கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்

This entry is part of 42 in the series 20071213_Issue

வாஸந்தி


பொள்ளாச்சிக்கருகே ஆழியார் என்ற இடத்தில் வேதாத்ரி மகரிஷி என்று ஒரு சாமியார் இருந்தார். “வாழ்க வையகம், வாழ்க வளமுடன்” என்பதே அவரது தாரக மந்திரம். என் நாடு, எனது மொழி, எனது மதம் மற்றும் தேசியம் போன்ற
தீவிரப் பற்றுதல்களும் ஐதீகங்களும் மனிதர்களிடையே பிரிவினையை வளர்ப்பவை என்கிற மிக நவீன எண்ணங்களைக் கொண்டிருந்தார். உலக நாடுகள் உலக சமாதானத்துக்காக மிகத் தீவிரமாகப் போராடவில்லை என்கிற மிக ஆழமான மன வருத்தம் அவருக்கு இருந்தது. அதை மிக எளிமையான வாதத்தின்மூலம் விளக்குவார். இந்தப் புவியின் காற்றும் ஆகாசமும், நீரும் மண்ணும் அணுவிலகாமல் இசைந்து இணைந்திருக்கும் போது, அமெரிக்கனும் ஆ·ப்ரிக்கனும் இந்தியனும் சுவாசிக்கும் காற்று ஒன்றுதான். ஆகாசம் உலகமெங்கும் படர்ந்திருப்பது. மண்ணும் நீரும் திசை வேறானாலும் நிறம் ஒன்றுதான். ஊசியிலிருந்து உயிர் காக்கும் மருந்துகள் வரை மனித குலம் ஒன்றைச் சார்ந்து மற்றது இருக்கும்போது வேற்றுமையை வளர்ப்பது மடத்தனம் அல்லவா என்பார். ஒட்டு மொத்த உலகமும் மனிதகுலத்தின் சமாதானத்துக்காகப் பாடுபடவேண்டும் என்பார். எந்த பிராந்தியத்தில் சண்டை மூண்டாலும் அது அனைவரையும் தாக்கும் வல்லமை கொண்டது என்று உணர்ந்து கவலை பட்டார்.
ஆனால் மனிதன் தோன்றிய காலம் தொட்டு இப்புவியில் மனிதர்களிடையே தோன்றிய சச்சரவுகளுக்குக் காரணம் ஒன்றுதான். மற்றவனைவிட தான் உயர்ந்தவன், தான் சார்ந்த எல்லாமே உசத்தி என்ற ஈகோவே காரணம். தேசியம், மொழிப்பற்று அல்லது பெருமை, மதத்தீவிரம் -இவை எல்லாமே அந்த ஈகோவின் பரிணாமம் என்று நான் சொன்னால் பலர் சண்டைக்கு வருவார்கள். ஆனால் அதுதான் பல்வேறு வார்த்தைகளில் மத குருமார்களிலிருந்து சமூகவியலாளர்கள் வரை கூறிவரும் உண்மை. மனிதன் நாகரீகத்தில் உயர்ந்ததன் விளைவாக அவனது ஆற்றலினாலேயே உண்டான எண்ணப் பரிவர்த்தனைக்கான மொழியும், மனித மனத்தின் உன்னதத்தைப் பரைசாற்றிய கலாச்சாரமும், அன்பை போதித்த கடவுள்களும் மதங்களும் சுவர்களை எழுப்பி தீவுகளை நிர்மாணித்தன. பேராசைகளை, ஆக்கிரமிப்பு ஆவேசத்தைக் கிளறின. எல்லைத்தாண்டும் உரசல்களின் விளைவாகப் போர் மூண்டன.
