கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 13 நம்பிக்கை எனும் நீர் குமிழ்

This entry is part of 45 in the series 20071227_Issue

வாஸந்தி


ஒவ்வொரு முறையும் ஒரு மனிதன் ஒரு லட்சியத்துக்காக நிற்கும்போதோ, அல்லது மற்றவரை முன்னேற்ற உழைக்கும்போதோ, அல்லது அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பும்போதோ, நம்பிக்கை என்னும் சின்னஞ்சிறு நீர் குமிழை அனுப்புகின்றான்…பல்வேறு மையங்களில் உருவாகும் பல்லாயிரக்கணக்கான அத்தகைய சக்தி மிக்க குமிழ்கள் ஒரு மாபெரும் சுழலை உருவாக்கும்- சர்வாதிகாரச் சுவர்களைத் தகர்க்கும் வலிமைகொண்டதாக உருவாக்கும் –ராபர்ட் கென்னடி

தெம்பளிக்கும் வாசகங்கள்.பல தலைவர்கள் அறிவு ஜீவிகள் மத போதகர்கள் இத்தகைய சொற்களைக் காலங்காலமாகச் சொல்லிவருகிறார்கள். தங்களுக்குத் தாங்களே தெம்பளித்துக்கொள்ளச் சொல்லப்பட்ட வாக்கியங்களோ என்று எனக்குச் சந்தேகம் வருகிறது. முன்பு, அதாவது எனது இளம் பருவத்தில், இப்படிப்பட்டப் பொன்மொழிகளைப் படிக்கும்போதோ கேட்கும்போதோ எனக்கு மிகுந்த உத்வேகம் ஏற்படும். சில சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டுக் கண்களில் நீர் கூட வரும். ஒரு சில தனி மனிதர்களின் லட்சியங்களினால், உழைப்பினால் மற்றும் தியாகத்தினால் மானுடம் உய்த்தது தழைத்தது என்பதற்கான பல சான்றுகள் எல்லா மனித இனங்களின் இதிகாசங்களிலும் இருக்கின்றன. அவர்களில் பலர் ஸ்தாபனங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பத் தயங்காததாலேயே நல்ல மாற்றங்கள் வந்தன என்று அவை சொல்கின்றன. ஆனால் இவையெல்லாம் சாத்தியப்பட்ட காலம் வேறு என்று இப்போது எனக்கு சோர்வு ஏற்படுகிறது. அன்றைய உலகம் எளிய உலகம். கருப்பு வெள்ளை உலகம். ‘நீ நல்லவனா கெட்டவனா?’ என்ற கேள்விக்கு குழந்தைகள் படிக்கும் ·பேரி டேல் கதைகளில் வருவது போல பளிச்சென்ற சந்தேகமற்ற பதில் கிடைக்கும். கெட்டவன் மடிய வேண்டும். நல்லவர்கள் காதலன்/காதலியை மணந்து கொண்டு சந்தோஷமாக நீடூழி வாழ்வார்கள். அது தான் இயற்கையின் நியதி. இன்றைய உலகம் குரூர வண்ணங்கள் கொண்டது. வக்கிரமானது. அதன் இயக்கத்தில் ஆண்டாண்டு காலமாய் மனிதன் நம்பிவந்த நியதிகள் மாறும். நல்லவன் தண்டிக்கப்படலாம். கெட்டவன் நிச்சயமாக சந்தோஷமாக நீடூழி வாழ்வான். ஏனென்றால் அவனுக்கு வசதியான மார்க்கங்கள் ஏராளம். நேர்மையான அப்பாவி மனிதன் தான் பாதை தெரியாமல் திண்டாடுபவன். மன உளைச்சலில் பாதைப் பிசகிப் போனாலும் போவான்.
உலக சரித்திரத்தை மேலோட்டமாகப் புரட்டினாலும் சரி நமது பாரதப் புண்ய பூமியின் வரலாற்றை ஆராய்ந்தாலும் சரி, லட்சியமும் உழைப்பும் அநீதிக்குக் குரல் எழுப்புவதும் இன்றைய கால கட்டத்தில் ‘நம்பிக்கை எனும் நீர் குமிழை’ எழுப்ப வாய்ப்பு கிடைக்காமல், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் அமுக்கப்படுவதாக வலுவிழந்து போவதாக எனக்குக் கவலை ஏற்படுகிறது. தகவல் தொழில் நுட்பம் ஆச்சரியகரமான உன்னதத்தைத் தொட்டிருந்தும் அதனுடன் ஒட்டாமல் அல்லது அதிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் அமைப்புகள் இயங்குகின்றன. முன்பைவிட இப்போது ஆட்சி செய்பவர்களின் அதிகாரக் குவிப்பு, ஜனநாயக அமைப்பிலும் கூட மிக அச்சுறுத்தும் எல்லையைத் தொடும் செய்திகள் வருகின்றன. இதை எதிர்கொள்ள மக்கள் இரண்டு வெவ்வேறு வழிகளை மேற்கொள்ளுகிறாற்கள். ஒன்று மதம் என்ற பெயரிலோ மொழி அல்லது சுயாட்சி என்ற பெயரிலோ அல்லது எந்த குறிப்பிட்ட கொள்கையும் இல்லாமல் அமைப்பின் மேல் உள்ள தங்கள் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்த பயங்கரவாதத்தை ஆயுதமாக ஏற்று தங்களுக்கும் மற்றவர்களுக்கும் சேதத்தை விளைவிக்கிறார்கள். இவர்கள் பொறுமை அற்றவர்கள். அமைப்புகளின் ஜனநாயகத்தன்மையில் நம்பிக்கை செத்தவர்கள். துவக்கை எடுத்து பீதி எழுப்பி சாகத்துணிந்தவர்கள். இந்த வன்முறை அணுகுமுறை சாதகம் விளைவித்திருப்பதாகச் சரித்திரம் இல்லை. இன்னொன்று, ‘ராமனாண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன’என்ற வகை. அதிகார மையங்களுடன் மோதாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்கிற கட்சி. அல்லது அந்த மையங்கள் சொல்வதற்கு ஜால்ரா போட்டு தமது இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் கட்சி. இத்தகைய போக்கு அப்பட்ட சுய நலப் போக்கு. நாளாவட்டத்தில் சமூகத்தின் தார்மீக வேர்களை அழிக்கும் சக்தி கொண்டதாகிவிடும்.

