குறிப்பேட்டுப் பதிவுகள்- 5!-

This entry is part of 33 in the series 20071220_Issue

வ.ந.கிரிதரன்[அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதாலும், அவற்றைப் பதிவு செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். காதல், அரசியல், சமூகம், இயற்கை, பாரதி, பிரபஞ்சமென விரியும் பதிவுகளிவை..- வ.ந.கி -]

18.8.1982!
தத்துவஞானம் பற்றியதொரு விசாரம் அல்லது ஆராய்வு!.

கருத்துமுதல்வாதமா, பொருள்முதல்வாதமா என்று மனிதர்கள் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கையில், விஞ்ஞானத்தின்
வெற்றியும், மானிடரின் வளர்ச்சியும் பொருள்முதலவாதத்திற்கே ஆதரவாக நின்றன. பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படையென்று
பொருள்முத்ல்வாதிகள் ஆதாரபூர்வமாக அல்லாவிடினும், பகுத்தறிவிற்கேற்ப அறுதியிட்டுக் கூறினர். இய்லபாகவே மூடநம்பிக்கைகளுடன் கூடியமதமும், அதனைச் சார்ந்த கருத்துமுதல்வாதமும் அடிபட்டுப் போயிற்று. ஆனால் கருத்துமுத்ல்வாதம் , அறிந்தோர் மத்தியில் மட்டுமே அடிபட்டுப் போயிற்று என்பதனையும் நாம் மறந்து விடலாகாது. அறியாமையும், சுரண்டல் சமுதாய அமைப்பிலுள்ள குறுகிய நோக்குள்ள அறிவினைப் பெற்று சமூகத்தில் படித்த பெரிய மனிதர்களாக உலாவிவரும் அறிந்தோர் கருத்து முதல்வாதத்தினை அழிந்து விடாதபடி காத்து வைத்திருபோராவர். உண்மையில் மானுட சமுதாயம் முழுவதுமே பொருளாதாரரீதியிலான விடுதலையினைப் பெற்றபின்னரே, மானுட வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கின் அடுத்த கட்டம் (மனரீதியிலானது) ஆரம்பமாகும்.

இதுவரை கால மானுட வர்க்கத்தின் சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை அவதானிப்போமாயின், ஆதி காலத்து
மானுடர் அறியாமையில் வாழந்த காலகட்டத்தில், அவரது மனம் பூரணமாகத் தொழிற்பட ஆரம்பிக்காதவொரு காலகட்டத்தில் நிலவிய
தாய்வழி மரபினையொட்டிய பொதுவுடமைச் சமுதாய அமைப்பிலும் சரி, பின்னர் உற்பத்திக் கருவிகளின் பரிணாமவளர்ச்சிப்
போக்கிற்கேற்ப மாறுதலடைந்து வந்த ஆண்டான், அடிமை, அதாவது அடிமை-உடைமை சமுதாய அமைப்பு, நிலப்பிரபு-பண்ணையடிமை
அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு, அதன் பின்னர் உருவான முதலாளித்துவ சமுதாய அமைப்பு, நவீன முதலாளித்துவ
சமுதாய அமைப்பு .. இப்படியாகப் பரிணாம வளர்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள சமுதாய வரலாற்றுப் போக்கில் , அடுத்ததாக நிச்சயம இன்னுமொரு மாற்றம் நிச்சய்ம ஏற்பட்டே தீரும். இன்னுமொன்றையும் இச்சமுதாய அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் அவதானிக்கலாம். அதாவது, எண்ணற்ற வர்க்கங்களாகப் பிரிந்து கிடந்த மானுடவர்க்கத்தினை, இச்சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப்போக்கு மேலும் மேலும் எளிய வர்க்கங்களாகப் பிரித்து, இறுதியில் முதலாளி, தொழிலாளி என்னுமிரு வர்க்கங்களை உள்ளடக்கியதொரு சமுதாய அமைப்பாக மாற்றி விட்டுள்ளது. இதற்கு அடுத்தபடி நிச்ச்யமாக வர்க்கங்களேயற்றதொரு சமுதாய அமைப்பாகத்தானிருக்க முடியும். பொதுவுடமைச் சமுதாய அமைப்பு ஒன்றே அத்தகையதொரு அமைப்பாகவிருக்க முடியும். பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் மூலம் உருவாகும் அத்தகைய சமுதாய அமைப்பில் பொருள்முதல்வாதிகள் கூறுவதுபோல் இறுதியில் ‘அரசு’ என்னும் ஒன்றே இலாமல் போய்விடும். அது நிச்சயம். உண்மையில் ‘அரசு’ என்பதே இறுதியில் உதிர்ந்து உலர்ந்துதான் போய்விடும். ஆனால் அத்துடன் மானுடவர்க்கத்தின் சகல் பிரச்சினைகளும் தீர்ந்து போய்விடுமா என்ன?