மனிதன் மாறவும் இல்லை. வரலாற்றிலிருந்து கற்கவும் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளாக இந்தப் புவியின் நாகரீகம் பண்பட்டுக் கனிந்த ஒன்றாக நாம் நினைத்தாலும் இன்னமும், இந்தக் கணினி யுகத்திலும் நாம் மதத்தின் பெயரில் , மொழியின் பெயரில் அல்லது நாகரீகத்தின் பெயரில் ஜனநாயகத்தின் பெயரில் போர் தொடுத்துக்கொண்டோ, வன்முறையில் ஈடுபட்டோ அல்லது அராஜகம் செய்து கொண்டோ இருக்கிறோம். எல்லைமீறுபவர்கள், அராஜகம் செய்பவர்கள் – அது தனி மனிதரோ, அமைப்போ -சொல்லும் செய்தி ஒன்றுதான்– நான் உன்னைவிட மேலானவன். உன்னைவிட சக்தி வாய்ந்தவன். நீதான் என் வழிக்கு வரவேண்டுமே தவிர நான் உன் வழிக்கு வரவேண்டிய அவசியமில்லை….
இன்று உலகை பீடித்திருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பின்னோடியாக இந்த எண்ணம்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. பல தலைமுறைகள் தொடர்ந்த வெள்ளையர்களின் சுரண்டலினால் இன்னமும் ஏழ்மையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகள் ; கொடுமை நிறைந்த வரலாற்று நினைவுகளை சுமந்து வாழும் அமெரிக்க கருப்பர்கள், நீதி என்ற பெயரில் உலகப் பொருளாதாரத்தைத் தன் கட்டுக்குள் வைக்க நினைக்கும் அமெரிக்க ஆணவம் ஆரம்பித்த நீடித்த போரில் சின்னாபின்னமாகிவரும் ஈராக் , மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பல காலமாக அதன் எண்ணை பலத்தைக்கைப்பற்றும் ஆசையில் நடந்து வரும் அமெரிக்க அரசியல் ஊடுருவல் ஆகியவற்றால் மிதமிஞ்சிய அமெரிக்க வெறுப்பை சுமந்து வளரும் உலகளாவிய இளம் இஸ்லாமியர்கள், மண்ணை இழந்து வாசலை இழந்து உலகமெங்கும் கூரையைத் தேடி அலையும் இலங்கைத் தமிழர்கள்….இவர்களது அனைவரின் சோகங்களுக்கும் பின்னணியில் இருப்பது ஒரு சில மதம் பிடித்தவர்களின் வெறி பிடித்த ஈகோவினால்தான். இன்றைய கால கட்டத்தில் உலகத்தில் யார் எந்த மூலையில் அராஜகம் செய்தாலும் பிட்டுக்கு மண் சுமந்த ஈசனின் மேல் பட்ட அடி எல்லா மானுடருக்கும் பட்டது போல நம் அனைவரையும் தாக்கும் வலு கொண்டதாக மாறும் சூழல் இன்று. திருவிளையாடல் புராணக்கதை நமது அரசியல் நிர்வாகங்களுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தெரியாவிட்டாலும் சரித்திர விளைவுகள் தெரிந்திருக்கவேண்டும். அவர்கள் கண்களை மறைப்பது அவர்களுடைய ஈகோ இல்லாமல் வேறு என்ன?
முதலாம் உலகப் போர் மூளும் வரை சச்சரவுகளை ஓரளவுக்கு
தமது எல்லைகளுக்குள் நாடுகள் கட்டுப்படுத்தமுடிந்தது என்ற நினைப்பு இருந்தது. ஆனால் என்றோ அமெரிக்காவில் நடந்த கருப்பர் அடிமைச் சந்தையின் எதிரொலிகள் இப்பவும் உலக சரித்திரத்தை அலைக்கழிக்கின்றன. வெள்ளையர்கள் தங்களது பரந்துபட்ட சாம்ராஜ்யங்களில் வேலை செய்ய அடிமை நாட்டு ஏழைகளை நாடு கடத்தி அழைத்துச் சென்ற கூலி ஆட்களின் சந்ததிகள் அங்கங்கே அரசியல் கொந்தளிப்புகளில் சிக்கி இருக்கிறார்கள். இஸ்லாம் மதம் பிறந்து கிளை பரப்பி ஆக்கிரமித்து நாகரீகங்களை வளர்த்து எண்ணை பொருளாதாரத்தால் வளமை பெற்று மேற்கின் பார்வையை உறுத்த ஆரம்பித்ததின் விளைவுகள் அதி பயங்கர பரிணாமம் கொண்டுவிட்டன. இது கர்ம பூமி என்று சொல்வதற்கு இது தான் அர்த்தம் என்று நினைக்கிறேன். பழைய வினைகளிலிருந்து மனித குலம் தப்ப முடியாது. ஒரு தலைமுறையில் மனிதன் செய்யும் தவற்றின் விளைவை அடுத்த தலைமுறை அனுபவித்தாக வேண்டும். இது ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியின் சாபத்தினால் ஏற்படுவதல்ல. காரணங்களும் காரியங்களும் விஞ்ஞானபூர்வ சுழற்சி. இயற்கையின் இயல்பான, தர்க்க சாஸ்திரத்துக்கு உட்பட்ட விளைவு. அவை மனிதனின் செய்கையால் விளைவது என்பதால் நமது விதியை மாற்றிக்கொள்வது நமது விவேகத்தினாலேயே சாத்தியம்.
