷங்களும் இன்றைய அரசியலுக்குத் தேவையான கவசங்கள். அவர்களது இயலாமையை மறைத்துக்கொள்ªவும், தங்களது இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும் தேவைப்படும் சாகசங்கள். அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனைவிட தங்களது சுய நல அரசியலே முக்கியமாகிப் போனதாகத் தோன்றுகிறது. அவர்களை நாடாளுமன்றத்துக்கும் மாநில அவைக்கும் தேர்ந்தெடுத்து அனுப்பிய சாமான்ய மனிதனுக்கு அவர்கள் பேசும் அரசியல் விளங்கக் கூட இல்லை. விளங்கினாலும் அதைப் பற்றிக் கவலைப் படும் அளவுக்கும் அவனுடைய வாழ்வுடன் அது சம்பந்தப் பட்டதில்லை.
அரசியலில் சித்தாந்தங்கள் நீர்த்துப் போயும் வெகு காலமாயிற்று. நீர்த்துப் போவது தவறில்லை. காலம் மாறும் போது சித்தாந்தங்களும் மாறவேண்டியது அவசியம். ஆனால் வேறு ஒன்றும் உருப்படியாகச் செய்ய முடியாதபோதோ எதிர்கட்சியைத் தாக்கவேண்டிய கட்டாயத்தினாலோ திடீரென்று அவை ஆயுதங்களாக மாறும்போது சாமான்யன் திகைக்கிறான்.சமீப காலமாக ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு விஷயம் தலையெடுத்து சம்பந்தமில்லாத அவனை வம்புக்கு இழுத்துக் குழப்புகிறது.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு நமது தோழர்கள் தெரிவித்த தீவிர எதிர்ப்பில் நாடு கிடுகிடுத்துப் போனது.இன்னமும் அதன் அதிர்வு தொடர்கிறது. ருஷ்யாவும் சீனாவும் தீவிர கம்யூனிசவாதம் இன்றைய யதார்த்தத்துக்கு ஒத்து வராது என்ற முடிவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் நமது இடது சாரி கட்சிகள் மிகத் தீவிர கொள்கை வாதிகளாகத் தொடர்வதால் அவர்களை நம்பி அரசு நடத்தும் மத்தியில் உள்ள கூட்டணி அரசு வெல வெலத்துப் போனது. அணு சக்தி ஒப்பந்தத்தின் நுணுக்கம் எதுவும் எந்தக் கூட்டணி கட்சிக்கும் தெரிந்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அவர்களுக்குப் புரிந்தது ஒரே விஷயம் தான். இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டால், அரசு கவிழ்ந்து விடுமே? சண்டைபிடித்து பேரம் பேசி வாங்கிய மந்திரிப் பதவிகளும் அதனால் கிடைத்து வந்த இன்னபிற சௌகர்யங்களும் கை நழுவிப் போகுமே? மீண்டும் தேர்தல் வந்தால் இதே அளவு எண்ணிகையுடன் வெற்றிபெறுவது சாத்தியமில்லையே? ஆள் ஆளுக்கு சமாதானங்கள் சொல்ல ஆரம்பித்தது பெரிய கூத்து. ஆரம்பகட்டத்தில் கூட்டணியிலும் அமைச்சரவையிலும் பங்கு கொண்ட எல்லா கட்சிகளும் ஒப்பந்தத்தை ஆதரித்து வரவேற்றிருக்கின்றன. இடது சாரிகள் விலகுவோம் என்று எச்சரித்தவுடன் ‘எனக்கு முதலிலேயே இதில் சம்மதமில்லை’ என்கிறார் நமது முதல்வர். ‘ஒப்பந்தத்தை விட அரசு [நீடித்திருப்பது] முக்கியம்’ என்கிறார். மக்கள் மேல் மறுபடி ஒரு தேர்தலை சுமத்துவது நியாயமில்லை என்கிறார்கள் எல்லோரும் அப்போதுதான் மக்களின் நினைவு வந்ததுபோல. அவர்களது கவலைத் தங்களது பதவி நீடிப்புதானே தவிர மக்களைப் பற்றி அல்ல என்பது முட்டாளுக்குக் கூடத் தெரியும்.