இந்த நிலை ஏன் வந்தது என்பது தான் கேள்வி.

மன்னராட்சிக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிராகப் பல நாடுகளில் மிக எளிய மக்களின் சீற்றத்தால் வெடித்த புரட்சிகள் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த சரித்திரம் அநேகம். எதிர்க்கவேண்டும் என்ற எண்ணம் மிக வலுவானதாகப் பாதிக்கப்பட்ட மக்களை ஆட்கொண்டதாலேயே அவை சாத்தியமாகியிருக்கவேண்டும். அதிகாரமும் செல்வமும் ஒரு குடும்பத்தின் அல்லது மிகச் சிலரின் கைவசம் இருந்த காரணத்தால் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களும், அதைத் தொடர்ந்த ஏழ்மையும் துயரமும் அவமானமும் அந்த எண்ணத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருந்தன. அதற்கு தீப்பொறி உந்துசக்தியாக அறிவாளிகள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் இருந்தார்கள். சொல்லுக்கு மகத்தான சக்தி இருந்தது அப்போது. உச்சரிக்கப்பட்டவுடன் மந்திரமாயிற்று. ரூஸோ என்ற அரசியல் தத்துவ ஞானி ‘மனிதன் சுதந்திரமாகப் பிறந்தான். இன்று விலங்குடன் வாழ்கிறான்” என்று எழுதினவுடன் ·பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது என்பார்கள். பதிநான்காம் லூயீ என்ற மாமன்னனை அரியணையிலிருந்து வீழ்த்தும் சக்தி கொண்டதாக. ஒவ்வொரு மகத்தான புரட்சிக்கும் பின்னால் மறைமுகமாகவேனும் எழுத்து உந்துசக்தியாக இருந்திருக்கிறது.
ஆனால் மிகப் பெரிய ஒட்டுமொத்த பாதிப்பு ஏற்படுத்தும், வாழ்வின் ஆதாரங்களைத்தகர்க்கும் அச்சுறுத்தல் இருந்தால் ஒழிய புரட்சி வெடிக்குமா என்பது சந்தேகம். இருக்க இடமும், உண்ண உணவும் இன்ன பிற சௌகர்யங்களும் கிடைத்திருக்கும் நிலையில் சாமான்ய மக்கள் சொரணை அற்றுப் போகிறார்கள். சீனாவில் சீன சமூகம் இன்று அப்படித்தான் இருக்கிறது. ஆட்சியாளர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு ஒன்றுதான். ராமனாண்டாலும் பெரு மகிழ்ச்சி இல்லை.ராவணாண்டாலும் துக்கமில்லை. லௌகீக உலகம் தரும் சுகங்களை சராசரி மனிதன் இழக்கத் தயாரில்லை. என் வீட்டுக்குள் நுழைந்து எனக்கு ஊறு விளைவிக்காத வரை எந்த அரசியல் வாதி என்ன ஊழல் செய்தால் என்ன. என் அண்டை
வீட்டுக்காரன், நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கினவன், ஊழல் செய்யாதவன், எனக்குத் தெரியும்– ஸ்தாபனத்திற்கு பலிகடாவாக்கப்பட்டாலும் நான் எதற்கு மூக்கை நுழைக்க வேண்டும்? வம்பை விலைக்கு வாங்க வேண்டும்? மூச்! ஒதுங்கி விடுவேன்.