இது ஆன்மீகச் சொற்பொழிவு அல்ல ! யதார்த்தவாதம். உலகம் சுறுங்கி விட்ட நிலையில் உலகப் பிரஜைகளாகிவிட்டோம். நமது பொறுப்புகள் அதிகமாகிவிட்டன.
தலை நகரங்களின் / மாநிலங்களின் குணங்களும் மக்களின் ஆளுமைகளும் அரசுகளின் தொலை நோக்கற்ற பார்வையால் , விவேகமற்ற அணுகுமுறையால் மாறிவருவதை அதைப் பற்றின எனது கவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதுவும் ஒரு பறவைப் பார்வைதான். என்னுடைய நேரிடையான அனுபவத்தை வைத்து நான் கண்டதையும் கேட்டதையும் படித்ததையும் வைத்து ஏற்படுத்திக்கொண்ட ஒரு பத்திரிக்கையாளரின் பார்வை.
சிறு வயதிலிருந்து அதாவது பள்ளி நாட்களிலிருந்து, சரித்திரம் எனது விருப்பப் பாடமாக இருந்தது. நான் படித்த ஆங்கிலப் பள்ளியில் இந்திய வரலாற்றுப் பாடங்கள் தவிர இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வரலாற்றுப் பாடங்களும் இருந்தன. அந்தப் பாடங்கள் மிக சுவாரஸ்யமாக எழுதப் பட்டிருக்கும். இங்கிலாந்து வரலாறு என்னை அதிகமாகக் கவர்ந்தது. முக்கியமாக 13-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிக மோசமான அகங்காரம் மிக்க ஜான் என்ற அரசனை அரசவையின் பிரபுக்கள் பணிய வைத்து அவனது சர்வாதிகாரத்தை ஜனநாயக கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு இணங்கி துரக்கச் சம்மதித்து, ‘மாக்ன கார்ட்டா’ என்ற சாஸனத்தில் [கி.பி. 1215] கைய்யெழுத்திட வைத்த தகவல் எனக்குச் சிறு வயதில் பிரமிப்பை ஏற்படுத்திற்று. ஆனால் அவர்கள் சக்தி வாய்ந்த பிரபுக்கள். அரசன் கைய்யெழுத்திட்டதில்
அவர்களுக்குத்தான் ஆதாயமே தவிர சாமான்ய மக்களுக்கல்ல. இருந்தும் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் ராஜ குலத்தவர் என்று நம்பப்பட்டக் கால கட்டத்தில் மன்னனின் உரிமைகளுக்கு வரம்பு கட்ட முயன்று வெற்றியும் பெற்றது மாபெரும் சாதனையாகத் தோன்றிற்று. மாக்ன கார்ட்டா சாஸனமே பின்னால் வகுக்கப்பட்ட ப்ரிட்டிஷ் அரசியல் சாஸனத்துக்கு ஆதாரமாயிற்று. பாரம்பர்யமாக மன்னராட்சி கொண்ட இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளர்ச்சியும் அதன் முதிர்ச்சியும் மிக ஆச்சர்யமான சுவாரஸ்யமான வரலாறு. பல அதி புத்திசாலி ப்ரதமர்கள் அலங்கரித்த அவை அது. அவர்கள் வளர்த்த கண்யம் மிக்க ஆனால் கூர்மை மிக்க நாடாளுமன்ற மொழி மிகப் பிரசித்தம். அதைப் பற்றின புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. நான் அவற்றை மாய்ந்து மாய்ந்து படிப்பேன். ஜனநாயக மரபுகளை போற்றும் அவர்களது பண்பு என்னை ஆகர்ஷித்தது. சாஸரின் காலத்திலிரிந்து மலர்ந்து நிற்காமல் பூத்த அற்புத ஆங்கில இலக்கியங்கள் என்னைக் கொள்ளைக்கொண்டன. ஆங்கில புத்தகங்களின் அழகிய சித்திரங்களையும் இயற்கை எழிலின் வர்ணனைகளையும் படிக்கும் போது அங்கு நான் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் கூட எனது இளம் நெஞ்சில் சோர்வை ஏற்படுத்தும். அந்தப் பருவத்தில் பலருக்கு என்னைப் போன்று ஏக்கம் இருந்திருக்கும். ஆனால் பாரை ஆளும் பேராசையினால் விரிந்த பிரிடிஷ் சாம்ராஜ்யத்தில் பல நாடுகள் அடிமை ஆனதும் அது பல தலைமுறைகளுக்கு ஏற்படுத்திய சேதங்களும் காயங்களும் முற்றிலும் வேறு கதையென்பதும் அறிவு விசாலமாக விசாலமாகப் புரிந்தது.