இந்த ஒப்பந்தத்துக்காகப் பல மாதங்களாக உழைத்து தனது பெரிய சாதனையாக நினைத்த பிரதமர் மன்மோகன் சிங் முகத்தில் கரி பூசி நிற்கிறார். அவர் சராசரி அரசியல்வாதி இல்லை, கொஞ்சம் கொள்கை உள்ளவர் என்று நினைத்திருந்த என்னைப் போன்ற பலருக்கு அவர் கூனிக்குறுகித் தோல்வியை விழுங்கிக் கொண்டு பிரதமராகத் தொடர்வது மிகப் பெரிய ஏமாற்றம்தான். பதவி, நாற்காலி ஆசை யாரையும் விட்டுவைப்பதில்லை என்று சோர்வு ஏற்படுகிறது .தலைவர்கள் போடும் சண்டையையும் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள இவர்கள் பரிதவித்து தோப்புக்கரணமும் குட்டிக்கரணமும் போடும் பல்டிகளைக்கண்டு நாடும் மக்களும் வெறுத்துப் போனார்கள். அரசியல் தலைவர்களுக்கே விளங்காத அணு சக்தி ஒப்பந்தம் சாமான்யனுக்கு என்ன விளங்கும்? நாட்டின் நீண்ட கால எரிவாயு திட்டங்களுக்கு இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானது என்றும் அமெரிக்காவிற்கு சலாம் போடும் அளவுக்கு இந்தியா சிறிய நாடு அல்ல , தன்மானத்தை விட்டுக்கொடுக்க அது பலவீனமானதும் அல்ல என்ற பிரதமரின் வாதத்தை ஏற்க யாருக்கும் பொறுமை இல்லை. முதல் முறையாக பெரிய பலத்துடன் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கும் இடதுசாரிகளுக்கு இந்த சந்தர்பத்தைவிட்டால் சவால் விட வேறு தருணம் கிடைக்காது.
இதிலெல்லாம் சித்தாந்தங்களைவிட கட்சிகளின் ஈகோ பிரச்சினையும் சேருகிறது. அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக இருப்பது மத்திய அரசுக்கு ஆதரவு தரும் இடது சாரிகளுக்கு ,முக்கியமாக சிபிஎம்மின் தலைவர் பிரகாஷ் கராத்துக்கு பெரிய அவமானம். தனது கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்வது தேர்தலை சந்திப்பதைவிட அவருக்கு முக்கியமாகிவிட்டதாகத் தோன்றுகிறது. அதே ஈகோ பிரச்சினையில் தமிழக முதல்வரும் மாட்டிக்கொண்டார்.