இப்படிப்பட்டச் சூழலில் நேர்மையாக நடு நிலையாக எழுத நினைக்கும் பத்திரிக்கையாளரின் பாடு சிரமம். முதலாவது அநீதி என்று அவர்களுக்குப்படுகிற விஷயத்திற்காக ஏற்படும் அவர்களின் தார்மீகக் கோபம் புரிந்து கொள்ளப்படுவதில்லை. தொழில் ரீதியான கோபம் இல்லை அது. பத்திரிக்கை தர்மம் என்ற பிரக்ஞையினால் விளைந்த பொறுப்புள்ள சீற்றம்.
‘இனிமேல் அரசியல் கட்டுரைகள் எழுதாதீர்கள்’ என்று அண்மையில் ஒரு நெருங்கிய நண்பர் அன்புடன் கேட்டுக்கொண்டார்.இன்றைய அரசியலைக்கண்டு வெறுத்துப் போன ஆதங்கம் அவரது பேச்சில் தொனித்தது.
‘நீங்கள் காரசாரமாக என்ன எழுதினாலும் எந்த அரசியல் வாதியும் திருந்தப் போறதில்லே! நம்ம நாட்டு அரசியலும் உருப்படப் போறதில்லே! நீங்களும் நானும் ஏன் இவர்களைப்பற்றிப் பேசியும் எழுதியும் நேரத்தை வீணடிக்கவேண்டும்? நமக்கு அரசியலே வேண்டாம். உபயோகமான எத்தனையோ விஷயங்கள் உலகத்திலே இருக்கு.’
நண்பர் இதைச் சொல்ல சென்னையிலிருந்து நான் இப்பொழுது வசிக்கும் பெங்களூருக்கு
தொலைபேசியில் தொடர்புகொண்டார். நான் அந்த வாரம் எழுதிய பத்தியைப் படித்துவிட்டு மனிதர் துவண்டிருந்தார்.’இனிமேல் அரசியல் வேண்டாம்’ என்றதும் என்னுள் ஒரு மறை கழண்டதுபோல ஆடிப்போனேன். நீங்கள் இத்தனை நாட்களாக எழுதி என்ன சாதிக்க முடிந்தது என்ற அவரது அடுத்த கேள்வி என்னை நிலைகுலையவைத்தது. ‘எதுவும் இல்லை’ என்று ஒப்புக்கொண்டேன். ‘நிறைய விரோதிகளை சம்பாதித்ததைத் தவிர’ என்றேன். இடது சாரிகளைத் தவிர எல்லா கட்சித் தலைவர்களும்[சில நடிகர் ரசிகர் மன்றங்களும் அடக்கம்]என்னை அவர்களது எதிரியாகப் பார்க்கிறார்கள். என் கட்டுரையைப் படித்ததும் அவரவரது பாணியில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். அமைச்சர்களிடமிருந்து அரசு முத்திரையுடன் கடிதம் வரும்.நல்ல பரிச்சயமுள்ள தலைவர்கள் ·போனில் கூப்பிட்டு எப்படி இப்படி எழுதப் போச்சு என்பார்கள். சிலர் தங்கள் கட்சி நாளிதழில் கேலிச்சித்திரம் வரைவார்கள். கட்சி உறுப்பினரைக் கொண்டு கண்டனக் கடிதம் எழுதச் சொல்வார்கள். சிலர் பொது மேடைகளில் பயமுறுத்தியிருக்கிறார்கள். நடு இரவில் தொலை பேசியில் அழைத்து, தமிழ் நாட்டிலே காலை வெச்சிரு பார்ப்போம் என்று பயமுறுத்துகிறார்கள். இதெல்லாம் உங்களுக்குத் தேவையா என்கிறார் நண்பர். அரசியலையே தொடாதீர்கள் என்கிறார் அக்கறையுடன். பேனாவை மூடி வை என்கிறான் என் இளைய சகோதரன்.
அரசியலை நான் தொடாமல் இருந்தாலும் என் தனி நபர் வாழ்வுடன் அரசியல் பிணைந்திருக்கிறதே, அதிலிருந்து விடுபடுவது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை.அரசியல் சார்பில்லை என்ற நிலையிலும் அரசியல் தொடர்பற்ற வாழ்வு வாழ்வது சாத்தியமில்லை என்பது நமக்கெல்லாம் புரிவதில்லை. அரசியலின் சூட்சுமமே அதுதான்.