அதன்பிறகுதான் மானுட வர்க்கத்தின் சிந்தனைப் போக்கிலான பரிணாம வர்ளர்ச்சிப் போக்கின் அடுத்தகட்டமான , அரவிந்தர் கூறும்
‘உயர்நிலை மனம்’ (Super Mind) உடைய ‘உயர்நிலை மனிதர்களைக்’ கொண்ட (Super Human) சமுதாய அமைப்பு உருவாகும். இதுவரை
கால மானுட வர்க்கத்தின் வரலாற்றுப் போக்கில் , சமுதாயத்தில் மட்டுமல்ல, சகல ஜீவராசிகளிலும், சகல நிலைகளிலும், பிரபஞ்சம்
முழுவதுமே பரிணாம வளர்ச்சிப்போக்கிற்காட்பட்டுத்தான் வந்துள்ளது. தத்துவஞானப் போக்கிலும் , ஆரம்பத்தில் மூட நம்பிக்கைகளுடன்
கூடிய கருத்துமுதல்வாதமும், இறுதியில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப பொருள்முதல்வாதமும் மானுட வர்க்கத்தினை ஆட்கொண்டன.
ஆனால் ‘உயர்நிலை மனம்’, ‘உயர்நிலை மனிதர்க’ளைக் கொண்ட ‘அதிமானுட’ வர்க்கத்துச் சமுதாய அமைப்பிற்குரிய தத்துவஞானம்
எதுவாகவிருக்க முடியும்? நிச்சயம் பொருள்முதல்வாதம் மட்டுமாயிருக்க முடியாது. அதே சமயம் கருத்துமுதல்வாதமாக மட்டுமிருக்க
முடியாது. இவற்றை இரண்டினையும் இணைத்த , இவற்றை மேலும் சுத்திகரித்ததொரு தத்துவஞானமாகத்தானிருக்க முடியும். மானுட
வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கு ;அதிமானுட’ சமுதாய அமைப்புடன் நின்றுவிடுமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அப்படி
நின்றுவிடாது அதன் அடுத்தபடியினை , அதற்கடுத்தபடியினையென்று… பரிணாம வளர்ச்சிப் போக்கும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
தற்போதை மானிடருக்கு விளங்காமலிருக்கும், பிரபஞ்சம் பற்றிய உண்மைகளெல்லாம் அச்சமயத்தில் இலகுவாகத் தெரியவரும்.