அணு சக்தி விவகாரத்தில் மன்மோகன் சிங் திணறுவதற்கு முன்பு, சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் ரகளை ஆனதற்கு இதே காரணம். பல கோடி இந்துக்கள் வழிபடும் ராமரை கருணாநிதி உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார்! வீம்புக்கு என்னென்னவோ பேசி நம்பிக்கை உள்ள இந்துக்களை அவர் புண்படுத்தியதெல்லாம் ‘தனது சொல்லுக்கு மறு சொல்லா’ என்கிற எரிச்சலால் வந்த வினையாகத் தோன்றுகிறது. தேர்தலுக்கு நின்றபோது மக்களுக்குக் கொடுக்கப் பட்ட வாக்கைக் காப்பாற்றவேண்டும் என்கிற தீவிரத்தைவிட அது ஒரு மானப் பிரச்சினையாகிப் போனது. முதலமைச்சர் என்ற பதவியில் இருப்பவர் நிதானம் காக்கவேண்டும் என்பது மறந்துவிடும் அளவுக்கு. உச்ச நீதிமன்றம் வரை விவகாரம் போக, திட்டம் தடை பட்டுப் போனது எதிர்கட்சிகளுக்கு வெற்றி என்கிற எரிச்சல் அவரது கண்னை மறைத்திருக்கும். சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் பொருளியல் நிபுணர்களும் அந்த திட்டத்தின் லாப நஷ்டத்தைப் பற்றி எழுப்பும் கேள்விகளுக்கு இதுவரை சரியான விளக்கம் அளிக்கப் படவில்லை. உச்சகட்டமாக மத்திய அரசில் தாம் பங்கு கொண்டுள்ளதும், திட்டத்தை அமல் படுத்தும் அமைச்சர் தமது கட்சியைச் சேர்ந்தவர் என்ற நிலையிலும் அவலை நினைத்து உரலை இடித்த கதையாக உச்ச நீதிமன்ற தடையையும் மீறி உண்ணாவிருதம் என்ற பெயரில் தமிழகத்தில் பந்த் நடத்துவது சரியா என்ற கேள்வியைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கேட்கும் துணிச்சல் இல்லை. மக்கள் அவர்களுக்கு சம்பந்தமில்லா விஷயத்துக்காக அவர்களது விருப்பமில்லாமலே அவதிக்குள்ளானார்கள். ‘ஏன் இந்த உண்ணாவிருதம்’? ‘மக்களுக்கு சேது சமுத்திர திட்டம் முக்கியமானது என்று உணர்த்துவதற்காக’ என்கிறார்கள். எத்தனை கேலிக் கூத்து! 70 சதவிதம் சேது திட்டப் பணி முடிந்ததைப் பற்றி மக்களுக்கு ஒரு சதவிதம் கூடத் தெரியாது.

ஒரு வேடிக்கை என்னவென்றால் எதிர் கட்சிக்கும் தோழமைக்கட்சிகளும் இப்போது வித்தியாசம் இல்லை. எதிர்கட்சியைவிட அவர்களைக் கண்டுதான் ஆளும் கட்சி பயப்பட வேண்டியிருக்கிறது. சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பழகிப் போன கட்சிகள் கூட்டணியில் இருந்தபடியே தமக்கு சாதகமான தருணத்தைக் கணக்கிட்டு எதிர்ப்பைத் தெரிவிப்பதும் கூட்டணியை உடைப்பதாக அச்சுறுத்துவதும், அரசுகள் கவிழ்வதும் தன்னிச்சையாக நிகழ் கின்றன. நித்திய கண்டம் பூர்ணாயிசாக இருக்கும் அரசுகளுக்குத் தங்கள் அதிகாரத்தைக் கட்டிக் காப்பதிலும் தற்காப்பு வீம்புகளில் ஆழ்வதிலுமே கவனம் என்பதால் அரசு நிர்வாகம் என்பது ஏதோ உருட்டிவிட்ட கட்டையைப் போல் ஓடுகிறதே தவிர தீர்க்க தரிசனத்துடன் கூடிய பார்வை இல்லாததால் மக்களுக்கான ஆட்சியாகப் பரிணமிக்கும் வாய்ப்பு கிடையாது. அத்தனை அமற்களத்திலும் அசிங்கமாக வெளிப்படுவது ஒன்று- அப்பட்ட சுயநல அரசியல். நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல் கூத்துகள், அராஜகங்கள், பல இடங்களில், அரசு நிர்வாகமே போலீஸ் உதவியுடன் மூட்டிவிடும் பயங்கர கலவரங்கள் எல்லாம் சொல்வது அதுதான். நாம் வாக்களித்து அதிகாரம் கொடுத்து அவர்களை நாம் செல்வாக்கான ஆசனத்தில் அமர்த்தியதற்கு அவர்கள் செய்யும் கைம்மாறு அது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக ஆட்சி நடத்த வருபவர்கள் உரு மாறும் அவலம் அது. எதிர்கட்சி ஸ்தானத்தில் அமரும்போது ஆளும் கட்சியின் செயல் பாடுகளை மக்கள் விரோத அரசு என்று குற்றம்சாட்டும் கட்சிகள் பதவிக்கு வரும்போது அதே குற்றங்களைக் கூசாமல் செய்கின்றன. இந்தியா முழுவதுமே ஜன நாயகம் என்ற பெயரில் எல்லா அரசுகளுமே மக்கள் விரோத அரசியல் நடத்துவதாக எனக்குப் படுகிறது.