மக்களுக்கு சம்பந்தமில்லாதது எதுவுமே இல்லை என்று எனக்கு உணர்த்தியவர் என்னுடைய தாத்தா. ‘நரிக்குக் கல்யாணம் நண்டுக்குப் ப்ராணாவஸ்தை’ என்று பழமொழி சொல்வார்கள். ப்ரிடிஷ் சாம்ராஜ்யம் விரிந்தபோது ப்ரிடிஷ்மக்களுக்கு அது மிகப் பெரிய பெருமிதம் அளிக்கும் விஷயமாக தங்களது பராக்ரமத்தின் அடையாளமாக இருந்தது. ஆனால் அடிமைப் பட்ட நாடுகளின் நிலை என்ன என்ற விவரம் அவர்களுக்குத் தெரிந்திராது. அதில் அக்கறையும் இருந்திராது. தாத்தா ஆங்கில ஆசிரியர்.
வர்ட்ஸ்வர்த், ஷெல்லீ ஆகியோரின் கவிதைகளைப் பரவசத்துடன் சொல்வார். அதே பரவசத்துடன் பாரதியின்
தேச பக்தி பாடல்களைப் பாடுவார். ‘ தண்ணிர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரை, கண்ணீரால் காத்தோம்” என்று சொல்லி கண்ணீர் வடிப்பார். அவர்தான் பாரதியின் ‘கரும்புத் தோட்டத்திலே’ பாடலை எனக்கு அறிமுகப் படுத்தி கண்காணாத ·பீஜித் தீவுகளுக்கு ஏழை இந்தியர்கள் அங்குக் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய கூலி ஆட்களாக அனுப்பப் பட்டதையும் அங்கு அவர்கள் படும் துயரத்தையும் சொன்னார்.
பாரதியின் பாடலின் பிம்பம் வெகு நாட்களுக்கு என்னைத் துன்புறுத்திற்று. ஆனால் பின்னாளில் நானே ·பீஜித் தீவுகளுக்குச் சென்று அங்கு வாழும் அக்கூலிகளின் சந்ததிகளைப் பார்ப்பேன் என்று நிச்சயம் நினைத்திருக்கவில்லை.
எண்பதுகளின் மத்தியில் ஒரு ரயில் பயணத்தின்போது தெனா·ப்ரிக்காவில் வசிக்கும் ஒரு இந்தியப் பெண்மணியை சந்தித்தேன். அவரது மூதாதையர் தமிழர் என்றும் , இப்பவும் பழைய தமிழ் மரபுகள் சடங்குகள் பின்பற்றினாலும் தமிழ் மொழி பேசத்தெரியாது என்றும் சொன்னார். அவரது நடை உடை பாவனைகள் என்னுள் ஒரு ஆர்வத்தைக் கிளப்பிற்று. நான் இந்திய வம்சாவளி என்று பெருமையுடன் சொன்னது பழைய சரித்திரத்தைப் புரட்டிப்பார்க்கத் தூண்டியது.