இன்றைய மனிதர் ‘விஞ்ஞானத்தால்’ பிரபஞ்சத்தையே அளந்துவிட்டேன் என்பதுபோல் கொலம்பியா ஓடங்களில் கொக்கரிப்புடன் சேர்ந்து
சிரிக்கின்றார். ஆனால் அவரால், கேவலம் இந்த விஞ்ஞானத்தால் ‘அகவிடுதலைக்கு’ எதையுமே ஆற்ற முடியவில்லை. ஆனால்
விஞ்ஞானம் மானிடரின் அகத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளில் பூரணமாக இறங்குவதன்மூலம் , மானுட வர்க்கத்தின் ‘அகவிடுதலைக்கு’
உதவி செய்ய முடியும். ஆனால் நாம் வாழும் உலகில் காண்பதென்ன? இன்றைய மனிதர் ஆக்கத் துறைகளைவிட, பாதுகாப்பு, பாதுகாப்பு
என்று கூறிக்கொண்டு அழிவுத்துறைகளுக்கே விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி வருகின்றார். அணுக்குண்டுகளும், நியூத்திரன் குண்டுகளும்,
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளும் மானுட் வர்க்கத்திற்கே சவாலாயிருந்த போதிலும், நிச்சயம் மானுட வர்க்கத்தின்
அடுத்த பரிணாம வளர்ச்சிக் கட்டமான ‘அதிமானுட’ சமுதாய அமைப்பு உருவாகியே தீரும். சூழ்நிலைகளும் அதற்கேற்ப உருவாகியே
தீரும். –

29.11.1982!மறுபடியும் அவள் நினைவு!

இன்று மறுபடியும் , மறுபடியும்
அடியே! உன்நினைவு! ஆம்!
பாலையிலோர் பசுமையென, அதி
காலையின் இனிமையென, பொன்
மாலையின் எழில்மயக்கமென
வாலைக்குமரீ! உந்தன் நினைவுகள்…
இன்று மறுபடியும், மறுபடியும்,
அடியே! உன் நினைவு! ஆம்!
கோடையின் குளிர்தென்றல், நீர்
ஓடையின் தண்னுணர்வு! மென்
வாடையின் வடிவழகு!
இன்று மறுபடியும், மறுபடியும்,
அடியே! உன்நினைவு! ஆம்!
அடீயே! உன் நினைவு!
பாடிப்பறந்த குயில்! அன்பே
ஓடியொளிந்த மயில்! அன்று
ஊடிநின்ற ஒயில்!
ஏன் துறந்தாய்?
இன்று மறுபடியும், மறுபடியும்,
அடியே! உன் நினைவு! ஆம்!
அடீயே! இன் கனவு!
விழியால் அருள் சொரிந்தாய்! கனி
மொழியால் பொருள் பதித்தாய்!
ஏன் பறந்தாய்? எனை மறந்தாய்?
இன்று மறுபடியும் , மறுபடியும்,
அடீயே! உன் நினைவு! ஆம்!
அடியே! உன் நினைவு!
நகையால் எனை வென்றாய்!
பகையால் தனைக் கொன்றாய்!
இன்று மறுபடியும், மறுபடியும்,
அடீயே! உன் நினைவு! ஆம்!
அடியே! இன்கனவு!பயமில்லை! விடு!

எதற்குமே ஆமாம் எதற்குமே
நான் கவலைப்படப் போவதில்லை.
ஆம்! எதற்குமே!
போகுமுயிர் ஒருமுறையே
போகுமிவ்வுலகில்; உணரின்,
உணர்ந்தவனே நான்தான்! ஆமாம்!
நான்தான்! நானேதான்!
உணர்ந்தவனை உலகிலெதுதானெதிர்த்திடுமோ?
எதுவுமன்று! பின்
பயமேன்; அஞ்சுதல் கோழமையன்றோ.
பயந்து , பதுங்கிக் கிடந்ததனால் கண்ட பயனோ?
அவமானம்! துயரம்! கண்ணீர்!
இவையன்றோ.
இதுவுமொரு வாழ்வோ? இல்லை, சாக்காடு!
போக்கற்ற பிறவிகள் புழுத்திருக்கும்
சாக்காடு!
உழைந்தது போதும்! போதும்! ஆயினுமொரு
முடிவு காணுமுன்
போவது நன்றோ? இல்லை! இல்லை! இல்லை!
ஆயினந்தச் சக்தி
எனைக் காக்கும்! காக்கும்! காக்கும்!
பின்னேன் பயமோ? பயமில்லை!
விடு!

7.6.1983!

ngiri2704@rogers.com

Series Navigation