கர்நாடகத்தில் நடக்கும் கூத்து நமது அரசியல் கேடு கெட்டுப் போன அவலத்தின் உச்சம். கடந்த இருபது மாதங்களாக முன்னாள் பிரதமரும் ஜனதாதளம் [மதசார்பின்மை] கட்சியின் தலைவருமான தேவே கௌடாவின் மகன் குமாரசுவாமி முதல்வராகப் பணியாற்றினார். கூட்டணிகட்சியான பாஜகவுடன் ஆரம்பத்தில் செய்த ஒப்பந்ததின்படி அடுத்த இருபது மாதங்கள் பாஜகவின் கீழ் ஆட்சி அமையவேண்டும். இருபது மாதங்கள் பதவியை அனுபவித்த குமாரசுவாமிக்கு அதை இழக்கவேண்டிய தருணத்தில் மனசு வரவில்லை. ஏற்கனவே அவர் தன் தந்தைக்கு விருப்பமில்லாமல் அதிரடியாக காங்கிரெஸ்ஸ¤டன் இருந்த கூட்டணியை முறித்து பாஜகவுடன் அதிரடியாகக் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார். தேவே கௌடா அப்போது இனி மகனுடன் எனக்கு உறவு இல்லை என்று நாடகம் ஆடினார். இப்போது ஆட்சி மாற வேண்டிய தருணம் வந்த போது ஒரு பாஜக எம் எல் ஏ தன் மகன் மீது பழி சொன்னது தனது மனசைப் புண்படுத்திவிட்டது என்று கூப்பாடு போட்டார். இதற்கிடையில் கருணாநிதி ‘ராமர் என்பதே பொய்’ என்று டிவி காமிராவின் முன் சொன்னதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் கர்நாடகாவுக்கு வரும் இரண்டு தமிழ்நாட்டு பஸ் களை எரித்து பெங்களூரில் வாழும் கருணாநிதியின் மகள் செல்வியின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தார்கள். குமாரசுவாமி கிடைத்தது சாக்கு என்று ‘ஆட்சியை வி.ஹி.ப.வின் கூட்டாளிகளான பாஜகவிடம் ஒப்படைத்தால் மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும் அதனால் கொடுக்கமுடியாது என்றும் அடம் பிடித்தார். இத்தனைக்கும் பாஜகவின் எண்ணிக்கைதான்[79] அதிகம் மன்றத்தில். ஜனதாதளம் [ம.சா] வெறும் 45தான். பாஜக தலைவர்கள் நடையாய் நடந்தார்கள். குமாரசாமி மசியாததால் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அரசு விழுந்தது. தேர்தலை சந்திப்போம் என்று கௌடா முகாம் முழங்கியது. மாநில அவையைக் கலைத்து விடும்படி கவர்னருக்கு கௌடா கடிதம் எழுதிய பிறகு ஜனாதிபதி ஆட்சி வந்தது. ஆனால் அவை சஸ்பெண்ட் மட்டும் செய்யப்பட்டது. இந்த மாதிரி ஒரு சூழலுக்குக் காத்திருந்த இரண்டாம் எண்ணிக்கை கொண்ட காங்கிரெஸ் சுறுசுறுப்பானது. கௌடாவின் முடிவில் விருப்பமில்லாத ஜ.மா.ச . உறுபினர்கள் சிலரை ஆசைக்காட்டி தேர்தலில்லாமல் காங்கிரெஸ் கூட்டணி அரசு நிறுவப் பார்த்தது. இதை உணர்ந்துகொண்ட கௌடா முகாம் எங்கே கட்சியில் பிளவு வந்து தங்கள் செல்வாக்கு அடியோடு போய்விடுமோ என்று அலறி அடித்துக்கொண்டு வெட்கமில்லாமல் மிண்டும் பாஜகவிடம் சென்று அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாகச் சொன்னதும் ஒரே நாள் போதில் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. பெங்களூர் அரசியல் அல்லோலகல்லோலப் பட்டது. பத்திரிக்கை டிவி நிருபர்கள் சாப்பாடு தண்ணி தூக்கம் பாராமல் ராஜ் பவன் வாசலிலோ, தலைவர்களின் வீட்டு முன்போ தவமிருந்தார்கள்.