இதை அறிவார்த்தமாக முதலில் கோஷமெழுப்பிய பெருமை சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் பெண்ணியக்க வாதிகளைச் சேரும். ‘எங்களது பிரச்னைகள் தனி நபர் பிரச்னைகள் அல்ல. திட்டமிட்ட ஒடுக்குமுறை அரசியலால் விளைந்த
இனப் பிரச்னை. ‘The Personal is Political’ [ தி பர்ஸனல் இஸ் பொலிடிகல்],சொந்த விஷயம் என்று நாம் நினைத்ததெல்லாம் அரசியல் சார்ந்ததாயிற்று’ என்றார்கள். போருக்கு எதிராகவும்,ஸிவில் உரிமைக்காகவும்
குரலெழுப்பிய பல்வேறு பெண் குழுக்கள் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டன.பல்வேறு இனம் ,மொழி, வர்க்கம் , மதம் ,நாடு என்று வித்தியாசப்பட்டாலும், திருமணம், குழந்தை வளர்ப்பு, ஸெக்ஸ்,வேலை, கலாச்சாரம் ஆகிய நிலைகளில், அவர்களது பிரச்னைகள் பொதுவானவையாக இருப்பதையும் அவர்களது துன்பத்திற்கு அவர்கள் காரணமில்லை என்பதும், காரணம் வலுவான தந்தைவழி சமுதாய அமைப்பே என்பதையும் உணர்ந்தார்கள். எல்லாரும் பகிர்ந்துகொண்ட அனுபவங்களுக்குத் தீர்வு காண சேர்ந்து போராடுவது என்று முடிவெடுத்தார்கள்.

இந்த கோஷம் உலக சமூகங்களில் இருந்த எல்லாவித ஒடுக்குமுறைக்கும் பொருந்தியது.ஒடுக்கப் பட்ட எல்லா வர்கத்தினரும் , இனத்தவரும் துன்பப்பட்டது அவர்களது இயலாமையால் ,தகுதிக் குறைவால் அல்ல, ஸ்தாபனங்களின் திட்டமிட்ட அரசியலால் என்ற வாதம் வலுப்பெற்றது.

ஏழ்மையும் பசியும் தனி நபரின் தேர்வினால் அல்ல ,[அவர்களது தலை எழுத்தால் நிச்சயம் அல்ல] அவர்களது தேர்வுக்கு எதிராக இயங்கும் ஸ்தாபனங்களின் செயல்பாட்டினால் என்று சோஷலிஸ்டுகள் சொன்னார்கள். போரை எதிர்க்கும் இயக்கங்கள்
உலகில் மூளும் எல்லா [சென்ற நூற்றாண்டிலிருந்து] போர்களுக்கும் பொதுவான பூர்வாங்க ஆதாரமாக இருப்பது அமெரிக்க வெளி உறவுக் கொள்கை என்று விவரித்தார்கள். இன்றைய தனி நபர் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள், மனித உறவுகள், தனி நபரைப்பற்றின மதிப்பீடுகள் எல்லாமே ஜனித்த நேரத்திலிருந்து அரசியலுடன் பிணைக்கப் பட்டிருப்பவை . என் இனம் ,எனது ஜாதி, மொழி, வர்க்கம் எல்லாமே என்னைப் பற்றின மதிப்பீடுகளை நிர்ணயம் செய்கின்றன. எனது சொந்த வாழ்வில் நான் செய்யும் தேர்வுகள்,அவை அரசியல் சார்பற்றவை என்று நான் கருதினாலும், அரசியல் பரிமாணம் பெருகின்றன. பச்சை நிறப் புடவை அணிவதும், மஞ்சள் சால்வை போர்த்துவதும், டி.வி.சானல் பொறுக்குவதும், ஒரு எழுத்தாளரைப் பாராட்டுவதும், சினிமாவை விமர்சிப்பதும், முதலமைச்சரை பாராட்டுவதும் பாராட்டு விழாவுக்கு தாம்பாளம் சைஸில் அழைப்பிதழ் அச்சிடுவதும் தனி நபர் விருப்பம் மட்டுமல்ல, அரசியலும் கூட. இன்றைய அரசியலில் ஜால்ரா அடிப்பவனே அதுவும் சத்தமாக அடிப்பவனே கவனிக்கப் படுகிறான். விசுவாசி என்று போற்றப்படுகிறான். தற்சமய அரசாங்கத்திற்கு எவன் வேண்டாதவனோ அவன் எனக்கும் [ அவன் வெறும் புண்ணாக்காக இருந்தாலும்] வேண்டாதவன். அரசுத் தலைமை யாரைப் போற்றுகிறதோ அவரை நானும் போற்றுவேன். அது முதல்வரின் வீட்டு நாய்குட்டி கண்ணனாக இருந்தாலும். அரசின் சக்தி மகத்தானது. அதை உணராதவன் முட்டாள். என்னைப் பிடிக்காமல் போனால் தீவிரவாதி என்றோ , விதிகளை மீறீ வீடு கட்டினேன் என்றோ வரி செலுத்தவில்லை என்றோ கம்பி எண்ண வைக்கலாம். அப்படி உள்ளே தள்ளப் பட்ட எந்தப் பாமரனாவது வெளியே வந்த சரித்திரம் உண்டா? தவறு என்று உணர்ந்தவுடன் விடுவிக்க இது என்ன ஆஸ்திரேலிய அரசா?

இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு தில்லியில் சீக்கியருக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தின்போது, என் சீக்கிய சினேகிதி அதிர்ச்சியுடன் சொன்னாள். ‘என் வீட்டினுள் அரசியல் புகுந்துவிட்டது. நேற்று என் நண்பர்களாக இருந்தவர்கள் இன்று என்னை விரோதியாகப் பார்க்கிறார்கள்.’
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் எல்லோர் வீட்டிலும் புகுந்துவிட்டது. அதைத்தவிர்க்க முடியாததாலேயே அதனுடன் போராடியாகவேண்டும். அதற்கு மண்டியிடாமல். சாத்தியமா? எத்தனை பேருக்கு அதற்கான மனோதிடம் இருக்கும்? தில்லியில் இப்போது போலீஸ் கமிஷனர் பதவிக்கு உயர்த்தப்படவேண்டியிருந்த உயர் போலீஸ் அதிகாரி கிரன் பேடியை நான் நன்கு அறிவேன். நேர்மைக்கு உதாரணமாகத் திகழ்பவர். அவரது தாட்சண்யமற்ற போக்கினாலும் வெளிப்படையான பேச்சினாலும் அதிகார வர்க்கத்தில் தனியாக நின்றவர். அதற்காகவே அடிக்கடி போஸ்டிங்கில் பந்தாடப்பட்டார். ஆனால் எந்த போஸ்டிங்கிலும் அவர் தனது தனித்த ஆளுமையை நிரூபித்தார். திஹார் ஜெயிலுக்குப் பொறுப்பு வகித்த போது கைதிகளுக்கு யோகா கற்பித்துப் பல அசாதாரண மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதற்காக அவருக்கு உலகப் புகழ் பெற்ற மெகசேஸே விருது கிடைத்தது. ஆனால் அரசாங்கத்தை எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர். தப்பென்று பட்டதைக் கேள்வி கேட்கத் தயங்காதவர். ஆ, அதுதான் தப்பாகிவிட்டது. இப்போது தலைமைப் பதவி அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியது. அவரை ஓரங்கட்டிவிட்டு அவரைவிட இரண்டு ஆண்டு ஜூனியரை நியமித்திருக்கிறார்கள். அரசு எந்த காரணமும் சொல்லவில்லை. ஆனால் அவரது பேச்சு அரசாங்கத்துக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் வகை என்ற காரணமாக இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக அதி புத்திசாலிப் பெண்களைக்கண்டால் ஆண்வர்க்கம் ரசிக்காது.[ நான் ஆண் விரோதி அல்ல. இது உலகமெங்கிலும் இருக்கும் யதார்த்தம்] அவர்கள் கையில் அதிகாரத்தைக் கொடுக்கத் தயங்கும். அதிகார மையத்தைக் கேள்வி கேட்கும் தைர்யமும் இருக்கும் பெண்களை எந்த அமைப்பு ரசிக்கும்? இது திட்டமிட்ட அரசியல் இல்லாமல் வேறு என்ன?

‘Personal is political’ என்பதற்கு எதிர்வினையும் உண்டு. ஜனநாயகம் , சட்ட சாஸனம் என்கிற மகத்தான கருவிகள் நம் வசம் இருப்பது நினைவில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் போதும். அரசியல் சர்வாதிகார போக்கிற்கு எதிராக செய்யப்படும் மிகச் சில
தனி நபர் தேர்வுகளும் ஒட்டுமொத்த பரிமாணமாக மையம் கொள்ளும் வாய்ப்பு உண்டு. அதனாலேயே சில பத்திரிக்கையாளர்கள், ஆர்வலர்கள்,விளைவைப் பற்றி பயப்படாமல், தொடர்ந்து குரல் எழுப்புகிறார்கள். அரசு அதிகாரிகள் உண்மை பேசுகிறார்கள். சந்தேகமில்லை. அரசியல் பருவத்துக்குத் தகுந்தபடி, ‘செல்வாக்குள்ளவர்’களுக்கு ஏற்கும்படியாகப் பேசும் [politically correct] போக்கு அதிகரித்துவரும் காலகட்டத்தில், குரல் எழுப்புவர்கள் சிறுபான்மியனராக இருந்தாலும் அவர்கள் எழுப்பும் சிறு நீர் குமிழ்கள் எங்காவது மையம் கண்டு பெரும் சுழலாக உருவாகலாம்.


vaasanthi.sundaram@gmail.com

Series Navigation