இந்தியாவிலிருந்து ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்த தென் ஆ·ப்ரிக்காவுக்கும் ·பீஜித் தீவுக்கும் இலங்கைக்கும் அங்கிருக்கும் தேயிலை மற்றும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய ப்ரிட்டிஷ் அரசுக்கு மலிவான கூலி ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்காக ஆட்களைத் திரட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் கங்காணிகள் நியமிக்கப் பட்டார்கள். அடிமைப்பட்ட இந்தியாவில் வறுமையில் வாடுபவருக்கா பஞ்சம்? வறுமையுடன் ஜாதிக்கொடுமையால் விளிம்பில் இருந்தவர் ஏராளம். கங்காணிகள் காட்டிய ஆசையில், பூகோள அறிவு சுத்தமாக இல்லாத நிலையில் இரு வேளை சாப்பாட்டுக்கும் கௌரவமான வாழ்வுக்கும் ஏங்கிய பல ஜீவன்கள் உடுத்தின உடையுடன் சென்னையிலிருந்தும் கல்கத்தாவிலிருந்தும் கிளம்பினார்கள். தென் ஆப்ரிக்காவும் ·பீஜித்தீவுகளும் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவை என்று அறியாத அப்பாவிகள். அநேகம் பேர் கப்பல் பயணம் தாங்காமல் உயிர் இழந்தார்கள். வேலை செய்யச் சென்ற முற்றிலும் புதிய இடம் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? வெள்ளைக்கார துரைகளிடம் மாட்டிக்கொண்டு அங்கு என்னவெல்லாம் அனுபவித்தார்கள்? அவர்களது சந்ததிகள் இப்போது எப்படி வாழ்கிறார்கள் ? எந்த அளவுக்கு அவர்களது இந்திய மரபணுக்கள் மிச்சமிருக்கின்றன ? — ஆகிய கேள்விகள் என்னுள் எழுந்தன. அப்படிப்பட்ட ஒரு ஆய்வை மேற்கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றிற்று.
இந்த என்னுடைய ஆர்வத்தை இந்தியக் கலாச்சார உறவுப் பரிவர்த்தனை கௌன்சிலுக்கு [ ஐ.ஸி.ஸி.ஆர்] ஒரு கடிதத்தின் மூலம் தெரிவித்து என் அனுபவங்களைப் புத்தகமாக எழுதும் ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்தேன். அடுத்த இரு மாதங்களில் எனக்குக் கடிதம் வந்தது. ·பீஜித் தீவுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு ‘லெக்சர் டூர் ‘ போகவிருப்பமா என்று. உங்களுக்கு ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றும் தகுதி இருந்தால் அனுப்புகிறோம் என்றது மடல். நான் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போனேன்.
என் பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்பியதும் இதைப்பற்றிச் சொன்னேன். ‘ எங்கே இருக்கு ·பீஜி? என்றார்கள். நான் விழித்தேன். சின்னவன் தனது அட்லாஸ் புத்தகத்தைக் கொண்டு வர எல்லோருமாகச் சேர்ந்து தேடினோம். கடைசியில் சிறு புள்ளிகள் போல் பஸி·பிக் மகா சமுத்திரத்தில் ஆஸ்திரேலியாவி ன் வட கிழக்கில் இருப்பதைக் கண்டுபிடித்தோம். இந்தியாவிலிருந்து மிகத் தொலைவு என்று புரிந்தது. அடேயப்பா இருநூறு ஆண்டுகளுக்குமுன் படிப்பறிவில்லாத ஏழை இந்தியர்கள் வசதி இல்லாத கப்பலில் எப்படிப் பயணித்திருப்பார்கள் என்று எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. அந்த இனம்புரியாத துணிச்சலுக்குப் பின்னணியில் அவர்களது வறுமையும் சமூக அந்தஸ்தும் எத்தனைக் கொடுமையாக இருந்திருக்கவேண்டும்
என்று துயரமேற்பட்டது.
·பீஜிக்குச் சென்றதும் அங்கு கேட்ட அவர்களது சரித்திரமும் அவர்களது சந்ததியர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் வரலாற்று ஏடுகள் சொல்லும் மிகப் பெரிய பாடமாக, அனுபவமாகத் தோன்றிற்று.


Series Navigation