இத்தனை அமற்களத்திற்கு நடுவே பெங்களூர் மக்கள் அதில் கவனமில்லாமல் தங்கள் பணிக்காக ஓடிக்கொண்டிருந்தார்கள். கவனித்தவர்கள் வெறுத்துப் போனார்கள். தலைவர்களின் கூத்துக்கும் அவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. மக்களின் வரிப் பணத்தைத் துச்சமாக மதித்து தங்கள் ஈகோ பிரச்சினையால் தேர்தலுக்குத் தயாராகும் துணிச்சல் தலைவர்களுக்கு எப்படி வருகிறது? மானம் ரோசம் இல்லாமல் பேசுபவர்களை, வார்த்தைகளை மாற்றுபவர்களை நம்பி நாம் எப்படி ஆட்சியை ஒப்படைப்பது? தன்னலமே பெரிதாக இருக்கும் இவர்கள் மக்களுக்காக என்ன பணி செய்வார்கள்? இப்படி அரசியலைப் பந்தாடுபவர்களை அரசியலிலிருந்தே ஒதுக்கவேண்டாமா? ஆட்டத்தின் விதிகளைப் பின்பற்றாதவர்களை ஆட்டத்திலிருந்து விலக்குவதுபோல அரசியல் கட்சிகளுக்கும் சில விதிகள் வைக்கப் படவேண்டும் என்று தோன்றுகிறது. மக்கள் வெறுத்துப் போய்தான், எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால்தான் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகிறது. அப்படியும் கூட்டணி என்கிற பேரில் நடக்கும் அராஜகங்களும் ஸ்திரமின்மையால் நடக்கும் கூத்துக்களும் மக்களை மேலும் மேலும் தூர விலக்குகின்றன.
இதற்கு என்ன தான் தீர்வு? கல்வி ஒன்றே தீர்வு என்று முன்பு எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. கல்வி அறிவு அதிகப் பட்சம் இருக்கும் கேரளத்தில் நடக்கும் அரசியல் அபத்தங்களுக்குக் கணக்கில்லை. அரசியலுக்கு வருபவர்களுக்கும் கட்சி நடத்துவதற்கும் சில கடுமையான விதிகள் பின் பற்ற வேண்டிய அவசியம் ஏற்படவேண்டும். பணம் புரளும் தேர்தல் செலவுகள் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் தேவை. ஜன மயக்கு திட்டங்களும் இலவசங்களும் நிறுத்தப்பட சட்டம் தேவை. ஒவ்வொரு அரசும் மக்களின் நலனுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பிலும் அடிப்படை வசதிகளிலும் கவனம் செலுத்த காலக்கெடு இருக்கவேண்டும். இதற்கெல்லாம் சட்டம் இயற்றப் படவேண்டும்.
சட்டம் இயற்றும் அதிகாரமும் நாம் அனுப்பும் பிரதினிதிகளிடம்தான் இருக்கிறது. தங்களை இக்கட்டில் மாட்டவைக்கும் விதிகளைத் தாங்களே போடுவார்களா?
ராம ராமா. இது சேது பந்தம்கூட இல்லை. நாம் வெளியில் வரமுடியாத சக்கிரவியூகத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் அபிமன்யுகள்.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation